கலைக்களஞ்சியம்/இந்தியப் பத்திரிகை உழைப்பாளர் சம்மேளனம்
இந்தியப் பத்திரிகை உழைப்பாளர் சம்மேளனம் (Indian Working Journalists Federation)தொழிற் சங்க அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் இது தான் இந்தியா முழுமைக்கும் பொதுவான முதல் ஸ்தாபனம். தொழிற்சங்கங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இருபத்தொரு ஸ்தாபனங்கள் இதில் இணைந்திருக்கின்றன. ஆங்கிலத்திலும், இந்திய மொழிகளிலும் வெளியாகும் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும், செய்தி ஸ்தாபனங்களிலும் வேலை செய்யும் ஊழியர்களில் ஒரு சாரார் ஆங்காங்குச் சங்கம் அமைத்துக்கொண்டு இதில் சம்மேளனமாகச் சேர்ந்திருக்கிறார்கள். அந்த இணைப்புச்சங்கங்கள் அங்கத்தினர்களிடமிருந்து வசூலிக்கும் சந்தாவில் ஒரு பகுதியை இதற்குக் கொடுக்கவேண்டும். இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பிறகு பத்திரிகையாளர்களின் வேலை நிலைமை பல இடங்களில் மோசமாயிற்று. பல பெரிய நகரங்களில் சிறிய சங்கங்கள் தோன்றிப் பத்திரிகை நடத்துவோருடன் கலந்து பேசி, நிலைமையில் ஏற்றம் காண்பதற்குச் செய்த முயற்சிகள் போதிய அளவு பலிக்கவில்லை. எனவே, அகில இந்திய கட்டுப்பட்டு உழைப்பது என்ற கருத்து 1950-ல் பரவிற்று. உத்தரப் பிரதேசத்துப் பிரபல பத்திரிகையாளரான கோபிநாத் ஸ்ரீவாஸ்தவா இக் கருத்தை உருவாக்கி ஒரு மாநாடு டெல்லியில் கூடச்செய்தார். அவர் காலமாகிவிடவே செல்லபதி ராவ் தலைமையில் ஸ்தாபனம் அமைந்து வேலை செய்கிறது. அலுவலகம் புது டெல்லி, 1952-ல் கல்கத்தாவில் சம்மேளனம் கூடியபோது பத்திரிகை வெளியிடும் தொழிலைப் பற்றிய முழுத் தகவல்களையும் சேகரித்துச் சீரமைப்புக்கு யோசனை கூறுவதற்காகப் பத்திரிகைக்கமிஷனை இந்தியச் சர்க்கார் நியமிக்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இப்போது அத்தகைய கமிஷன் நியமிக்கப்பட்டு விசாரணை செய்து வருகிறது. ஏ. ஜி. வே.