கலைக்களஞ்சியம்/இந்தியம்

இந்தியம் (Indium) குறியீடு In; அணுவெண் 49; அணுநிறை 114-76; மிக அருமையாகக் காணப்படும் ரசாயனத் தனிமங்களில் ஒன்று. ஆவர்த்த அட்டவணையில் இது மூன்றாம் தொகுதியில் அமைக்கப்படுகிறது. இதன் ஒப்பு அடர்த்தி 7•28; உருகுநிலை 155°; கொதிநிலை 1450°.

நாகக் கந்தகக்கல் என்னும் கனியப்பொருளை நிறமாலைச் சோதனைகளுக்கு உள்ளாக்கியபோது ரைஷ் (Reich), ரிக்டர் (Richter) ஆகிய இரு விஞ்ஞானிகள் அதில் மிகச் சிற்றளவில் ஒரு புதுத்தனிமம் கலந் திருப்பதை 1863-ல் அறிந்தார்கள். இது அக்கனியத்தில் மிகக் குறைவான அளவு கலந்திருக்கும். வாணிபத் துத்தநாகத்திலிருந்து இந்தியத்தைப் பெற அதைக் குறைவான ஹைடிரோகுளோரிக அமிலத்துடன் வினைப்படுத்தினால், அமிலத்தில் கரையாத நீகத்தின் மேல் இந்தியம் படியும். இதைத் தனியே பிரித்தெடுக்கிறார்கள்.

இந்தியம் வெள்ளியை யொத்த வெண்மை நிறமுள்ள உலோகம். இது காரீயத்தைவிட மென்மையானது. இதைக் கம்பியாக இழுக்கலாம்; தகடாக அடிக்கலாம். இது உலர்ந்த காற்றினால் பாதிக்கப்படுவதில்லை. காற்றில் இதை எரித்தால் நீல நிறச் சுடருடன் எரிந்து ஆக்சைடாக மாறும். இது அமிலங்களில் கரையும். குளோரினுடனும் கந்தகத்துடனும் இது நேரடியாகக் கூடும்.

இந்தியம் ஆக்சைடுகளில் இந்தியம் செஸ்குவி ஆக்சைடு (In2 O3) முக்கியமானது. இந்தியத்தைக் காற்றில் எரித்து இதை மஞ்சள் நிறத்தூளாகப் பெறலாம். ஹைடிரஜனுடனும் கார்பனுடனும் இதைச் சூடேற்றினால் இது எளிதில் குறையும். இந்தியம் மூன்று குளோரைடுகளை அளிக்கிறது. இந்தியம் மானோகுளோரைடு (In Cl)கருஞ்சிவப்பு நிறமுள்ள படிகங்களாகக் கிடைக்கும். இந்தியம் டைகுளோரைடு (In Cl2 ) நிறமற்ற படிகங்களாகக் கிடைக்கும். இந்தியம் டிரைகுளோரைடு (In Cl2) வெண்மையான, கசியும் தன்மையுள்ள படிகம். இந்தியத்துடன் குளோரினை வினைப்படுத்தினால் டிரைகுளோரைடு கிடைக்கிறது. இந்தியத்தின் உப்புக்கள் சுடருக்கு நீல நிறத்தை அளிக்கும்.