கலைக்களஞ்சியம்/இந்தியாவில் போர்ச்சுக்கேசியர்
இந்தியாவில் போர்ச்சுக்கேசியர் : 15-ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலிருந்தே போர்ச்சுக்கேசியர் ஆப்பிரிக்காவோடும் தென் ஆசிய நாடுகளோடும் வாணிகத் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டனர். தென் ஆப்பிரிக்காவிலுள்ள நன்னம்பிக்கை முனையைச் சுற்றி இந்தியாவின் மேலைக் கரையை முதன் முதல் அடைந்த வாஸ்கோடகாமாவைப் பின்பற்றிப் பல வணிகர்கள் கள்ளிக்கோட்டைக்கருகே வந்து போர்ச்சுக்கேசிய வாணிகத்தைப் பெருக்கினர். அவர்கள் வந்த காலத்தில் விஜயநகர இராச்சியம் வலுவடைந்திருந்தது. போர்ச்சுக்கேசியர் தங்கள் படையில் இந்தியத் துருப்புக்களையும் சேர்த்துக்கொண்டனர். 1503-ல் கோவாவைக் கைப்பற்றிய போர்ச்சுக்கேசியர் ஆல்பகர்க் என்னும் கவர்னர் காலத்தில் 1510-ல் கொச்சி இராச்சியத்தின் உள்நாட்டு விஷயங்களில் தலையிடத் தொடங்கினர். அல்மேடா, ஆல்பகர்க் என்னும் கவர்னர்கள் முறையே கண்ணனூரிலும் கோவாவிலும் பல கொடிய செயல்களைப் புரிந்து, தங்களுக்குத் தேவையான காரியங்களைச் சாதித்துக் கொண்டனர். கடற்கொள்ளையடித்து நாட்டினரை அச்சுறுத்துவது அவர்களுடைய தொழிலாயிருந்தது. போர்ச்சுக்கேசியர் 15ஆம் நூற்றாண்டினிறுதியில் மற்ற ஐரோப்பியருடைய போட்டியில்லாமல் இருந்ததால் தங்கள் விருப்பப்படிப் பல அரசியல், வாணிகக் காரியங்களைச் சாதித்துக்கொள்ள முடிந்தது. பிற்காலத்தில், அதாவது 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஆங்கில டச்சுப் போட்டிகளால் போர்ச்சுக்கேசியருடைய ஆதிக்கம் சிறிது சிறிதாக மறையத் தொடங்கிற்று. போர்ச்சுக்கேசிய ஆள் பலக் குறைவும், மற்ற ஐரோப்பிய நாடுகளுடைய போட்டியும், 1580-1640 வரையில் ஸ்பெயினோடு அந்நாடு இணைந்திருந்ததும் அவர்களுடைய ஆதிக்க வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாம். 1663-ல் அநேகமாக இந்தியாவில் அவர்களுக்குச் சொந்தமாயிருந்த பகுதிகள் எல்லாம் கைப்பற்றப்பட்டன; 1739-ல் பாசீனை மகாராஷ்டிரர் கைப்பற்றினர். அவர்களிடம் இதுவரையில் எஞ்சியுள்ள பகுதிகள் கோவா, டையூ, டாமன் என்னும் இடங்களே. தே. வெ. ம.