கலைக்களஞ்சியம்/இந்தியா பாகிஸ்தான் இலங்கை விவிலிய சங்கம்
இந்தியா பாகிஸ்தான் இலங்கை விவிலிய சங்கம் (The Bible Society of India, Pakistan and Ceylon) : இது இந்திய இலங்கைச் சங்கமாக 1811-12-ல் நிறுவப்பெற்று இப்பொழுதுள்ள பெயரை 1947-ல் பெற்றது. விவிலிய வேத நூலை எவ்வித உரையும் குறிப்புமின்றி மொழிபெயர்த்து அச்சிட்டு வழங்குவதே இதன் தனி நோக்கம். பொது மக்கள் ஆதரவு கொண்டே இது நடைபெறுகிறது. இதன் தலைமைத்தலம் பெங்களூர். இச்சங்கம் சென்ற இருபது ஆண்டுக் காலத்தில் ஆண்டுக்கு ஏறக்குறைய 10 இலட்சம் பிரதிகள் வழங்கியிருக்கிறது. இதுவரையில் இந்தியா, இலங்கை பாகிஸ்தானிலுள்ள 115 மொழிகளில் இந்நூல் முழுவதுமோ அதன் பாகங்களோ அச்சிடப்பட்டிருக்கின்றன.