கலைக்களஞ்சியம்/இந்திய விஞ்ஞானக் காங்கிரசுச் சங்கம்

இந்திய விஞ்ஞானக் காங்கிரசுச் சங்கம் (Indian Science Congress Association ) இந்திய விஞ்ஞான ஆராய்ச்சியாளரது முக்கியமான ஸ்தாபனம். இது 1914-ல் சர் அசுட்டோஷ் முக்கர்ஜியால் கல்கத்தாவில் நிறுவப்பட்டது. இவரே அதன் முதல் தலைவராகவும் இருந்தார். விஞ்ஞான ஆராய்ச்சிக்கு ஊக்கமளிப்பதும், இதைச் சரியான வழியில் செலுத்த உதவுவதும், விஞ்ஞானக் கழகங்களையும் விஞ்ஞானத்தில் ஆர்வமுள்ளவர்களையும் ஒன்று சேர்ப்பதும், விஞ்ஞானத்தின் உண்மையான நோக்கங்களை வெளிப்படுத்துவதும், அதன் முன்னேற்றத்திற்கு நேரும் தடைகளை நீக்குவதும் இச்சங்கத்தின் நோக்கங்களாகும். இதில் கணிதம், பௌதிகம், ரசாயனம், மருத்துவம், உளவியல் முதலிய பதின்மூன்று பிரிவுகள் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் இச்சங்கம் ஒரு நகரத்தில் கூடும்போது ஒவ்வொரு பிரிவும் தனியே கூடுகிறது. இப்பிரிவுகளில் சொந்த ஆராய்ச்சிகள் பற்றிய கட்டுரைகள் படிக்கப்படுகின்றன. சில பொருள்கள் பற்றிய விவாதங்கள் நிகழ்கின்றன. இம்மாநாடுகளுக்கு வெளிநாட்டு விஞ்ஞானிகளும் பிரதிநிதிகளாக வந்து இந்திய நாட்டு ஆராய்ச்சியாளருடன் அளவளாவுகின்றனர்.