கலைக்களஞ்சியம்/இந்திய விஞ்ஞான வளர்ச்சிச் சங்கம்
இந்திய விஞ்ஞான வளர்ச்சிச் சங்கம் (Indian Association for the Cultivation of Science) டாக்டர் மகேந்திரலால் சர்க்காரால் 1876-ல் கல்கத்தாவில் நிறுவப்பெற்றது. தொடக்கத்தில் பௌதிகம், புவியியல், உயிரியல் ஆசியவற்றைக் கற்றுக்கொடுக்கும் ஸ்தாபனமாக இருந்து, பின்னர் 1907-ல் பேராசிரியர் சீ. வீ. இராமன் சேரவே, விஞ்ஞான ஆராய்ச்சி நிலையமாக ஆயிற்று. இவ்வாராய்ச்சி வேலையில் பேராசிரியர் இராமனுக்கு டாக்டர் கே. எஸ். கிருஷ்ணனும் மற்றும் பல ஆராய்ச்சியாளரும் துணை செய்தனர். 'மகேந்திரலால் சர்க்கார் பேராசிரியர்' என்ற பெயரால் முதன் முதலாக நியமிக்கப்பட்டவர் டாக்டர் கே. எஸ். கிருஷ்ணனாவார். தேவையான நூல்கள் நிறைந்த நூல் நிலையமும் துல்லியமான கருவிகள் கொண்ட தொழிற்கூடமும் இருக்கின்றன. இப்போது பட்டம் பெற்றவர்கள் செய்யும் ஆராய்ச்சிச் சாலையாக இருந்துவருகிறது.