கலைக்களஞ்சியம்/இந்திரகோபம்

இந்திரகோபம் சிவப்பு நிறமான சிறு பிராணி. அரை யங்குல நீளம் வரையில் இருக்கும். உண்ணி போன்ற வடிவுள்ளது. எட்டுக் கால்களுள்ளது. இளம் பருவத்தில் ஆறு கால்களே இருக்கும். அவற்றின் உதவியால் தரையில் ஊர்ந்து செல்லும். சுதந்திர வாழ்க்கையுள்ளது. இதன் உடல் முழுவதும் இரத்தம் போலச் செந்நிறமான நுண்ணிய மயிர் அடர்த்தியாக மூடியிருப்பதால் இது சிவப்பு மகமல் போர்த்தது போலத் தோன்றும். இந்தக் காரணத்தால் என்று ஒரு இதை வெல்வெட்டுப் பூச்சி என்றும் சொல்வார்கள். சீதாப் பிராட்டியார் வெற்றிலையை மென்று உமிழ்ந்தது இந்த அழகிய உயிராக மாறிற்று கதை வழங்குகிறது. இதனால் இதைத் தம்பலப் பூச்சி என்றும் அழைப்பதுண்டு. இந்தப் பிராணி கணுக்காலித் தொகுதியிலே சிலந்தி வகுப்பிலே அக்காரினா என்னும் உண்ணி வரிசையில் சிற்றுண்ணி (Mite) என்று பொதுவாகச் சொல்லப்படும் வகையில் திராம்பிடியம் என்னும் சாதியைச் சேர்ந்தது. கொச்சினியல் என்னும் சப்பாத்திப் பூச்சியும் மின்மினியும்கூட இந்திரகோபம் எனப்படுவதுண்டு.

இந்திரகோபம் வெளிவந்து உலவுவது மழை காலத்துக்கு அறிகுறி என்று இந்தியக் கவிகள் அணிசெய்துரைப்பார்கள்.