கலைக்களஞ்சியம்/இந்துப்பு
இந்துப்பு (Rock Salt) : சாதாரண உப்பு, சில சமயங்களில் எரிமலைக் குழம்பின்மேற் படிந்து பாறைகள்போல் கிடப்பதுண்டு. இது இந்துப்பு எனப்படும். பாகிஸ்தானில் மேற்குப் பஞ்சாபின் உப்பு மலைத் தொடரில் இது இவ்வாறு கிடைக்கிறது. இதனுடன் சிலாசத்தைப் போன்ற வேறு கற்களும் கலந்திருக்கலாம். இத்தகைய உப்புச் சுரங்கங்கள் உள் நாட்டிலிருந்த கடல்கள் வற்றிப் போனதால் தோன்றியிருக்கவேண்டும் எனக் கருதப்படுகிறது.
கனவடிவான படிகங்களால் ஆன இந்துப்பில் மிக அதிகமாக உள்ள பொருள் சோடியம் குளோரைடு. இது தூய நிலையில் நிறமற்றதாகவும் தெளிவாகவும் இருக்கும். மக்னீசிய, இரும்பு உப்புக்கள் இதில் அசுத்தங்களாகச் சேர்ந்திருந்தால் இது செந்நிறமாகவோ, பழுப்பு நிறமாகவோ இருக்கும். இதனால் இது ஈரத்தை ஏற்கும் தன்மையைப் பெறுகிறது. சித்த மருத்துவ முறையில் இது பலவகையினும் பல நோய்களுக்கும் பயன்படுகிறது.