கலைக்களஞ்சியம்/இந்தோ-ஆரியர்
இந்தோ-ஆரியர்: இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து சுமார் கி. மு. 1500-ல் ஒரு சிறந்த நாகரிகம், மொழி, பண்பாடு இவைகளுடன் வந்து குடியேறினர் என்பதும், அவர்கள் இந்தியாவிற்கு வந்த போது கறுத்த மேனியும் சப்பை மூக்குமுடைய நாகரிக மற்ற பழங்குடிகளைக் கண்டு, இவர்களை அகற்றியோ அல்லது அழித்தோ சிந்து, கங்கைப் பள்ளத்தாக்குக்களில் பரவினர் என்பதும், தங்களுடைய நாகரிகம், பண்பாடு, மொழி ஆகியவற்றை இந்தியா முழுமையும் பரவச் செய்தனர் என்பதும் மேனாட்டு ஆசிரியர்கள் கூறி வந்த பழங்கதையாகும். இக்கதை சிந்து சமவெளியின் நாகரிகத்தைப் புதைபொருளாராய்ச்சியாளர் மொகஞ்சதாரோ, ஹாரப்பா முதலிய இடங்களில் கண்டெடுத்த பின்பு கைவிடப்பட்டது.
ஆரியர் என்று ஒரு தனித்த மனித இனம் (Race) உண்டென்பது ஓர் ஆதாரமற்ற கொள்கை. ஆரியம் என்னும் பதம் ஒரு மொழி வகுப்பை அல்லது ஒரு பண்பாட்டைக் குறிக்கும். லத்தீன், ஜெர்மன், கெல்ட்டிக், சமஸ்கிருதம் முதலிய மொழிகள் இந்த வகுப்பைச் சேர்ந்தவை. இவைகளில் இந்தியாவில் வழங்கிவரும் மொழிவகுப்புக்களை இந்தோ-ஆரியன் மொழிகளென்பர்.
மானிட சமூகங்களுள் ஒன்றுக்கொன்று உள்ள வேறுபாடுகளுள் முக்கியமானவை மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியவை போன்றவை. இவ்வித வேறுபாடுகளை மானிட இனங்களோடு பொருத்துவது ஏகாதிபத்தியமும், யதேச்சாதிகாரமும், குடியேற்றநாட்டு மனப்பான்மையுமுள்ளவர்களின் பிரசாரமாகும். இவ்வாறு பொருத்துவதற்கு விஞ்ஞானம் ஆதரவளிக்கவில்லை.
மனிதசமூகங்கள் எல்லாவற்றிலும் உள்ளபடி, இந்தியாவிலும் மொழி வகைகளோடாவது பண்பாட்டு வகைகளோடாவது இனவகைகள் பொருந்துவதில்லை. மொழிகளும் பண்பாட்டு அடையாளங்களும் சூழ்நிலையோடு தொடர்புள்ளனவாயினும், குடியேற்றத்தாலும் சேர்க்கையினாலும் எளிதில் வேறுபாடு அடையும் தன்மையுள்ளன. இவைகளோடு ஒப்பிடும்போது இன வேறுபாடுகள், நிரந்தரமானவையாகக் காணப்படும். சில நூற்றாண்டுகளில் ஒரு மனித சமூகம் தன்னுடைய மொழியிலும் பண்பிலும் அளவு கடந்த மாறுதல்களை அடையலாம். இன்னும் அநேக இடங்களில் இவற்றை அடியோடு இழந்துவிட்டு வேறு மொழியையும் நாகரிகத்தையும் கொள்ள நேரிடுகிறது. அமெரிக்காவில் குடியேற்றப்பட்ட நீக்ரோக்களை இதற்கு ஒரு சான்றாக எடுத்துக்கொள்ளலாம். ஆயினும் அவர்களுடைய இன அமிசங்கள் நிரந்தரமாகக் காணப்படுகின்றன.
இந்திய மொழிவகைகளின் தொடக்கத்தையும், அவைகளைக் கொண்டுவந்த என்பதையும் இன்னவை எளிதில் தொடக்கத்தையும், இனங்கள் திட்டப்படுத்துவது இயலாது. உதாரணமாக ஆஸ்திரேலிய இனவகையைச் சார்ந்தவர் ஆஸ்திரிக் அல்லது முண்டாரி மொழியைக்கொண்டு வந்தனர் என்பதற்கும், மத்தியதரைக்கடல் இனத்தவர் திராவிட மொழிகளைக் கொண்டு வந்தனர் என்பதற்கும், நார்டிக் மக்கள் ஆரிய மொழிகளைக்கொண்டு வந்தனர் என்பதற்கும் போதிய ஆதாரமில்லை. தற்காலத்தில் ஒரு குறிப்பிட்ட இனவகையினர் ஒரு மொழியைப் பேசுவதனால் அம்மொழி அவர்களுடைய தொன்மையான மொழியென்று கூறுவதற்கில்லை. ஆஸ்திரிக், திராவிடம், ஆரியம் என்னும் சொற்கள் இவைகளைக் குறிக்கத்தக்கவையல்ல. இந்தோ-ஆரியர்கள் இந்தியாவில் வழங்கிவரும் பெரிய மொழி வகுப்புக்களில் இந்தோ ஆரிய மொழியைப் பேசுபவராகக் கொள்ளல்வேண்டும். இவரை எந்த மனித இனத்தோடும் இணைப்பதற்குப் போதிய சான்றுகள் இல்லை. மனித இனங்களும் மொழி வகுப்புக்களும் அடிப்படையான வேறுபாடுடையன. இந்தியாவின் மொழிவகுப்புக்கள் நான்காகும். இவை (1) முண்டா-கோல் (Munda- Kol), (2) திபெத்தோ சீனம் (Tibeto-Chinese), (3) திராவிடம் (Dravidian), (4) ஆரியம் (Aryan)
I. இவைகளில் முண்டா-கோல் இந்தியாவில் மத்திய பீடபூமியிலுள்ள பில்லர்கள் (Bills), சந்தால்கள் (Santhals), முண்டாக்கள் (Mundas), சவரர்கள் (Soaras), ஹோக்கள் (Hos) போன்ற ஆதிக்குடிகளில் 40,00,000 மக்கள் பேசும் மொழியாகும்.
II. திபெத்தோ-சீனம் இமயமலையடிவாரத்திலும், அஸ்ஸாமிலும், திபெத்து, பர்மா எல்லைப்புறங்களிலும் வசிக்கும் 2,00,000 மக்கள் பேசும் மொழியாகும்.
III. திராவிட மொழி பேசுபவர் தென்னிந்தியாவிலுள்ள பெரும்பான்மையோராவர். இவர்களில் 2,60,00,000 பேர் தெலுங்கும், 2,00,00,000 பேர் தமிழும், 1,10,00,000 பேர் கன்னடமும், 90,00,000 பேர் மலையாளமும் பேசுபவர்.
IV. இந்தியாவில் இந்தோ-ஆரிய மொழிகளைப் பேசுபவர்களே மக்கள் தொகையில் பெரும்பான்மையோர். இம்மொழிகளில் முக்கியமானவை இந்தி, வங்காளி, பீகாரி, மராத்தி, பஞ்சாபி, ஒரியா, குஜராத்தி, சிந்தி, காச்மீரி, சிங்களம், நேவாரி ஆவன.
இந்தியாவில் 7,90,00,000 மக்களால் இந்தி பேசப்படுகிறது. இவர்கள் மத்தியப் பிரதேசத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் உள்ளனர்.
கங்கைச் சமவெளியில் வசிக்கும் 5,30,00,000 மக்களால் வங்காளி பேசப்படுகிறது. நாகரி லிபியில் எழுதப்படுகிறது.
பீகாரில் வழங்கப்படும் பீகாரி மொழி 3,70,00,000 மக்களால் பேசப்படுகிறது. இது கைத்தி லிபியில் எழுதப்படுகிறது.
மராத்தி 2,10,00,000 மக்களால் பம்பாய், மத்தியப் பிரதேசம், ஐதராபாத், பேரார், கோவாப் பிரதேசங்களில் பேசப்படுகிறது. நாகரி லிபியில் எழுதப்படுகிறது.
பஞ்சாபி கிழக்குப் பஞ்சாபிலும் தெற்கு ஜம்முவிலும் 1,300,00,000 மக்களால் பேசப்படுகிறது. லாண்டா லிபியில் எழுதப்படுகிறது.
ஒரியா 1,10,00,000 மக்களால் ஒரிஸ்ஸாவில் பேசப்படுகிறது. நாகரி போன்ற லிபியில் எழுதப்படுகிறது.
குஜராத்தி 1,00,00,000 மக்களால் கூர்ஜரத்தில் பேசப்படுகிறது. நாகரி லிபியில் எழுதப்படுகிறது.
காச்மீரி சுமார் 10,00,000 மக்களால் பேசப்படுகிறது. இது பாரசீக லிபியில் எழுதப்படுகிறது. இது இந்தோ-ஆரிய மொழி வகுப்புக்களில் டார்டிக் (Dardic) வகுப்பைச் சேர்ந்தது.
இன்னும் நேபாளத்தில் பேசப்படும் நேவாரி மொழியும் இலங்கையில் பேசப்படும் சிங்களமும் இந்தோ-ஆரிய மொழிகளாகும். சீ. ஜே. ஜெ.