பாடல்:21

மகிழ்ந்து உரைத்தல் தொகு

குங்குமக் கோட்டுஅலர் உணங்கல் கடுக்கும்
பங்குடைச் செங்கால் பாட்டளி அரிபிடர்க்
குருவில் தோய்ந்த அரிகெழு மரகதக்
கல்எனக் கிடப்பச் சொல்லிய மேனித்
திருநெடு மா க்கு ஒருவிசை புரிந்து (5)
சோதிவளர் பாகம் ஈந்தருள் நித்தன்
முனிவர் ஏமுற வெள்ளிஅம் பொதுவில்
மனமும் கண்ணும் கனியக் குனிக்கும்
புதிய நாயகன் பழமறைத் தலையோன்
கைஞ்ஞின்றவன் செங்கால் கண்டவர் போல (10)
விளக்கமும் புதுமையும் அளப்பில் காட்சியும்
வேறொப்பு எடுத்துக் கூறுவது நீக்கமும்
அறிவோர் காணும் குறியாய இருந்தன
இருந்திண் போர்வைப் பிணிவிசி முரசம்
முன்னம் எள்ளினர் நெஞ்சுகெடத் துவைப்ப (15)
மணம்கொள் பேரணி பெருங்கவின் மறைத்தது என்று
எழுமதி குறைத்த முழுமதிக் கருங்கயல்
வண்டு மருவி உண்டு களியாது
மற்றது பூத்த பொன்திகழ் தாமரை
இரண்டு முகிழ்செய்து நெஞ்சுறப் பெருகும் (20)
வற்றா மேனி வெள்ளத்துள் மறிய
நுனித்தலை அந்தணர் கதழ்எரி வளர்த்துச்
சிவந்த வாய்தொறும் வெண்பொரி சிதறிச்
செம்மாந்து மணத்த வளரிய கூர்எரி
மும்முறை சுழன்று தாயார் உள்மகிழ (25)
இல்லுறை கல்லின் வெண்மலர் பரப்பி
இலவலர் வாட்டிய செங்கால் பிடித்து
களிதூங்கு உளத்தொடும் மெல்லெனச் சேர்த்தி
இரண்டுபெயர் காத்த தோலாக் கற்பு
முகனுறக் காணும் கரியோர் போல (30)
இடப்பால் நிறுத்தி பக்கம் சூழ
வடமீன் காட்டி விளக்கணி எடுத்துக்
குலவாழ்த்து விம்ம மணஅணிப் பக்கம்
கட்புலம் கொண்ட இப்பணி அளவும்
வாடி நிலைநின்றும் ஊடி ஏமாந்தும் (35)
என்முகம் அளக்கும் காலக் குறியைத்
தாமரைக் கண்ணால் உட்புக அறிந்தும்
உலகம் மூன்றும் பெறுதற்கு அரியதென்று
எண்ணா வாய்மை எண்ணிக் கூறியும்
கல்லுயர் நெடுந்தோள் அண்ணல்,
மல்லுறத் தந்த ஈர்ந்தழை தானே. (41)
பாடல்:22

பிறை தொழுகென்றல் தொகு

நெடுவளி உயிர்த்து மழைமதம் ஒழுக்கி
எழுமலை விழுமலை புடைமணி ஆக
மீன்புகர் நிறைந்த வான்குஞ் சரமுகம்
வால்பெற முளைத்த கூன்கோடு ஆனும்
பேச நீண்ட பல்மீன் நிலைஇய (5)
வானக் கடலில் தோணி அதுஆனும்
கொழுநர் கூடும் காம உத*தியைக்
கரைவிட உகையும் நாவாய் ஆனும்
கள்ளமர் கோதையர் வெள்ளணி விழவில்
ஐங்கணைக் கிழவன் காட்சியுள் மகிழ (10)
இழைத்து வளைத்த கருப்பு வில்லானும்
நெடியோன் முதலாம் தேவர் கூடி
வாங்கிக் கடைந்த தேம்படு கடலில்
அழுதுடன் தோன்றிய உரிமை யானும்
நிந்திரு நுதலை ஒளிவிசும்பு உடலில் (15)
ஆடிநிழல் காட்டிய பீடுஅது வானும்
கரைஅற அணியும் மானக் கலனுள்
தலைபெற இருந்த நிலைபுக ழானும்
மண்ணகம் அனைத்தும் நிறைந்தபல் உயிர்கட்கு
ஆயா அமுதம் ஈகுத லானும் (20)
பாற்கடல் உறங்கும் மாயவன் போல
தவள மாடத்து அகல்முதுகு பற்றி
நெடுங்கார் கிடந்து படும்புனல் பிழியும்
கூடல் வீற்றிருந்த நாடகக் கடவுள்
பொன்சுடர் விரித்த கொத்தலர் கொன்றையும் (25)
தாளியும் அறுகும் வால்உளை எருக்கமும்
கரந்தையும் வன்னியும் மிடைந்தசெஞ் சடையில்
இரண்டுஐஞ் ஞூறு திரண்டமுகம் எடுத்து
மண்பிலன் அகழ்ந்து திக்குநிலை மயக்கி
புரியாக் கதமோடு ஒருபால் அடங்கும் (30)
கங்கையில் படிந்த பொங்குதவத் தானும்
அந்நெடு வேணியின் கண்ணிஎன இருந்*து
தூற்றும் மறுஒழிந்த ஏற்றத் தானும்
மணிவான் பெற்றஇப் பிறையைப்
பணிவாய் புரிந்து தாமரை மகளே! (35)

பாடல்:23 தொகு

ஆற்றாமை கூறல் தொகு

பொருப்புமலி தோளினும் நெருப்புமிழ் வேலினும்
செந்ல்ரு மகளை செயம்கொள் மங்கையை
வற்றாக் காதலின் கொண்டமதி அன்றி
களவு அலர்தூற்ற தளவுகொடி நடுங்க
வேயுளம் பட்டுப் பூவை கறுக்க (5)
தண்டா மயல்கொடு வண்டுபரந்து அரற்ற
காலம் கருதித் தோன்றிகை குலைப்ப
துன்பு பசப்பூரும் கண்நிழல் தன்னைத்
திருமலர் எடுத்துக் கொன்றை காட்ட
இறைவளை நில்லாது என்பன நிலைக்க (10)
கோடல் வளைந்த வள்ளலர் உகுப்ப
கண்துளி துளிக்கும் சாயாப் பையுளை
கூறுபட நாடி ஆசையொடு மயங்கி
கருவிளை மலர்நீர் அருகுநின் றுகுப்ப
பேரழல் வாடை ஆருயிர் தடவ (15)
விளைக்கும் காலம் முளைத்த காலை
அன்பும் சூளும் நண்பும் நடுநிலையும்
தடையா அறிவும் உடையோய் நீயே
எழுந்து காட்டிப் பாடுசெய் கதிர்போல்
தோன்றி நில்லா நிலைப்பொருள் செய்ய (20)
மருங்கில் பாதி தரும்துகில் புனைந்தும்
விளைவயல் ஒடுங்கும் முதிர்நெல் உணவினும்
தம்மில் வீழுநாக்கு இன்பமென் றறிந்தும்
தண்மதி கடுஞ்சுடர் வெவ்வழல் கண்வைத்து
அளவாப் பாதம் மண்பரப் பாக (25)
தனிநெடு விசும்பு திருவுடல் ஆக
இருந்திசைப் போக்குப் பெருந்தோள் ஆக
வழுவறு திருமறை ஓசைகள் அனைத்தும்
மொழிதர நிகழும் வார்த்தை ஆக
உள்நிறைந் துழலும் பாடிரண்டு உயிர்ப்பும் (30)
பகலிரவு ஒடுங்கா விடுவளி ஆக
அடுபடைப் பூழியன் கடுமுரண் பற்றி
இட்டவெங் கொடுஞ்சிறைப் பட்ட கார்க்குலம்
தளையொடு நிறைநீர் விடுவன போல
புரைசை யொடுபாசம் அறவுடல் நிமிர்ந்து (35)
கூடமும் கந்தும் சேறுநின் றலைப்ப
மூன்றுமத நெடும்புனல* கான்று மயலுவட்டி
ஏழுயர் கரித்திரள் கதமொடு பிளிறும்
பெருநகர்க் கூடல் உறைதரு கடவுளை
நிறையப் பேசாக் குறையுளர் போலவும் (40)
கல்லா மனனினும் செல்லுதி பெரும!
இளமையும் இன்பமும் வளனும் காட்சியும்
பின்புற நேடின் முன்பவை அன்றால
நுனித்த மேனித் திருவினட்கு அடைத்த
வினைதரும் அடைவின் அல்லது
புனையக் காணேன் சொல்ஆ யினவே. (46)
பாடல்:24

தன்னுள்கையாறு எய்திடு கிளவி தொகு

நீர்நிலை நின்று கால்கறுத் தெழுந்து
திக்குநிலை படர்ந்த முகில்பா சடையும்
இடையிடை உகளும் மீனாம் மீனும்
செம்முகில் பழநுரை வெண்முகில் புதுநுரை
எங்கும் சிதறிப் பொங்கியெழு வனப்பும் (5)
பலதலை வைத்து முடியாது பாயும்
எங்கும் முகம்வைத்தக் கங்கைக் காலும்
கொண்டு குளிர்பரந்த மங்குல் வாவிக்குள்
முயல்எனும் வண்டுண அமுதநறவு ஒழுக்கி
தேவர் மங்கையர் மலர்முகம் பழித்து (10)
குறையாப் பாண்டில் வெண்மையின் மலர்ந்த
மதித்தா மரையே! மயங்கிய ஒருவேன்
நின்பால் கேட்கும் அளிமொழி ஒன்றுள
மீன்பாய்ந்து மறிக்கத் திரையிடை மயங்கி
சூல்வயிறு உளைந்து வளைகிடந்து முரலும் (15)
புன்னையம் பொதும்பரில் தம்முடை நெஞ்சமும்
மீன்உணவு உள்ளி இருந்தவெண் குருகெனச்
சோறு நறைகான்ற கைதைய மலரும்
பலதலை அரக்கர் பேரணி போல
மருங்கு கூண்டெழுந்து கருங்காய் நெருங்கி (20)
விளைகள் சுமந்த தலைவிரி பெண்ணையும்
இன்னும் காணாக் காட்சிகொண் டிருந்த
அன்னத் திரளும் பெருங்கரி யாக
சொல்லா இன்பமும் உயிருறத் தந்து
நாள்இழைக் திருக்கும் செயிர்கொள் அற்றத்து (25)
மெய்யுறத் தணந்த பொய்யினர் இன்று
நெடுமலை பெற்ற ஒருமகள் காண
நான்முக விதியே தாளம் தாக்க
அந்த நான்முகனை உந்தி பூத்தோன்
விசித்து மிறைபாசத்து இடக்கை விசிப்ப (30)
மூன்றுபுரத்து ஒன்றில் அரசுடை வாணன்
மேருக் கிளைத்த தோள்ஆ யிரத்தொடும்
எழுகடல் கிளர்ந்த திரள்கலி அடங்க
முகமவேறு இசைக்கும் குடமுழுவு இரட்ட
புட்கால் தும்புரு மணக்கந் திருவர் (35)
நான்மறைப் பயனாம் ஏழிசை அமைத்து
சருக்கரைக் குன்றில் தேன்மழை நான்றென
ஏழு முனிவர்கள் தாழும் மாதவர்
அன்பினர் உள்ளமொடு என்புகரைந் துருக
விரல்நான்கு அமைத்த அணிகுரல் வீங்காது (40)
நான்மறை துள்ளும் வாய்பிள வாது
காட்டியுள் உணர்த்தும் நோக்கம் ஆடாது
பிதிர்கணல் மணிசூழ் முடிநடுக் காது
வயிறு குழிவாங்கி அழுமுகம் காட்டாது
நாசி காகுளி வெடிகுரல் வெள்ளை (45)
பேசாக் கீழ்இசை ஒருபுறம் ஒட்டல்
நெட்டுயிர்ப்பு எறிதல் எறிந்துநின்றி ரட்டல்
ஓசை இழைத்தல் கழிபோக்கு என்னப்
பேசறு குற்றம் ஆசொடும் மாற்றி
வண்டின் தாரியும் கஞ்ச நாதமும் (50)
சிரல்வான் நிலையும் கழைஇலை வீழ்வதும்
அருவி ஓசையும் முழவின் முழக்கமும்
வலம்புரிச் சத்தமும் வெருகின் புணர்ச்சியும்
இன்னுமென் றிசைப்பப் பன்னிய விதியொடு
மந்தரம் மத்திமம் தாரம் இவைமூன்றில் (55)
துள்ளல் தூங்கல் தெள்ளிதின் மெலிதல்
கூடிய கானம் அன்பொடு பரவ
பூதம் துள்ள பேய்கை மறிப்ப
எங்குள உயிரும் இன்பம் நிறைந்தாட
நாடக விதியொடு ஆடிய பெருமான் (60)
மதுரை மாநகர்ப் பூழிய னாகி
கதிர்முடி கவித்த இறைவன் மாமணிக்
கால்தலைக் கொள்ளாக் கையினர் போல
நீங்கினர் போக்கும் ஈங்குழி வருவதும்
கண்டது கூறுதி ஆயின்
எண்தகப் போற்றிநின் கால்வணங் குதுமே. (66)
பாடல்:25

வேறுபடுத்துக் கூறல் தொகு

கண்ட காட்சி சேணின் குறியோ
என்னுழி நிலையா உள்ளத்தின் மதியோ
சூர்ப்பகை உலகில் தோன்றினர்க்கு அழகு
விதிக்கும் அடங்கா என்பன விதியோ
என்னுடைக் கண்ணும் உயிரும் ஆகி (5)
உள்நிகழ் இன்பம் உள்ளாள் ஒருத்தி
மலைக்குஞ் சரத்தின் கடக்குழி யாகி
நெடுமலை விழித்த கண்ணே ஆகி
அம்மலைத் திருநுதற்கு அழியாது அமைத்த
வெள்ளைகொள் சிந்துர நல்லணி ஆகி (10)
தூர நடந்த தாள் எய்ப்பு ஆறி
அமுதொடு கிடக்கும் நிறைமதிப் பக்கம்
ஒருபால் கிடந்த துணைமதி யாகி
அருவி வீசப் பறவை குடிபோகி
வீண்டுநறவு ஒழுக்கும் பாண்டில் இறாலாய் (15)
இளமை நீங்காது காவல்கொள் அமுதம்
வரையர மாதர் குழுவுடன் அருந்த
ஆக்கியிடப் பதித்த வள்ளமும் ஆகி
இடைவளி போகாது நெருங்குமுலைக் கொடிச்சியர்
சிறுமுகம் காணும் ஆடி ஆகி (20)
சிறந்தன ஒருசுனை இம்மலை ஆட
அளவாக் காதல் கைம்மிக்கு அணைந்தனள்
அவளே நீயாய் என்கண் குறித்த
தெருமரல் தந்த அறிவுநிலை கிடக்க
சிறிதுநின் குறுவெயர் பெறும் அணங்கு ஆறி (25)
ஒருகணன் நிலைக்க மருவுதி ஆயின்
இந்நிலை பெயர உன்னும்அக் கணத்தில்
தூண்டா விளக்கின் ஈண்டவள் உதவும்
அவ்வுழி உறவு மெய்பெறக் கலந்தின்று
ஒருகடல் இரண்டு திருப்பயந் தாங்கு (30)
வளைத்த நெடுங்கார்ப் புனத்திரு
மணிநிற ஊசல் அணிபெற உகைத்தும்
கருங்கால் கவணிடைச் செம்மணி வைத்து
பெருந்தேன் இறாலொடு குறிவிழ எறிந்தும்
வெண்துகில் நுடங்கி பொன்கொழித் திழியும் (35)
அருவி ஏற்றும் முழைமலை *கூஉயும்
பெருஞ்சுனை விழித்த நீலம் கொய்தும்
கொடுமரம் பற்றி நெட்டிதண் பொலிந்து
தினைக்குரல் அறையும் கிளிக்கணம் கடிதிர்
வெள்ளி இரும்பு பொன்எனப் பெற்ற (40)
மூன்றுபுரம் வேவ திருநகை விளையாட்டு
ஒருநாள் கண்ட பெருமான் இறைவன்
மாதுடன் ஒன்றி என்மனம் புகுந்து
பேணா உள்ளம் காணாது நடந்து
கொலைகளவு என்னும் பழுமரம் பிடுங்கி (45)
பவச்சுவர் இடித்துப் புதுக்கக் கட்டி
அன்புகொரு மேய்ந்த நெஞ்ச மண்டபத்து
பாங்குடன் காணத் தோன்றி உள்நின்று
பொன்மலர்ச் சோலை விம்மிய பெருமலர்
இமையோர் புரத்தை நிறைமணம் காட்டும் (50)
கூடலம் பதியகம் பீடுபெற இருந்தோன்
இருதாள் பெற்றவர் பெருந்திருப் போல
மருவிய பண்ணை இன்பமொடு விளைநலம்
சொல்லுடன் அமராது ஈங்கு
வில்லுடன் பகைத்த செந்திரு நுதலே! (55)
"https://ta.wikisource.org/w/index.php?title=கல்லாடம்/21-25&oldid=486164" இலிருந்து மீள்விக்கப்பட்டது