கல்லாடம்/36-40
< கல்லாடம்
- பாடல்:36
வேழம் வினாதல்
தொகு- தன்னுடல் அன்றிப் பிறிதுண் கனையிருள்
- பகல்வலிக்கு ஒதுங்கிய தோற்றம் போல
- பெருநிலவு கான்ற நீறுகெழு பரப்பில்
- அண்ட நாடவர்க்கு ஆருயிர் கொடுத்த
- கண்டக் கறையோன் கண்தரு நுதலோன் (5)
- முன்னொரு நாளில் நால்படை உடன்று
- செழியன் அடைத்த சென்னி பாட
- எள்ளருங் கருணையின் நள்ளிருள் நடுநாள்
- அவனெனத் தோன்றி அருஞ்சிறை விடுத்த
- முன்னவன் கூடல் மூதூர் அன்ன (10)
- வெண்ணகைச் செவ்வாய்க் கருங்குழல் மகளிர்
- செம்மணி கிடந்தநும் பசும்புனத்து உழையால்
- வாய்சொரி மழைமதத் தழைசெவிப் புழைக்கைக்
- குழிகண் பரூஉத்தாள் கூர்ங்கோட்டு ஒருத்தல்
- சினைதழை விளைத்த பழுமரம் என்ன (15)
- அறுகால் கணமும் பறவையும் கணையும்
- மேகமும் பிடியும் தொடர
- ஏகியது உண்டேல் கூறுவிர் புரிந்தே. (18)
- பாடல்:37
நலம் புனைந்துரைத்தல்
தொகு- அருள் தரும் கேள்வி அமையத் தேக்க
- பற்பல ஆசான் பாங்குசெல் பவர்போல்
- மூன்றுவகை அடுத்த தேன்தரு கொழுமலர்
- கொழுதிப் பாடும் குணச்சுரும் பினங்காள்
- உளத்து வேறடக்கி முகமன் கூறாது (5)
- வேட்கையின் நீயிர் வீழ்நாள் பூவினத்துள்
- காருடல் பிறைஎயிற்று அரக்கனைக் கொன்று
- வரச்சித்தடக்'கை' வரைப்பகை சுமந்த
- பழவுடல் காட்டும் தீராப் பெரும்பழி
- பனிமலை பயந்த மாதுடன் தீர்த்தருள் (10)
- பெம்மான் வாழும் பெருநகர்க் கூடல்
- ஒப்புறு பொற்றொடிச் சிற்றிடை மடந்தைதன்
- கொலையினர் உள்ளமும் குறைகொள இருண்டு
- நானம் நீவி நாள்மலர் மிலைந்து
- கூடி உண்ணும் குணத்தினர் கிளைபோல் (15)
- நீடிச் செறிந்து நெய்த்துடல் குளிர்ந்த
- கருங்குழற் பெருமணம் போல
- ஒருங்கும் உண்டோ? பேசுவிர் எமக்கே! (18)
- பாடல்:38
உலகின்மேல் வைத்து உரைத்தல்
தொகு- இருளொடு தாரகை இரண்டினை மயக்கி
- குழலென மலரென மயல்வரச் சுமந்து
- வில்லினைக் குனித்து கணையினை வாங்கி
- புருவம் கண்ணென உயிர்விடப் பயிற்றி
- மலையினைத் தாங்கி அமுதினைக் கடைந்து (5)
- முலையென சொல்லென அவாவர வைத்து
- மெய்யினைப் பரப்பி பொய்யினைக் காட்டி
- அல்குல் இடையென நெஞ்சுழலக் கொடுத்து
- முண்டகம் மலர்த்தி மாந்தளிர் மூடி
- அடியென உடலென அலமரல் உறீஇ (10)
- மூரி வீழ்ந்த நெறிச்சடை முனிவர்
- சருக்கம் காட்டும் அருமறை சொல்லி
- உள்ளம் கறுத்து கண்சிவந்து இட்ட
- மந்திரத்து அழல்குழி தொடுவயிறு வருந்தி
- முன்பின் ஈன்ற பேழ்வாய்ப் புலியினை (15)
- கைதைமுள் செறிந்த கூர்எயிற்று அரவினை
- காருடல் பெற்ற தீவிழிக் குறளினை
- உரிசெய்து உடுத்து செங்கரம் தரித்து
- செம்மலர் பழித்த தாட்கீழ்க் கிடத்தி
- திருநடம் புரிந்த தெய்வ நாயகன் (20)
- ஒருநாள் மூன்று புரம்தீக் கொளுவ
- பொன்மலை பிடுங்கி கார்முகம் என்ன
- வளைத்த ஞான்று நெடுவிண் தடையக்
- கால் கொடுத்தன்ன கந்திகள் நிமிர்ந்து
- நெருக்குபொழில் கூடல் அன்னசெம் மகளிர் (25)
- கண்ணெனும் தெய்வக் காட்சியுள் பட்டோர்
- வெண்பொடி எருக்கம் என்புபனை கிழியினை
- பூசி அணிந்து பூண்டு பரிகடவி
- கரத்தது ஆக்கி அந்நோ
- அருத்தி மீட்பர் நிலைவல் லோரே. (30)
- பாடல்:39
நாண் இழந்து வருந்தல்
தொகு- மைகுழைத் தன்ன தொள்ளிஅம் செறுவில்
- கூர்வாய்ப் பறைதபு பெருங்கிழ நாரை
- வஞ்சனை தூங்கி ஆரல் உண்ணும்
- நீங்காப் பழனப் பெருநகர்க் கூடல்
- கரம்மான் தரித்த பெருமான் இறைவன் (5)
- பொன்பழித் தெடுத்த இன்புறு திருவடி
- உளம்விழுங் காத களவினர் போலஎன்
- உயிரொடும் வளர்ந்த பெருநாண் தறியினை
- வெற்பன் காதற் கால்உலை வேலையின்
- வலியுடைக் கற்பின் நெடுவெளி சுழற்றிக் (10)
- கட்புலன் காணாது காட்டைகெட உந்தலின்
- என்போல் இந்நிலை ஆறுவரப் படைக்கும்
- பேறாங்கு ஒழிக பெருநாண் கற்பினர்
- என் பேறு உடையர் ஆயின்
- கற்பில் தோன்றாக் கடனா குகவே. (15)
- பாடல்:40
தோழி இயற்பழித்து உரைத்தல்
தொகு- வடமீன் கற்பின்எம் பீடுகெழு மடந்தை
- பெருங்கடல் முகந்து வயிறுநிறை நெடுங்கார்
- விண்திரிந்து முழங்கி வீழா தாகக்
- கருவொடு வாடும் பைங்கூழ் போல
- கற்புநாண் மூடிப் பழங்கண் கொள்ள (5)
- உயர்மரம் முளைத்த ஊரி போல
- ஓருடல் செய்து மறுமனம் காட்டும்
- மாணிழை மகளிர் வயின்வை குதலால்
- கருமுகிற் கனிநிறத் தழற்கண் பிறைஎயிற்று
- அரிதரு குட்டி ஆயபன் னிரண்டினை (10)
- செங்கோல் முளையிட்டு அருள்நீர் தேக்கி
- கொலைகளவு என்னும் படர்களை கட்டு
- தீப்படர் ஆணை வேலி கோலி
- தருமப் பெரும்பயிர் உலகுபெற விளைக்கும்
- நால்படை வன்னியர் ஆக்கிய பெருமான் (15)
- முள் உடைப் பேழ்வாய்ச் செங்கண் வராலினம்
- வளைவாய்த் தூண்டிற் கருங்கயிறு பரிந்து
- குவளைப் பாசடை முண்டகம் உழக்கி
- நெடுங்கால் பாய்ந்து படுத்த ஒண்தொழில்
- சுருங்கை வழிஅடைக்கும் பெருங்கழிப் பழனக் (20)
- கூடற்கு இறைவன் இருதாள் விடுத்த
- பொய்யினர் செய்யும் புல்லம் போல
- பேரா வாய்மை ஊரன்
- தாரொடு மயங்கி பெருமையும் இலனே. (24)