பாடல்:41

பொழுது கண்டு இரங்கல்

தொகு
கோடிய கோலினன் செருமுகம் போல
கனைகதிர் திருகிக் கல்சேர்ந்து முறைபுக
பதினெண் கிளவி ஊர்துஞ் சியபோல்
புட்குலம் பொய்கை வாய்தாழ்க் கொள்ள
வேள் சரத்து உடைகுநர் கோலம் நோக்கி (5)
இருள்மகள் கொண்ட குறுநகை போல
முல்லையும் மௌவலும் முருகுயிர்த்து அவிழ
தணந்தோர் உளத்தில் காமத் தீப்புக
மணந்தோர் நெஞ்சத்து அமுத நீர்விட
அன்றில்புற் சேக்கைபுக்கு அலகுபெடை அணைய (10)
அந்தணர் அருமறை அருங்கிடை அடங்க
முதுகனி மூலம் முனிக்கணம் மறுப்ப
கலவையும் பூவும் தோள்முடி கமழ
விரிவலை நுளையர் நெய்தல் ஏந்தி
துத்தம் கைக்கிளை அளவையின் விளைப்ப (15)
நீரர மகளிர் செவ்வாய் காட்டிப்
பசுந்தாட் சேக்கோள் ஆம்பல் மலர
தோளும் இசையும் கூறிடும் கலையும்
அருள்திரு எழுத்தும் பொருள்திரு மறையும்
விரும்பிய குணமும் அருந்திரு உருவும் (20)
முதல்என் கிளவியும் விதமுடன் நிரையே
எட்டும் ஏழும் கொற்றன ஆறும்
ஐந்தும் நான்கும் அணிதரு மூன்றும்
துஞ்சலில் இரண்டும் சொல்அரும் ஒன்றும்
ஆருயிர் வாழ அருள்வர நிறுத்திய (25)
பேரருட் கூடல் பெரும்பதி நிறைந்த
முக்கட் கடவுள் முதல்வனை வணங்கார்
தொக்கதீப் பெருவினை சூழ்ந்தன போலவும்
துறவால் அறனால் பெறலில் மாந்தர்
விள்ளா அறிவும் உள்ளமும் என்னவும் (30)
செக்கர்த் தீயொடு புக்கநல் மாலை!
என்னுயிர் வளைந்த தோற்றம் போல
நாற்படை வேந்தன் பாசறை
யோர்க்கும் உளையோ? மனத்திறன் ஓதுகவே. (34)
பாடல்:42

மா விரதியரொடு கூறல்

தொகு
நிலவுபகல் கான்ற புண்ணிய அருட்பொடி
இருவினை துரந்த திருவுடல் மூழ்கி
நடுவுடல் வரிந்த கொடிக்காய் பத்தர்
சுத்திஅமர் நீறுடன் தோள்வலன் பூண்டு
முடங்குவீழ் அன்ன வேணி முடிகட்டி (5)
இருமூன்று குற்றம் அடியறக் காய்ந்திவ்
ஆறு எதிர்ப்பட்ட அருந்தவத் திருவினர்
தணியாக் கொடுஞ்சுரம் தரும்தழல் தாவிப்
பொன்னுடல் தேவர் ஒக்கலொடு மயங்கி
கொண்மூப் பல்திரைப் புனலுடன் தாழ்த்தி (10)
பொதுளிய தருவினுள் புகுந்து இமையாது
மருந்து பகுத்துண்டு வல்லுயிர் தாங்கும்
வட்டைவந் தனைஎன வழங்கு மொழிநிற்க
தாய்கால் தாழ்ந்தனள் ஆயம் வினவினள்
பாங்கியைப் புல்லினள் அயலும் சொற்றனள் (15)
மக்கட் பறவை பரிந்துளம் மாழ்கினள்
பாடலப் புதுத்தார்க் காளைபின் ஒன்றால்
தள்ளா விதியின் செல்குநள் என்று
தழல்விழிப் பேழ்வாய்த் தரக்கின் துளிமுலை
பைங்கண் புல்வாய் பால்உணக் கண்ட (20)
அருள்நிறை பெருமான் இருள் நிறை மிடற்றோன்
மங்குல்நிரை பூத்த மணிஉடுக் கணம் எனப்
புன்னைஅம் பெதும்பர்ப் பூநிறை கூடல்நும்
பொன்னடி வருந்தியும் கூடி
அன்னையர்க் குதவல் வேண்டும்இக் குறியே. (25)
பாடல்:43

ஆடு இடத்து உயத்தல்

தொகு
முன்னி ஆடுக முன்னி ஆடுக
குமுதம் வள்ளையும் நீலமும் குமிழும்
தாமரை ஒன்றில் தடைந்துவளர் செய்த
முளரிநிறை செம்மகள் முன்னி ஆடுக
நிற்பெறு தவத்தினை முற்றிய யானும் (5)
பலகுறி பெற்றிவ் உலகுயிர் அளித்த
பஞ்சின் மெல்லடிப் பாவை கூறாகி
கருங்குரு விக்குக் கண்ணருள் கொடுத்த
வெண்திரு நீற்றுச் செக்கர் மேனியன்
கிடையில் தாபதர் தொடைமறை முழக்கும் (10)
பொங்கர்க் கிடந்த சூற்கார்க் குளிறலும்
வல்லியில் பரியும் பகடுவிடு குரலும்
யாணர்க் கொடிஞ்சி நெடுந்தேர் இசைப்பும்
ஒன்றி அழுங்க நின்றநிலை பெருகி
மாதிரக் களிற்றினைச் செவிடு படுக்கும் (15)
புண்ணியக் கூடல் உள்நிறை பெருமான்
திருவடி சுமந்த அருளினர் போல
கருந்தேன் உடைத்துச் செம்மணி சிதறி
பாகற் கோட்டில் படர்கறி வணக்கி
கல்லென்று இழிந்து கொல்லையில் பரக்கும் (20)
கறங்கிசை அருவியம் சாரல்
புறம்பு தோன்றி நின்கண் ஆகுவனே. (22)
பாடல்:44

இயல் இடங் கூறல்

தொகு
வீதி குத்திய குறுந்தாள் பாரிடம்
விண்தலை உடைத்துப் பிறைவாய் வைப்ப
குணங்கினம் துள்ள கூளியும் கொட்ப
மத்தி யந்தணன் வரல்சொலி விடுப்பத்
தில்லை கண்ட புலிக்கால் முனிவனும் (5)
சூயை கைவிடப் பதஞ்சலி ஆகிய
ஆயிரம் பணாடவி அருந்தவத்து ஒருவனும்
கண்ணால் வாங்கி நெஞ்சறை நிறைப்ப
திருநடம் நவின்ற உலகுயிர்ப் பெருமான்
கடல்மாக் கொன்ற தீப்படர் நெடுவேல் (10)
உருளிணர்க் கடம்பின் நெடுந்தார்க் கண்ணியன்
அரிமகள் விரும்பிப் பாகம் செய்து
களியுடன் நிறைந்த ஒருபரங் குன்றமும்
பொன்அம் தோகையும் மணிஅரிச் சிலம்பும்
நிரைத்தலைச் சுடிகை நெருப்புமிழ் ஆரமும் (15)
வண்டுகிளை முரற்றிய பாசிலைத் துளவும்
மரகதம் உடற்றிய வடிவொடு மயங்க
மரக்கால் ஆடி அரக்கர்க் கொன்ற
கவைத்தலை மணிவேல் பிறைத்தலைக் கன்னி
வடபால் பரிந்த பலிமணக் கோட்டமும் (20)
சூடகம் தோள்வளை கிடந்து வில்வீச
யாவர்தம் பகையும் யாவையின் பகையும்
வளனின் காத்து வருவன அருளும்
ஊழியும் கணமென உயர்மகன் பள்ளியும்
உவாமதி கிடக்கும் குண்டுகடல் கலக்கி (25)
மருந்து கைக்கொண்டு வானவர்க்கு ஊட்டிய
பாகப் பக்க நெடியோன் உறையுளும்
தும்பி உண்ணாத் தொங்கல் தேவர்
மக்களொடு நெருங்கிய வீதிப் புறமும்
மதுநிறை பிலிற்றிய பூவொடு நெருங்கி (30)
சூரரக் கன்னியர் உடல்பனி செய்யும்
கடைக்கால் மடியும் பொங்கர்ப் பக்கமும்
ஊடி ஆடுநர்த் திரையொடு பிணங்கித்
தோழியின் தீர்க்கும் வையைத் துழனியும் (35)
அளவா ஊழி மெய்யொடு சூழ்ந்து
நின்று நின்றோங்கி நிலைஅறம் பெருக்கும்
ஆனாப் பெரும்புகழ் அருள்நகர்க் கூடல்
பெண்ணுடல் பெற்ற சென்னிஅம் பிறையோன்
பொற்றகடு பரப்பிய கருமணி நிரைஎன (40)
வண்டும் தேனும் மருள்கிளை முரற்றி
உடைந்துமிழ் நறவுண்டு உறங்குதார்க் கொன்றையன்
திருவடி புகழுநர் செல்வம் போலும்
அண்ணாந்து எடுத்த அணிவுறு வனமுலை
அவன்கழல் சொல்லுநர் அருவினை மானும் (45)
மலைமுலைப் பகைஅட மாழ்குறும் நுசுப்பு
மற்றவன் அசைத்த மாசுணம் பரப்பி
அமைத்தது கடுக்கும் அணிப்பாம்பு அல்குல்
ஆங்கவன் தரித்த கலைமான் கடுக்கும்
இருகுழை கிழிக்கும் அரிமதர் மலர்க்கண் (50)
புகர்முகப் புழைக்கை துயில்தரு கனவில்
முடங்குளை கண்ட பெருந்துயர் போல
உயிரினும் நுனித்த அவ்வுருக் கொண்டு
பொன்மலை பனிப்பினும் பனியா
என்னுயிர் வாட்டிய தொடிஇளங் கொடிக்கே. (55)
பாடல்:45

அன்னத்தோடு அழிதல்

தொகு
கவைத்துகிர் வடவையின் திரள்சிகை பரப்பி
அரைபெறப் பிணித்த கல்குளி மாக்கள்
உள்ளம் தீக்கும் உவர்க்கடல் உடுத்த
நாவலம் தண்பொழில் இன்புடன் துயில
உலகற விழுங்கிய நள்ளென் கங்குல் (5)
துயிலாக் கேளுடன் உயிர்இரை தேரும்
நெட்டுடல் பேழ்வாய்க் கழுதும் உறங்க
பிள்ளையும் பெடையும் பறைவாய்த் தழீஇச்
சுற்றமும் சூழக் குருகு கண்படுப்ப
கீழ்அரும்பு அணைந்த முள்அரை முளரி (10)
இதழ்க்கதவு அடைத்து மலர்க்கண் துயில
விரிசினை பொதுளிய பாசிலை ஒடுக்கி
பூவொடும் வண்டொடும் பொங்கரும் உறங்க
பால்முகக் களவின் குறுங்காய்ப் பச்சிணர்
புட்கால் பாட்டினர்க்கு உறையுள் கொடுத்த (15)
மயிர்குறை கருவித் துணைக்குழை அலைப்ப
வரிந்தஇந் தனச்சுமை மதிஅரவு இதழி
அகன்று கட்டவிழ்ந்த சேகரத் திருத்தி
வீதியும் கவலையும் மிகவளம் புகன்று
பொழுதுகண் மறைந்த தீவாய்ச் செக்கர் (20)
தணந்தோர் உள்ளத் துள்உறப் புகுந்தபின்
காருடல் காட்டி கண்டகண் புதைய
அல்எனும் மங்கை மெல்லெனப் பார்க்க
முரன்றெழு கானம் முயன்று வாதியைந்த
வடபுல விஞ்சையன் வைகிடத்து அகன்கடை (25)
தென்திசைப் பாணன் அடிமை யானென
போகா விறகுடன் தலைக்கடை பொருந்தி
உந்தித் தோற்றமும் ஓசைநின்று ஒடுங்க
பாலையில் எழுப்பி அமர்இசை பயிற்றி
தூங்கலும் துள்ளலும் சுண்டிநின் றெழுதலும் (30)
தாரியில் காட்டித் தரும்சா தாரி
உலகுயிர் உள்ளமும் ஒன்றுபட்டு ஒடுங்க
இசைவிதி பாடி இசைப்பகை துரந்த
கூடற்கு இறையோன் தாள்விடுத் தோர்என
என்கண் துஞ்சா நீர்மை
முன்கண்டு ஓதாது அவர்க்கிளங் குருகே. (36)
"https://ta.wikisource.org/w/index.php?title=கல்லாடம்/41-45&oldid=486167" இலிருந்து மீள்விக்கப்பட்டது