பாடல்:46

தலைவற்குப் பாங்கி தலை வருத்தம் கூறல்

தொகு
ஈன்ற செஞ்சூழல் கவர்வழி பிழைத்த
வெறிவிழிப் பிணர்மருப்பு ஆமான் கன்றினை
மென்னடைக் குழைசெவி பெறாவெறுங் கரும்பிடி
கணிப்பணைக் கவட்டும் மணற்சுனைப் புறத்தும்
தழைக்குற மங்கையர் ஐவனம் அவைக்கும் (5)
உரற்குழி நிரைத்த கல்லறைப் பரப்பும்
மானிட மாக்கள் அரக்கிகைப் பட்டென
நாச்சுவை அடுக்கும் உணவு உவவாது
வைத்துவைத் தெடுக்கும் சாரல் நாடன்
அறிவும் பொறையும் பொருள்அறி கல்வியும் (10)
ஒழுக்கமும் குலனும் அமுக்கறு தவமும்
இனிமையும் பண்பும் ஈண்டவும் நன்றே
வெடிவால் பைங்கண் குறுநரி இனத்தினை
ஏழிடம் தோன்றி இனன்நூற்கு இயைந்து
வீதி போகிய வால்வுளைப் பரவி (15)
ஆக்கிய விஞ்சைப் பிறைமுடி அந்தணன்
கொண்டோற்கு ஏகும் குறியுடை நன்னாள்
அன்னையர் இல்லத்து அணிமட மங்கையர்
கண்டன கவரும் காட்சி போல
வேலன் பேசி மறிசெகுத்து ஓம்பிய (20)
காலம் கோடா வரைவளர் பண்டம்
வருவன வாரி வண்டினம் தொடர
கண்கயல் விழித்து பூத்துகில் மூடி
குறத்தியர் குடத்தியர் வழிவிட நடந்து
கருங்கால் மள்ளர் உழவச் சேடியர் (25)
நிரைநிரை வணங்கி மதகெதிர் கொள்ள
தண்ணடைக் கணவற் பண்புடன் புணரும்
வையை மாமாது மணத்துடன் சூழ்ந்த
கூடல் பெருமான் பொன்பிறழ் திருவடி
நெஞ்சு இருத்தாத வஞ்சகர் போல (30)
சலியாச் சார்பு நிலைஅற நீங்கி
அரந்தை யுற்று நீடநின் றிரங்கும்
முருந்தெயிற் றிளம்பிறைக் கோலம்
திருத்திய திருநுதல் துகிர்இளங் கொடியே (34)
பாடல்:47

சொல்லாது ஏகல்

தொகு
இலதெனின் உளதென்று உள்ளமொடு விதித்தும்
சொல்லா நிலைபெறும் சூளுறின் மயங்கிச்
செய்குறிக் குணனும் சிந்தையுள் திரிவும்
உழைநின் றறிந்து பழங்கண் கவர்ந்தும்
கண்எதிர் வைகி முகன்கொளின் கலங்கியும் (5)
வழங்குறு கிளவியின் திசைஎன மாழ்கியும்
ஒருதிசை நோக்கினும் இருக்கினும் உடைந்தும்
போக்கென உழையர் அயர்ப்பிடைக் கிளப்பினும்
முலைகுவட்டு ஒழுக்கிய அருவிதண் தரளம்
செம்மணி கரிந்து தீத்தர உயிர்த்தும் (10)
போமென வாய்ச்சொல் கேட்பினும் புகைந்தும்
கொள்ளார் அறுதியும் கொண்டோர் இசைத்தலும்
ஈதெனக் காட்டிய மயல்மட வரற்கு
முன்னொரு வணிகன் மகப்பேறு இன்மையின்
மருமான் தன்னை மகவெனச் சடங்குசெய்து (15)
உள்ளமும் கரணமும் அவனுழி ஒருக்கி
முக்கவர்த் திருநதி துணையுடன் மூழ்கி
அப்புலத் துயிர்கொடுத்து அருட்பொருள் கொண்டபின்
மற்றவன் தாயம் வவ்வுறு மாக்கள்
காணி கைக்கொண்ட மறுநிலை மைந்தனை (20)
நிரைத்துக் கிளைகொள் நெடுவழக்கு உய்த்தலும்
மைந்தனும் கேளிரும் மதிமுடிக் கடவுள்நின்
புந்தியொன் றிற்றிப் புகல்இலம் என்றயர்
அவ்வுழி ஒருசார் அவன்மா துலனென
அறிவொளி நிறைவே ஓருருத் தரிந்துவந்து (25)
அருள்வழக் கேறி அவர்வழக் குடைத்த
கூடல் நாயகன் தாள்பணி யாரென
எவ்வழிக் கிளவியின் கூறிச்
செவ்விதின் செல்லும் திறன்இனி யானே. (29)
பாடல்:48

தெளிதல்

தொகு
நின்றறி கல்வி ஒன்றிய மாந்தர்
புனைபெருங் கவியுள் தருபொருள் என்ன
ஓங்கி புடைபரந்து அமுதம் உள்ளூறி
காண்குறி பெருத்து கச்சவை கடிந்தே
எழுத்துமணி பொன்பூ மலையென யாப்புற்று (5)
அணிபெரு முலைமேல் கோதையும் ஒடுங்கின
செங்கோல் அரசன் முறைத்தொழில் போல
அமுதமும் கடுவும் வாளும் படைத்த
மதர்விழித் தாமரை மலர்ந்திமைத் தமர்ந்தன
செய்குறை முடிப்பவர் சென்மம் போலப் (10)
பதமலர் மண்மிசைப் பற்றிப் பரந்தன
அமுதம் பொடித்த முழுமதி என்ன
முகம்வியர்ப்பு உறுத்தின உள்ளமும் சுழன்றன
இதழியும் தும்பையும் மதியமும் கரந்து
வளைவிலை மாக்கள் வடிவு எழுந்தருளி (15)
முத்தமிழ் நான்மறை முளைத்தருள் வாக்கால்
வீதி கூறி விதித்தமுன் வரத்தால்
கருமுகில் விளர்ப்ப அறல்நீர் குளிப்ப
கண்புகை யாப்புத் திணிஇருள் விடிய
உடல்தொறும் பிணித்த பாவமும் புலர (20)
கண்டநீள் கதுப்பினர் கைகுவி பிடித்து
குருகுஅணி செறித்த தனிமுதல் நாயகன்
குருகும் அன்னமும் வால்வளைக் குப்பையை
அண்டமும் பார்ப்பும் ஆமென அணைக்கும்
அலைநீர்ப் பழன முதுநகர்க் கூடல் (25)
ஒப்படைத்து ஆயஇப் பொற்றொடி மடந்தை
அணங்கினள் ஆம்என நினையல்
பிணங்கி வீழ்ந்து மாழ்குறும் மனனே. (28)
பாடல்:49

மெலிவு கண்டு செவிலி கூறல்

தொகு
கதிர்நிரை பரப்பும் மணிமுடித் தேவர்கள்
கனவிலும் காணாப் புனைவருந் திருவடி
மாநிலம் தோய்ந்தோர் வணிகன் ஆகி
எழுகதிர் விரிக்கும் திருமணி எடுத்து
வரையாக் கற்புடன் நான்கெனப் பெயர்பெற்று (5)
ஆங்காங்கு ஆயிர கோடி சாகைகள்
மிடலொடு விரித்து சருக்கம் பாழி
வீயா அந்தம் பதம்நிரை நாதம்
மறைப்பு புள்ளி மந்திரம் ஒடுக்கமென்று
இனையவை விரித்துப் பலபொருள் கூறும் (10)
வேதம் முளைத்த ஏதமில் வாக்கால்
குடுமிச் சேகரச் சமனொளி சூழ்ந்த
நிறைமதி நான்கின் நிகழ்ந்தன குறியும்
குருவிந் தம்செள கந்திகோ வாங்கு
சாதரங் கம்எனும் சாதிகள் நான்கும் (15)
தேக்கின் நெருப்பின் சேர்க்கின் அங்கையின்
தூக்கின் தகட்டின் சுடர்வாய் வெயிலின்
குச்சையின் மத்தகக் குறியின் ஓரத்தின்
நெய்த்துப் பார்வையின் நேர்ந்து சிவந்தாங்கு
ஒத்த நற்குணம் உடையபன் னிரண்டும் (20)
கருகிநொய் தாதல் காற்று வெகுளி
திருகல் முரணே செம்மண் இறுகல்
மத்தகக் குழிவு காசம் இலைச்சுமி
எச்சம் பொரிவு புகைதல் புடாயம்
சந்தை நெய்ப்பிலி எனத்தரு பதினாறு (25)
முந்திய நூலில் மொழிந்தன குற்றமும்
சாதகப் புட்கண் தாமரை கழுநீர்
கோபம் மின்மினி கொடுங்கதிர் விளக்கு
வன்னி மாதுளம் பூவிதை என்னப்
பன்னுசா தரங்க ஒளிக்குணம் பத்தும் (30)
செம்பஞ்சு அரத்தம் திலகம் உலோத்திரம்
முயலின் சோரி சிந்துரம் குன்றி
கவிர்அலர் என்னக் கவர்நிறம் எட்டும்
குருவிந் தத்தில் குறித்தன நிறமும்
அசோகப் பல்லவம் அலரி செம்பஞ்சு (35)
கோகிலக் கண்நீடு இலவலர் செம்பெனத்
தருசெள கந்தி தன்நிறம் ஆறும்
செங்கல் குராமலர் மஞ்சள் கோவை
குங்குமம் அஞ்சில் கோவாங்கு நிறமும்
திட்டை ஏறு சிவந்த விதாயம் (40)
ஒக்கல் புற்றாம் குருதி தொழுனை
மணிகோ கனகம் கற்பம் பாடி
மாங்கி சகந்தி வளர்காஞ்சு உண்டையென்று
ஆங்கொரு பதின்மூன்று அடைந்தன குற்றமும்
இவையெனக் கூறிய நிறையருட் கடவுள் (45)
கூடல் கூடா குணத்தினர் போல
முன்னையள் அல்லள் முன்னையள் அல்லள்
அமுதவாய்க் கடுவிழிக் குறுந்தொடி நெடுங்குழல்
பெருந்தோள் சிறுநகை முன்னையள் அல்லள்
உலகியல் மறந்த கதியினர் போல (50)
நம்முள் பார்வையும் வேறுவேறு ஆயின
பகழிசெய் கம்மியர் உள்ளம் போல
ஐம்புலக் கேளும் ஒருவாய்ப் புக்கன
அதிர்உவர்க் கொக்கின் களவுயிர் குடித்த
புகரிலை நெடுவேல் அறுமுகக் குளவன் (55)
தகரம் கமழும் நெடுவரைக் காட்சி
உற்றனள் ஆதல் வேண்டும்
சிற்றிடைப் பெருந்தோள் தேமொழி தானே. (58)
பாடல்:50

பருவங்கண்டு பெருமகள் புலம்பல்

தொகு
பசிமயல் பிணித்த பிள்ளைவண்டு அரற்ற
ஆசையின் செறிந்த பொங்கர்க் குலத்தாய்
அருப்பு முலைக்கண் திறந்துமிழ் மதுப்பால்
சினைமலர்த் துணைக்கரத்து அன்புடன் அணைத்து
தேக்கிட அருத்தி அலர்மலர்த் தொட்டில் (5)
காப்புறத் துயிற்றும் கடிநகர்க் கூடல்
அருளுடன் நிறைந்த கருவுயிர் நாயகன்
குரவரும்பு உடுத்த வால்எயிற்று அழல்விழிப்
பகுவாய்ப் பாம்பு முடங்கல் ஆக
ஆலவாய் பொதிந்த மதிமுடித் தனிமுதல் (10)
சேக்கோள் முளரி அலர்த்திய திருவடி
கண்பரு காத களவினர் உளம்போல்
காருடன் மிடைந்த குளிறுகுரல் கணமுகில்
எம்முயிர் அன்றி இடைகண் டோர்க்கும்
நெஞ்சறை பெருந்துயர் ஓவாது உடற்றக் (15)
கவையா நெஞ்சமொடு பொருவினைச் சென்றோர்
கண்ணினும் கவரும் கொல்லோ
உள்நிறைந்து இருந்து வாழிய மனனே. (18)
"https://ta.wikisource.org/w/index.php?title=கல்லாடம்/46-50&oldid=486168" இலிருந்து மீள்விக்கப்பட்டது