பாடல்:61

தலைவி தோழியொடு புகல்தல்

தொகு
நடைமலை பிடித்த சொரிஎயிற்று இடங்கரை
ஆழி வலவன் அடர்த்தன போல
புன்தலை மேதி புனல்எழ முட்டிய
வரிவுடற் செங்கண் வராலுடன் மயங்க
உள்கவைத் தூண்டில் உரம்புகுந்து உழக்கும் (5)
நிறைநீர் ஊரர் நெஞ்சகம் பிரிக்கும்
பிணிமொழிப் பாணன் உடனுறை நீக்கி
நூலொடு துவளும் தோல்திரை உரத்தின்
மால்கழித்து அடுத்த நரைமுதிர் தாடிசெய்
வெள்ளி குமிழ்த்த வெரூஉக்கண் பார்ப்பான் (10)
கோலுடன் படரும் குறுநகை ஒருவி
பூவிலைத் தொழில்மகன் காவல் கைவிட்டு
திக்குவிண் படர்நதி திருமதி கயிலை
நாமகள் பெருங்கடல் நாற்கோட்டு ஒருத்தல்
புண்ணியம் இவைமுதல் வெள்ளுடல் கொடுக்கும் (15)
புகழ்க்கவிப் பாவலர் புணர்ச்சி இன்பகற்றி
எல்லாக் கல்வியும் இகழ்ச்சிசெய் கல்வியர்
பெருநகைக் கூட்டமும் கழிவுசெய்து இவ்விடை
மயக்குறு மாலை மாமகள் எதிர
ஒருவழிப் படர்ந்தது என்னத் திருமுகம் (20)
ஆயிரம் எடுத்து வான்வழிப் படர்ந்து
மண்ணேழ் உருவி மறியப் பாயும்
பெருங்கதத் திருநதி ஒருங்குழி மடங்க
ஐம்பகை அடக்கிய அருந்தவ முனிவன்
இரந்தன வரத்தால் ஒருசடை இருத்திய (25)
கூடல் பெருமான் குரைகழல் கூறும்
செம்மையர் போல கோடா
நம்மையும் நோக்கினர் சிறிதுகண் புரிந்தே. (28)
பாடல்:62

வழிபாடு கூறல்

தொகு
நிரைஇதழ் திறந்து மதுகண்டு அருத்தும்
விருந்துகொள் மலரும் புரிந்துறை மணமும்
செந்தமிழ்ப் பாடலும் தேக்கிய பொருளும்
பாலும் சுவையும் பழமும் இரதமும்
உடலும் உயிரும் ஒன்றியது என்ன (5)
கண்டும் தெளிந்தும் கலந்தஉள் உணர்வால்
பாலும் அமுதமும் தேனும் பிலிற்றிய
இன்பமர் சொல்லி நண்பும் மனக்குறியும்
வாய்மையும் சிறப்பும் நிழல்எனக் கடவார்
விண்ணவர் தலைவனும் வீயா மருந்தும் (10)
அளகைக்கு இறையும் அரும்பொருள் ஈட்டமும்
கண்ணனும் காவலும் முனியும் பசுவும்
ஒன்றினும் தவறா ஒழுங்கு இயைந்தனபோல்
நீடிநின் றுதவும் கற்புடை நிலையினர்
தவமகற் றீன்ற நெடுங்கற்பு அன்னை (15)
முன்ஒரு நாளில் முதல்தொழில் இரண்டினர்
பன்றியும் பறவையும் நின்றுரு எடுத்து
கவையா உளத்துக் காணும் கழலும்
கல்வியில் அறிவில் காணும் முடியும்
அளவுசென் றெட்டா அளவினர் ஆகி (20)
மண்ணும் உம்பரும் அகழ்ந்தும் பறந்தும்
அளவா நோன்மையில் நெடுநாள் வருந்திக்
கண்ணினில் காணாது உளத்தினில் புணராது
நின்றன கண்டு நெடும்பயன் படைத்த
திருஅஞ் செழுத்தும் குறையாது இரட்ட (25)
இருநிலம் உருவிய ஒருதழல் தூணத்து
எரிமழு நவ்வி தமருகம் அமைத்த
நாற்கரம் நுதல்விழி தீப்புகை கடுக்களம்
உலகுபெற் றெடுத்த ஒருதனிச் செல்வி
கட்டிய வேணி மட்டலர் கடுக்கை (30)
ஆயிரம் திருமுகத்து அருள்நதி சிறுமதி
பகைதவிர் பாம்பும் நகைபெறும் எருக்கமும்
ஒன்றிய திருவுரு நின்றுநனி காட்டிப்
பேரருள் கொடுத்த கூடலம் பதியோன்
பதம்இரண்டு அமைத்த உள்ளக்
கதியிரண்டு ஆய ஓர்அன் பினரே. (36)
பாடல்:63

ஆதரம் கூறல்

தொகு
நெடுவரைப் பொங்கர்ப் புனம்எரி கார்அகில்
கரும்புகை வானம் கையுறப் பொதிந்து
தருநிழல் தேவர் தம்உடல் பனிப்பப்
படர்ந்தெறி கங்கை விடும்குளிர் அகற்றும்
பொன்னம் பொருப்ப! நின்உளத் தியையின் (5)
கனல்தலைப் பழுத்த திரள்பரல் முரம்பு
வயல்வளை கக்கிய மணிநிரைப் பரப்பே
அதர்விரிந் தெழுந்த படர்புகை நீழல்
பொதுளிய காஞ்சி மருதணி நிழலே!
தீவாய்ப் புலிப்பற் சிறுகுரல் எயிற்றியர் (10)
கழுநீர் மிலையும் வயல்மா தினரே
அயற்புலம் அறியும் எயினர் மாத்துடி
நடுநகர்க் கிரட்டும் களிஅரி கிணையே!
இருள்கவர் புலன்எனச் சுழல்தரும் சூறை
மதுமலர் அளைந்த மலையக் காலே (15)
எழுசிறை தீயும் எருவையும் பருந்தும்
குவளையம் காட்டுக் குருகொடு புதாவே
வலியழி பகடு வாய்நீர்ச் செந்நாய்
தழைமடி மேதியும் பிணர்இடங் கருமே
பட்டுலர் கள்ளி நெற்றுடை வாகை (20)
சுருள்விரி சாலியும் குலைஅரம் பையுமே
வடதிரு ஆல வாய்திரு நடுவூர்
வெள்ளி யம்பலம் நள்ளாறு இந்திரை
பஞ்சவ னீச்சரம் அஞ்செழுத்து அமைத்த
சென்னி மாபுரம் சேரன் திருத்தளி (25)
கன்னிசெங் கோட்டம் கரியோன் திருவுறை
விண்ணுடைத் துண்ணும் கண்ணிலி ஒருத்தன்
மறிதிரைக் கடலுள் மாவெனக் கவிழ்ந்த
களவுடற் பிளந்த ஒளிகெழு திருவேல்
பணிப்பகை ஊர்தி அருட்கொடி இரண்டுடன் (30)
முன்னும் பின்னும் முதுக்கொள நிறைந்த
அருவிஅம் சாரல் ஒருபரங் குன்றம்
சூழ்கொள இருந்த கூடலம் பெருமான்
முழுதும் நிறைந்த இருபதம் புகழார்
போம்வழி என்னும் கடுஞ்சுரம் மருதம்
மாமை ஊரும் மணிநிறத்து இவட்கே. (36)
பாடல்:64

முகம் கண்டு மகிழ்தல்

தொகு
நிறைமதி புரையா நிறைமதி புரையா
தேரான் தெளிவெனும் திருக்குறள் புகுந்து
குறைமதி மனனே நிறைமதி புரையா
உவர்க்கடற் பிறந்தும் குறைவுடல் கோடியும்
கருங்கவைத் தீநாப் பெரும்பொறிப் பகுவாய்த் (5)
தழல்விழிப் பாந்தள் தான்இரை மாந்தியும்
மிச்சில் உமிழ்ந்து மெய்யுள் கறுத்தும்
தணந்தோர்க்கு எரிந்தும் மணந்தோர்க்கு அளித்தும்
குமுதம் மலர்த்தியும் கமலம் குவித்தும்
கடல்சூழ் உலகில் மதிநடு இகந்தும் (10)
பெருமறை கூறி அறைவிதி தோறும்
முத்தழற்கு உடையோன் முக்கட் கடவுளென்று
உய்த்திடும் வழக்குக் கிடக்கஎன் றொருகால்
வானவர் நதிக்கரை மருள்மகம் எடுத்த
தீக்குணத் தக்கன் செருக்களம் தன்னுள் (15)
கண்தொறும் விசைத்த கருப்புத் தரளமும்
வளைஉமிழ் ஆரமும் சுரிமுகச் சங்கும்
வலம்புரிக் கூட்டமும் சலஞ்சலப் புஞ்சமும்
நந்தின் குழுவும் வயல்வயல் நந்தி
உழவக் கணத்தர் படைவாள் நிறுத்தும் (20)
கூடற்கு இறையோன் குரைகழற் படையால்
ஈர்எண் கலையும் பூழிபட் டுதிர
நிலனொடு தேய்ப்புண்டு அலமந்து உலறியும்
சிதைந்து நைந்தெழு பழித்தீ மதிபுரையா
முண்டகம் மலர்த்தி முதிராது அலர்ந்தும் (25)
அமுதம் நின்றிரைத்தும் அறிவு அறிவித்தும்
தீக்கதிர் உடலுள் செல்லா திருந்தும்
திளையாத் தாரைகள் சேரா
முளையா வென்றி இவள்முக மதிக்கே. (29)
பாடல்:65

ஆயத்து உய்த்தல்

தொகு
வடவனத்து ஒருநாள் மாறுபட்டு எதிர்ந்து
வழிநடம் தனது மரக்கால் அன்றி
முதல்தொழில் பதுமன் முன்னாய் அவ்வுழி
மான்தலைக் கரத்தினில் கூடை வயக்கி
தூக்கல் வளையுடன் தொடர்பதம் எறிந்து (5)
மற்றதன் தாள்அம் புத்திரி ஆக்கி
நிமிர்த்தெறி காலில் கடைக்கண் கிடத்தி
பாணியில் சிரம்பதித்து ஒருநடை பதித்து
கொடுகொட் டிக்குக் குறிஅடுத்து எடுக்கும்
புங்கம் வாரம் புடைநிலை பொறுத்து (10)
சச்ச புடத்தில் தனிஎழு மாத்திரை
ஒன்றைவிட் டொருசீர் இரண்டுற உறுத்தி
எடுத்துத் துள்ளிய இனமுத் திரைக்கு
மங்கலப் பாணி மாத்திரை நான்குடன்
சென்றெறிந்து ஒடுங்கும் துருமிடை திருத்தி (15)
ஞெள்ளலில் குனித்த இருமாத் திரைக்குப்
பட்டடை எடுக்கப் புலுதம் பரப்பி
புறக்கால் மடித்து குறித்தெறி நிலையம்
பதினான்கு அமைத்து விடுமாத் திரைக்கு
வன்மமும் பிதாவும் பாணியில் வகுத்து (20)
வட்டம் கொடுக்கும் இந்திரை பணிக்கு
மாத்திரை ஆறுடன் கும்பம் பதித்து
வலவை இடாகினி மண்இருந் தெடுத்த
காலுடன் சுழல ஆடிய காளி
நாணிநின் றொடுங்கத் தானும்ஓர் நாடகம் (25)
பாண்டரங் கத்தொரு பாடுபெற் றமைந்த
மோகப் புயங்க முறைத்துறை தூக்கி
அதற்குச் சாரணி அருட்கரம் ஒன்றில்
பாணி இரண்டும் தாளம் ஆக்கி
ஒருதாள் மிதித்து விண்உற விட்ட (30)
மறுதாள் மலரில் மலர்க்கரம் துடக்கி
பார்ப்பதிப் பாணியைத் துடிமணி எடுப்ப
சுருதியைத் தண்டி வலிகொண்டு அமைப்ப
முதலேழ் அதனை ஒன்றினுக்கு ஏழென
வீணை பதித்து தானம் தெரிக்க (35)
முன்துடி மணியில் ஒற்றிய பாணியை
நாதம் கூட்டி மாத்திரை அறுத்து
மாங்கனி இரண்டில் ஆம்கனி ஒன்றால்
முன்ஒரு நாளில் முழுக்கதி அடைந்த
அம்மைப் பெயர்பெறும் அருட்பேய் பிடிப்ப (40)
பூதமும் கூளியும் பேயும் குளிப்ப
அமரர்கண் களிப்ப ஆடிய பெருமான்
மதுரையம் பதிஎனும் ஒருகொடி மடந்தை
சீறிதழ்ச் சாதிப் பெருமணம் போல
நின்னுளம் நிறைந்த நெடுங்கற்பு அதனால் (45)
வினையுடல் புணர வரும்உயிர் பற்றிப்
புண்ணியம் தொடரும் புணச்சி போல
காலம்உற் றோங்கும் நீள்முகில் கூடி
மணிதரு தெருவில் கொடிநெடுந் தேரும்
நாற்குறிப் புலவர் கூட்டெழு நனிபுகழ் (50)
மருந்தயில் வாழ்க்கையர் மணிநகர் உருவின
உருளெழு பூமியும் அவ்வுருள் பூண்ட
கலினமான் துகளும் கதிர்மறை நிழலின்
நின்றுமுன் இட்ட நிறைஅணி பொறுத்து
பெருங்குலைக் கயத்துக் கருந்தாள் கழுநீர் (55)
நிறைவினுள் பூத்த தாமரை ஒன்றென
நின்னுயிர் ஆய நாப்பண்
மன்னுக வேந்தன் வரவினுக்கு எழுந்தே. (58)
"https://ta.wikisource.org/w/index.php?title=கல்லாடம்/61-65&oldid=486172" இலிருந்து மீள்விக்கப்பட்டது