பாடல்:71

பிரிவு இன்மை கூறல்

தொகு
நிலையுடைப் பெருந்திரு நேர்படு காலைக்
காலால் தடுத்துக் கனன்று எதிர்கறுத்தும்
நனிநிறை செல்வ நாடும் நன்பொருளும்
எதிர்பெறின் கண்சிவந்து எடுத்தவை களைந்தும்
தாமரை நிதியமும் வால்வளைத் தனமும் (5)
இல்லம் புகுதர இருங்கதவு அடைத்தும்
அரிஅயன் அமரர் மலைவடம் பூட்டிப்
பெருங்கடல் வயிறு கிடங்கெழக் கடைந்த
அமுதம் உட்கையில் உதவுழி ஊற்றியும்
மெய்யுலகு இரண்டினுள் செய்குநர் உளரேல் (10)
எழுகதிர் விரிக்கும் மணிகெழு திருந்திழை
நின்பிரிவு உள்ளும் மனன்உளன் ஆகுக
முழுதுற நிறைந்த பொருள்மனம் நிறுத்திமுன்
வேடம் துறவா விதியுடைச் சாக்கியன்
அருட்கரை காணா அன்பெனும் பெருங்கடல் (15)
பலநாள் பெருகி ஒருநாள் உடைந்து
கரைநிலை இன்றிக் கையகன் றிடலும்
எடுத்துடைக் கல்மலர் தொடுத்தவை சாத்திய
பேரொளி இணையாக் கூடல் மாமணி
குலமலைக் கன்னியென் றருள்குடி யிருக்கும் (20)
விதிநெறி தவறா ஒருபங்கு உடைமையும்
பறவை செல்லாது நெடுமுகுடு உருவிய
சேகரத்து உறங்கும் திருநதித் துறையும்
நெடும்பகல் ஊழி நினைவுடன் நீந்தினும்
அருங்கரை இறந்த ஆகமக் கடலும் (25)
இளங்கோ வினர்கள் இரண்டறி பெயரும்
அன்னமும் பன்றியும் ஒல்லையின் எடுத்துப்
பறந்தும் அகழ்ந்தும் படியிது என்னாது
அறிவகன்று உயர்ந்த கழல்மணி முடியும்
உடைமையன் பொற்கழல் பேணி
அடையலர் போல மருள்மனம் திரிந்தே. (31)
பாடல்:72

ஊடல் நீட வாடி உரைத்தல்

தொகு
நிறைவளை ஈட்டமும் தரளக் குப்பையும்
அன்னக் குழுவும் குருகணி இனமும்
கருங்கோட்டுப் புன்னை அரும்புதிர் கிடையும்
முடவெண் தாழை ஊழ்த்தமுள் மலரும்
அலவன் கவைக்கால் அன்னவெள் அலகும் (5)
வாலுகப் பரப்பின் வலைவலிது ஒற்றினர்க்கு
ஈதென அறியாது ஒன்றிவெள் இடையாம்
மாதுடைக் கழிக்கரைச் சேரிஓர் பாங்கர்
புள்ளொடு பிணங்கும் புள்கவ ராது
வெள்ளிற உணங்கல் சேவல் ஆக (10)
உலகுயிர் கவரும் கொலைநிலைக் கூற்றம்
மகளெனத் தரித்த நிலைஅறி குவனேல்
விண்குறித் தெழுந்து மேலவர்ப் புடை த்து
நான்முகன் தாங்கும் தேனுடைத் தாமரை
இதழும் கொட்டையும் சிதறக் குதர்ந்து (15)
வானவர்க்கு இறைவன் கடவுகார் பிடித்துப்
பஞ்செழப் பிழிந்து தண்புனல் பருகி
ஐந்தெனப் பெயரிய நெடுமரம் ஒடித்து
கண்உளத்து அளவா எள்ளுண வுண்டு
பொரியெனத் தாரகைக் கணன்உடல் கொத்தி (20)
அடும்திறல் அனைய கொடுந்தொழில் பெருக்கிய
மாயா வரத்த பெருங்குருகு அடித்து
வெண்சிறை முடித்த செஞ்சடைப் பெருமான்
கூடற்கு இறையோன் குறிஉரு கடந்த
இருபதம் உளத்தவர் போல
மருவுதல் ஒருவும் மதியா குவனே. (26)
பாடல்:73

பங்கயத்தோடு பரிவுற்று உரைத்தல்

தொகு
சிலைநுதல் கணைவிழித் தெரிவையர் உளம்என
ஆழ்ந்தகன் றிருண்ட சிறைநீர்க் கயத்துள்
எரிவிரிந் தன்ன பல்தனத் தாமரை
நெடுமயல் போர்த்த உடல்ஒரு வேற்கு
குருமணி கொழிக்கும் புனல்மலைக் கோட்டுழி (5)
நின்பதி மறைந்த நெட்டிர வகத்துள்
குருகும் புள்ளும் அருகணி சூழ
தேனொடும் வண்டொடும் திருவொடும் கெழுமி
பெருந்துயில் இன்பம் பொருந்துபு நடுநாள்
காணூம்நின் கனவுள் நம் கவர்மனத் தவரைக் (10)
கொய்யுளைக் கடுமான் கொளுவிய தேரொடு
பூவுதிர் கானல் புறம்கண் டனன்என
சிறிதொரு வாய்மை உதவினை அன்றேல்
சேகரம் கிழித்த நிறைமதி உடலம்
கலை கலை சிந்திய காட்சியது என்ன (15)
கடுமான் கீழ்ந்த கடமலைப் பல்மருப்பு
எடுத்தெடுத் துந்தி மணிக்குலம் சிதறி
கிளைஞர்கள் நச்சாப் பொருளினர் போல
சாதகம் வெறுப்ப சரிந்தகழ்ந் தார்த்து
திரள்பளிங் குடைத்துச் சிதறுவ தென்ன (20)
வழியெதிர் கிடந்த உலமுடன் தாக்கி
வேங்கையும் பொன்னும் ஓருழித் திரட்டி
வரையர மகளிர்க்கு அணியணி கொடுத்து;
பனைக்கைக் கடமா எருத்துறு பூழி
வண்டெழுந் தார்ப்ப மணி எடுத்து அலம்பி (25)
மயில்சிறை ஆற்ற வலிமுகம் பனிப்ப
எதிர்சுனைக் குவளை மலர்ப்புறம் பறித்து
வரையுடன் நிறைய மாலையிட் டாங்கு
நெடுமுடி அருவி அகிலொடு கொழிக்கும்
கயிலைவீற் றிருந்த கண்ணுதல் விண்ணவள் (30)
நாடகக் கடவுள் கூடல் நாயகன்
தாமரை உடைத்த காமர் சேவடி
நிறைவுளம் தரித்தவர் போல
குறைவுளம் நீங்கி இன்பா குவனே. (34)
பாடல்:74

பதி பரிசு உரைத்தல்

தொகு
எரிதெறக் கருகிய பொடி பொறுத்து இயங்கினை
முகில்தலை சுமந்து ஞிமிறெழுந்து இசைக்கும்
பொங்கருள் படுத்த மலர்கால் பொருந்துக!
கடுங்கடத்து எறிந்த கொடும்புலிக்கு ஒடுங்கினை
வரிஉடற் செங்கண் வராலினம் எதிர்ப்ப (5)
உழவக் கணத்தர் உடைவது நோக்குக
கொலைஞர் பொலிந்த கொடித்தேர்க்கு அணங்கினை
வேதியர் நிதிமிக விதிமகம் முற்றி
அவபிர தத்துறை ஆடுதல் கெழுமி
பொன்னுருள் வையம் போவது காண்க (10)
ஆறலை எயினர் அமர்க்கலிக்கு அழுங்கினை
பணைத்தெழு சாலி நெருக்குபு புகுந்து
கழுநீர் களைநர் தம் கம்பலை காண்க
தழல்தலைப் படுத்த பரல்முரம்பு அடுத்தனை
சுரிமுகக் குழுவளை நிலவெழச் சொரிந்த (15)
குளிர்வெண் தரளக் குவால்இவை காண்க
அலகைநெட் டிரதம் புனல்எனக் காட்டினை
வன்மீன் நெடுங்கயல் பொதிவினை யகத்துக்
கிடங்கெனப் பெயரிய கருங்கடல் காண்க
முனகர்கள் பூசல் துடிஒலி ஏற்றனை (20)
குடுமிஅம் சென்னியர் கருமுகில் விளர்ப்பக்
கிடைமுறை எடுக்கும் மறைஒலி சேண்மதி
அமரர்கள் முனிக்கணத் தவர்முன் தவறு
புரிந்துடன் உமைகண் புதைப்ப மற்றுமையும்
ஆடகச் சயிலச் சேகரம் தொடர்ந்த (25)
ஒற்றையம் பசுங்கழை ஒல்கிய போல
உலகுயிர்க் குயிரெனும் திருவுரு அணைந்து
வளைக்கரம் கொடுகண் புதைப்ப அவ்வுழியே
உலகிருள் துரக்கும் செஞ்சுடர் வெண்சுடர்
பிரமன் உட்பட்ட நிலவுயிர் அனைத்தும் (30)
தமக்கெனக் காட்டும் ஒளிக்கண் கெடலும்
மற்றவர் மயக்கம் கண்டவர் கண்பெறத்
திருநுதல் கிழித்த தனிவிழி நாயகன்
தாங்கிய கூடல் பெருநகர்
ஈங்கிது காண்க முத்தெழில் நகைக்கொடியே! (35)
பாடல்:75

தேறாது புலம்பல்

தொகு
புட்பெயர்க் குன்றமும் எழுவகைப் பொருப்பும்
மேல்கடல் கவிழ்முகப் பொரிஉடல் மாவும்
நெடுங்கடல் பரப்பும் அடும்தொழில் அரக்கரும்
என்உளத்து இருளும் இடைபுகுந்து உடைத்த
மந்திரத் திருவேல் மறம்கெழு மயிலோன் (5)
குஞ்சரக் கொடி யொடும் வள்ளியம் கொழுந் தொடும்
கூறாக் கற்பம் குறித்துநிலை செய்த
புண்ணியம் குமிழ்த்த குன்றுடைக் கூடல்
நிறைந்துறை கறைமிடற்று அறம்கெழு பெருமான்
பேரருள் விளைத்த மாதவர் போல (10)
முன்னொரு நாளில் உடலுயிர் நீஎன
உள்ளம் கரிவைத்து உரைசெய்த ஊரர்
தம்மொழி திரிந்து தவறுநின் றுளவேல்
அவர்குறை அன்றால் ஒருவன் படைத்த
காலக் குறிகொல் அன்றியும் முன்னைத் (15)
தியங்குடல் ஈட்டிய தரும்கடு வினையால்
காலக் குறியை மனம்தடு மாறிப்
பின்முன் குறித்தநம் பெருமதி அழகால்
நனவிடை நவிற்றிக் கனவிடைக் கண்ட
உள்ளெழு கலக்கத் துடன்மயங் கினமால் (20)
குறித்தஇவ் இடைநிலை ஒன்றே
மறிக்குலத்து உழையின் வழிநோக் கினளே! (22)
"https://ta.wikisource.org/w/index.php?title=கல்லாடம்/71-75&oldid=486173" இலிருந்து மீள்விக்கப்பட்டது