பாடல்:76

மாலைப் பொழுதொடு புலம்பல்

தொகு
ஆயிரம் பணாடவி அரவுவாய் அணைத்துக்
கருமுகில் நிறத்த கண்ணனின் சிறந்து
நிறையுடல் அடங்கத் திருவிழி நிறைத்துத்
தேவர்நின் றிசைக்கும் தேவனின் பெருகி
குருவளர் மரகதப் பறைத்தழை பரப்பி (5)
மணிதிரை உகைக்கும் கடலினின் கவினி
முள்எயிற்று அரவம் முறித்துயிர் பருகிப்
புள்எழு வானத்து அசனியின் பொலிந்து
பூதம் ஐந்துடையும் காலக் கடையினும்
உடல்தழை நிலைத்த மறம்மிகு மயிலோன் (10)
புரந்தரன் புதல்வி எயினர்தம் பாவை
இருபால் இலங்க உலகுபெற நிறைந்த
அருவிஅம் குன்றத்து அணிஅணி கூடற்கு
இறையவன் பிறையவன் கறைகெழு மிடற்றோன்
மலர்க்கழல் வழுத்தும்நம் காதலர் பாசறை (15)
முனைப்பது நோக்கிஎன் முனைஅவிழ் அற்றத்து
பெரும்பக லிடையே பொதும்பரில் பிரிந்த
வளைகட் கூருகிர்க் கூக்குரல் மோத்தையை
கருங்கட் கொடியினம் கண்ணறச் சூழ்ந்து
புகைஉடல் புடைத்த விடன்வினை போல (20)
மனம்கடந்து ஏறா மதில்வளைத்து எங்கும்
கருநெருப்பு எடுத்த மறன்மருள் மாலை
நின்வரற்கு ஏவர் நல்கின நின்வரல்
கண்டுடல் இடைந்தோர்க் காட்டுதும் காண்மதி
மண்ணுடல் பசந்து கறுத்தது விண்ணமும் (25)
ஆற்றாது அழன்று காற்றின் முகம்மயங்கி
உடுஎனக் கொப்புள் உடல்நிறை பொடித்தன
ஈங்கிவற் றடங்கிய இருதிணை உயிர்களும்
தம்முடன் மயங்கின ஒடுங்கின உறங்கின
அடங்கின அவிந்தன அயர்ந்தன கிடந்தன (30)
எனப்பெறின் மாலை என்னுயிர் உளைப்பதும்
அவர்திறம் நிற்பதும் ஒருபுடை கிடக்க
உள்ளது மொழிமோ நீயே விண்ணுழை
வந்தனை என்னில் வரும்குறி கண்டிலன்
மண்ணிடை எனினே அவ்வழி யான (35)
கூடிநின் றனைஎனின் குறிதவ றாவால்
தேம்படர்ந் தனைஎனின் திசைகுறிக் குநரால்
ஆதலின் நின்வரவு எனக்கே
ஓதல் வேண்டும் புலன்பெறக் குறித்தே. (39)
பாடல்:77

வாய்மை கூறி வருத்தம் தணித்தல்

தொகு
திருமலர் இருந்த முதியவன் போல
நான்முகம் கொண்டுஅறி நன்னர் நெஞ்சிருந்து
வேற்றருள் பிறவி தோற்றுவித் தெடுத்து
நிலம்இரண் டளந்த நெடுமுகில் மான
அரக்கர்தம் கூட்டம் தொலைத்து நெய்உண்டு (5)
களிற்றுரி புனைந்த கண்ணுதல் கடுப்ப
அழலெடுத்து ஒன்னலர் புரம்எரி ஊட்டி
இனையஎவ் வுலகும் தொழுதெழு திருவேல்
சரவணத்து உதித்த அறுமுகப் புதல்வன்
பரங்குன் றுடுத்த பயங்கெழு கூடல் (10)
பெருநகர் நிறைந்த சிறுபிறைச் சென்னியன்
மால்அயன் தேடி மறைஅறைந்து அறியாத்
தன்உரு ஒன்றில் அருள்உரு இருத்திய
ஆதி நாயகன் அகல் மலர்க் கழல்இணை
நண்ணலர் கிளைபோல் தன்மனம் திரிந்துநம் (15)
துறைவன் தணக்க அறிகிலம் யாமே
பிணர்முடத் தாழை விரிமர் குருகென
நெடுங்கழிக் குறுங்கயல் நெய்தலுள் மறைந்தும்
புன்னைஅம் பொதும்பர்க் குழைமுகம் குழைமுகம்
கருந்திரை சுமந்தெறி வெண்தர ளத்தினை (20)
அரும்பெனச் சுரும்பினம் அலரநின் நிசைத்தும்
கலம்சுமந் திறக்கும் கரியினம் பொருப்பென
பருகிய முகிற்குலம் படிந்துகண் படுத்தும்
பவளநன் கவைக்கொடி வடவையின் கொழுந்தென
சுரிவளை குளிக்குநர் கலனிடைச் செறிந்தும் (25)
வெள்ளிற உண்ண விழைந்துபுகு குருகினம்
கருங்கழி நெய்தலைக் காவல்செய் கண்என
அரவுஎயிற்று அணிமுள் கைதையுள் அடங்கியும்
விண்தொட எழுந்து விழுதிரைக் குழுவினைக்
கடல்வயிற்று அடங்கிய மலையினம் வரவுஎன (30)
குழிமணற் கேணியுள் கொம்பினர் படிந்தும்
முயங்கிய உள்ளம் போகி
மயங்கிய துறையினம் ஒருங்குழி வளர்ந்தே. (33)
பாடல்:78

அயல் அறிவு உரைத்து அழுக்கம் எய்தல்

தொகு
ஆடகச் சயிலத்து ஒருடல் பற்றி
கலிதிரைப் பரவையும் கனன்றெழு வடவையும்
அடியினும் முடியினும் அணைந்தன போல
பசுந்தழைத் தோகையும் செஞ்சிறைச் சேவலும்
தாங்கியும், மலர்க்கரம் தங்கியும் நிலைத்த (5)
பேரொளி மேனியன் பார்உயிர்க்கு ஓருயிர்
மாவுடைக் கூற்றம் மலர்அயன் தண்டம்
குறுமுனி பெறும்மறை நெடுமறை பெறாமுதல்
குஞ்சரத் தோகையும் குறமகட் பேதையும்
இருந்தன இருபுறத்து எந்தை என்அமுதம் (10)
பிறந்தருள் குன்றம் ஒருங்குறப் பெற்ற
மாதவக் கூடல் மதிச்சடைக் காரணன்
இருபதம் தேறா இருள்உளம் ஆமென
இவள்உளம் கொட்ப அயல்உளம் களிப்ப
அரும்பொருட் செல்வி எனும்திரு மகட்கு (15)
மானிட மகளிர் தாமும்நின் றெதிர்ந்து
புல்இதழ்த் தாமரை இல்அளித் தெனவும்
உலகுவிண் பனிக்கும் ஒருசய மகட்கு
தேவர்தம் மகளிரும் செருமுகம் நேர்ந்து
வீரம்அங்கு ஈந்துபின் விளிவது மானவும் (20)
இருளுடல் அரக்கியர் கலைமகட் கண்டு
தென்தமிழ் வடகலை சிலகொடுத் தெனவும்
நீரர மகளிர் பாந்தள் அம் கன்னியர்க்கு
ஆர்எரி மணித்திரன் அருளியது எனவும்
செம்மலர்க் குழலிவள் போய்அறி வுறுத்தக் (25)
கற்றதும் கல்லாது உற்றன ஊரனை
அவள்தர இவள்பெறும் அரந்தையம் பேறினுக்கு
ஒன்றிய உவமம் இன்றிவண் உளவால்
மற்றவள் தரநெடுங் கற்பே
உற்றிவள் பெற்றாள் என்பதும் தகுமே. (30)
பாடல்:79

பிரிந்தமை கூறல்

தொகு
மலரவன் பனிக்கும் கவினும் குலமீன்
அருகிய கற்பும் கருதிஉள் நடுங்கித்
திருமகள் மலர்புகும் ஒருதனி மடந்தையின்று
இருகடல் ஓருழி மருவிய தென்னச்
செருப்படை வேந்தர் முனைமேல் படர்ந்தநம் (5)
காதலர் முனைப்படை கனன்றுடற் றெரியால்
முடம்படு நாஞ்சில் பொன்முகம் கிழித்த
நெடுஞ்சால் போகிக் கடுங்கயல் துரக்கும்
மங்கையர் குழைபெறு வள்ளையில் தடைகொண்டு
அவர்கருங் கண்எனக் குவளை பூத்த (10)
இருள் அகச் சோலையுள் இரவெனத் தங்கிய
மற்றதன் சேக்கையுள் வதிபெறும் செங்கால்
வெள்ளுடல் ஓதிமம் தன்னுடைப் பெடைஎனப்
பறைவரத் தழீஇப்பெற் றுவைஇனக் கம்பலைக்கு
ஆற்றாது அகன்று தேக்குவழி கண்ட (15)
கால்வழி இறந்து பாசடை பூத்த
கொள்ளம் புகுந்து வள்ளுறை வானத்து
எழில்மதி காட்டி நிறைவளை சூல்உளைந்து
இடங்கரும் ஆமையும் எழுவெயில் கொளுவும்
மலைமுதுகு அன்ன குலைமுகடு ஏறி (20)
முழுமதி உடுக்கணம் காதலின் விழுங்கி
உமிழ்வன போல சுரிமுகச் சூல்வளை
தரளம் சொரியும் பழனக் கூடல்
குவளை நின் றலர்ந்த மறைஎழு குரலோன்
இமையவர் வேண்ட ஒருநகை முகிழ்ப்ப (25)
ஓர் உழிக் கூடாது உம்பரில் புகுந்து
வானுடைத் துண்ணும் மறக்கொலை அரக்கர்முப்
பெருமதில் பெற்றன அன்றோ
மருவலர் அடைந்தமுன் மறம்கெழு மதிலே? (29)
பாடல்:80

கலக்கங் கண்டு உரைத்தல்

தொகு
பெருந்துயர் அகற்றி அறம்குடி நாட்டி
உளச்சுருள் விரிக்கும் நலத்தகு கல்வியொன்று
உளதென குரிசில் ஒருமொழி சாற்ற
பேழ்வாய்க் கொய்யுளை அரிசுமந் தெடுத்த
பல்மணி ஆசனத்து இருந்துசெவ் வானின் (5)
நெடுஞ்சடைக் குறுஞ்சுடர் நீக்கிஐந் தடுக்கிய
ஆறுஐஞ் நூறொடு வேறுநிரை அடுத்த
பல்மணி மிளிர்முடி பலர்தொழக் கவித்து
பலதலைப் பாந்தள் சுமைதிருத் தோளில்
தரித்துலகு அளிக்கும் திருத்தகு நாளில் (10)
நெடுநாள் திருவயிற்று அருளுடன் இருந்த
நெடுஞ்சடை உக்கிரற் பயந்தருள் நிமலன்
மற்றவன் தன்னால் வடவையின் கொழுந்துசுட்டு
ஆற்றாது உடலமும் இமைக்குறும் முத்தமும்
விளர்த்துநின் றணங்கி வளைக்குலம் முழங்கும் (15)
கருங்கடல் பொரிய ஒருங்குவேல் விடுத்து
அவற்கருள் கொடுத்த முதற்பெரு நாயகன்
வெம்மையும் தண்மையும் வினைஉடற்கு ஆற்றும்
இருசுடர் ஒருசுடர் புணர்விழி ஆக்கிமுன்
விதியவன் தாரா உடலொடு நிலைத்த (20)
முத்தமிழ்க் கூடல் முதல்வன் பொற்றாள்
கனவிலும் காணாக் கண்ணினர் துயரும்
பகுத்துண்டு ஈகுநர் நிலைத்திரு முன்னர்
இல்லெனும் தீச்சொல் இறுத்தனர் தோமும்
அனைத்துயிர் ஓம்பும் அறத்தினர் பாங்கர் (25)
கோறலென் றயலினர் குறித்தன குற்றமும்
நன்றறி கல்வியர் நாட்டுறு மொழிபுக்கு
அவ் அரண் இழந்தோர்க்கு அருவிடம் ஆயதும்
ஒருகணம் கூடி ஒருங்கே
இருசெவி புக்கது ஒத்தன இவட்கே. (30)
"https://ta.wikisource.org/w/index.php?title=கல்லாடம்/76-80&oldid=486174" இலிருந்து மீள்விக்கப்பட்டது