கல்லாடம்/81-85
< கல்லாடம்
- பாடல்:81
முன்பனிக்கு நொந்து உரைத்தல்
தொகு- கடல்மகள் உள்வைத்து வடவைமெய் காயவும்
- மலைமகள் தழல்தரு மேனிஒன்று அணைக்கவும்
- மாசறு திருமகள் மலர்புகுந்து ஆயிரம்
- புறஇதழ்ப் புதவடைத்து அதன்வெதுப்பு உறைக்கவும்
- சயமகள் சீற்றத் தழல்மனம் வைத்துத் (5)
- திணிபுகும் வென்றிச் செருஅழல் கூடவும்
- ஐயர் பயிற்றிய விதிஅழல் ஓம்பவும்
- அவ் அனற்கு அமரர் அனைத்தும்வந்து அணையவும்
- முன்இடைக் காடன் பின்எழ நடந்து
- நோன்புறு விரதியர் நுகரஉள் இருந்தென் (10)
- நெஞ்சகம் நின்று நினைவினுள் மறைந்து
- புரை அறும் அன்பினர் விழிபெறத் தோற்றி
- வானவர் நெடுமுடி மணித்தொகை திரட்டிப்
- பதுக்கைசெய் அம்பலத் திருப்பெரும் பதியினும்
- பிறவாப் பேர்ஊர்ப் பழநக ரிடத்தும் (15)
- மகிழ்நடம் பேய்பெறும் வடவனக் காட்டினும்
- அருமறை முடியினும் அடியவர் உளத்தினும்
- குனித்தருள் நாயகன் குலமறை பயந்தோன்
- இருந்தமிழ்க் கூடல் பெருந்தவர் காண
- வெள்ளியம் பலத்துள் துள்ளிய ஞான்று (20)
- நெருப்பொடு சுழலவும் விருப்பெடுத் தவ்வழல்
- கையினில் கொள்ளவும் கரிவுரி மூடவும்
- ஆக்கிய பனிப்பகைக் கூற்றிவை நிற்க
- ஆங்கவர் துயர்பெற ஈன்றஎன் ஒருத்தி
- புகல்விழும் அன்புதற்கு இன்றி
- மகவினைப் பெறலாம் வரம்வேண் டினளே. (26)
- பாடல்:82
மறவாமை கூறல்
தொகு- மருவளர் குவளை மலர்ந்துமுத் தரும்பி
- பசுந்தாள் தோன்றி மலர்நனி மறித்து
- நெட்டெறி ஊதை நெருப்பொடு கிடந்து
- மணிபுறம் கான்ற புரிவளை விம்மி
- விதிப்பவன் விதியா ஓவம் நின்றெனஎன் (5)
- உள்ளமும் கண்ணும் நிலையுறத் தழீஇனள்
- உவணக் கொடியினன் உந்திமலர்த் தோன்றிப்
- பார்முதல் படைத்தவன் நடுத்தலை அறுத்து
- புனிதக் கலன்என உலகுதொழக் கொண்டு
- வட்டம் முக்கோணம் சதுரம் கார்முகம் (10)
- நவத்தலை தாமரை வளைவாய்ப் பருந்தெனக்
- கண்டன மகம்தொறும் கலிபெறச் சென்று
- நறவு இரந்தருளிய பெரியவர் பெருமான்
- கூக்குரல் கொள்ளாக் கொலைதரு நவ்வியும்
- விதிர்ஒளி காற்றக் கனல்குளிர் மழுவும் (15)
- இருகரம் தரித்த ஒருவிழி நுதலோன்
- கூடல்ஒப்பு உடையாய் குலஉடுத் தடவும்
- தடமதில் வயிற்றுள் படும்அவர் உயிர்க்கணம்
- தனித்தனி ஒளித்துத் தணக்கினும் அரிதெனப்
- போக்கற வளைந்து புணர்இருள் நாளும் (20)
- காவல் காட்டிய வழியும்
- தேவர்க் காட்டும்நம் பாசறை யினுமே. (22)
- பாடல்:83
ஊடி உரைத்தல்
தொகு- மதியம் உடல்குறைத்த வெள்ளாங் குருகினம்
- பைங்கால் தடவிச் செங்கயல் துரந்துண்டு
- கழுக்கடை அன்னதம் கூர்வாய்ப் பழிப்புலவு
- எழில்மதி விரித்தவெண் தளைஇதழ்த் தாமரை
- மலர்மலர் துவட்டும் வயல்அணி ஊர (5)
- கோளகைக் குடிலில் குனிந்திடைந் தப்புறத்து
- இடைநிலை அற்றபடர் பெருவெளி யகத்து
- உடல்முடக்கு எடுத்த தொழிற்பெரு வாழ்க்கைக்
- கவைத்தலைப் பிறைஎயிற் றிருள்எழில் அரக்கன்
- அமுதம் உண்டிமையா அவரும் மங்கையரும் (10)
- குறவரும் குறவத் துணையரும் ஆகி
- நிலம்பெற் றிமைத்து நெடுவரை இறும்பிடை
- பறவைஉண் டீட்டிய இறால்நறவு அருந்தி
- அந்நிலத் தவர்என அடிக்கடி வணங்கும்
- வெள்ளிஅம் குன்றகம் உள்ளுறப் புகுந்தொரு (15)
- தேவனும் அதன்முடி மேவவும் உளனாம்
- எனப்புயம் கொட்டி நகைத்தெடுத் தார்க்க
- பிலம்திறந் தன்ன பெருவாய் ஒருபதும்
- மலைநிரைத் தொழுங்கிய கரம்இரு பத்தும்
- விண்ணுடைத் தரற்றவும் திசையுட்கி முரியவும் (20)
- தாமரை அகவயின் சேயிதழ் வாட்டிய
- திருவடிப் பெருவிரல் தலைநக நுதியால்
- சிறிதுமலை உறைத்த மதிமுடி அந்தணன்
- பொன்அணி மாடம் பொலிநகர்க் கூடல்
- ஆவண வீதி அனையவர் அறிவுறில் (25)
- ஊருணி அன்னநின் மார்பகம் தோய்ந்தஎன்
- இணைமுலை நன்னர் இழந்தன அதுபோல்
- மற்றவர் கவைமனம் மாழ்கி
- செற்றம்நிற் புகைவர்இக் கால்தீண்டலையே. (29)
- பாடல்:84
தோழி பொறை உவந்து உரைத்தல்
தொகு- உலர்கவட்டு ஓமைப் பொரிசினைக் கூகையும்
- வீசுகோட்டு ஆந்தையும் சேவலொடு அலமர
- திரைவிழிப் பருந்தினம் வளைஉகிர்ப் படையால்
- பார்ப்பிரை கவரப் பயனுறும் உலகில்
- கடனுறும் யாக்கைக் கவர்கடன் கழித்துத் (5)
- தழல்உணக் கொடுத்த அதன்உண விடையே
- கைவிளக்கு எடுத்துக் கரைஇனம் கரைய
- பிணம்விரித் துண்ணும் குணங்கினம் கொட்ப
- சூற்பேய் ஏற்ப இடாகின கரப்ப
- கண்டுளம் தளிர்க்கும் கருணைஅம் செல்வி (10)
- பிறைநுதல் நாட்டி கடுவளர் கண்டி
- இறால்நறவு அருவி எழுபரங் குன்றத்து
- உறைசூர்ப் பகையினற் பெறுதிரு வயிற்றினள்
- ஒருபால் பொலிந்த உயர்நகர்க் கூடல்
- கடுக்கைஅம் சடையினன் கழல்உளத்து இலர்போல் (15)
- பொய்வரும் ஊரன் புகலரும் இல்புக
- என்உளம் சிகைவிட்டு எழும்அனல் புக்க
- மதுப்பொழி முளரியின் மாழ்கின என்றால்
- தோளில் துவண்டும் தொங்கலுள் மறைந்தும்
- கைவரல் ஏற்றும் கனவினுள் தடைந்தும் (20)
- திரைக்கடல் தெய்வமுன் தெளிசூள் வாங்கியும்
- பொருட்கான் தடைந்தும் பாசறைப் பொருந்தியும்
- போக்கருங் கடுஞ்சுரம் போகமுன் இறந்தும்
- காவலில் கவன்றும் கல்வியில் கருதியும்
- வேந்துவிடைக்கு அணங்கியும் விளைபொருட்கு உருகியும் (25)
- நின்ற இவட்கு இனிஎன்ஆம்
- கன்றிய உடலுள் படும்நனி உயிரே? (27)
- பாடல்:85
கலவி கருதிப் புலத்தல்
தொகு- நிலைநீர் மொக்குளின் வினையாய்த் தோன்றி
- வான்தவழ் உடற்கறை மதியெனச் சுருங்கி
- புல்லர்வாய்ச் சூளெனப் பொருளுடன் அழியும்
- சீறுணவு இன்பத் திருந்தா வாழ்க்கை
- கான்றிடு சொன்றியின் கண்டு அருவருத்து (5)
- புலனறத் துடைத்த நலனுறு வேள்வியர்
- ஆரா இன்பப் பேரமுது அருந்தி
- துறவெனும் திருவுடன் உறவுசெய் வாழ்க்கையர்
- வாயினும் கண்ணினும் மனத்தினும் அகலாப்
- பேரொளி நாயகன் காரொளி மிடற்றோன் (10)
- மண்திரு வேட்டுப் பஞ்சவற் பொருத
- கிள்ளியும் கிளையும் கிளர்படை நான்கும்
- திண்மையும் செருக்கும் தேற்றமும் பொன்றிட
- எரிவாய் உரகர் இருள்நாட்டு உருவக்
- கொலைக்கொண் டாழி குறியுடன் படைத்து (15)
- மறியப் புதைத்த மறம்கெழு பெருமான்
- நீர்மாக் கொன்ற சேயோன் குன்றமும்
- கல்வியும் திருவும் காலமும் கொடியும்
- மாடமும் ஓங்கிய மணிநகர்க் கூடல்
- ஆல வாயினில் அருளுடன் நிறைந்த (20)
- பவளச் சடையோன் பதம்தலை சுமந்த
- நல்இயல் ஊரநின் புல்லம்உள் மங்கையர்
- ஓவிய இல்லம்எம் உறையுள் ஆக
- கேளாச் சிறுசொல் கிளக்கும் கலதியர்
- இவ்வுழி ஆயத் தினர்களும் ஆக (25)
- மௌவல் இதழ்விரிந்து மணம்சூழ் பந்தர்செய்
- முன்றிலும் எம்முடை முன்றில் ஆக
- மலர்ச்சுமைச் சேக்கை மதுமலர் மறுத்தஇத்
- திருமணம் கொள்ளாச் சேக்கையது ஆக
- நின்வுளம் கண்டு நிகழ்உணவு உன்னி (30)
- நாணா நவப்பொய் பேணியுள் புணர்த்தி
- யாழொடு முகமன் பாணனும் நீயும்
- திருப்பெறும் அயலவர் காண
- வரப்பெறு மாதவம் பெரிதுடை யேமே. (34)