கல்லாடம்/96-100
< கல்லாடம்
- பாடல்:96
பாணன் புலந்து உரைத்தல்
தொகு- இலவுஅலர் தூற்றி அனிச்சம் குழைத்து
- தாமரை குவித்த காமர் சேவடித்
- திருவினள் ஒருநகை அரிதினின் கேண்மோ
- எல்லாம் தோற்ற இருந்தன தோற்றமும்
- தன்னுள் தோன்றித் தான்அதில் தோன்றாத் (5)
- தன்னிடை நிறையும் ஒருதனிக் கோலத்து
- இருவடிவு ஆகிய பழமறை வேதியன்
- நான்மறைத் தாபதர் முத்தழற் கனல்புக்கு
- அரக்கர் துய்த்துடற்றும் அதுவே மான
- பாசடை மறைத்தெழு முளரிஅம் கயத்துள் (10)
- காரான் இனங்கள் சேடெறிந்து உழக்கும்
- கூடற்கு இறையவன் காலற் காய்ந்தோன்
- திருநடம் குறித்தநம் பொருபுனல் ஊரனை
- எங்கையர் குழுமி எமக்கும் தங்கையர்ப்
- புணர்த்தினன் பாண்தொழில் புல்லன்என் றிவனை (15)
- கோலின் கரத்தின் தோலின் புடைப்ப
- கிளைமுள் செறிந்த வேலிஅம் படப்பைப்
- படர்காய்க்கு அணைந்தபுன் கூழைஅம் குறுநரி
- உடையோர் திமிர்ப்ப வரும்உயிர்ப்பு ஒடுக்கி
- உயிர்பிரி வுற்றமை காட்டிஅவர் நீங்க (20)
- ஓட்டம் கொண்டன கடுக்கும்
- நாட்டவர் தடையமற் றுதிர்ந்து நடந்ததுவே. (22)
- பாடல்:97
தோழிக்கு உரைத்தல்
தொகு- வாய்வலம் கொண்ட வயிற்றெழு தழற்கு
- ஆற்றாது அலந்து காற்றெனக் கொட்புற்று
- உடைதிரை அருவி ஒளிமணி காலும்
- சேயோன் குன்றகத் திருப்பெறு கூடல்
- கொடுஞ்சுடர் கிளைத்த நெடுஞ்சடைப் புயங்கண் (5)
- பவளம் தழைத்த பதமலர் சுமந்தநம்
- பொருபுனல் ஊரனை பொதுஎன அமைத்த
- அக்கடி குடிமனை அவர்மனை புகுத்தி
- அறுவாய் நிறைந்த மதிப்புறத் தோஎன
- சுரைதலை கிடைத்த இசைஉளர் தண்டெடுத்து (10)
- அளிக்கார்ப் பாடும் குரல்நீர் வறந்த
- மலைப்புள் போல நிலைக்குரல் அணைந்தாங்கு
- உணவுளம் கருதி ஒளிஇசை பாட
- முள்தாள் மறுத்த முண்டகம் தலையமைத்து
- ஒருபால் அணைந்தஇவ் விரிமதிப் பாணற்கு (15)
- அடுத்தன உதவுழி வேண்டும்
- கடுத்திகழ் கண்ணி அக்கல்லை இக்கணமே. (17)
- பாடல்:98
பாங்கி அன்னத்தோடு அழுங்கல்
தொகு- வெறிமறி மடைக்குரல் தோல்காய்த் தென்ன
- இருக்கினும் இறக்கினும் உதவாத் தேவர்தம்
- பொய்வழிக் கதியகம் மெய்எனப் புகாத
- விழியுடைத் தொண்டர் குழுமுடி தேய்ப்ப
- தளிர்த்துச் சிவந்த தண்டையம் துணைத்தாள் (5)
- சேயோன் பரங்குன்று இழைஎனச் செறித்து
- தமிழ்க்கலை மாலை சூடிதாவாப்
- புகழ்க்கலை உடுத்துப் புண்ணியக் கணவர்
- பல்நெறி வளனின் பூட்சியின் புல்லும்
- தொல்நிலைக் கூடல் துடிக்கரத்து ஒருவனை (10)
- அன்புளத்து அடக்கி இன்பம்உண் ணாரென
- சேவல் மண்டலித்துச் சினைஅடை கிடக்கும்
- கைதைவெண் குருகுஎழ மொய்திரை உகளும்
- உளைகடற் சேர்ப்பர் அளிவிடத் தணப்ப
- நீலமும் கருங்கொடி அடம்பும் சங்கமும் (15)
- கண்ணிற்கு இடையில் களத்தில் கழிதந்து
- அலர்ந்தும் உலர்ந்தும் உடைந்தும் அணுங்கலின்
- வட்குடை மையல் அகற்றிஇன்பு ஒருகால்
- கூறவும் பெறுமே ஆறு அதுநிற்க
- இவள்நடை பெற்றும் இவட்பயின்று இரங்கியும் (20)
- ஓருழி வளர்ந்த நீரஇவ் அன்னம்
- அன்றெனத் தடையாக் கேண்மை
- குன்றும் அச்சூளினர் தம்மினும் கொடிதே. (23)
- பாடல்:99
இரவு இடை விலக்கல்
தொகு- முதுகுறிப் பெண்டிர் வரத்தியல் குறிப்ப
- வழிமுதல் தெய்வதம் வரைந்துமற் றதற்குப்
- பருக்காடு உருத்திப் பலிமுதல் பராவக்
- கிள்ளைஅவ் அயலினர் நாவுடன்று ஏத்தப்
- பக்கம் சூழுநர் குரங்கம் மண்படப் (5)
- பெற்றுயிர்த் தயரும் பொற்றொடி மடந்தைதன்
- குருமணி ஓவியத் திருநகர்ப் புறத்தும்
- கரியுடன் உண்ணார் பழிஉளம் ஒத்த
- இருளுடைப் பெருமுகில் வழிதெரிந்து ஏகன்மின்
- அரிமான் உருத்த நூற்றுவர் மதித்த (10)
- புடைமனச் சகுனி புள்ளிஅம் கவற்றில்
- அத்தொழிற்கு அமைந்த ஐவரும் புறகிட்டு
- ஒலிவாய் ஓதிமம் எரிமலர்த் தவிசிருந்து
- ஊடுஉகள் சிரலைப் பச்சிற அருந்தும்
- பழனக் குருநாடு அணிபதி தோற்று (15)
- முன்னுறும் உழுவலின் பன்னிரு வருடம்
- கண்டீ ரவத்தொடு கறையடி வளரும்
- குளிர்நிழல் அடவி இறைகொண்டு அகன்றபின்
- அனைத்துள வஞ்சமும் அழித்து நிரை மீட்சி
- முடித்துத் தமது முடியாப் பதிபுக (20)
- ஊழ்முறையே எமக்கு உளமண் கருதிச்
- சேறி என்றிசைப்ப செல்பணித் தூதினர்க்கு
- ஒருகால் அளித்த திருமா மிடற்றோன்
- பாடல் சான்ற தெய்வக்
- கூடல் கூடார் குணம்குறித் தெனவே. (24)
- பாடல்:100
பருவம் குறித்தல்
தொகு- அளிகள் பட்டெடுப்ப, புறவுபாட் டொடுங்க
- காந்தளம் கடுக்கை கனல்தனம் மலர
- கோடல் ஈன்று கொழுமுனை கூம்ப
- பிடவமும் களவும் ஒருசிறை பூப்ப
- வான்புறம் பூத்த மீன்பூ மறைய (5)
- கோபம் ஊர்தர மணிநிரை கிடப்ப
- தென்கால் திகைப்ப வடகால் வளர
- பொறிவிழிப் பாந்தள் புற்றளை வதிய
- வரிஉடல் ஈயல் வாய்தொறும் எதிர்ப்ப
- இடிக்குரல் ஆனேற் றினம்எதிர் செறுப்ப (10)
- பொறிக்குறி மடமான் சுழித்தலைக் கவிழ
- முடையுடல் அண்டர் படலிடம் புகுத
- கோவியர் அளையுடன் குலனொடு குளிர்ப்ப
- காயாக் கண்கொள முல்லை எயிறுற
- முசுக்கலை பினவுடன் முழையுறை அடங்கக் (15)
- கணமயில் நடன்எழ காளி கூத்தொடுங்க
- சாதகம் முரல்குரல் வாய்மடை திறப்ப
- மாக்குயில் மாழ்கிக் கூக்குரல் அடைப்ப
- பனிக்கதிர் உண்ணச் சகோரம் பசிப்ப
- உடைநறவு உண்டு வருடை வெறுப்ப (20)
- அகில்சுடு பெரும்புனம் உழுபதன் காட்ட
- வெறிவிழிச் சவரர் மாஅடி ஒற்ற
- மணந்துடன் போக்கினர்க்கு உயங்குவழி மறுப்ப
- புலிக்குரல் எயிற்றியர் பூவினில் பரப்ப
- குழவிஅம் கதிர்பெறத் திருமலர் அணங்க (25)
- இனத்தொடு கயிரவம் எதிர்எதிர் மலர
- குமரியர் காமமும் கூவலும் வெதுப்புற
- நிலமகள் உடலமும் திசைகளும் குளிர
- ஒலிகடல் இப்பி தரளம் சூல்கொள
- இவைமுதல் மணக்க எழுந்தகார் கண்டை (30)
- வறுநீர்மலர் என மாழ்கலை விடுமதி
- மறைஅடி வருத்திய மறைவனத்து ஒருநாள்
- மணிச்சுடர் நறுநெய் கவர்மதிக் கருப்பைக்கு
- இருவகை ஏழ்எனும் திருஉலகு அனைத்தும்
- கொடுத்தவன் கூடல் வழுத்தினர் போல (35)
- இருபுறம் போற்ற ஒருதேர் வரத்தினர்க்கு
- ஒன்னலர் முற்றி ஒருங்குபு படர
- பாசறை சென்ற நாள்நிலம் குழிய
- எண்ணி விரல்தேய்ந்த செங்கரம் கூப்புக
- கொய்தளிர் அன்ன மேனி
- மொய்இழை பூத்த கவின்மலர்க் கொடியே! (41)