கல்வி எனும் கண்/ஆரம்பக் கல்வி






5. ஆரம்பக் கல்வி


இந்தியா விடுதலை பெற்றபின் ஆய்ந்து எழுதப்பெற்ற அரசியல் சாசனத்தே சாதி, பொருளாதார ஏற்றத் தாழ்வு எதையும் கருதாது எல்லாக் குழந்தைகளுக்கும் பதினான்கு வயது வரையில் கட்டாயக் கல்வி தருதல் வேண்டும் எனவும், இச்செயல், சாசனம் செயலுக்கு வந்த ஆண்டிலிருந்து (1950) பத்து ஆண்டுகளுக்குள் நிறைவேற வேண்டும் எனவும் குறிக்கப்பெற்றுள்ளது (விதிகள் 89, 45, 46, 47). ஆயினும் நாற்பது ஆண்டுகள் கழித்தும் எந்த அளவு இது நிறைவேற்றப் பெற்றுள்ளது என்பதை நாடும் உலகமும் நன்கு அறியும். 1981ஆம் ஆண்டு மக்கள் கணக்குப்படி 6 வயதுக்கு உட்பட்டோர் 14 கோடி (17%) எனவும் அதில் வ்றுமை நிலையில் உள்ளவர் 5.6 கோடி (40 %) எனவும் அறிகிறோம். இதில் பல குழந்தைகள் பள்ளியினைப் பார்த்ததும் கிடையாது. இக்குழந்தைகளுள் பள்ளியில் சேர்பவர்களும் இடையில் 8, 10 வயதுகளில் பள்ளியினை விட்டு வெளியேறுகின்றனர்-நின்று விடுகின்றனர். 1964-66இல் கல்வி வளர்ச்சிக்காக அமைத்த குழு இளங்குழந்தைகள் கல்வியை நன்கு கவனிக்க வேண்டும் எனவும் வற்புறுத்தியது. ஆனால் அதுவும் போற்றப் பெறவில்லை. 1986ஆம் ஆண்டின் கணக்குப்படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் (20%) நூற்றுக்கு இருபது பேர் பள்ளிக்குச் செல்லவில்லை. 11.7 கோடி குழந்தைகளுக்கு 1 கி. மீ. நடந்து சென்று படிக்க விரும்பினாலும் அந்த வகையில் பள்ளிகள் இல்லை. பாதிக்கு மேற்பட்ட (50%) பெண்கள் சேர்ந்து இடையில் விட்டு விடுகின்றனர். சென்ற ஆண்டில் எடுத்த கணக்கின்படி கீழே கண்ட வகையில் இளம் பெண்கள் பள்ளியில் சேர்கின்றனர். இந்திய அளவில் I-V/41.16% VI-VIII/35.45%


கிராம அளவில் 39.89% 32.05% இவையாவும் இந்திய அரசாங்கம் தந்த கணக்குகளேயாகும்.

நம் நாட்டில் இந்த அவல நிலைக்குப் பல காரணங்கள் உள்ளன. நம் நாட்டில் இன்றும் பல ஊர்களில் பள்ளிக் கூடங்கள் இல்லை. இருக்கும் பள்ளிகளுக்கும் கட்டடம் இல்லை. நமக்கு ஒன்றும், இன்று மேடைமேலோ-சட்டமன்றத்திலோ பேசுவதுபோன்று, பெரிய வானளாவிய கட்டடங்கள் தேவை இல்லை. கடந்த அறுபது ஆண்டுகளுக்குமுன் (20-10-1931) அண்ணல் காந்தி அடிகளார். இலண்டன், சாதம் மாளிகையில் (Chatham House) இக்கருத்தினை நன்கு வெளியிட்டுக் காட்டியுள்ளார். இந்திய நாட்டுக் குழத்தைகள் அத்தகைய ஆடம்பரமான கல்வியை விரும்பார் என்றும் அந்தமுறை, கல்வியை வளர்ப்பதைக் காட்டிலும் குறைத்தேவிடும் என்றும் கூறி, எளிய முறையில் பழங்காலக் குருகுல வாசமே நம் நாட்டுக்கு ஏற்றதெனக் காட்டியுள்ளார். (பக். 133.-Towards an Emlightend and Humane Society) இந்திய அரசாங்கம் சென்ற ஆண்டு அமைத்த இராமமூர்த்தி குழுவினர் தொடக்கக் கல்வி மட்டுமின்றி எல்லா நிலையிலும் கல்வி எப்படி அமையவேண்டும்-வளர வேண்டும்-எந்த நிலையில் இன்று கல்வி நாட்டில் இருக்கிறது. இதைக் களைந்து நலம்காண வழிகள் யாவை என்பனவற்றை நன்கு ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதையாவது நாட்டு அரசு செயல்படுத்துமா என்பதை இனி தான் காணவேண்டும்.

மத்திய அரசும் மாநில அரசும மக்கள் மன்றத்திலும் சட்டசபையிலும் அரசாங்கம் கல்விக்காக ஆண்டுதோறும் ஆண்டுக்கு ஆண்டு பலகோடிகள் அதிகமாகச் செலவு செய்தும், கல்வி வளரவில்லையே எனக் கனன்று அறிக்கை வெளியிடுகின்றன. ஆயினும் செயல்பாட்டில் அந்த .வளர்ச்சிக்கு உரிய முயற்சி இல்லையே என வருந்த வேண்டி உள்ளது.

எல்லா ஊர்களிலும் பள்ளியும் நல்லாசிரியரும் இருக்க வேண்டுமல்லவா! அண்ணல் காந்தி அடிகளார் அன்று அதைத்தானே வலியுறுத்தினார். சுதந்திரம் பெற்றபின் எத்தனையோ வகையில் முன்னேற்றம் கண்டுள்ளோம் எனப் பேசுபவர்கள் மாந்தர் தம் ‘கண்’ நிலைகெடுவதைக் காணவில்லையே! ஒரு நாட்டின் எல்லா வளமும் கல்வியில்தான் உள்ளது என்பதை, அதைக் கண் எனக் காட்டியே வள்ளுவரும் ஒளவையும் பிறரும் கூறியுள்ளனரே! அத்தகைய கண் போன்ற கல்வி நாட்டில் நன்கு வளர்ச்சி பெறவில்லை. எங்கோ தென்கோடியில் ஒரு மாநிலம்-கேரளம் நூற்றுக்கு நூறு படித்தவர்கள் உளர் எனப் பெருமைப்பட்டுக்கொள்ளுகிறது. (அதில் ஒருவேளை 100க்கு 5 வீதம் கல்வி இல்லாமல் இருக்கலாம்) ஆனால் ஒவ்வொரு மாநிலமும் அந்த வகையில் முன்னேற வேண்டாமா? முன்னேறுகிறதா? நாட்டைத் தொழில் மயமாக்குவோம் என்பதைக் காட்டிலும் கல்வி மயமாக்குவோம் என்று கூறவேண்டாமா? உடன் தக்க நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு முனைகிறது என நம்பிக்கை எழுகிறது

ஊர்தோறும் பள்ளிகள் இன்றேனும் உள்ள பள்ளிகளாவது ஒழுங்காக நடைபெறுகிறதா? இல்லையே. பல ஓராசிரியர் பள்ளிகள்-அந்த ஆசிரியர் வந்தால் உண்டு - இன்றேல் பள்ளி இல்லை. இரண்டாசிரியர் பள்ளிகளும் பல, ஐந்து வகுப்புகளை ஓர் ஆசிரியரோ இரு ஆசிரியர்களோ எப்படி நடத்த முடியும்? அவர்களும் தவறாது வருவதில்லை. பின், பிள்ளைகள் எவ்வாறு கல்வி கற்று முன்னேறுவர்? 1986ஆம் ஆண்டில் இந்தியாவில் ஓராசிரியர் பள்ளி, நாட்டுப்புறம் 31.27% நகர்ப்புறம் 6.29- இரண்டாசிரியர் பள்ளி, நாட்டுப் புறம் 34.07%. நகர்ப்புறம் 11.92- கிராமப்புறத்தில் மூன்றில் ஒரு பகுதி ஒரே ஆசிரியர் பள்ளிகளே என்று அரசாங்கக் கணக்கே சொல்லுகிறது. இந்த நிலையில் கல்வி வளருவ

தெங்கே? மேலும் ஓர் ஆசிரியருக்கு 50, அல்லது 55 மாணவர். அதிலும் இரண்டு, மூன்று, ஐந்து வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் இருப்பின் எந்த வகையில் அவர்கள் கற்றுத் தர முடியும்?

இப்போது 1995க்குள் பதினான்கு வயதுக்கு உட்பட்ட எல்லாப் பிள்ளைகளுக்கும் கட்டாயக் கல்வி தரப்பெறும் என்கின்றனர். நம் சட்ட சபையில்கூட இந்த ஆண்டு இத்தகைய நல்ல கொள்கை பேசப்பெற்றது. ஆனால் கீழ் உள்ளவர்கள் செயலாற்ற வேண்டுமே அந்தந்த ஊரில் படித்த பெரியவர்களைக் கொண்டு, குறைந்த செலவில் பள்ளிகள் அமைத்து, பிள்ளைகளை வகுப்பு வாரியாகப் பிரித்துப் படிக்க வைத்தால் பயன் விளையும். வீதிதோறும் இரண்டொரு பள்ளி என்று பாரதி பாடினான். இன்று நகரங்கள்-பெரும் கிராமங்களில் வீதிதோறும் இரண்டொரு பள்ளி வந்துள்ள நிலை காண்கிறோம். ஆனால் அங்கே தமிழுக்கு இடமில்லை. ஆணை செலுத்துவது ஆங்கிலம். அப்பள்ளிகளும் வாணிப வகையில் செயல்படுகின்றன. இந்த அவல நிலையை அரசாங்கம் போக்க வேண்ட்ாமா! இதற்குக் காரணம் நாமே, ஆம் பாரதி

'மெல்லத் தமிழ் இனிச்சாகும்-அந்த
மேற்கு மொழிகள் புவியிசை ஓங்கும்’

என்று 'கூறத் தகாதவன் கூறியதாகத்' தமிழன்னை வாய்மொழியாகவே காட்டுவர். இன்று:இந்த நிலையினைத் தானே காண்கிறோம். மேலே ஆறாம் வகுப்பிலோ வேறு வகுப்பிலோ ஆங்கிலம் ஒரு மொழியாக ஆங்கிலேயர் காலத்திலே இருந்த நிலைமாறி-இன்று சுதந்திரம் பெற்ற நாற்பத்தைந்து ஆண்டுகள் கழித்து, அந்த ஆங்கிலமே வீட்டு மொழியாக-வீதியில் பேசும் மொழியாக-விதி தோறும் உள்ள பள்ளி மொழியாக இயங்குகிறது. இதில் தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது என்பர். வெளி நாட்டார் ஒருவர் இந்தியாவைக் காண வந்தால், 'இங்கே

தெற்கே ஒருமாநிலம் ஆங்கிலத்தினைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளது எனக் கேலி செய்ய மாட்டாரா! பாரதிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடினோம். ஆனால் அவன் சொல்லை ஏற்காது, இளங்குழந்தைகளை-மழலைகளை மாற்று மொழி வழியே வாழ வழிவகுக்கலாமா!

கடந்த இருபது ஆண்டுகளில் இந்நிலை மிகவும் கேவலமாகி வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இதிலும் பிள்ளைகள் திறம் பெற்றார்களா என்றால் இல்லை. பழைய காலத்தில் வெள்ளையர் வீட்டில் வேலை செய்பவர்-பட்லர் இங்கிலிஷ் பேசுவார் என்பர் அதுபோல வெறும் பேச்சிலே மட்டும்தான் அந்த ஆங்கிலமொழி. ஆழ்ந்த அறிவிலோ எழுத்திலோ-படிப்பிலோ அந்தப் படிப்பின் நிலை இல்லை. ஒரு கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றும் ஒருவரிடம் கார்லைல் (Carlyle) என்பாரைப் பற்றித் தெரியுமா என்று கேட்டேன். அவர்கள் தெரியாது என்று தலை ஆட்டினர். சரி கிரே (Gray) என்பாரைப் பற்றித் தெரியுமா என்றேன், பதில் இல்லை. ஷேக்ஸ்பியர், மில்டன், கோல்டுஸ்மித் போன்ற பழம்பெரும் ஆசிரியர்களைப் பற்றியோ H. G. வெல்ஸ் அல்லது பர்னாட்ஷா என்னும் அண்மையில் வாழ்ந்து வாழ்விலக்கியம் பாடியவரைப் பற்றியோ அறியா நிலைதான் காண்கிறது. அவர்கள் எழுதும் எழுத்திலோ ஒரு வரிக்கு இருபிழைகள் காணலாம். இப்படித் தான் பலர் உள்ளனர். சிலர் உண்மையிலே வல்லவராக இருக்கலாம். ஆனால் பெரும்பாலார் கற்றும் கல்வாதார். அவர்களிடம்தானே மாணவர்கள் பயில்கின்றார்கள். பெரும்பாலும் அத்தகையவர்தாமே இங்கே ஆசிரியர் பதவிக்கு வருகிறார்கள். சிலர் உழைப்பின் பயனால் சிறிதளவு முன்னேறுகிறார்கள் என்றாலும் பலர் எங்கோ சென்று கொண்டிருக்கின்றனர். எனவே தமிழ்க் கல்வியோ-பிற பாடங்களோ அன்றி ஆங்கிலக் கல்வியும். இத்தன்ை ஆரவாரங்களுக்கிடையில் நன்கு வளரவில்லை.

க.-6

மன்னிக்கவும் எங்கோ சென்றுவிட்டேன். ஊர்தோறும் -தெரு தோறும் அந்தந்தக் கிராமத்தில் கற்றவர்களைக் கொண்டு-அவர்களுக்குச் சிறிதளவு ஊக்கத்தொகை கொடுத்து பிள்ளைகளுக்குக் கல்வி தரச் சொன்னால் பயன் விளையும் என நம்புகிறேன். நான் என் சிறுவயதில்-ஊர் பெரியதாக இருந்தாலும், அந்தக் காலத்தில் 1920-க்கு முன் அரசாங்கப் பள்ளி இல்லாத காரணத்தால் தனிப்பட்ட ஒர் ஆசிரியரிடம் தான் பயின்றேன். பின் மூன்றாவது வகுப்பு வந்தபோது பள்ளிக்கூடம் வந்தது. அதுவும் காந்தி அடிகள் கூறியது போன்று, எளிய ஒலைவேய்ந்த கூரைக் கட்டடம்-மண்சுவர் -மரச்சன்னல்தான். எனினும் அன்று ஆசிரியர்கள் நன்கு பிள்ளைகளுக்குக் கல்வி மட்டுமின்றி, கலை, சமூகவியல் போன்றவற்றையும் கற்றுத்தந்தனர். என் ஊரில் ஐந்தாம் வகுப்பு பயின்றபோது அல்லி அர்ச்சுனா என்ற நாடகத்தில் நான் கிருஷ்ணனாக நடித்தது மட்டுமின்றி, அன்று பாடிய பாடல்களும் அப்படியே இன்றும் நினைவில் உள்ளன. எனவே ஊர்தொறும் பள்ளி அமைப்பதில்-அதிலும் குறைந்த செலவில் அமைப்பதில் அதிக கடினம் இல்லை. பழங்காலத்தில் இதைத் திண்ணைப் பள்ளிக்கூடம் என்பார்கள். ஆம்! அப்பள்ளிகளில் அவ்வூர்ப் பிள்ளைகள் அனைவருமே ஐந்தாம் வகுப்பு வரையில் நன்கு படிப்பார்கள். பின் சிலர் மேல் வகுப்பில் சேரப் பேரூர்களுக்கும் நகரங்களுக்கும் செல்ல, சிலர், ஊரில் பெற்றோருடன் தொழில் செய்வர். எப்படியும் ஐந்தாம் வகுப்பு வரை அனைவரும்-பெரும்பாலும் 100-க்கு 80 பேரவது படித்திருப்பர். வேலைக்குப் போகும் பிள்ளைகளுக்கும் நான் முன்னரே சுட்டியபடி விடியற்காலை 5மணிக்கு முறையம் சொல்லும் வகையில் ஆத்திசூடி தொடங்கி சதகங்கள் வரையிலும் வாய்பாடுகளில் கீழ்வாய் இலக்கம் வரையிலும் கற்றுக்கொடுப்பார்கள். அதனால்தான் அந்த நாளில் எங்கோ ஓரிரு இட்ங்கள் தவிர்த்து, எல்லா இடங்களிலும் ஊரில் ஒற்றுமையும் எந்த வகையிலும் வேறுபாடு காண முடியாத ஒருமைப்பாடும் நிலவிய தன்மையினைக் காண முடிந்தது. வரலாற்று. அடிப்படையில் நெடுங்காலத்துக்கு

முன் சென்றாலும்-சங்க காலத்திலோ பல்லவர் காலத்திலோ இத்தகைய ஊர் ஒற்றுமையினைக் காணமுடிகிறது. பின்னால் யார் யாரோ இங்கே வர, பிற்காலச் சோழர்காலத்துச் சாதிப் பிரிவுகள்-சமயப் பேர்ராட்டங்கள் பல தோன்றின. இன்றோ பாரதிதாசன் கூறியப்படி வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள்' என்றால்-சூழ்கின்ற பேதம் அந்தத் தொகை இருக்கும். இந்த அவல நிலையை இன்றைய அரசாங்கம் எப்படியும் போக்கித்தான் ஆகவேண்டும்.

பல நாடுகளைச் சுற்றிவந்த நான் இந்தக் கல்வி முறையினைப் போற்றும் அமெரிக்க நாட்டினைக் கண்டு வியந்தேன். மேலே நாம் கண்ட வகையில் இன்றேனும் ஊரின் ஒவ்வொரு பகுதியும்-வாஷிங்டன், சிகாகோ உட்பட்ட பெரிய நகரங்களிலும் அந்தந்த எல்லையில் வாழ்கின்றவர்களே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளுகின்றனர். தெரு அமைப்பு, சுற்றுப்புறத் தூய்மை, கல்வி, நலத்துறை ஆகியவற்றை அவர்களே ஒரு குழு அமைத்து நன்கு பாராமரித்துக் கொள்ளுகின்றனர். அந்தந்த எல்லையில் அமைந்த வீட்டுவரி முதலிய விஷயங்களையும் அவர்களே வசூலித்துக் கொள்ளுகின்றனர். இந்த முறையினால் அங்கங்கே கல்வி நிலையங்கள் தக்க வகையில் செயல்படுகின்றன. இதுபற்றி என்னுடைய நூலில் (ஏழு - நாடுகளில் எழுபது நாட்கள்) குறித்துள்ளேன். இந்த நிலை, தமிழ்நாட்டில் இருந்த பழைய வட்ட, மாவட்டக் கழகங்களை எனக்கு நினைவூட்டின. ஒரு சிறு எல்லைக்கு ஒர் உறுப்பினர் அமைய-சுமார் 20 அல்லது 40 ஊர்களுக்கு -20 அல்லது 30 கிலோ மீட்டர். விட்டத்தில் அமைந்த ஊர்களுக்கு அவர் அடிக்கடி சென்று, ஆவன காண, ஊர்மக்களும் அவருடன் கூடித் தமக்கு வேண்டிய நலன்களைப் பெற்றனர். பின் பஞ்சாயத்து ஆட்சி என்ற பெயரில் பல மாற்றங்கள்.உண்டானபோதிலும் போதிய வளர்ச்சி இல்ல்ை. இதுபற்றி முன்னரே விளக்கியுள்ளேனாதலின் இங்கே அதிகம் எழுதத்தேவை இல்லை.

இனி ஆரம்பப் பள்ளிகளில் அமையும் பாடங்களைப் பற்றிச் சிறிது காண்போம். தற்போது மெட்ரிகுலேஷன் போன்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மிக அதிக மன சுமைகள் ஏற்றப்பெறுகின்றன. அரசாங்கப் பள்ளிகளிலும் பாடத்திட்டம் தேவையான அளவுக்கு அதிகமாகவே உள்ளது. நான் இதுபற்றி முன்னரும் குறிப்பிட்டுள்ளேன். முதல் இரண்டு வகுப்புகளில் தாய்மொழியில் எழுத்து, பதம், இருசொல், முச்சொல் வாக்கியங்கள் போன்றவற்றை மொழியிலும், எண்கள் ஒருவரிசை-இருவரிசை கூட்டல், கழித்தல், சிறு அளவு பெருக்கல் போன்றவற்றையும் கற்றுத் தருதல் வேண்டும். இவற்றுடன் அந்தந்த ஊர்களுக்கு ஏற்ப, சுற்றுப் புறச் சூழலுக்கு அமைய, சிறு வரலாறுகள், நில அமைப்பு முறை, அங்குள்ள தொழில் முக்கிய தலைவர்கள் வாழ்ந்த நிலை, பிறவற்றைச் சொல்லித் தருதல் வேண்டும். ஆத்திசூடி போன்ற சிறு சிறு . தொடர்களாலான அறநெறி பற்றிய வாக்கியங்கள் பயிற்றப்பெறல் வேண்டும். விளையாட்டு வகையிலே பலவற்றைச் சொல்லித்தரலாம். பள்ளிநேரம் காலை 8 மணி பிற்பகல் 2 மணி என்ற அளவில் 30 மாணவர் களுக்கு (ஒரே வகுப்பு) ஒர் ஆசிரியர் அளவில் அமைந்து செயல்படவேண்டும், ஆசிரியர் குழந்தைகளோடு குழந்தையாகி விடவேண்டும். ஆசிரியர் என்ற அச்சம் எழாத வகையில் அவ்ர்கள் நடந்துகொள்ளவேண்டும். வீட்டில் இருப்பதைக் காட்டிலும் பள்ளியில் இருப்பதே மகிழ்ச்சிக்குரியதென அந்த இளம் பிஞ்சு உள்ளங்கள் நினைக்கவேண்டும். பள்ளிக்கூடம் ஏதோ சட்டதிட்டம், அடி உதை என்ற எண்ணத்தை அவர்களிடம் உண்டாக்கக்கூடாது. பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது.

1958இல் நான் ம்துரைப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு முன்னோடியாக, அங்கே தியாகராஜா கல்லூரியில் தமிழ் முதுகலை வகுப்புத் தொடங்க, அன்றைய துணை வேந்தர் ஏ. எல். முதலியாரால் அனுப்பப்பெற்றேன். ஒரு முறை நான் இரயிலில் சென்றபோது அதே பெட்டியில் பம்பா

யிலிருந்து மதுரைக்கு (தன் தாய் வீட்டிற்கு) வந்து கொண்டிருந்த ஒரு தாயும் 7.8 வயது மதிக்கத்தக்க பெண்ணும் உடன் பயணம் செய்தனர். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபோது நான் அங்குள்ள கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுவதைச் சொன்னேன். அக் குழந்தையுடனும் சிரித்துப் பேசினேன். ஆயினும் அன்னையார் என்னை தன் மகளுக்கு 'இவர் ஒரு வாத்தியார்' என அறிமுகப்படுத்திய உடன் அக் குழந்தையின் முகம் மாறுபட்டது. எனக்குப் புரியவில்லை. அன்னையார் என்னவென்று கேட்டார்கள். அந்தக் குழந்தை 'வாத்தியார் சிரிப்பாரோ, நீ பொய் சொல்லுகிறாய்” என்று பதில் சொல்லிற்று. பிறகு அவர்கள் பம்பாய் மாதுங்காவில் அந்தக் குழந்தை படிக்கும் பள்ளியில் அதன் வகுப்பில் உள்ள ஆசிரியர் சிடு சிடுப்பாக இருந்து குழந்தைகளை எப்போதும் அடித்தும் வைதும் பாடம் சொல்லிக் கொடுப்பார் என்றார்கள். நான் உண்மையில் வருந்தினேன். இது பற்றி என் 'வையைத் தமிழ்' என்ற முதல் நூலில் ஒரு கட்டுரையே எழுதியுள்ளேன், இளம் பிஞ்சு உள்ளத்தில் ஆசிரியரைப் பற்றி அத்தகைய எண்ணம் உண்டானால்-பயம் ஏற்பட்டால்-அது எப்படிப் படிக்க முடியும்? எனவே ஆசிரியர்கள் -சிறப்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் அன்பு கலந்த தயுளத்தோடு இன்முகத்தோடு குழந்தைகளுக்குப் பாடம் கற்பி கவேண்டும். இன்று சென்னையில் பல தனியார் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வகையில் பெண்களே ஆசிரியராக உள்ளனர். தமிழக அரசும் இனி ஆரம்பப்பள்ளிகளில் பெண்களையே ஆசிரியர்களாக நியமிக்கப் போவதாகக் கூறியது ஆறுதல் அளிக்கின்றது. பெண்கள் தாயுள்ளம் கொண்டவர்களாதலின் அவர்தம் பண்பும் பழக்கமும் குழந்தைகளுக்கு ஆதரவாக அமையும் என்ற அடிப்படையிலே இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பெறுகின்றன.

முதல் இரண்டாம் வகுப்புகளில் இந்த வகையில் ஆரம்பக் கல்வி அவரவர் வாழும் ஊர், சுற்றுச் சூழல், தொடக்கப்பாடம், பாட்டு, கணக்கு என அமைய, மூன்றாம் .

வகுப்பு முடிய முறையான பாடத்திட்டங்கள் அமையலாம். வரலாறு, நிலநூல், கணக்கு, அறிவியல் துளிகள், நல்வாழ்வு, மொழிகள் இரண்டு (தாய்மொழியும் மற்றொன்றும்) எனப் பகுத்து அவற்றிற்கெனப் பாடநூல்கள் அமைக்கலாம். முதல் இரண்டு வகுப்புகளுக்கும் நான் மேலே காட்டியபடி பாடல்நூல்கள் ஆரம்பத்தில் தடையில்லை. ஆயினும் கணிதம். மொழி இரண்டினைத் தவிர, மற்றவற்றிற்குப் பாடநூல்கள் அமையவழியில்லை; அவை பெரும்பாலும் அந்தந்தச் சூழலை ஒட்டி அமைவதால் மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்புகளுக்கு ஏற்றவகையில் பாடங்களை உருவாக்க, தக்கவர் அமைந்த குழு அமைத்து, குழந்தைகள் உளங்கொளும் வகையில் மொழிப்பாடங்களும் பிறவும் எழுதச் சொல்லவேண்டும் பழங் காலத்தில் இரண்டாம் வகுப்புவரை ஊர், அதன் பக்கச் சூழலை அறிந்த குழந்தை, மூன்றாம் வகுப்பில் அந்த வட்டத்தைச் சேர்ந்த நிலநூல் பயிற்சி பெறும். அப்படியே வரலாற்றில் சிலவற்றை-இராசராசன், சிவாஜி, காந்திஅடிக்ள் போன்றவர் வரலாறு முதலியன, சிறுசிறு கதைகளாக. பிள்ளைகள் விரும்பும் வகையில் இடம்பெறச் செய்யலாம். மற்றைய கணக்கு இரு மொழிகள் ஆகியவற்றிற்கு வகுப்புக்கு ஏற்ற பாடங்கள் அமைந்த நூல்கள் அச்சிடலாம். நான்காம் வகுப்பில் மாவட்டம், ஐந்தாம் வகுப்பில் மாநிலம் என்ற அளவில் பாடங்களும் மொழிகளில், வகுப்பின் வளர்ச்சிக்கு ஏற்ற சில சிறு இலக்கியங்களும் இடம் பெறலாம். கணக்கு முறை படிப்படியாக வகுப்புக்கு ஏற்ப வளர்ச்சி பெறும்வகையில் பாடத்திட்டம் அமையலாம். இவ்வாறு எல்லாப் பாடங்களும் முறையாக அமைய, நல்லாசிரியர்கள் முறைப்படி நடத்தினால் ஐந்தாம் வகுப்புவரையில் பயிலும் ஒரு மாணவன் கல்வியின் தெளிந்த அறிவு பெறுவான் என்பது உறுதி.

நான் முன்னமே குறித்தபடி பள்ளிக்கூடத் திட்டங்களைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். திண்ணைப் பள்ளிக்

கூடங்கள் இன்று நடத்த முடியாது. எனினும் கட்டடம் இல்லாத பள்ளிகளே இல்லை என்னுமாறு செய்ய வேண்டும், அந்தந்த ஊர்மக்களிடமே இதைவிட்டால் அவர்கள் எளிதில் ஒவ்வோர் ஊரிலும் பள்ளி அமைத்துவிடுவர். தமிழ்நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில், கிராமங்களில் பள்ளிகள் அமைக்க ஊக்கமுடன், ஊரில் உள்ளவர்கட்கும் பணிவழியோ சாமான்கள் (மரம்-கல் முதலியன) வழியோ பாதி தர, அரசாங்கம் பாதிதரும் வகையில் செயல்படின் எல்லா ஊர்களும் பள்ளிகளைப் பெறும். முன்பு தமிழ் நாட்டில் இந்த வகையில் எத்தனையோ ஊர்களில் சாலைகள் அமைத்தனர். ஏரிகளைத் துப்புறவு செய்தனர். கால்வாய்கள் வெட்டினர். பள்ளிகளும் கட்டினர். இன்று பலகோடி செலவு செய்வதாகக் கூறும் அரசாங்கம், ஊர்தோறும் தக்கவகையில் இந்த முறையினை ஏற்பாடு செய்யின் பயன் விளையும் என நம்புகிறேன். ஆனால் அவ்வாறு தரும் தொகை யார் யார் கையிலோ சென்று சேராமல் அதற்கெனவே செலவிடப் பெறுகிறதா என்பதை அரசாங்கம் எச்சரிக்கையாகப் பார்த்துக் கொள்ள் வேண்டும். எனவே எல்லாவகையிலும் ஆரம்பக் கல்வி-பத்தாம் வகுப்பு வரை (எல்லாக் குழந்தை களுக்கும் 5-14) அமைய அரசு ஏற்பாடு செய்யின், நாட்டின் பிற வளங்கள் யாவும் தாமாகவே அமையும்.

இன்று பல தனியார் நிறுவனங்களும் மாணவர் கூட்டங்களும் எழுத்தறியா நிலையினைப் போக்க, ஒய்வு நேரத்தில் உதவுவதாக மாவட்டம் தோறும் அறிக்கை வருகின்றது. இளைஞருக்கு மட்டுமன்றி வயது வந்தோருக்கும் கல்வி கற்பிக்கும் இயக்கம் நாட்டில் வலுப்பெற்று வருகின்றது. எனினும் அதற்கென வகுக்கும் வழிமுறைகள் காரணமாகவோ, வேறு எதன் அடிப்படையிலோ அந்த முறை நன்கு நடைபெறவில்லை எனப் பலரும் கூறுகின்றனர். சமூகசேவை செய்வதாகக் கூறிக்கொண்டு, பட்டுடுத்து, படம் எடுத்துக் கொண்டு தம் சமூக சேவையைக் காட்டுவோரும் உண்டு. உண்மையில் தம்மைமறந்து சமூகசேவையில் பாடுபடுவோரும்

உண்டு வேண்டியவர்-வேண்டாதவர் என்று காணாது உண்மையில் தொண்டு செய்பவர்களை ஊக்குவித்து அரசாங்கம் கல்வியை வளர்க்க வேண்டும் ஊர்தோறும் முதியோர் கல்லிக்காக ஆரம்பப் பள்ளியினை ஒத்து, எழுத்தும் எண்ணும் சொல்லிக்கொடுத்து வயதுவந்தோரை ஓரளவாவது கற்றவராக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்தும் அச்செலவுக்கு ஏற்ற பயன் விளையவில்லை என அரசாங்கத்தாரே சொல்லுகின்றனர். எல்லாவற்றிற்கும் கையூட்டு இல்லாத திட்டமான மேற்பார்வை முறை அமையின் கல்விமட்டுமன்றி, நாட்டில் எல்லாத்துறைகளும் நன்கு அமையும். அந்த ஆக்கநெறிக்கு இன்று நாடாளும் நல்லவர்க்ள் வழிவகுத்து முயலவேண்டும் எனக்கேட்டுக் கொள்ளுகிறேன். -

அண்மையில் தில்லியில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் (25-9-91-28-9.91) நாடுகளில் ஆரம்பப் பள்ளியில் கல்வியின் தரம் மிகக் கீழ்நோக்கிச் சென்றுள்ளது எனக் காட்டியுள்ளது. (The Hindu 29.9.91 P. 20) இந்தியாவும் ஒரு காமன்வெல்த் நாடுதானே! பள்ளியில் சேரும் மாணவர் எண்ணிக்கை வளர்ந்துவிட்டது என்றாலும் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தரம் மிகத் தாழ்ந்துள்ளதைக் குறித்துள்ளனர். இது பிற மேல் படிப்புகளையும் பாதித்துள்ளதையும் சுட்டிக்காட்ட அவர்கள் தவறவில்லை. 10க்கு 8 பேர் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தாலும் அவருள் பாதிபேர் உயர்நிலைப்பள்ளியை எட்டிப் பார்ப்பதில்லை என்பதைச் சுட்டி, சமுதாய வளர்ச்சி அங்கே தடைப்படுவதையும் நினைவு படுத்தியுள்ளனர். -

ஆரம்பப் பள்ளிகளின் சீர்கேடுகளை - இடமின்மை, கட்டடம் இன்மை, பாடநூல்கள் இன்மை, தகுதி வாய்ந்த ஆசிரியர் இன்மை போன்றவற்றையும் அவர்கள் குறித்துள்ளனர். மக்கள் தொகைப் பெருக்கத்தினால் பள்ளிகள் வளர்ச்சி அடைய, அதை நிறைவேற்ற நிதி இல்லாநிலை உடைய நாடுகளும் எண்ணப்பெறுகின்றன. இந்த

நிலையில் சில் நாடுகள் மேநிலைக் கல்வியினை-பல்கலைக் கழகக் கல்வியினை-ஒரு சிலருக்கே உதவும் கல்வியினை வளர்க்கக் கோடி கோடியாக மேலும் மேலும், செலவிடுவதையும் சிந்தை செய்துள்ளனர். உலகவங்கி உதவ வந்த நிலையிலும் சில நாடுகள் ஏற்காது. எங்கோ பின்னடைந்த நிலையில் உள்ளதும் எண்ணப்பட்டது வளமான் காமன் வெல்த் நாடுகள் ஏழை நாடுகளுக்கு நிதி உதவ வேண்டிய நிலையினையும் அவர்கள் சுட்டிக் காட்டத் தவறவில்லை. காமன்வெல்த் உயர்கல்வி வளர்ச்சித் திட்டமும் (Commen Wealth Higher Education Support Scheme) ஆரம்பிக் கல்வித் திட்டமும் சேர்ந்து வளரும் நாடுகளில் கல்வி வளர்க்க வாய்ப்பளிக்கும் நிலையினையும் எண்ணியுள்ளனர்.

நம் பாரதமும் இதை எண்ண வேண்டும். ஆரம்பக்கல்வி திருந்தினால்தான் பிற அனைத்து மட்டத்து உயர்கல்விகளும் உயர்ச்சியுறும். இந்த நிலை இன்றேல் என்னாகும் என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும். ஆளும் நல்ல அமைச்சர்கள் ஆழ்ந்து எண்ணி ஆவன காண்பார்களாக.

இந்தத் தலைப்பு அச்சாகிக் கொண்டிருக்கையில் தினமணியில் (17-11-91-பக். 4) திரு. த. பரசுராமன் என்பவர் எழுதிய ‘தொடக்கப்பள்ளிகளில் தடுமாறும் தமிழ்’ என்ற கட்டுரை வெளிவந்ததைக் கண்டேன். அதில் அவர்கள் தமிழ்நாட்டில் தமிழ்மொழி போற்றப்பெறாத அவல நிலையினை நன்கு விளக்கியுள்ளனர். தொடக்க நிலையில் மொழிக்கே முக்கியத்துவம் தரவேண்டும்’ எனச் சுட்டி, மொழிப்பாடம் ஆரம்பப் பள்ளிகளில் பெற்றுள்ள இழிநிலையினைச் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் நாட்டினைத் தவிர்த்து இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வாறு தாய்மொழி-நாட்டுமொழி தாழ்த்தப்பெறும் அவலநிலை கிடையாது இதில் வேறு ‘நம்மை நாமே ஆளுகிறோம்’ என்று நாம் பெருமையாகப் பேசிக் கொள்ளுகிறோம். இனியாகிலும் தமிழ்நாட்டில் விழிப்புணர்ச்சி அரும்புமா? தமிழக அரசு தக்கன செய்யுமா? பொறுத்திருந்து காணவேண்டும்.