கல்வி எனும் கண்/முன்னுரை

முன்னுரை

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக'
என்று வள்ளுவர் சொன்ன குறளின் அடிப்படையிலேயே இந்த நூல் எழுதப் பெற்றுள்ளது. இதற்கு விளக்கம் தந்த பரிமேலழகர் ‘இதனால் கற்கப்படும் நூல்களும் கற்குமாறும் கற்றதனால் பயனும் கூறப்பட்டன’ என்கிறார். இந்த முறையில் இன்றைய நாட்டுக் கல்வி இருக்கிறதா என்பதை நல்லோர் எண்ணிப் பார்க்கவும் இல்லையானால் வள்ளுவர் பிறந்த நாட்டில் அவர் மொழிந்த வகையில் கல்வித்துறையை அமைக்கவும் வேண்டியே இந்நூல் எழுதப்பெற்றது.

நாட்டில் நாம் கற்கிறோம். ஆனால் கற்பவற்றை-கற்க வேண்டியவற்றைக் கற்கிறோமா? இல்லையே! இன்றைய கல்வி மக்கள் வாழ்க்கைக்கு-சமுதாய வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளதா? ஆம் என்று யாராவது கூறமுடியுமா ?

சரி, அவ்வாறு கற்பனவற்றைக் கசடுஅற-பிழையறா (பரிதி) மாசுஅற (காளிங்கர்) குற்றமறக் (மணக்குடவர்) கற்கிறோமா? அதுவும் இல்லையே. ஆரம்பப்பள்ளி முதல் கல்லூரி முதுகலை வரையில் அவ்வாறு மாணவர்கள் கற்றால்-கற்கும் வகையில் ஆசிரியர்கள் ஆற்றுப்படுத்தினால் தேர்வுகளில் நூற்றுக்கு நூறு தேற வேண்டாமா? ஆனால் அந்த நிலை இல்லையே!

அடுத்து, கற்றபடியாவது நிற்கிறோமா? அதுவும் இல்லையே! ‘தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார்’ என்ற குறளுக்கு ஏற்ப, அனைவரும் கற்றபடி நடந்தால் நாட்டில் ‘எல்லாரும் எல்லாச் செல்வமும்’. பெற்று இன்பமாக வாழும் நாடாகத்தானே இது இருக்கும். ஆனால் அந்த இன்பம் எங்கே இருக்கிறது?

எனவே நாட்டில் தேவையான-சமுதாய வாழ்வை வளம் படுத்தும் கல்வி இல்லை என்பது கண் கூடு. இதை ஒருவாறு விளக்கும் வகையிலே ஒவ்வொரு பகுதியும் இந்நூலில் எழுதப்பெற்றுள்ளது. அக்குறைகளை நீக்க வழிகளும் ஓரளவு சுட்டப் பெறுகின்றன.

திருக்குறளில் பொருட்பாலில் அரசியல், தொடக்கத்தே முதல் அதிகாரமான இறைமாட்சிக்கு (38) அடுத்த அதிகாரமாகவே கல்வி (89) அமைகின்றது எதைக் காட்டுகிறது? கல்வியை - தேவையான கல்வியைத் தம் மக்களுக்கு அளித்தலே அரசின் முதற் கடமை என்பதைத் தானே இது விளக்குகிறது. நாட்டிலே கல்வி நலம் பெறவில்லையானால், வேறு எதுவும் நல்லமுறையில் அமையாது என அன்றுதொட்டு இன்று வரை எல்லாரும் கூறிவருகின்றனர். அன்று அரசுக்கு அறமுரைத்த வள்ளுவர் தொடங்கி இன்று நம் நாட்டு-உரிமை நாட்டுப் பெருந்தலைவர் பண்டித நேரு உட்பட அனைவரும் இக்கருத்தை வலியுறுத்துகின்றனரே. 1961இல் இன்றைக்கு முப்பது ஆண்டுகளுக்குமுன் இந்திய ஒருமைப்பாட்டுக் குழு அமைக்க ஏற்பாடு செய்த மாநாட்டில் பண்டித நேரு அவர்கள், நாட்டு ஒருமைப்பாட்டிற்கு மட்டுமன்றி நாடு வாழ-நானிலம் வாழ-சமுதாயம் சீர்பெறக் கல்வியே முக்கியம் என்பதனை வலியுறுத்திக் காட்டியுள்ளார். அந்த மாநாட்டில் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் மாநில முதல் அமைச்சர்களும், பல்கலைக் கழகத் துணைவேந்தர்களும் கல்வி வல்லுநர்களும் அறிவியல் மேதைகளும், தொழில் முதல்வர்களும் கூடி இருந்தனரே. (1961-செப் 28 முதல் அக் 1 வரை) அந்த மாநாட்டில் கூடி இருந்த அத்தனை பேரும் இன்றுவரையில் கல்வியில் நலம்பெறு மாற்றங்கள் என்ன கண்டார்கள்? எண்ணிப்பார்க்க இந்நூல் சுடர் விளக்காயினும் நன்றாய் விளக்கிடும் தூண்டுகோலாக அமைகின்றது. பண்டிதர் நேரு அவர்கள் கூறியதில் ஒரு பகுதியை இங்கே தருகிறேன்.

“Education provides the most important means of bringing about National integration. Since the Problems of National Integration or of national unity essentially, involue the attitudés of groups or large sections of the community and since Education in its brodest sense has been recognised as a powerful instrument for influencing or modifying these attitudes, the conference regards the process of Education and its re-orientation where necessary, as of primary importance” (The Hindu. 17. 11.91)

இந்தக் கருத்தினை அவர் வழியே நாட்டை ஆளும் மத்திய அரசோ மாநில அரசுகளோ எண்ணிப் பார்த்து உடன் திருத்தியிருக்க வேண்டுமே. இன்று, அன்று இல்லாத வகையில் எத்தனையோ வேறுபாடுகள் முளைத்துத் தலை விரித்தாடுகின்றனவே. இப்போதும் இத்தகைய பல்லோர் கலந்த நலம் காணும் கூட்டங்களை இன்றைய பிரதமரும் நடத்துகிறார். உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் கல்வி-பெண் கல்வி மிக இழி நிலையில் உள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றன. (The Hindu- 22.11.91) எனவே தலைவர்கள்-அறிஞர்கள், கல்வித் துறையினைக் கட்டி ஆளுபவர்கள் பண்டித நேரு கூறியதையும் உலகத்தார் பழிப்பதையும் எண்ணி உடன் செயலாற்ற இந்நூல் ஒரு தூண்டுகோலாக அமைய வேண்டும் என்ப்தே என் ஆசை.-- வேண்டுகோள்.

எல்லாவற்றினும் நல்லனவும் உண்டு; அல்லனவும் உண்டு. எனவே ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அந்நியர் ஆட்சியில் இருந்த கல்வி முறையினைப் பற்றிக் கூறி, அதில் உள்ள நல்லனவற்றை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் அல்லனவற்றை விட்டு வேறு திருத்திய நெறிக்கு மாற வேண்டுமெனவும் நூலில் அங்கங்கே சுட்டியுள்ளேன். பல நல்லன மாறியுள்ளன. அவற்றை எண்ணிப் பார்க்கவும் வேண்டியுள்ளேன்.

சுதந்திரம் பெற்றபின் மாநில, மத்திய அரசுகள் இக்கல்வியின் சீர்திருத்தம் பற்றியும் மாற்றம் பற்றியும் எத்தனையோ குழுக்களை அமைத்தன. அவையும் பலப் பல வகைகள் ஆய்ந்து பல்வேறு கருத்துக்களை ஏட்டில் வடித்துத் தந்தன. ஆயினும் அவை ‘கூட்டத்தில் கூடி நின்று கூடிப் பிதற்றல் இன்றி, நாட்டத்தில் கொள்ளாரடி-கிளியே நாளில் மறப்பாரடி’ என்ற பாரதியார் வாக்கின் வழிதானே நிற்கின்றன. அண்மையில் திரு. இராமமூர்த்தி அவர்கள் தலைமையில் இந்திய அரசு அமைத்த கல்விக் குழுவும், நாட்டு நலம் காணத்தக்க கல்வி முறையினை ஓரளவு வரையறுத்துக் காட்டியுள்ளது. அதன் கருத்துக்கள். சிலவற்றையும் அப்படியே இந்நூலில் , (ஆங்கிலத்தில்) சேர்த்துள்ளேன்.

அதில், ஓரிடத்தில் கல்வியில் பெற வேண்டிய மாற்றங்களைச் சுட்டி, அவ்வாறு நல்ல நெறியில் கல்வி திருத்தம் பெறாவிட்டால், அத்தகைய கல்வியைக் கற்பதைக் காட்டிலும் கல்லாதிருப்பதே மேல் எனவும் குறித்துள்ளார். (If this is what our education has done to us, one may well ask, is not no education better than bad education— Page V). இது எனக்கு, ‘கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்’ என்ற தாயுமானவர் அடியை நினைவூட்டிற்று. தாயுமானவர் ‘கற்றும் அறிவில்லாத என் கன்மத்தை என் சொல்லுவேன்’ என்று நைந்து உருகியதையும் நினைக்க வேண்டியுள்ளது. இன்றைய மத்திய அரசும் மாநில அரசுகளும் இந்த நெறி வழியைப் பின்பற்ற வேண்டும். பாடங்கள் செம்மையாக்கப் பெறவேண்டும். ஆசிரியர் பட்டத்துக்கு ‘நல்லாசிரியர்’களாக அன்றி உண்மையிலேயே நல்லாசிரியர்களாகத் தம்மிடம் பயில்வாரை வாழ வைக்கவேண்டும். பெற்றோர்களும் பிறவற்றைக் காட்டிலும் தம் மக்கள் கண்ணாகிய கல்வியில் நலம் பெறுவழியே உதவி செய்யவேண்டும். மாணவர்களும் இன்றைய சுற்றுப்புறச் சூழலில் சிக்காமல் கற்பன கற்று, அதன் வழி நின்று நாட்டை வளமாக்க முயலவேண்டும். இந்தப் பேராசையின் காரணமாகவே நான் இந்த நூலை எழுதினேன்.

இந்த நூல் நாட்டுக்கல்வி ஒன்றினையே நாட்டமாகக் கொண்டு எழுதப் பெற்றமையின் அதில் தற்போது உள்ள குறைகளை அங்கங்கே மென்மையாகவும் வன்மையாகவும் சுட்டிக் காட்டினேன். இதனால் நான் யாரையும் குறை கூறினேன் என்றோ, குறைத்து மதிப்பிட்டேன் என்றோ யாரும் எண்ணவேண்டாமெனக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

எப்படியாயினும் நம்முடைய பரந்த பாரதமும் சிறந்த தமிழகமும் பண்டைப் பெருமைகளைத் திரும்பப் பெற்று, உலக நாடுகளுக்கிடையில் உயர்ந்த ஒன்றாக-பிற நாடுகளுக்கு வழிகாட்டியாக ஆன்மீக நெறி, சமுதாயநெறி. முறைபிறழா அரசநெறி, கல்விநெறி ஆகிய அனைத்தும் மிக உயர்ந்த இடத்தினைப் பெற்றுச் சிறக்கவேண்டும் என்ற ஆசை -குறிக்கோள் அடிப்படையிலேயே இச்சிறுநூலை வெளியிடுகின்றேன். நாட்டிலுள்ள நல்லவர் - வல்லவர்-ஆட்சியாளர்கள்-அறிஞர்கள் நல்லவற்றை ஏற்று நாட்டை வளஞ்செய்து கல்வியினை நேரிய வழியில் ஒம்பி அதன் வழி நாட்டு நலனைக் காத்து, நாடு உயர்ந்து ஓங்க வழிகாண வேண்டும் என வேண்டி வணங்கி அமைகின்றேன்.

தமிழ்க்கலை இல்லம்
சென்னை-30 1.12.91

பணிவுள்ள,
அ.மு. பரமசிவானந்தம்


அச்சிடும்போது பிழைகளை ஒத்து நோக்கித் திருத்தி உதவிய பேராசிரியர் திரு. சா. வளவன் அவர்களுக்கு என் நன்றி உரித்து. .

அ.மு.ப

"https://ta.wikisource.org/w/index.php?title=கல்வி_எனும்_கண்/முன்னுரை&oldid=961001" இலிருந்து மீள்விக்கப்பட்டது