கல்வி எனும் கண்/மேநிலை வகுப்பு (+2)


3. மேநிலை வகுப்பு (+2)


தமிழகக் கல்வித்துறையிலே, பதினொன்று, பன்னிரண்டு ஆகிய இருவகுப்புகளடங்கிய (+2) மேநிலைக் கல்வியே சிறப்பாக அமையவேண்டியதாகும். பத்தாம் வகுப்பு வரை எல்லாரும் பெரும்பாலும் அந்தந்த ஊரிலிருந்தே படிக்க வசதிகள் பெருகிவருகின்றன. அந்த வகுப்புகளில் பெரும்பாலும் தாய்மொழி மூலமே கல்வி கற்பிக்கப்பெறுகின்றது. பெருநகரங்களில் பல பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருப்பினும் பல பள்ளிகளில் தமிழே பயிற்றுமொழியாக உள்ளது. பிள்ளைகள் தாய்மொழி வழியே எளிதில் கற்று முன்னேற வழி ஏற்படுகின்றது. மேலும் அதுவரை பயிற்று மொழி எதுவாயினும்-இலவசக் கல்வியாகவே உள்ளது. ஆயினும் அந்தப் பத்தாம் வகுப்பிலேயே நூற்றுக்கு 60 அல்லது 70க்குமேல் தேர்ச்சி பெறுவது அரிதாக உள்ளது. அதற்குக் காரணம் ஆசிரியர்கள் சிலர் திறம்ப்ட் இயங்காமையும் மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்களோடு கரும்பலகை உட்பட நல்ல கட்டடங்களோ சூழ்நிலையோ இல்லாமையுமாகும். எப்படியோ அந்தப் பத்தாம் வகுப்பினைத் தாண்டியபின், ஒருசிலர் தவிர்த்துப் பெரும்பாலோர்-பாதிக்குமேல் பதினோராம் வகுப்பில் சேர்கின்றனர். அப்படிச் சேரும்போது பெரும்பாலும் ஆங்கிலம் பயிற்றுமொழியாக அமையும் பள்ளிகளே அதிகம் உள்ளன. சில வகுப்புகளில் தமிழ் பயிற்றுமொழியாக இருப்பினும் எல்லாப் பள்ளிகளிலும் ஆங்கிலம் பயிற்றுமொழியாக உள்ளது. அத்தகைய வகுப்புகளுக்குப் பள்ளிக் கட்டணமும் உண்டு (சிறுதொகையே). அரசாங்க முறையில் மானியம்பெறும் பள்ளிகள்போக, மானியம்பெறாத மெட்ரிகுலேஷன் பள்ளி போன்றவை, மத்தியபள்ளி ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் பத்தாம்

வகுப்பு வரையில் ஆங்கிலமே பயிற்றுமொழியாகக் கொள்வதால் அவர் மேல் வகுப்பில் சேர்ந்து படிப்பதில் அதிகத்தொல்லை இல்லை. ஆனால் பத்தாம் வகுப்பு வரை தமிழில் பயின்றவர்கள் படிக்க இடர்ப்படுகின்றனர். மேலும் மத்திய கல்விக்கூடங்கள் தவிர்த்து, தமிழ்நாட்டில் உள்ள பிற எல்லாவகைக் கல்விமுறைகளும் - பத்தாம் வகுப்பு வரையில் வேறாக இருப்பினும்-பதினோராம் வகுப்பில் ஒரேவகையான பாடம்-தேர்வு. பிறமுறைகள் ஒன்றி அமைகின்றன. பயிற்றுமொழி எதுவாயினும் பாடச்சுமையும், ஆய்வுக் களநிலைகளும் இந்த இருமேல் வகுப்புகளிலும் முற்றிலும் மாறுபட்டுள்ளமையின் பெரும்பாலான மாணவர் அல்லல் உறுவர். எனவேதான் இந்தத் தேர்விலும் பெரும்பாலோர் தோல்வியுற நேர்கிறது.

தமிழ்நாட்டுப் பாடமுறை இந்த இருவகுப்புகளிலும் சற்றே குறைவாகவே தொடக்கநாளில் இருந்தது. எனினும் 1986-87 முதல் தரம் உயர்த்தப்பெற்றது. மத்திய பள்ளிகளில் தரம் உயர்ந்திருந்ததோடு, திருத்தும்முறை, நாடுதழுவிய நிலையில் அன்று இருந்ததால் மாணவர்கள் அதிக எண் பெறஇயலவில்லை என்றும் அதனால் பொறியியல், மருத்துவம் முதலிய கல்லூரிகளில் சேரும் வாய்ப்பினை இழக்கிறார்கள் என்றும் கருதிய காரணத்தால் அந்தப் பாடத்திட்டம் எளிமையாக்கப் பெற்றதோடு, திருத்தங்களும் சென்னையிலேயே நடைபெற ஏற்பாடாயிற்று. ஆயினும் அதே வேளையில் எம்.ஜி.ஆர். காலத்திய தமிழக அரசு, நன்கு ஆய்ந்து மாணவர் தரம் உயரவேண்டும் என்ற அடிப்படையில் பாடத்திட்டத்தில் மாற்றமும் ஏற்றமும் கண்டது ஆசிரியர்தம் முயற்சியினாலும் மாணவர் ஆர்வத்தாலும் அவர்கள் அதிக எண் பெற்றுப் பொறியியல் மருத்துவக் கல்லூரிகளில் உரிய இடங்களைப் பெறுகின்றனர்.

இத்தகைய இரு ஆண்டுக் கல்வியினைப் பற்றிச் சற்றே ஆழ்ந்து காணல் நலமாகும். இது ஒரு பேரேரியாக இயங்குவது, இதில் பயின்றவர் பின் பலதுறைகளில் பிரிந்துசெல்ல வாய்ப்பு உண்டாகிறது. எனவே இப்பாடத் திட்டத்தில் பல்வேறு வகைப்பட்ட பிரிவுகள் தேவை. இவ்வகுப்புகள் தொடங்கப்பெற்றபோது இத்தேவை அறிந்தே தொழில்துறை (Vocation) வகுப்பு பிரிக்கப் பெற்றது. அதில் பயின்றவர்களுக்கே அரசாங்கத் தேர்வு எழுத முதல் உரிமை தந்து, அவர்களையே பணியாற்ற அழைக்க வேண்டும் என்பதே திட்டம். (நான் அப்போது அக்குழுவில் இருந்தமையின் இதன். அவசியத்தை அறிய வாய்ப்பு இருந்தது). அரசாங்கம் அந்த நிலையிலிருந்து தவறிவிட்டது எனலாம்.

ஆண்டுதோறும் தேர்வாணையம் எழுத்தர்களுக்குத் தனித்தேர்வு (Group IV) நடத்துகிறது. இதில் மேநிலையில், இத்தகைய பாடங்களை எடுத்தவர் மட்டுமே எழுதவேண்டும் என்ற விதி அமைக்கப்பெறும் என எதிர்பார்த்தனர் பொது மக்கள். மாணவரும் இதில் சேர்ந்தால் உடன் அரசாங்கப் பணியில் சேரலாம் என்ற ஆர்வத்தில் முதலில் சேர ஆரம்பித்தனர். ஆனால் நடப்புநெறி வேறாகிவிட்டது. நான்காம் பிரிவில் தேர்வு அமைப்பதில் எந்த மாற்றமும் இல்லை. பழையபடியே இந்தத் தேர்வுக்கு எம்.ஏ., எம்.எஸ்சி, போன்ற உயர் பட்டங்கள் பெற்றவர்களும் பி.ஏ., பி. எஸ்.சி., பி.காம். போன்ற பட்டங்களைப் பெற்றவர்களும் எழுத வருகின்றனர். இவர்களோடு, பன்னிரண்டாம் வகுப்பில் வேலை வாய்ப்புக்கெனவே பயின்ற மாணவர் எப்படிப் போட்டியிட்டு வெற்றி காண இயலும்? இந்த நிலை இனியாகிலும் மாற வேண்டும். அரசாங்கப் பணிக்கு ‘+2’ வகுப்பில் பணிப் பயிற்சி பெற்றவரே தேர்ந்தெடுக்கப்படுவர்; மற்றவர் அத்தேர்வு எழுத முடியாது என்று விதி வகுத்தால் பல நன்மைகள் உண்டாகும்.

ஏதோ பொழுது போகவில்லை, சம்பளமும், இல்லை; சாப்பாடும் இலவசம் என்று பலர் கல்லூரியில் சேர்கின்றனர் (ஏழைகளுக்கு உதவுவது தவறு எனக் கூறமாட்டேன்.) ஆனால் அவ்வாறு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் பயின்ற பின் பட்டம் பெறுகின்றவர்கள் ‘+2’ படித்த மாணவரோடு போட்டியிட வரலாமா? அவர்கள் வேறு வாணிப முறையிலோ பிற வகைகளிலோ செயலாற்றி வெற்றி பெற வேண்டுமேயன்றி, இதில் போட்டியிட்டுத் தாழ்நிலையிலுள்ள இளஞ்செல்வங்களின் எதிர்காலத்தைத் தடுக்கலாமா? எண்ணிப் பாருங்கள்.

பயில்பவருள் பலர்-கல்லூரியில் உயர் பட்டங்கள் பெறுபவர் வரை-பெரும்பாலோர் அரசாங்க உத்தியோகத்திலேதான் கண்ணாக உள்ளனர். அதற்காக, ஒவ்வொருவரும் தம் சொந்தப் பணத்தைச் செலவு செய்வதோடு, அரசாங்கப் பணத்தையும் வீணாக்குகின்றனர். அறிவியல் மேல்படிப்பிற்கு (M. Sc) ஒருவருக்கு ஓர் ஆண்டுக்கு இருபத்தைந்தாயிரத்துக்கு மேல் செலவாகும் எனக் கணக்கிடுவர். கட்டடம், ஆய்வுக்கள அமைப்பு போன்றவற்றைக் கணக்கிட்டால் இன்னும் அதிகமாகலாம். இவ்வளவு செலவும் ஆன பிறகு சாதாரண எழுத்தர் பதவிக்கு விண்ணப்பம் செய்வது நாட்டுப் பொருளாதாரத்தை நலிவு செய்வதாகாதா! அரசாங்கம் ‘+2’ வகுப்பில் பணிப் பயிற்சி பெறுபவர்தான் அரசாங்க அடிப்படை ஊழியர் ஆகலாம் என்றும், பின் பதவி உயர்வு வேண்டின், அவர்கள் மட்டுமே தனித் தேர்வு எழுதி உயர்வு பெறலாம் என்றும் விதி அமைப்பின் நாட்டுப் பொருளாதாரம் எவ்வளவு சீர்படும்! எத்தனையோ கல்லூரிகள் தேவையற்றனவாகும். பலர் இந்தப் பணிப் பயிற்சியினைப் பெற்று, அரசாங்கப் பதவி கொள்வர். இதற்கெனத் தேவையாயின் அரசியல் சாசனத்தையே (உரிமை பற்றி) திருத்தி அமைத்து வழி காணல் நலம் பயப்பதாகும்.

மேலும் பயின்று ஐ.ஏ.எஸ் போன்ற தேர்வுக்குச் செல்லுகின்றவர்களுக்கு ஏற்ற வகையில் ‘+2’ வகுப்பில் தனி வகைப் பாடங்க்ள் அமைய வேண்டும். எப்போதோ ஆங்கிலேயன் அமைத்த பாடத் திட்டத்தை, அவன் சென்று ஐம்பது ஆண்டுகள் ஆன நிலையிலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தேய்ந்து அழிவது நியாயமாகுமா? நான் மேலே காட்டியபடி பாரதியார் வருந்திச் சொல்லிய-ஆரியர்க்கிங்கு அருவருப்பாவதை-இன்றும் நாம் எதற்குக் கொள்ள வேண்டும் இக்கல்வி கற்கத் தன்னைத் தந்தையார் அனுப்பிய நிலையினை அவர் மிகுந்த கவலையோடு உதாரணம் காட்டி விளக்குகிறார். .

‘புல்லை உண்கென வாளரிச் சேயினைப்
போக்கல் போலவும் ஊன்விலை வாணிபம்
நல்லதென்றொரு பார்ப்பனப் பிள்ளையை
நாடுவிப்பது போலவும்’

அது அமைந்தது என்கிறார். இன்று மனிதன் நிலை மாறிவிட்டாலும், முதலில் காட்டிய உவமை இன்னும் உண்மை யாகத்தானே உள்ளது. எனவே கல்வியில், அதுவும் பேரேரி யாகிய இந்தப் பிரிவில் பெரும் மாற்றம் தேவை.

பொறியியல், மருத்துவமும் முதலியன பயில விரும்புபவருக்கும், பிற விவசாயம், கால்நடை மருத்துவம் போன்ற துறைகளுக்கும் வாணிபம், பொருளாதாரம் போன்றவற்றிற்கும் வானிலை ஆய்வு போன்ற அறிவியல் காண்பதற்கும் கலை, இலக்கிய நலம் காண்பதற்கும் எனப் பல வகையில் இந்த இரண்டாண்டுக் கல்வி பிரிக்கப் பெறல் வேண்டும். அரசாங்கப் பணி ஏற்போர், ஆசிரியராக விரும்புவோர் போன்றோருக்குத் தனி வகைக் கல்வி அமைந்தமை போன்று (இன்று ஆசிரியப் பயிற்சி எடுக்கப் பெற்றது. இடைநிலை ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகள் அனைத்தையும் மூடி, முன்போன்று இந்த வகுப்புகளிலே அப்பயிற்சி அமைக்க வேண்டும்.) இந்த விரிவாக்கங்கள் செயல்பட உடன் வழி வகைகள் காண வேண்டும். இத்தகைய பிரிவுகள் ஏற்பட்டால், கல்லூரியில் தேவையற்ற பாடங்களைப் படித்து, பின் “ஏன் படித்தோம்- அட், கெடுவா பல தொழிலும் இருக்கக் கல்வி அதிகமெனக் கற்றுவிட்டோம் அறிவிலாமல். என்று ஒரு புலவர் பாடியதை மறந்து விட்டோமே” என வருந்த வேண்டிய நிலை சமுதாயத்தில் உண்டாகாது.

சில ஆண்டுகளுக்குமுன் பல்கலைக் கழகத் துணை வேந்தர் ஒருவருடன் அவர் வீட்டு முற்றத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது கிராமத்தில் இருந்து வந்த ஒருவர் அவர் பாதங்களில் நெடுங்கிடையாக வீழ்ந்து புலம்பினார். எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவரைச் சமாதானம் செய்து, எழச் செய்து, என்ன வேண்டுமென்று கேட்போம். அவர் ஐயா, என் மகன் பி.ஏ வெற்றி பெற்றுவிட்டான். அதற்கு மேல் ஏதோ இரண்டு வருடப் படிப்பு இருகிறதாமே (அதன் பெயர் கூடத் தெரியவில்லை) அதை என் மகனுக்குத் தரவேண்டும் எனக் கூறி மறுபடியும் தண்டனிட்டார். நான் அவரைத் தடுத்து நிறுத்த, அவர் 'உன் பையனை எங்காவது வேலைக்கு அனுப்பக் கூடாதா? நீ தாழ்த்தப்பட்ட வகுப்பினராகக் காண்கின்றாய். மிகவும் முயன்றால் வேலை கிடைக்குமே என்றார். (அக்காலத்தில் எம். ஏ. எம். எஸ்சி. போன்ற முதுநிலைப் பட்டங்களுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பல்கலைக் கழகத்தினிடமிருந்தது. எனவேதான் அவர் துணை வேந்தரையே பிடித்தார்) உடனே அவர் சற்றும் தாமதியாமல் ‘ஐயா! வேறு ஒன்றுமில்லை. இரண்டு வருடங்களுக்கு அவனுக்குச் சம்பளமும் இல்லை. நூல்களும் பிறவும் கூட அரசாங்கமே தந்து விடுவதாகச் சொல்லுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக என் மகன் இரண்டு வருடம் பசியில்லாமல் அரசாங்க இலவச விடுதியில் நல்ல சாப்பாடு பெறுவானே! இதற்காகத்தான் கேட்கிறேன்’ என்றார் அவர் வேண்டுகோளைப் பற்றி சிரிப்பதா! சிந்திப்பதா! இவ்வாறுதான் நாட்டிலே கற்பவர் பலர் உள்ள னர். (பின் அப்பையனுக்கு அவர் ஒரு கல்லூரியில் இடமளித்தார்). இந்த நிலையில் எத்தனை ஆயிரம் கோடி கல்விக்குச் செலவு செய்தால்தான் என்ன பயன்? எனவே இப்பேரேரியிலிருந்து பிரியும் பல கால்வாய்களைச்-சிற்றாறுகளைச் செம்மைப்படுத்தி, வழி வகுத்து, அவை வற்றாவகையில் பாதுகாத்தால் நாட்டுக்கு வேண்டிய நல்ல பயன்-வாழ்வுக்குத் தேவையான பயிர்-சமுதாயத்தை வாழ வைக்கும் தகுதியான பயிர் விளையுமே. எனவே இந்தப் பேரேரியை முதலில் தூறு எடுத்துத் தூய்மையாக்கி, அதனைப் பகுத்து உரிய ஆறுகளையும் கால்வாய்களையும் செம்மைப்படுத்தி, மதகினை ஒழுங்குற அமைத்து, தேவையறிந்து திறந்துவிட்டு, பயிரின் களையைப் போக்கி, எருவிட்டுக் காத்தால் நாடு நாடாகும். நம் தமிழ் நாடே பாரதத்தில்-பரந்த உலகில் உயரிய முதல் நாடாகத் திகழும்.

எனவே இந்த அடிப்படையிலே ‘+2’ வகுப்புகளுக்கு உரிய பாடத்திட்டங்களை அமைக்க வழிகண்டு, அதற்கேற்ற வகையில் நல்ல வல்லவர் குழுக்களை அமைத்து உடன் அரசாங்கம் ஆவன காணவேண்டும். 1992 சூனில் தொடங்கும் வகுப்புகளுக்கே இத்தகைய முறையினைச் செயலாக்க வாய்ப்பு இருக்கிறது. அரசாங்கம் உடன் செயலாற்ற வேண்டும்.

இதற்கென நல்லாசிரியர்கள்-தம்மை மறந்து உழைக்கின்ற-அவரவர் பாடங்களின் திறன் பெற்ற வல்லாசிரியர்கள் தேவை. யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை மாறி, பிள்ளைகளை-வளரும் சமுதாயத்தை வாழவைக்கும் வகையில் செயலாற்றும் நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நன்னூலில் பவணந்தியார் காட்டிய ஆசிரியர் இலக்கண அமைதி பெற்றவராய், ஆங்கிலத்தில் கோல்டு ஸ்மித் (Goldsmith) காட்டிய ஆசிரிய மரபினைப் பெற்றவராய் உள்ளவர்கள் ஆசிரியர்களாய் அமைந்தாலன்றி எந்தச் சீர்திருத்தமும் சிறக்காது. எனவே இப்பேரேரியாகிய ‘+2’ எனும் கல்வியை நல்லவர் துணைக் கொண்டு உடன் செயலாற்ற முனையின் நாட்டின் பல பிரச்சினைகள்.உடனே தீரும். அரசாங்கம் செயலாற்ற வேண்டும்.

இதன் தேர்வு நிலைபற்றிச் சிறிதே எண்ணவேண்டும். 10+2+3 என்ற நிலையினைக் கல்வியில் வரையறுத்தபோது அத்தனை ஆண்டுகள் கட்டாயம் பயிலவேண்டும் என்ற விதியினை வற்புறுத்தினர். அப்போதுதான் கல்வி நிறைவு பெற்றதாகும். எனவே பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இரண்டாண்டுகள் கழித்தே மேநிலையாகிய ‘+2’ தேர்வு எழுதவேண்டும். அதன் பிறகே கல்லூரிகளில் இடம் தேடும் நிலை, ஆனால் தேர்வு விதிகள் அந்த வகையில் இல்லை என்கின்றனர். மார்ச்சில் பத்தாம் வகுப்பு அல்லது. மெட்ரிகுலேஷன் தேறினால் உடன் அடுத்த செப்டம்பரிலேயே (ஆறு மாதத்தில்) தனியாகச் செல்பவர் மேநிலைத் தேர்வு எழுதலாம். பெரும்பாலான மாணவர்கள் பெருந்தொகை செலவு செய்து பள்ளிகளில் இரண்டாண்டுகள் பயின்ற பின்பே தேர்வு எழுதும் முறை இருக்க, இப்படிக் குறுக்கே ஆறே மாதத்தில் அத்தேர்வினை முடிக்க விதி உள்ளது பொருத்தமாகுமா? அத்துறையில் விதி உள்ளமையின் தாங்கள் தடுக்க முடியாதே என அஞ்சுகின்றனர். அவ்வாறு தேர்வு எழுதி வெற்றிபெறும் மாணவர்களைப் பொறியியல் கல்லூரி போன்றவை ஏற்றுக்கொள்ளா. இவ்வாண்டுமுதல் சென்னைப் பல்கலைக் கழகம் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என விதி செய்துள்ளது. ஆக அவர்கள் அவ்வாறு சுருங்கிய எல்லையில் தேர்வில் வெற்றி பெற்றும் மேலே பயில வாய்ப்பு இல்லையே. (பல்கலைக் கழகங்கள் அஞ்சல்வழிக் கல்விக்கு இவர்களை ஏற்றுக்கொள்ளும் போலும்).

முறையாக இரண்டாண்டு பள்ளிகளில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றவர்களுக்கு மாறாக, இந்தக் குறுக்குவழி இருத்தல் ஏற்புடைத்தாகாது. இது மற்ற மாநிலங்களில் ஒரு வேளை இருந்தாலும் தவறே. எனவே நம் தமிழக அரசு உடன் இந்தக் குறுக்கு வழித் தேர்வினை நிறுத்த ஏற்பாடு செய்ய

வேண்டும். பத்தாம் வகுப்பில் வெற்றிபெற்று இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகே +2 எழுதவேண்டும் என்ற விதி கட்டாயம் ஆராயப் பெறவேண்டும்.

சென்ற ஆண்டு கல்லூரிகளில் இத்தகைய மாணவர்கள் சேர்க்கப்பெற, பின் பல்கலைக் கழகம் அவர்களை விலக்க அவர்கள் நீதிமன்றம் சென்று வெற்றிபெற்றுத் தொடர்ந்து பயிலும் வாய்ப்பினைப் பெற்றனர். ஆனால் இந்த ஆண்டு சேர்க்கக்கூடாது என்ற விதியினைத் திட்டமாக முன்அறிவித்து விட்டமையின், எந்தக் கல்லூரியும் அவர்களைச் சேர்த்திருக்காது. எனவே உடன் இத்தகைய குறுக்குத் தேர்வினை - முறைக்கு மாறான ஒன்றினை - நிறுத்த வேண்டும்.



தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு (குறள்)

தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந்தார் (குறள்)

வைப்புழிக் கோட்படா வாய்த் தீயில் கேடில்லை
மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார்
எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற (நாலடியார்)