களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/இலங்கை அரசர்

களப்பிரர் காலத்து இலங்கை அரசர்

ளப்பிரர் தமிழகத்தை ஆண்ட காலத்தில் பக்கத்து நாடாகிய இலங்கையின் அரசியல் நிலை எப்படி இருந்தது என்பதைப் பார்ப்போம். இலங்கையிலும் நிலைத்த ஆட்சியில்லாமல் அரசியல் குழப்பங்களும் கலகங்களும் இருந்தன.

தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் நெடுங்காலமாக அரசியல் தொடர்பும் வாணிகத் தொடர்பும் சமயத் தொடர்பும் இருந்து வந்தன. ஏறத்தாழ கி.மு.5-ம் நூற்றாண்டிலிருந்து, இலங்கை - தமிழ்நாடு உறவு இருந்தது. களப்பிரர் காலத்திலும் இரு நாடுகளுக்கும் தொடர்பு இருந்தது. அந்தத் தொடர்பைச் சுருக்கமாகக் கூறுவோம். களப்பிர அரசர்களைப் பற்றின வரலாற்றுச் செய்திகள் வரன்முறையாகத் தெரியவில்லையானாலும் அக்காலத்து இலங்கையரசருடைய வரலாறு வரன்முறையாகவும் தொடர்ச்சியாகவும் தெரிகின்றது. சூலவம்சம் என்னும் நூலிலே இலங்கை வரலாறு தெரிகின்றது. பாண்டிய நாட்டைக் களப்பிர அரசர் ஆண்ட காலத்திலே, பாண்டிய அரச குலத்தார் இலங்கையைக் கைப்பற்றிச் சிலகாலம் அரசாண்ட செய்தியை இலங்கை வரலாற்றிலிருந்து அறிகிறோம். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இலங்கையை யரசாண்ட அரசர்களைக் கூறுவோம். இந்த அரசர்கள் ஆண்ட காலத்தை 'இலங்கை வரலாற்றுச் சுருக்கம், என்னும் நூலிலிருந்து எடுத்துள்ளோம்.[1]

திஸ்ஸன்

திஸ்ஸன் என்னும் இவன் ஸ்ரீதாசனுடைய மகன். இவன் விவகாரம் (சட்டம்) அறிந்தவனாகையால் ஓகாரிசு திஸ்ஸன் என்று பெயர் பெற்றான். இவன் இருபத்திரண்டு ஆண்டுகள் அரசாண்டான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் இலங்கையில் மகாயான பௌத்த மதம் நுழையத் தொடங்கிற்று. இலங்கையின் பழைய தேரவாதப் பௌத்தறதுக்கு மாறானது மகாயான பௌத்த மதம். தேரவாதப் பௌத்தத்துக்கு இடையூறாக இருந்த மகாயான பௌத்தம் இலங்கையில் நுழைத்தபோது, ஒகாரிக திஸ்ஸன் தன்னுடைய அமைச்சனான கபிலன் என்பவனைக் கொண்டு மகாயானத்தை அடக்கிக் தேரவாதப் பௌத்தத்தை நிலைக்கச் செய்தான்.

அபயநாகன்

இவன் ஓகாரிக திஸ்ஸனுடைய தம்பி. இவனுக்கும் இராணிக்கும் கூடா ஒழுக்கம் இருந்தது. இது கண்டறியப்பட்டபோது இவன் தமிழ்நாட்டுக்கு ஓடிவிட்டான். தமிழ் நாட்டில் எங்குத் தங்கினான் என்பது தெரியவில்லை. ஆனால் களப்பிர அரசனுடைய ஆதரவில் தங்கியிருந்தான் என்று கருதலாம். தமிழ் நாட்டில் தங்கியிருந்த இவன் சில காலத்துக்குப் பிறகு பெரிய சேனையை அழைத்துக் கொண்டு இலங்கைக்குப் போய் அண்ணனாகிய அரசனோடு போர் செய்தான். ஓகாரிக திஸ்ஸன் தன்னுடைய இராணியுடன் இலங்கையின் மத்தியில் உள்ள மலைநாட்டுக்கு ஓடினான். அபய நாகன் அவனைத் தொடர்ந்து சென்று போர் செய்து ஓகாரிக திஸ்ஸனைக் கொன்று அவனுடைய இராணியைக் கைப்பற்றிக் கொண்டுவந்து அவளை இராணியாக்கி அரசாண்டான். இவன் எட்டு ஆண்டுகள் அரசாண்டான்.

ஸ்ரீ நாகன் II

இவன் ஓகாரிக திஸ்ஸனுடைய மகன். இவனை இரண்டாம் ஸ்ரீநாகன் என்றும் கூறுவர். அப்யநாகன் இறந்த பிறகு ஸ்ரீநாகன் இலங்கையை இரண்டு ஆண்டுகள் அரசாண்டான்.

விஜயகுமரன்

ஸ்ரீநாகனுக்குப் பிறகு அவனுடைய மகனான விஜயகுமாரன் அரசனானான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் சங்க திஸ்ஸன், சங்கபோதி, கோதாபயன் என்னும் மூன்றுபேர் வந்து அரசாங்க ஊழியராக அமர்ந்தார்கள். இவர்கள் அரசகுலமல்லாத இலம்பகள்னர்.

ஸ்ரீகங்க போதி (கி.பி.252-254)

இவனுடைய ஆட்சியின் இரண்டாம் ஆண்டில், இவனுக்கு அமைச்சனாகவும் பொக்கிஷதாரனுமாக இருந்த கோதாபயன் என்னும் இலம்ப கன்னன், நாட்டில் இவனுக்கு எதிராகக் கலகஞ் செய்தான். நாட்டிலே கலகமும் குழப்பமும் ஏற்பட்டன. கோதாபயன் சேனையோடு வந்து இவன்மேல் போர்தொடுத்தான். அரசளான ஸ்ரீசங்கபோதி இவனோடு போர் செய்யாமல் ஓடினான். ஓடிய இவனைப் பிடித்து ஒரு சேனைத் தலைவன் இவன் தலையை வெட்டிக் கோதாபயனிடம் அனுப்பினான். கோதாபயன் அதைத் தக்க முறையில் அடக்கஞ் செய்துவிட்டு, மேகவண்ணாபயன் என்று பெயர் சூட்டிக் கொண்டு அரசனானான்.

மேகவண்ணாபயன் (கி.பி. 254-267)

கோதாபயன், மேகவண்ணாபயன் என்று பட்டப்பெயர் கொண்டு பதின்மூன்று ஆண்டுகள் அரசாண்டான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் இலங்கையில் பேதுமல்லியமதம் (மகாயான பௌத்தம்) பரவத் தொடங்கிற்று, பழைய தேரவாதப் பௌத்தத்துக்கு மாறுபட்டதான வேதுல்லியமத்தை நீக்கி இவ்வரசன் பழைய தேரவாத பௌத்தத்தை நிலைநிறுத்தினான். மகாயான பௌத்தத்தைச் சார்ந்த பௌத்தப்பிக்குகளை இவ்வரசன் நாடு கடத்தினான். நாடுகடத்தப்பட்ட பிக்குகள் தமிழ் நாட்டுக்கு வந்து சோழ நாட்டில் தங்கினார்கள். அக்காலத்தில் சோழ நாட்டில் மகாயாளப் பௌத்தத் தலைவராக இருந்த சங்க மித்திரன் என்னும் தமிழப் பிக்கு, நாடுகடத்தப்பட்டு வந்த சிங்கள நாட்டுப் பிக்குகள் கூறியதைக் கேட்டுத்தான் இலங்கைக்குப் போய் தன்னுடைய மகாயான பௌத்தத்தை அங்கு நிலை நிறுத்த எண்ணினார். ஆகவே சங்கமித்திரர் இலங்கைக்குப் போய் மேகவண்ணாபய அரசனுடைய சபையில் தேரவாத பௌத்தர்களோடு சமயவாதஞ்செய்து வென்றார். மேகவண்ணாபயன் வெற்றிபெற்ற சங்கமித்திரரை ஆதரித்தான். தன்னுடைய மக்களான ஜேட்டதிஸ்ஸன், மகாசேனன் என்பவர்களைச் சங்கமித்திரரிடத்தில் கல்வி கற்க விட்டான். மேகவண்ணா பயன் காலமான பிறகு அவன் மகனான ஜேட்டதிஸ்ஸன் அரசனானான்.

ஜேட்டதிஸ்ஸன் (கி.பி. 267-277)

இவன் மேகவண்ணாபயனுடைய மூத்தமகன். இவன் பத்து ஆண்டுகள் அரசாண்டான். இவன் சங்கமித்திரரிடம் கல்வி பயின்ற மாணவன். ஆனால், அவரிடத்தில் இவன் பகை கொண்டிருந்தான். ஆகையால் சங்கமித்திரர் இவன் காலத்தில் இலங்கையிலிருந்து சோழநாட்டுக்கு வந்துவிட்டார்.

மகாசேனன் (கி.பி. 277-304)

ஜேட்டதிஸ்ஸனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான மகாசேனன் அரசனானான். இவன் அரசனாவதையறிந்த இவனுடைய குருவாகிய சங்கமித்திரர் சோழநாட்டிலிருந்து இங்குவந்து தம்முடைய கையினாலே இவனுக்கு முடி சூட்டினார். இவ்வரசனுடைய ஆதரவைப் பெற்ற இவர், மகாயான பௌத்த மதத்தை இலங்கையில் பரவச் செய்தார். இலங்கையில் தேரவாத (ஈனயான) மகாயானச் சமயப்பூசல்கள் ஏற்பட்டன. மகாசேனன் இலங்கையில் அக்காலத்தில் இருந்த பேர் போன சிவன் கோயில்களை இடித்து அழித்தான்.

ஸ்ரீமேகவண்ணன் (கி.பி. 304-332)

இவன் இலங்கையின் பழைய தேரவாதப் பௌத்தத்தை ஆதரித்தான். பல பரிவேணைகளையும் லிகாரைகளையும் கட்டினான். இவனுடைய ஒன்பதாம் ஆட்சியாண்டில் கலிங்க நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தருடைய பல் தாதுவை அநுராத புரத்தில் வைத்துச் சிறப்புச் செய்தான். வட இந்தியாவை இவன் காலத்தில் ஆட்சி செய்தவன் சந்திரகுப்தன் (கி.பி.345-380). ஸ்ரீமேகவண்ணன், சந்திரகுப்த அரசனிடத்தில் இரண்டு பௌத்தப் பிக்குகளைத் தூது அனுப்பி, புத்தகயாவுக்கு யாத்திரை போகிற இலங்கைப் பௌத்தப் பிக்குகளுக்குப் பாதுகாப்புக் கொடுத்து ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டான். இவன் இருபத்தெட்டு ஆண்டு ஆட்சி செய்தான்.[2] இவனுடைய கல்வெட்டுச் சாசனங்கள் இலங்கையில் கிடைத்துள்ளன. அந்தச் சாசனங்களில் இவ்வரசன் கிரி மேகவண்ண என்றும் கிரி மேகவன் என்றும் கூறப்படுகிறான்.

ஜேட்டதிஸ்ஸன் II (கி.பி. 332-341)

ஜேட்டதிஸ்ஸன், ஸ்ரீமேகவண்ணனுடைய தம்பி, இவன் யானைத் தந்தத்தில் அழகான உருவங்களையும் கலைப்பொருள்களையும் செய்வதில் வல்லவன். அந்தத் தொழிலைப் பலருக்கும் கற்பித்தான். இவன் இலங்கையை ஒன்பது ஆண்டுகள் அரசாண்டான்.[3]

புத்ததாசன் (கி.பி.341-370)

இவன் ஜேட்டதிஸ்ஸனுடைய மகன். மருத்துவக் கலையில் வல்லவனான இவன் மனிதரின் நோயைத் தீர்த்ததுமல்லாமல் ஒரு பாம்பின் நோயையும் தீர்த்தானாம். நாட்டில் ஆங்காங்கே மருத்துவர்களை நியமித்து நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ய ஏற்பாடு செய்தான். மருத்துவருக்கு மருத்துவ விருத்தி நிலங்களைக் கொடுத்தான். யானை குதிரைகளின் நோய்களையும் போரில் புண்பட்ட வீரர்களின் நோயையும் போக்க வைத்தியர்களை நியமித்தான்.

இவ்வரசன் காலத்தில் மகாதம்ம கீர்த்தி என்னும் பிக்கு பௌத்த சூத்திரங்களைச் சிங்கள மொழியில் பெயர்த்தெழுதினார். இவ்வரசனுக்கு எண்பது மக்கள் இருந்தார்களாம். ப-ஹியன் என்னும் சீன யாத்திரிகர் இவ்வரசன் காலத்தில் இலங்கைக்கு வந்து தங்கினார். ப-ஹியன் இலங்கையில் கி.பி. 411-12-ம் ஆண்டு தங்கினார் என்று அறியப்படுகிறது. புத்ததாச அரசன் இருபத்தொன்பது ஆண்டுகள் அரசாண்டான்.[4]

உபதிஸ்ஸன் (கி.பி.370-412)

புத்ததாசன் காலமான பிறகு அவனுடைய மூத்த மகனான உபதிஸ்ஸன் இலங்கையை யரசாண்டான். இவனை இரண்டாம் உபதிஸ்ஸன் என்பர். பௌத்தப் பள்ளிகளுக்கும் பௌத்தப் பிக்குகளுக்கும் இவன் தான தருமங்களைச் செய்தான். அங்கு ஊனம் உள்ளவர்க்கும் குருடர் தோயாளிகளுக்கும் மருத்துவமனைகளை அமைத்தான். இவன் 18 ஆண்டுகள் அரசாண்டான். இவனுடைய இராணி, இவனுடைய தம்பியான மகாநாமன் என்பவளோடு கூடா வொழுக்கங் கொண்டிருந்தாள். மகாநாமன் பௌத்த பள்ளியில் சேர்த்து பௌத்த பிக்குவாகத் துறவு கொள்ள இருந்தான். அவன் புத்தப் பள்ளியில் பப்பஜா என்னும் நிலையில் இருந்தாள். பப்பஜா என்பது துறவு பூணுவதற்கு முந்திய புகுநிலை. (முழுத்துறவு கொள்வதற்கு உபசம்பதா என்பது பெயர்) மகாநாமனோடு கூடாவொழுக்கங் கொண்டிருந்த இராணி அரசனைக் (உபதிஸ்ஸனை) குத்திக் கொன்று விட்டாள். இதையறிந்த பௌத்தப் பள்ளியில் இருந்த மகாதாமன் அரண்மனைக்கு வந்து அரசாட்சியைக் கைக்கொண்டான். [5]

மகாநாமன் (கி.பி. 412-434)

உபதிஸ்ஸனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான மகாநாமன் அரசனானான். இவன் தன்னுடைய அண்ணுடைய இராணியைத் தன்னுடைய பட்ட மகிஷியாக்கிக் கொண்டான். இவர்களுக்கு ஆண் மக்கள் இல்லை. ஒரே ஒரு பெண்மகள் சங்கா என்பவள் இருந்தாள். மகாநாமனுக்கு இன்னொரு மனைவி இருந்தாள். அவன் தமிழ் குலத்தைச் சேர்த்தவள். ஆகவே அவள் தமிழமகிஷி என்று கூறப்பட்டாள். அந்தத் தமிழ் இராணிக்கு சொத்திசேனன் என்னும் ஒரு மகன் இருந்தான்.

மகாநாமனுடைய ஆட்சிக்காலத்தில் புத்த கோஷர் என்னும் பெயருள்ள பேர் போன பௌத்தப்பிக்கு இலங்கைக்கு வந்தார். அவர் இலங்கைக்கு வருவதற்கு முன்பு ஆந்திர நாட்டிலும் பிறகு தமிழ் நாட்டிலும் இருத்தார். தமிழ்நாட்டுப் பௌத்த விகாரைகளில் தங்கியிருந்தபோது அவர் சில பௌத்த நூல்களைப் பாலிமொழியில் எழுதினார். காஞ்சிபுரத்துப் பௌத்தப் பள்ளியில் தங்கியிருந்தபோது, அப்பள்ளியில் இருந்த சுமதி, ஜோதிபாலர் என்னும் தமிழப்பிக்குகள் புத்தகோஷரை இலங்கைக்குப் போய் அங்குச் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த பௌத்தமத உரை நூல்களைக் கற்கும்படித் தூண்டினார்கள், புத்தகோஷர், மகாதாமன் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு வந்து தங்கி பௌத்த விகாரைகளில் இருந்த சிங்கள உரை நூல்களைக் கற்றார். இலங்கையில் மகாவிகாரையில் இருந்த பௌத்த சங்கத்தலைவரான சங்கபாலர் என்னும் மகாதேரர் புத்தகோஷருக்குச் சிங்கள மொழியில் இருந்த திருபிடக உரைகளைக் கூறினார். அவற்றையறிந்த பிறகு புத்தகோஷர் விசுத்தி மக்கம் முதலான நூல்களைப் பாலி மொழியில் எழுதினார். புத்தகோஷர் சோழநாட்டில் இருந்த பேர்போன ஆசாரிய புத்ததத்ததேரர் என்னும், தமிழ்ப்பிக்குவின் சமகாலத்தவர். புத்தகோஷர் தம்முடைய நூலில், சோழ நாட்டயைரசாண்ட அச்சுதவிக்கந்தன் என்னும் களப்பிர அரசரைக் குறிப்பிடுகிறார்.

மகாதாமன் இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு காலமானான்.[6]

சொத்திசேனன் (கி.பி.434)

மகாநாமன் இறந்த பிறகு அவனுடைய ஒரே மகனான சொத்திசேனன் இலங்கையின் அரசனானான். இவன் மகாசேன்னுக்கும் அவனுடைய தமிழமகிஷிக்கும் பிறந்த மகன். சொத்திசேனன் முடிசூடின அதே நாளில் அவனுடைய மாற்றாந்தாயின் மகளான சங்கா என்பவளால் கொலை செய்யப்பட்டிருந்தான். சங்காவின் தாய் சிங்களவள். அவள் தன்னுடைய முதல் கணவனான உபதிஸ்ஸனைக் கொன்று அரசாட்சியைத் தன்னுடைய காதலனான மகாதாகலுக்குக் கொடுத்ததையறிந்தோம். அவளுடைய மகளான சங்காவும் தன் தாயைப் போலவே, கொலைக்கு அஞ்சாதவளாய்க் தன்னுடைய தம்பியான தமிழ சொத்திசேனனைக் கொன்று விட்டாள்.


  1. A Short History of Calyan, H.W.Codirington, 1929.
  2. சூலவம்ச ம் 3-ம் பரிச்சேதம் 51-99, Culavamaa Part I Translated by Wirein Geiger. 1929
  3. Ibis 100-104
  4. Ibid 105-178
  5. Ibid 179-210)
  6. Ibid 210-247