களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/களப்பிரர் யார்?

களப்பிரர் யார்?

களப்ரர், களப்பரர், களப்பிரர், களப்பாளர், களப்பாழர் என்றெல்லாம் கூறப்படுகிற இவர்களைக் களப்பிரர் என்று கூறுவோம். களப்பிரர் தமிழர் அல்லர். ஆனால், அவர்கள் ஆரியரோ என்றால் ஆரியரும் அல்லர். அவர்கள் வட இந்தியாவில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்தவர் என்று திரு. சதாசிவ பண்டாரத்தார் கருதுகிறார் ".......அன்னோர் (களப்பிரர்) பிராகிருதம், பாலி ஆகியவற்றைத் தமக்குரிய மொழிகளாகக் கொண்டு ஆதரித்துள்ளமையால் அம்மரபினர் தமிழர் அல்லர் என்பதும் வடபுலத்தினின்றும் போந்த ஏதிலர் ஆவர் என்பதும் நன்கு தெரியப்படும்," என்று அவர் எழுதுகிறார்.[1] களப்பிரர் சைன மதத்தையும் பௌத்த மதத்தையும் ஆதரித்தனர். இந்த மதங்களின் 'தெய்வ பாஷை' பிராகிருதம் (சூரசேனீயும் பாலிமொழியும்) ஆகையால், இயற்கையாகவே இந்தப் பிராகிருத மொழிகளுக்கு ஆக்கம் ஏற்பட்டது. ஆனால் அவர்களுடைய தாய்மொழி பிராகிருதம் அன்று, கன்னட மொழியே. களப்பிரர் வட இந்தியாவிலிருந்து வந்தவர் அல்லர். அவர்கள் தமிழகத்துக்கு அண்மையில் இருந்த கன்னட வடுகர். எனவே அவர்கள் திராவிட இனத்தவரே.

களப்பிரரைப் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் அவர்களைப் பற்றித் தங்கள் தங்கள் கருத்துக்களை எழுதியுள்ளனர். பழந்தமிழகத்தின் வடக்கில் இருந்த வேங்கட தாட்டை அரசாண்ட சிற்றரசர் புல்லி என்று கூறப்படுகின்றனர். 'கள்வர் கோமான் புல்லி' என்று அவர்கள் கூறப்படுகிறார்கள்.[2] கள்வர் என்பதைக் களவர் என்றும் படிக்கலாம். பழைய ஏட்டுச் சுவடிகளில் புள்ளியிட வேண்டிய எழுத்துக்களுக்குப் புள்ளி இடாமலே எழுதும் வழக்கம் இருந்தது. ஆகவே, இந்தச்சொல் களவர் என்பதா கள்வர் என்பதா என்பதை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. இந்தச் சொல்லைக் களவர் என்று கொண்டு திரு. மு. இராகவையங்கார் களவர் என்பது களப்பிரரைக் குறிக்கிறது என்று எழுதினார்.[3] டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்காரும் இதே கருத்தைக் கூறியுள்ளார். வேங்கட நாட்டையாண்ட களவர் அல்லது கள்வர்தான் (புல்லி அரசர்) களப்பிரர் என்று இவர் கூறுகிறார்.[4] இந்த அறிஞர்கள் கூறுவது ஏற்கத் தக்கது அன்று. வேங்கட நாட்டிலிருந்த களவர் அல்லது கள்வர் என்பவர் தமிழர். களப்பிரரோ தமிழர் அல்லாத கன்னடர். மற்றும், சங்ககாலத்து வேங்கட நாடு தொண்டை மண்டலத்தைச் சேர்ந்து தமிழகத்தின் பகுதியாக இருந்தது. ஆகவே தமிழராகிய கள்வர் (களவர்) வேறு. கன்னடராகிய களப்பிரராக இவர்கள் இருக்க முடியாது. கள்வர் (களவர்) வேறு, களப்பிரர் வேறு.

பல்லவ அரசர் ஆண்ட தொண்டைமண்டலம் தவிர, சோழ பாண்டிய சேரநாடுகளைக் கைப்பற்றியரசாண்ட களப்பிரர் கருநாட நாட்டுக் கன்னடர் என்பதில் ஐயமில்லை. பாண்டி நாட்டில் இருந்த மூர்த்திநாயனார் காலத்தில் பாண்டி நாட்டை யரசாண்ட மன்னன் கன்னட நாட்டு அரசன் என்று சேக்கிழார் கூறுகிறார். "கானக்கடி சூழ் வடுகக் கருநாடர் மன்னன்" என்று அவர் கூறுகிறார்.[5] 'வடுகக் கருநாடர் மன்னன்' என்பதன் பொருள் வடுக நாடாகிய கன்னட நாட்டைச் சேர்ந்த அரசன் என்பது. பிற்காலத்து நூலாகிய கல்லாடம் 'மதுரை வவ்விய கருநடர் வேந்தன்' என்று கூறுகிறது.[6] கன்னட நாட்டை அக்காலத்தில் ஒரே அரசன் ஆட்சி செய்யவில்லை. வெவ்வேறு பகுதிகளை வேவ்வேறு அரசர் ஆண்டனர். கருநாடர் மன்னன், கன்னட நாட்டில் எந்த ஊரை யரசாண்டவன் என்பதைப் பெரியபுராணமும் கல்லாடமும் கூறவில்லை. அவர்கள் கன்னட தேசத்தில் களபப்பு என்னும் நாட்டையாண்ட சிற்றரசர் என்பது கன்னட நாட்டுக் கல்வெட்டுகளிலிருந்தும் கன்னட நூலிலிருந்தும் தெரிகிறது. சந்திரகுப்த மௌரியன் (அசோகர் சக்கரவர்த்தியின் பாட்டன்) அரசாட்சியை துறந்து சைன சமயத்தைச் சார்ந்து பத்திரபாகு முனிவருடனும் அவரைச் சார்ந்த சமண சமயத் துறவிகளுடனும் தென்னாட்டுக்கு வந்து களபப்பு நாட்டில் உள்ள களபப்பு மலையில் தங்கினார்கள் என்று சமண சமய நூலாகிய 'வட்டாராதனெ' என்றும் நூல் கூறுகிறது.[7] அவர்கள் கழ்ப்பு நாட்டுக்கு வந்தார்கள் என்று இந்நூல் கூறுகிறது." கழ்பப்பு என்பதும் களபப்பு என்பதும் ஒன்றே. கழ்பப்பு (களபப்பு) என்பதைச் சமஸ்கிருதத்தில் 'கடவப்ர' என்று கூறினார்கள். இப்போதைய சிரவண பௌகொள என்னும் பிரதேசமே பழங்காலத்தில் கள்பப்பு நாடு என்று பெயர் பெற்றிருந்தது.[8] களபப்பு நாட்டில் உள்ள சந்திரகிரி மலையின் பழைய பெயர் களபப்பு பெட்ட (பெட்ட - மலை) என்று கூறப்பட்டது.[9]

ஹொஸகோட்ட தாலுகாவில் கிடைத்துள்ள பழைய வீரகல் சாசனம் கன்னடமொழியில் பழைய கன்னட எழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இதில் களப்பிர இராச்சியம் கூறப்படுகிறது. இதன் வாசகம் இது: 'ஸ்வஸ்திஸ்ரீ மதுரானக் கள்வர திருராஜ்யதல் மள்ளே கவுண்டரும் சாவா காவுண்டுரு துயீநாத பல்கனிளலுதுவ காமூண்ட ஸத்த எர்ரதயக் கர்ளனபூழ்திகம்.[10] இதனால், களபப்பு நாடு களவர இராச்சியம் என்பது மைசூர் தேசத்தில் இப்போது சிரவண பௌகொள என்று கூறப்படுகிற வட்டாரத்தைச் சேர்ந்திருந்தது என்பது தெரிகிறது. களவர் நாடு, களப்பிரர் நாடு என்னும் பெயர்கள் வேறு சாசனங்களிலும் கூறப்படுகின்றன.[11] திருத்தொண்டர் புராணம் கூறுகிற 'வடுகக் கருநாடர் மன்னன்' இந்தக் களபப்பு நாட்டைச் சேர்ந்தவன் என்று கருதலாம்.

கருநாடதேசத்தில் இருந்த களப்பிரரின் களப்பு இராச்சியம் மைசூர் நாட்டைச் சேர்ந்த கோலார் (கோலாலபுரம்) வரையிலும் பரவியிருந்தது. கோலாலபுரத்திலுள்ள நந்திமலை களப்பிரரின் மலை என்று கூறப்படுகிறது.[12] பழைய தமிழ்ச் செய்யுட்கள், தமிழகத்தை யாண்ட களப்பிரரை நந்தி என்றும் தந்திமலையையுடையவர் என்றும் கூறுகின்றன: "நந்தி மால்வரைச் சிலம்பு நந்தி," "புகழ்துறை நிறைந்த பொருவேல் நந்தி."

கன்னட நாட்டுக் களபப்பு இராச்சியத்தை யாண்ட களப்பிரர் எப்பொழுதும் சுதந்தரராக இருக்கவில்லை. அவர்கள் கடம்பர், கங்கர் போன்ற வேறு அரார்களுக்கு வெவ்வேறு காலத்தில் அடங்கி யிருந்தனர் என்பது தெரிகிறது. கடம்ப அரசனான சாகுஸ்தன் (கி.பி. 425-450) களபோரருக்குப் (களப்பிரர்) பகைவன் என்று பேலூர்தாலுகாவில் ஹல்மிடி என்னும் ஊரிலுள்ள கல்வெட்டு எழுத்துக் கூறுகிறது.[13] களபப்பு நாட்டின் அரசனான திண்டிகன் என்பவன், மேலைக்கங்க அரசனான ஸ்ரீபுருஷனுடைய அனுமதி பெற்று ஒருதானத்தைக் கொடுத்தான் என்று ஒரு சாசனம் கூறுகிறது.[14] இதிலிருந்து களடப்பு அரசர் சில காலம் கங்க அரசருக்குக் கீழடங்கியிருந்தனர் என்பது தெரிகிறது.

மேற்கூறிய சான்றுகளினாலே கன்னட நாட்டவராகிய களப்பிர அரசர் அங்கு ஒரு பகுதியான களப்பிர நாட்டையரசாண்டனர் என்பது தெரிகிறது. அவர்கள் ஏழத்தாழ கி.பி.250-ல் அல்லது அதற்குச் சற்றுப் பின்னர் தமிழகத்தைக் கைப்பற்றிச் சேரசோழபாண்டிய நாட்டையரசாண்டனர் என்று கருதலாம்.


  1. பாண்டியர் வரலாறு 1909, பக்.32 8.
  2. அகதாறாறு 6:11 13
  3. Journal of Indian History, Vol VIII.
  4. pp. 223-13. The age of Imperial unity, Vol III, Bharatiya Vidya Bhavan 1961.
  5. திருத்தொண்டர் புராணம், மூர்த்தி நாயனார் புராணம்: 11, 24.
  6. கல்லாடம் செய்யுள் 56
  7. வட்டார தனெ; பத்ராபஹூபட்டாரா கதெ
  8. பக்கம் 10; 78 கன்னட ஸாசகௗஸாம்ஸாகிருதிக அத்யயன, கி.பி.430-1150 டாக்டர் எம். சிதானந்த மூர்த்தி 1966
  9. பக். 13,14, கர்நாடக இதி ஹாஸ தர்ஸன (கன்னட தேசத்தின் வரலாறு) டாக்டர் எம்.வி.கிருஷ்னராவ், எம் கேசவபட்ட, 1970.
  10. Epi.Car. Val IX, Haskipta 13, p. 188.
  11. Epi Car Vol X, Chinlamgari, 9.
  12. Epi, Car, Vol X, Chickbalpur: 9
  13. Mysore Archasclogical Report 1936 NO 16
  14. Myscre Arch. Rep. 1927, No.118