களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/களப்பிர அரசர்கள்

சில களப்பிர அரசர்கள்

களப்பிரர் முன்னூறு ஆண்டுகள் அரசாண்டார்கள். அவர்களுடைய ஆட்சிமுறை எப்படி இருந்தது, அவர்களுடைய ஆட்சி செங்கோல் ஆட்சியாக இருந்ததா, அடக்கி அரசாண்டார்களா என்பது தெரியவில்லை அவர்கள் எத்தனைபேர் அரசாண்டார்கள், அவர்களுடைய பெயர் என்ன என்னும் வரன்முறையான சரித்திரம் கிடைக்கவில்லை. சங்க காலத்துச் சேர, சோழ, பாண்டியர் வரலாறே வரன்முறையாகக் கிடைக்காத போது அன்னியராகிய களப்பிரரைப் பற்றின வரன்முறையான வரலாறு எப்படிக் கிடைக்கும்? முன்னூறு ஆண்டு ஆட்சிக்காலத்தில் அவர்கள் எழுதிவைத்த செப்பேடுகளோ கல்வெட்டுகளோ இதுவரையில் ஒன்றேனும் கிடைக்கவில்லை. அவர்கள் வழங்கின காசு - அவர்கள் காசுகளை வெளியிட்டிருந்தால். ஒன்றேனும் கிடைக்கவில்லை. அக்காலத்தில் வரலாறு எழுதும் வழக்கமும் இல்லை. அவர்கள் கட்டின கோயில் கட்டடங்களோ சிற்பங்களோ எதுவும் காணப்படவில்லை. ஆகவே அவர்களுடைய வரலாற்றையறிவதற்கு யாதொரு சான்றும் கிடைக்க வில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு இலக்கியச் சான்றுகள் மட்டுங்கிடைக்கின்றன. அவ்வளவுதான்.

களப்பிரரின் போர்க்கள வெற்றியைப் பழைய வெண்பா ஒன்று கூறுகிறது. மிகத் தொன்மை வாய்ந்த அந்த வெண்பா கி.பி. 10-ம் நூற்றாண்டு நூலாகிய யாப்பருங்கலம் என்னும் யாப்பிலக்கண நூலின் விருத்தியுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

படுபருந்தும் சூர்ப்பேயும் பல்லிலங்கும் நாயும்
கொடியும் கழுகுமிவை கூடி -வடிவுடைய
கோமான் களப்பாளன் கொல்யானை போமாறு
போமாறு போமாறு போம்

என்பது அந்தப்பாடல். களப்பாள (களப்பிர) அரசனுடைய யானை சேனைகள் போர்க்களத்துக்குப் போகும்போது, பேய்களும், நரி, ஓநாய், நாய், பருந்து, கழுகு முதலான பிணந்தின்னிப் பிராணிகளுக்கு அந்தச் சேனையோடு போயின என்று இச்செய்யுள் கூறுகிறது. அதாவது போர்க்களத்தில் போர்வீரர்களும் யானை, குதிரைகளும் செத்து மடியுமாகையால் இந்தப் பிணத்தின்னிப் பிராணிகளும் இறைச்சி விருந்து கிடைத்தது என்பது இதன் கருத்து. களப்பாயா அரசன் மற்ற அரசர்களோடு போர்செய்து வெற்றி பெற்றான் என்பது இதன் திரண்ட பொருள்.

மற்றும் நான்கு பழைய வெண்பாக்களை யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோள் காட்டுகிறது. அந்தப் பழைய வெண்பாக்கள், களப்பிர அரசன் சேர, சோழ, பாண்டியரை வென்று அவர்களைச் சிறையிலிட்டுத் தளை (விலங்கு ) இட்டபோது அந்த மூவரசர்களால் பாடப்பட்டவை. யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோள் காட்டுகிற அந்தப் பழம் பாடல்கள், பிற்காலத்தில் தனிப்பாடற்திரட்டு, புலவர் புராணம் முதலான நூல்களிலும் சேர்க்கப்பட்டுள்ளன. அப்பழம் பாடல்கள் இவை:

சேர மன்னன் பாடியது:

தினை விதைத்தார் முற்றந் தினை யுணங்கும், செந்நெல்
தனை விளைத்தார் முற்ற மதுதானாம் - கனைசீர்

முரகணங்கும் சங்குணங்கும் மூரித்தேர்த் தானை அரசுணங்கும் அச்சுதன்தன் முற்றத்து

சோழ அரசன் பாடியது:

அரசர்குல திலகன் அச்சுதன் முற்றத்தில்
அரச ரவதரித்த வந்தாள்- முரசதிரக்
கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர் காற்றளையை வெட்டிவிடும் ஓசை மிகும்

பாண்டிய மன்னன் பாடியது:

குறையுளார் எங்கிரார் கூர்வே லிராமன்
நிறையறு திங்கள் இருந்தான் முறைமையால், ஆலிக்குத்தானை யலங்குதார் அச்சுத! முன்
வாலிக் கிளையான் வரை

இதைக் கேட்ட அச்சுதக் களப்பாளன் பாண்டியனுக்கு இன்னொரு தளை இட்டாள். அப்போது பாண்டியன் இன்னொரு வெண்பாவைப் பாடினான்.

குடகர் குணகடலென் றார்த்தார் குடகர்க்
கிடகர் வடகடலென் றார்த்தார்- வடகடலர்
தென்கடலென் றார்த்தார் தில்லையைச் சுதானந்தன்
முன்கடை நின்றார்க்கும் முரசு

இந்தக் களப்பிர அரசனை இப்பாடல்கள் அச்சுதன் என்று கூறுகின்றன. அச்சுதன் என்பது களப்பிர அரசர்களின் பொதுப்பெயர் என்று தோன்றுகிறது. பாலி மொழியில் எழுதப்பட்ட ஒரு பௌத்தச் செய்யுள் ஒரு களப்பிர அரசரை அச்சுதன் என்று கூறுகிறது. இன்னொரு தமிழ்ச் செய்யுள் ஒன்று இன்னொரு களப்பிர அரசனை அச்சுதன் என்று கூறுகிறது. ஆகையால் களப்பிர அரசர்கள் ஒவ்வொருவரும் அச்சுதன் என்று பெயர் கொண்டிருந்தனர் என்பது தெரிகின்றது.

சேர, சோழ, பாண்டியர் களப்பாளரைத் (களப்பிரரைத்) தமிழ்ச் செய்யுளில் பாடினபடியால், களப்பிரரும் தமிழரசரே என்று பி.டி.சீனிவாச அய்யங்கார் கூறுகிறார்.[1] இவர் கூற்றுத் தவறு. களப்பிரர் தமிழரல்லர்; கன்னடர் என்பதில் ஐயமில்லை.

யாப்பருங்கலம் என்னும் செய்யுள் இலக்கண நூலின் விருத்தியுரை யாசிரியர் தம்முடைய உரையில் நான்கு அழகான செய்யுட்களை மேற்கோள் காட்டியுள்ளார். அந்தச் செய்யுட்கள் களப்பிர அரசரைப் பற்றியவை. (இணைப்பு 1 காண்க) அச்செய்யுட்களில் 'கெடலரு மாமுனிவர்' என்று தொடங்குகிற செய்யுள் அச்சுதன் என்னும் களப்பிர அரசனைக் காத்தருள வேண்டும் என்று திருமாலை வேண்டுகிறது. ('புயலுறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன், தொன்றுமுதிர் கடலுலகம் முழுதுடன் ஒன்றுபுரி திகிரி உருட்டு வோன் எனவே')

'அலைகடற் கதிர்முத்தம்' என்று தொடங்கும் இன்னொரு செய்யுள், களப்பிர அரசன் சங்கு சக்கரம் ஏந்திய திருமாலை வழிபட்டு அவன் அருளினால் பெரிய நிலத்தை ஆளும் பேறுபெற்றான் என்றும் அந்த அரசனை அருகக் கடவுள் காத்தருள வேண்டும் என்றும் வேண்டுகிறது. 'அகலிடமும் அமருலகும்' என்று தொடங்குகிற இன்னொரு செய்யுள் ஒரு களப்பிர அரசனுடைய ஆற்றல், கொற்றம், வீரம் முதலியவற்றைப் புகழ்கிறது. அதில் அந்தக் களப்பிர அரசன் 'அச்சுதர்கோ' என்று கூறப்படுகிறான். அதாவது அச்சுத குலத்தில் பிறந்த அரசன் என்று கூறப்படுகிறான்.

'நலங்கிளர் திருமணியும்' என்று தொடங்குகிற இன்னொரு செய்யுள், செங்கோல் விண்ணவன் (விண்ணன் - விஷ்ணு) என்றும் களப்பிர அரசனுடைய ஆட்சி ஓங்கவேண்டும் என்றும் அருகக் கடவுளை வேண்டுகிறது. விண்ணவன் (விண்ணு - விஷ்ணு) என்று பெயர் பெற்றிருப்பதனால் இவ்வரசன் வைணவ சமயத்தவன் என்று தெரிகிறான். சேர, சோழ, பாண்டியர் களப்பிர அரசனைப்பாடிய பாடல்களில் களப்பிரன் அச்சுதன் என்று கூறப்பட்டதை முன்னமே கண்டோம்.

கி.பி. 5-ம் நூற்றாண்டின் முற்பாதியில் வாழ்ந்திருந்த ஆசாரிய புத்ததத்ததேரர் சோழ நாட்டுத் தமிழர். அவர் பேர் போன பௌத்தப் பெரியார், அவர் பாலி மொழியில் புத்தவம் சாட்டசுதா, அபிதம்மாவதாரம், வினய வினிச்சயம், உத்தரவினிச்சயம், ரூபாரூபலிபாகம், ஜினாலங்காரம் முதலான நூல்களை எழுதியுள்ளார். சோழ நாட்டுப் பூதமங்கலம் என்றும் ஊரில் வேணுதாசர் கட்டின பௌத்த விகாரையில் இவர் தங்கியிருந்த போது வினயவினிச்சயம் என்னும் நூலை களம்ப (களப்ர) அரசன் காலத்தில் இவர் எழுதி முடித்ததாக இவர் அந்த நூலில் கூறியுள்ளார்.[2]

பஸாத ஜனனே ரம்மே பாஸாதே வஸதா மயா புத்தஸ்ஸ புத்தஸீஹேன வினயஸ்ஸ வனிச்சயோ
புத்தஸீஹம் ஸமுத்திஸ்ஸ மம ஸத்தி விஹாரிம்
கதோயம் பன பிக்கூனம் ஹிதத்தாய ஸமாஸதோ வியைஸ்ஸாவ பொத்தந்தம் ஸுகேனே வாசிரேன ச அச்சுதச்சுத விக்கந்தே களப்ப குலநத்தனே
மஹிம் ஸமனு ஸாலத்தே ஆரத்தோ ச ஸமாபிதோ

இதில் அச்சுத விக்கத்தன் களப்ப (களப்பிர) குலத்தில் பிறந்தவன் என்று கூறப்படுகிறான்.

இந்தச் சான்றுகளினாலே களப்பிர அரசர் வைணவர் என்றும் வைணவப் பெரியராகிய அச்சுதன் என்னும் சிறப்புப் பெயரைக் கொண்டிருந்தார்கள் என்பதும் தெரிகின்றன. . களப்பிர அரசர் தொண்டை நாட்டைத்தவிர சேர, சோழ, பாண்டிய நாடுகளை வென்று அரசாண்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. இவர்கள் சேர, சோழ, பாண்டியரின் கொடிகளைத்தங்களுடைய கொடிகளாகக் கொண்டிருந்தனர் என்பதைக் 'கெடலருமா முனிவர்' என்று தொடங்கும் செய்யுளினால் அறிகிறோம். (இணைப்பு காண்க) அந்தச் செய்யுளின் இறுதிப் பகுதி இவ்வாறு கூறுகிறது:

அடுதிறல் ஒருவ! நிற் பரவுதும், எங்கோன்
தொடுகழற் கொடும்பூண் பகட்டெழில் மார்பிற்
கயவொடு கிடந்த சிலையுடைக் கொடுவரிப்
புயலுறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன்
ஒன்றுகடல் உலகம் முழுவதும்
ஒன்றுபு திகிரி யுருட்டுவோன் எனவே

இதனால், கயல் (மீன்), சிலை (வில்), கொடுவரி (புலி) ஆகிய அடையாளங்களைக் களப்பிரர் கொண்டிருந்தனர் என்பது தெரிகின்றது. அதாவது பாண்டியனுடைய மீன் கொடியையும் சேரனுடைய வில் கொடியையும் சோழனுடைய புலிக்கொடியையும் களப்பிரர் தங்களுடைய கொடியாகக் கொண்டிருந்தார்கள் என்பது தெரிகிறது. சேர, சோழ, பாண்டியரின் அடையாளங்களைக் கொண்டிருந்தபடியால் இம்மூன்று நாடுகளையும் அவர்கள் கைப்பற்றி அரசாண்டார்கள் என்று ஐயமறத் தெரிகின்றது.

களப்பிரர் எத்தனை பேர் அரசாண்டார்கள் அவர்கள் நாட்டுக்கு என்னென்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை பாண்டி நாட்டில் மதுரையைத் தலைநகரமாக்கிக் கொண்டு களப்பிரர் அரசாண்டதை அறிகிறோம். உறையூர், காவிரிப் பூம்பட்டினங்களிலும் இருந்து சோழ நாட்டைக் களப்பிரர் அரசாண்டனர் என்பதும் தெரிகின்றது. தில்லையில் (சிதம்பரம்) இருந்தும் அரசாண்டதையறிகிறோம். சோழ நாட்டிலே களப்பாள் என்னும் ஊரில் ஒரு களப்பாளன் இருந்ததையறிகிறோம். சேர நாட்டில் எந்த ஊரில் இருந்து களப்பிரர் ஆட்சி செய்தனர் என்பது தெரியவில்லை. களப்பிரர் ஆட்சி, தொண்டை மண்டலத்தைத் தவிர ஏனைய தமிழ்நாடெங்கும் இருந்தது என்பது தெரிகிறது. களப்பிரர் தமிழ்நாட்டைக் கைப்பற்றியபோதே பல்லவ அரசர் தமிழகத்தின் வடபகுதியாகிய தொண்டை நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். ஆகவே களப்பிரர் ஆட்சி தொண்டை நாட்டில் ஏற்படவில்லை. அவர்களுடைய ஆட்சி தென் பெண்ணையாற்றுக்குத் தெற்கே சேர சோழ பாண்டிய நாடுகளில் இருந்தது.

களப்பிர அரசனுக்குக் கீழ் அவனுக்கு அடங்கிக் களப்பி குலத்து அரசர் சேர சோழ பாண்டிய நாடுகனை யரசாண்டனர் என்பது தெரிகிறது.

மூர்த்தியார்

பாண்டிய நாட்டில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் சிலகாலம் மூத்திநாயனார் என்னும் ஒரு வணிகர் அரசாண்டதைப் பெரிய புராணம் கூறுகிறது. மதுரையை ஆண்ட களப்பிர அரசன் பிள்ளைப்பேறு இல்லாமல் இறந்துபோனாள். அவன் சைவ சமயத்துக்கு இடையூறுகளைச் செய்தவன். அவன் இறந்தபோது, அமைச்சர்கள் பட்டத்து யானையின் கண்ணைத் துணியினால் கட்டி மறைத்து நகரத்தில் போகவிட்டனர். அந்த யானை யாரைத் தன் மேல் ஏற்றிக் கொண்டு வருகிறதோ அவரை அரசனாக்கி பட்டம் கட்டுவது அக்காலத்து மரபு. நகர வீதிகளில் சென்ற யானை சொக்கநாதர் ஆலையத்தருகில் நின்று கொண்டிருந்த மூத்தியாரை தன் மேல் ஏற்றிக்கொண்டு சென்றது. அமைச்சர்கள் அவருக்கு முடிசூட்டி, அரசனாக்கத் தொடங்கினார்கள். மூர்த்தியார் தமக்கு பொன்முடி வேண்டாம் என்று மறுத்துவிடார். சிவனடியார் ஆகையால், அவர் திருநீற்றையும் உருத்திராக்கத்தையும் சடை முடியையும் அளித்து பட்டங்கட்டப் பெற்றார். அதனால் அவர்'மும்மையால் உலகாண்ட மூர்த்தியார்' என்று கூறப்பட்டார். இவருடைய வரலாற்றை பெரிய புராணத்தில் காணலாம். (மூர்த்திநாயனார் புராணம்) மூர்த்தியார் எத்தனையாண்டுகள் அரசாண்டார், அவருக்குப் பிறகு களப்பிரர் ஆட்சி மீண்டும் எப்படி மதுரையில் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இது நிகழ்ந்த காலமும் தெரியவில்லை.

கூற்றனார்

சோழ நாட்டை யரசாண்ட களப்பிர அரசர்களில் கூற்றனாரும் ஒருவர். இவரைக் கூற்றனார் என்றும் கூற்றுவநாயனார் என்றுங் கூறுவர். இவருடைய வரலாற்றைப் பெரிய புராணத்தில் அறிகிறோம். (கூற்றுவநாயனார் புராணம்) ' 'ஆர் கொண்ட வேற்கூற்றன் களந்தை கோன் அடியேன்' என்று சுதந்தரமூர்த்திதாயனார் திருத்தொண்டத் தொகையில் இவரைக் கூறுகிறார். இவர் களப்பாளன் (களப்பிரன்) குலத்தவர் என்று திருத்தொண்டர் திருவந்தாதியில் நம்பியாண்டார் நம்பி கூறுகிறார்.[3]

நாதன் திருவடியே முடியாகக் கலித்து நல்ல
போதங் கருத்திற் பொதித்தமை யாலதுகை கொடுப்ப
ஓதந்தரு வியஞான மெல்லாம் ஒருகோலின் வைத்தான் கோதை தெடுவேற் களப்பாள ளாகிய கூற்றுவனே

களப்பிர அரசர்கள் பொதுவாகச் சைனசமயத்தவர் என்றாலும், அவர் குலத்தைச் சேர்ந்த கூற்றுவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தார். சோழ நாட்டிலிருந்த இவர், சோழ் அரசர்களுடைய முடியைத் தரித்து அரசாள வேண்டும் என்று விரும்பினார். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பழைய சோழ அரச பரம்பரையார் களப்பிரருக்குக் கீழடங்கியிருந்தார்கள். அவர்களுடைய முன்னோரான சோழர் அணிந்திருந்த மணிமுடி தில்லை வாழ் அந்தணர்களிடத்தில் இருந்தது. 'முடி ஒன்று ஒழிய அரசர் திருவெல்லாம்' உடையராக இருந்த கூற்றுவர், சோழ அரசருடைய பழைய முடியைத் தரித்து அரசாள விரும்பினார். அவர் சோழ அரசருடைய முடியை வைத்திருந்த தில்லைவாழந்தணர்களை அணுகி அந்த முடியைக் கொண்டு தனக்கு முடி சூட்டும்படி கேட்டார். அவர்கள், 'சோழ அரசர் குடியில் பிறந்தவர்களுக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு முடிசூட்டமாட்டோம்' என்று சொல்லி, சோழர் முடியைத் தம்மில் ஒரு குடும்பத்தாரிடம் ஒப்படைத்து விட்டு மற்றவர் எல்லோரும் சேர நாட்டுக்குப் போய்விட்டார்கள்.[4]

மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணிமா மவுலி புனைவதற்கு
தில்லைவா முத்தணர் தம்மை வேண்ட அவரும் 'செம்பியர்தம்
தொல்லை நீடுங்குல முதலோர்க் கன்றிக் கட்டோம்முடி' என்று
நல்கா ராகிச் சேரலன் தன் மலைதாடனைய நண்ணுவார்

ஒருமை உரிமை தில்லைவாழந்தணர்கள், தம்மில் ஒரு குடியைப்
பெருமை முடியை அருமைபுரி காவல் கொளும்படி இருத்தி
இருமை மரபுத் தூயவர்தாம் சேரர் நாட்டில் எய்திய பின்
வரும்ஐயுற வால்மனந் தளர்ந்து மன்றுள் ஆடும் கழல்பணிவார்

இதனால், கூற்றுவனார், முடிசூடாமலே சோழ நாட்டை யரசாண்டார் என்பது தெரிகின்றது.

ஏறத்தாழ முன்நூறு ஆண்டுகளாகத் தமிழகத்தை யரசாண்ட களப்பிர அரசர்களைப் பற்றி வரன்முறையான வரலாறு கிடைக்காமல், மேற்காட்டியபடி, அங்கொரு துணுக்கும் இங்கொரு துணுக்குமாகக் கிடைக்கிறது. ஆனால், தமிழ்நாட்டு அரசியலில் களப்பிர அரசருக்குப் பெரிய எதிர்ப்புகளும் அரசியல் கலகங்களும் குழப்பங்களும் நாட்டில் இருந்து கொண்டிருந்தன என்பதைச் சில குறிப்புகளைக் கொண்டு அறிகிறோம். தமிழகத்தை யரசாண்ட களப்பிர அரசர்கள் எத்தனைபேர், அவர்களுடைய பெயர் என்ன அவர்கள் ஒவ்வொருவர் காலத்திலும் நடந்த நிகழ்ச்சிகள் எவை என்னும் வரலாறு ஒன்றும் தெரியவில்லை.


  1. Hstory of the Tamils, 1929, p. 535.
  2. Contemporary Buddha Gosha by A.P. Buddha datis pp. 34-70, University of Ceylon Review, 1945. Vol III, No 1
  3. திருத் தொண்டர் திருவந்தாதி 47
  4. கூற்றுவ நாயனார் புராணம் 4,5