களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/முதற்பதிப்பு பதிப்புரை

முதற்பதிப்பு பதிப்புரை

னிதனுடைய வாழ்க்கையில் வரலாறு சிறப்பானதொரு இடம் பெற்றிருக்கிறது. மனித வரலாற்றின் வளர்ச்சிப் போக்கையும் வாழ்ந்து வந்த வழியையும் அறிந்து கொள்வது எதிர்கால வாழ்வை வடிவமைக்க இன்றியமையாததாகும்.

தமிழ் மொழியும் தமிழ் நாகரிகமும் தமிழர் பண்பாடும் நீண்ட நெடிய வரலாறு கொண்டிருப்பினும் இதனை முழுமையாக ஆராய்ந்து எழுதும் பணி இன்னும் முற்றுப் பெறவில்லை.

வரலாற்றுக்கு அடிப்படையான இலக்கியங்களும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் புதைபொருள்களும் இன்னபிற சான்றுகளும் தமிழகத்தில் கணக்கின்றிக் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றைத் தொகுத்துப் பகுத்து ஆயும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஆயினும் நமது உணர்வும் விரைவும் நம்பிக்கை தரக்கூடியனவாக இல்லை என்றே சொல்லவேண்டும்.

1837ஆம் ஆண்டிலிருந்து ‘கல் வெட்டு ஆண்டறிக்கைகள்’ (Epigraphical Reports) வெளியிடப்படுகின்றன. அந்தந்த ஆண்டு படியெடுக்கப்படும் கல்வெட்டுகள் கூறும் செய்திகளை ஓரிரு வரிகளில் இவை தெரிவிக்கின்றன. 1905 ஆம் ஆண்டு வரை படியெடுக்கப்பட்ட அனைத்துக் கல்வெட்டுக்களும் பின்னர் படியெடுக்கப்பட்டதில் அங்குமிங்குமாக ஒருசில கல்வெட்டுக்களுமே இதுவரை தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் (South Indian Inscriptions) என்ற பெயரில் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளன. பிற கல்வெட்டுக்களின் முழுவடிவமும் முறையாக வெளியிடப்படவில்லை. இவையின்றிப்படியெடுக்கப்படாத கல்வெட்டுகளும் பல்லாயிரக்கணக்கில் மறைந்து கிடக்கின்றன.

தற்போது கல்வெட்டு ஆண்டறிக்கைகளில் வெளியிடப்படும் ஓரிருவரிக் குறிப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. கல்வெட்டுக்களின் முழு வடிவத்தையும் படிக்காமல், ஓரிருவரிக் குறிப்புகளை மட்டும் வைத்துக் கொண்டு ஆய்வு செய்வது முழுமையான ஆய்வாகவோ, முறையான முடிவுகளாகவோ அமைய முடியாது. முழு வடிவமும் கிடைக்கும்போது ஓரிரு வரிக் குறிப்புகளைக் கொண்டு பெற்ற முடிவுகளும் செய்த ஆய்வுகளும் மாற வேண்டியதாகலாம்.

அத்துடன் இதுவரை வெளியிடப்பட்ட கல்வெட்டு ஆண்டறிக்கைகளும் தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதிகளும் பற்பல ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட நூல்களாதலால் ஆய்வாளர்களுக்கு அவை படிப்பதற்கும் கூட எளிதில் கிடைப்பதில்லை. கிடைக்கின்ற பல நூல்களும் ஏடுகளைப் புரட்டினாலே கிழிந்துவிடும் நிலையில் உள்ளன.

தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறையினர் சென்னை, குமரி ஆகிய மாவட்டக் கல்வெட்டுகளை முழுமையாகவும் தர்மபுரி மாவட்டக் கல்வெட்டுகளைப் பகுதியாகவும் வெளியிட்டுள்ளனர்.

இதன்றி, மத்திய அரசுத் தொல்பொருள் துறைக்கும் மாநில அரசுத் தொல்பொருள்துறைக்கும் இடையே தொடர்பும் இணைப்பும் குறைவாக இருத்தலை அறிகிறோம். மத்திய அரசுத்துறையினர் பல ஆண்டுகளுக்கு முன் படியெடுத்துப் பதிப்பிக்க இயலாமல் அறைக்குள் பூட்டி வைத்திருப்பதை மாநில அரசுத்துறைக்கு வெளியிடக் கொடுத்துதவலாம். இருவேறு அரசுத்துறைகளும் தனித்தனியே படியெடுப்பதில் ஈடுபட்டு 'இரட்டிப்பு வேலை' தடத்துவதற்கு மாற்றாகப் பணிப்பங்கீடு செய்து கொண்டு பரவலாகப் பணியினை மேற்கொள்ளலாம். ஆய்வுத்துறையில் போட்டி மட்டுமல்ல, மனம் கலந்த ஒத்துழைப்பும் அவசியமாகும்.

வரலாற்றுச் சான்றுகளோ, தொன்மையான நாகரிகப் பின்னணியோ இல்லாத பல நாடுகளில் கூட குறுகிய கால வரலாறாக இருந்தாலும் வரலாற்றுச் சின்னங்களைப் போற்றவும் பாதுகாக்கவும் வரலாற்றை விரிவாக எழுதவும் பெருமுயற்சி எடுத்துக் கொள்கிறார்கள்.

தொன்மையான வரலாற்றுச் சான்றுகளைப் பல்லாயிரக்கணக்கில் கொண்டுள்ள நமது நாட்டினர் இவற்றை வெளியிடுவதில்கூட ஊக்கமும் உற்சாகமும் காட்டாமல் இருப்பது வேடிக்கையான புதுமையாகும். மேலும் முப்பது. . தாற்பது ஆண்டுகளுக்கு முன் கோயிலில் இருந்த பல கல்வெட்டுக்கள் 'கோயிலைப் புதுப்பித்தல்' என்ற பெயரில் அழிக்கப்பட்டுவிட்ட செய்திகளையும் அறிகிறோம்.

ஆகவே தமிழ் நாட்டுக் கோயில்களிலும் பிற இடங்களிலும் உள்ள கல்வெட்டுகள் அனைத்தையும் மாவட்ட வாரியாக விரைவில் படியெடுத்து, அவற்றை முழுமையாக வெளியிட வேண்டும். இவை வெளியிடப்படுவது தமிழக வரலாறு முழுமையாக முறையாக எழுதப்பட அடிப்படையினை அமைக்கும்.

கல்வெட்டுகள் வழி வரலாற்றின் வளர்ச்சிப் போக்குகள் யாவும் தனித்தனியாக ஆராயப் பெற்று, விரிவான பல நூல்களாக வெளியிடப்பட வேண்டும் என்று விழைகின்றோம்.

தமிழக வரலாற்றை எழுதிய சில வரலாற்றாசிரியர்கள் களப்பிரர் காலத்தை இருட்டடிப்புச் செய்துவிட்டார்கள். சேர சோழ பாண்டியரைக் களப்பிரர் வென்று வாகை சூடிய வரலாறும் அவர்களது ஆட்சி அமைப்பும் அவர்களுக்குக் கீழ் மக்கள் வாழ்க்கை நிலையும் அன்று நிலவிய பொருளாதார உறவுமுறைகளும் சமயங்களின் சமுதாய நிலைபாடுகளும் முன்னூறு ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தின் பெரும் நிலப்பரப்பைத் தனித்தன்மையுடன் ஆண்ட அவர்கள் எப்படி, ஏன் வீழ்த்தப்பட்டார்கள் என்பன போன்ற வரலாற்று உண்மைகளும் இன்னும் தெளிவில்லாமல் இருக்கின்றன.

களப்பிரர் காலத்தை முழுமையாக அறியக் கல்வெட்டுகள் இல்லை. அக்காலத்தில் கல்வெட்டுகளை வடிக்கும் பழக்கம் விரிவாக ஏற்படவில்லை. களப்பிரர் வரலாற்றைக் கூறும் தனி இலக்கியங்களும் நமக்குக் கிடைக்கப் பெறவில்லை. அகழ்வாராய்ச்சிப்பிரிவில் நாம் பின்னணியில் இருப்பதால் அதற்கான வாய்ப்புகளும் இல்லை.

இந்நிலையில் நமக்குக் கிடைத்திருக்கின்ற ஒருசில கல்வெட்டுகளையும் பிற மேற்கோள் சான்றுகளையும் ஆதாரமாகக் கொண்டு விரிவாகத் தமக்கே உரிய முறையில் ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனிவேங்கடசாமி அவர்கள் இத்நூலினைப் படைத்துள்ளார்கள். களப்பிரர் பற்றிய விரிவான செய்திகளைக்கொண்ட முதல் நூலாக தனி நூலாக இது அமைகின்றது. அவர்களே குறிப்பிட்டது போலக் களப்பிரர் வரலாற்றின் பகற்காலத்தைக் காணத் தொடர்ந்து ஆய்வதற்கு இந்நூல் தூண்டுகோலாக அமையும் என நம்புகிறோம்.

பல்கலைக்கழகங்களும் இன்னபிற ஆய்வு நிறுவனங்களும் செய்துவரும் பணிகளை நாம் குறைத்து மதிப்பிட முடியாது என்றாலும் சில தனி மனிதர்கள், பல நிறுவனங்களின் பணிகளைவிட மிகுதியாக ஆய்வுக்கும் வரலாற்றுக்கும் தங்கள் பங்கைச் செலுத்தியிருக்கிறார்கள் என்பதனை நாம் மறுக்க முடியாது. இவ்வாறு குறிக்கத்தக்க சிலரில் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களும் ஒருவர். அவர் எழுதிய நூல்கள் பல அடுத்து மக்கள் வெளியீட்டின் வழி வர இருக்கின்றன.

உடல் நலக்குறைவினால் ஓய்வெடுத்துவரும் அறிஞர் மயிலை சீனி அவர்கள் உள்ளம் சோர்வடையாமல் ஆராய்ச்சியில் காட்டிவரும் ஆர்வம் ஏனையோருக்கு எடுத்துக்காட்டாக அமைவதாகும். ஏற்கனவே நூலாக வெளியிடப்பட்டவையன்றித் தனிக் கட்டுரைகளும் நூல்கள் பல எழுதுவதற்கான குறிப்புகளும் அவரிடம் இருக்கின்றன. இவற்றைத் தொகுத்து நூல்வடிவம் கொடுக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அவற்றையும் விரைவில் தமிழகம் பெற்றுப் பயனடையும் என்று நம்புகின்றோம்.

மயிலைசீனி வேங்கடசாமி அவர்களுக்கும் மக்கள் வெளியீட்டுக்கும் தொடர்பாக இருந்து இந்நூலினை எழுத அவருக்குத் தூண்டுகோலாகவும் வெளியிட நமக்குத் துணையாகவும் இருந்து நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த சென்னைப் பல்கலைக் கழகத் தொல்பொருள்துறை ஆய்வு மாணவர் திரு. ர. ராமசாமி அவர்களுக்கும் இந்நூலுக்கான பொருளடைவு தயாரித்துக் கொடுத்த சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் புலவர் இ. சுந்தரமூர்த்தி அவர்களுக்கும் நன்றியுடையோம்.

மே.து.ராசுகுமார்


களப்பிரர் காலத் தமிழகம்
(கி.பி. 3-5)

களப்பிரர் ஆட்சியின் கீழ்சேரநாடு, சோழநாடு,
அடங்கியிருந்த நாடுகள்:பாண்டியநாடு, துளுநாடு,
கொங்குநாடு, இரேனாடு,
ஈழநாடு.

 

தனித்திருந்த நாடு:  பல்லவநாடு