கள்வனின் காதலி/கார்வார் பிள்ளை
கார்வார் பிள்ளை
திருப்பரங்கோவில் மடம் மிகவும் புராதனமானது. மிக்கச் செல்வாக்குள்ளது. மடத்துக்குச் சொந்தமாக ஆயிரம் வேலி நிலமும், மடத்தின் ஆதீனத்தின் கீழ் உள்ள கோவில்களுக்கு ஏழாயிரம், எட்டாயிரம் வேலி நிலமும் இருந்தன.
இப்போதுள்ள பண்டார சந்நிதிக்கு முந்தி இருந்தவரைப் பற்றிப் பலவிதமான வதந்தி உண்டு. ஆனால் இப்போது அப்பதவியை வகித்தவர் ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கினார். மடத்தின் நிர்வாகத்திலுள்ள ஊழல்களையெல்லாம் போக்கவும், மடத்தின் சொத்துக்களைச் சமய வளர்ச்சி, கல்வி வளர்ச்சிக்காகப் பயன்படுத்தவும் பெருமுயற்சி செய்து கொண்டிருந்தார்.
இந்த முயற்சிகளையெல்லாம் அதிகம் பயன்படாதபடி செய்து கொண்டிருந்த புண்ணியவான் ஒருவர் அந்த மடத்தில் இருந்தார். அவர்தான் கார்வார் பிள்ளை. முன்னிருந்த சந்நிதானத்தின் காலத்திலே இந்த மனுஷர் வைத்ததே எல்லா விஷயங்களிலும் சட்டமாயிருந்தது. இப்போதுங்கூட அவருடைய அதிகாரம் தான் அதிகமாய்ச் சென்று கொண்டிருந்தது. மடத்தின் ஏராளமான சொத்துக்கள் ஒரு தாலுகா பூராவிலும் பரவியிருந்தபடியால் ஏதாவது கோர்ட் விவகாரங்கள் நடந்து கொண்டேயிருக்கும். கார்வார் பிள்ளைக்கு அந்த விவகாரங்களின் நுட்பங்கள் எல்லாம் தெரியும். அவர் இல்லையென்றால், மடத்தின் நிர்வாகம் உடனே பலவிதச் சிக்கல்களுக்கு உள்ளாக நேரிடும். ஆதலால், அவர் மேல் அநேக புகார்கள் அவ்வப்போது வந்த போதிலும், பண்டார சந்நிதி அவரைப் போகச் சொல்ல முடியாத நிலைமையில் இருந்தார்.
அப்பேர்ப்பட்ட திருப்பரங்கோவில் மடத்தில் சர்வாதிகாரம் நடத்திய மகா-௱-௱-ஸ்ரீ கார்வார் பிள்ளையை இதோ பார்த்துக் கொள்ளுங்கள். காதில் வைரக்கடுக்கன், கன்னத்திலே புகையிலைக் குதப்பல், கழுத்திலே சரிகைத் துப்பட்டா, இடுப்பில் சொருகிய மணிபர்ஸ், நெற்றியில் சவ்வாதுப் பொட்டு, கைவிரல்கள் எல்லாவற்றிலும் வைர மோதிரம், அப்புறம் தங்கச் சங்கிலி கோத்த ரிஸ்ட் வாட்ச், இத்தகைய அலங்காரத்துடன் இதோ இளந்தொந்தி விழுந்து தலையில் இளநரை கண்டு விளங்குகிறவர்தான் கார்வார் பிள்ளை. பார்த்தால் சாது மனுஷராய், அப்பாவியாய்த் தோன்றுகிறார் அல்லவா? ஆனால், எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்குமோ, நமக்கென்ன தெரியும் பார்த்துக் கொண்டே இருங்கள்.
"முத்தையா! இங்கே வா!" என்று கார்வார் பிள்ளை கூப்பிட்டதும், கொஞ்ச தூரத்தில் கீழே மேஜைப் பெட்டியின் முன்னால் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த முத்தையன் எழுந்து வந்து பணிவுடன் நின்றான்.
"வேலம்பாடிக் கிராமத்திலிருந்து பகுதிப் பணம் வரவில்லை. நீ உடனே போய்க் காரியஸ்தனைப் பிடித்து எத்தனை நேரமானாலும் இருந்து வாங்கிக் கொண்டு வா! வெறுங்கையுடன் வரக்கூடாது!" என்றார்.
முத்தையன் தயக்கத்துடன், "பத்து நாள் கணக்கு எழுத வேண்டியது பாக்கியிருக்கிறது. வேறு யாரையாவது..." என்பதற்குள், "எல்லாம் நாளைக்கு எழுதலாம், போ! சும்மா மேஜைப் பெட்டியின் முன்னால் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்தால் எப்படி எழுதியாகும்?" என்று எரிந்து விழுந்தார் கார்வார் பிள்ளை.
முத்தையன் மேஜைப் பெட்டியில் கணக்குகளை எடுத்து வைத்து விட்டுக் கிளம்பினான். ஊரின் ஒரு கோடிக்கு வந்ததும் மத்தியானம் சாப்பிடும்போது அபிராமி தேம்பித் தேம்பி அழுது கொண்டு நின்ற தோற்றம் அவன் மனக்கண்ணின் முன்பு வந்தது. அவனுடைய நடையின் வேகம் வரவரக் குறைந்து, கடைசியில் சற்றுத் தயங்கி நின்றான். பிறகு வீட்டுக்குப் போய் அபிராமிக்கு ஆறுதல் வார்த்தை சொல்லி விட்டு, தான் அன்று மாலை திரும்பி வர நேரம் ஆகும் என்று தெரிவித்துவிட்டுப் போவது தான் சரி என்று நினைத்தான். அவ்வாறே தீர்மானித்துத் தன்னுடைய வீடு இருந்த வீதியை நோக்கிச் சென்றான். சற்று நேரத்துக்கெல்லாம், வீட்டின் வாசலை அடைந்தான், அச்சமயம், உள்ளே, "ஐயோ! ஐயோ!" என்று அபிராமியின் தீனமான குரல் கேட்கவே, அவனுடைய உடம்பெல்லாம் மயிர்க்கூச்செறிந்தது. ஓடிப்போய் கதவைத் திறக்க முயன்றான். கதவு தாழிட்டிருந்தது. ஜன்னலண்டை சென்று பார்த்தான். உள்ளே, கூடத்தில் அவனுடைய கண் விழிகள் தெரிந்து விழுமாறு செய்த பயங்கர காட்சி ஒன்று தென்பட்டது. கார்வார் பிள்ளை அபிராமியினுடைய மேலாடையின் தலைப்பைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். அபிராமி, "ஐயோ! ஐயோ!" என்று பரபரப்புடன் அவரிடமிருந்து ஓட முயல்கிறாள். அப்போது முத்தையனுக்கு உடம்பு நடுங்கிற்று. அவனுடைய தேகத்தில் இருந்த இரத்தத்தில் ஒவ்வொரு துளியும் கொதித்தது. அடுத்த நிமிஷம் அவன் வீட்டு வாசலில் போட்டிருந்த பந்தல்காலைப் பிடித்துக் கொண்டு கூரையின் மேல் ஏறினான். இரண்டே பாய்ச்சலில் தாவிச் சென்று வீட்டின் முற்றத்தில் குதித்தான்.
அவனுடைய உடம்பில் அப்போது ஆயிரம் யானைகளின் பலம் உண்டானது போலிருந்தது. ஒரே தாவலில் கார்வார் பிள்ளையண்டை சென்று அவர் கழுத்தைப் பிடித்து ஒரு தள்ளுத் தள்ளினான். பிள்ளை சுவரில் மோதிக் கொண்டு கீழே விழுந்தார். அவருடைய தலையைச் சுவரில் இன்னும் நாலு மோது மோதினான். பிறகு காலைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்து வாசற்படிக்கு வெளியே தள்ளினான்.
அபிராமி கூடத்துத் தூண் ஒன்றைப் பிடித்துக் கொண்டு நின்றாள். அவளுடைய உடம்பு இன்னும் நடுநடுங்கிக் கொண்டிருந்தது.
முத்தையன் அவளை ஏறிட்டுப் பார்க்கவும் முடியாதவனாய், தாழ்வாரத்தில் முன்னும் பின்னுமாய் நடந்து கொண்டிருந்தான்.
அபிராமி தேம்பிக் கொண்டே, "அண்ணா! பூங்குளத்துக்கே நாம் திரும்பிப் போய்விடலாம். இங்கே இருக்க வேண்டாம்" என்றாள்.
முத்தையன் ஒரு நிமிஷம் நின்று யோசித்து விட்டு, "கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு கொஞ்ச நேரம் ஜாக்கிரதையாயிரு, அபிராமி! அந்தப் பாவியை இப்படியே விட்டுவிட்டுப் போகக் கூடாது. இன்னும் எத்தனை பேருடைய குடியைக் கெடுப்பானோ, யார் கண்டது? நான் போய் சந்நிதானத்தில் சொல்லி முறையிடப் போகிறேன். அந்த அநியாயத்துக்கு ஏதாவது பரிகாரம் உண்டா, இல்லையாவென்று பார்த்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடந்தான்.
அபிராமி ஓடிவந்து அவனைக் கட்டிக் கொண்டு "அண்ணா! என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போகாதே!" என்றாள்.
முத்தையன் "இந்த ஒரு தடவை மட்டும் போய் வருகிறேன்; தடை சொல்லாதே. அப்புறம் உன்னைவிட்டுப் பிரிகிறதேயில்லை; நாளைக்கே பூங்குளத்துக்குப் போய் விடுவோம்" என்றான்.
பிறகு, அவளிடமிருந்து விடுவித்துக் கொண்டு, அன்புடன் அவளுடைய முதுகில் தட்டிக் கொடுத்து, "சற்று நேரம் பல்லைக் கடித்துக் கொண்டிரு, அபிராமி! இதோ ஒரு நிமிஷத்தில் திரும்பி வந்து விடுகிறேன்" என்று சொல்லி விட்டு வெளியே சென்றான்.
அபிராமி! துர்பாக்ய அபிராமி! உன் அண்ணன் ஒரு நிமிஷத்தில் திரும்பி வருவான் என்று எண்ணிக் கொண்டு இராதே! அவன் திரும்பி வரவே மாட்டான்! இனிமேல் பகவான் தான் உனக்குத் துணை!