கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/03
மகள் சரோஜினி மெட்ரிலேஷன் கல்வித் துறையிலே முதல் மாணவியாக வெற்றி பெற்றது அகோர நாதருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இதனால் தனது செல்வி மேலும் கல்வியில் வெற்றிபெற வேண்டும் என்ற ஊக்கம் அவருக்கு ஏற்பட்டது.
அறிவியல் துறையில் உலகம் முன்னேறி வருவதைக் கண்ட அவர், தனது மகளும் அறிவியற் செல்வியாக வளர வேண்டும் என்றும் விரும்பினார். இலண்டன் மாநகரத்திலே உள்ள மன்னார் கல்லூரியில் தனது புதல்வியைச் சேர்த்தார்.
தந்தை ஆசையை அறிந்த சரோஜினி, அவர் விருப்பத்தை நிறைவேற்றிட இலண்டன் சென்று அறிவியல் பாடங்களை ஆரம்பத்தில் மிகவும் அக்கறையுடன் படித்தார். அத்துடன் பீஜ கணிதமும், விஞ்ஞானப் புதுமைகளையும் நாளுக்குநான் விரும்பிக் கற்க முனைந்தார்!
சிறுமியாக இருக்கும்போதே கவிதை புனையும் ஞானச் செருக்கோடு வளர்ந்த சரோஜினியின் மனம், லண்டனிலேயும் கவிதைக் கிறுக்கை விடவில்லை. உள்ளத்திலே ஒளி தோன்றிவிட்டால், வாக்கிலும், செயலிலும் ஒளி வெளிச்சமிடும் என்பது உண்மைதானே!
ஒருநாள் வகுப்பிலே பீஜகணிதம் ஒன்றைக் கொடுத்து அதற்கு விடை எழுத வேண்டும் என்றார் ஆசிரியர். பீஜ கணக்கு என்றதும் பாரதியாரைப் போல சரோஜினிக்கும் கணக்கு பிணக்கை உருவாக்கி விட்டது!
நோட்டுப் புத்தகத்திலே ஏதேதோ கோடுகளைப் போட்டுப் போட்டுக் கிறுக்கிப் பார்த்தார். விடை வரவில்லை. சிந்தனையாளன் ஆர்க்கிமிடிசைப் போல வகுப்பிலே அங்கும் இங்கும் அவரே எழுந்து அலைந்தார்!
வகுப்பாசிரியர் கோபம் கொண்டு விடை தேடு என்றால், வகுப்பிலே அங்குமிங்கும் அலைந்து எதைத் தேடுகிறாய்? என்று கேட்டார். சரோஜினிக்கு அவமானமானது. உள்ளம் சோர்ந்தார்!
அந்த சோகத்தைத் தனது நோட்டுப் புத்தகத்திலே சொற்களாக எழுதினார். அந்த அவமானச் சம்பவத்தால் வந்த வார்த்தைகளை அப்படியே நோட்டில் எழுதி ஆசிரியர் இடம் காட்டவே, அவர் கணக்குப் போடு என்றால் கவிதை எழுதுகிறாயே! உனக்கென்ன பைத்தியமா? அல்லது சிந்தினைச் சிக்கலா? என்றார்.
ஆசிரியர், சரோஜினி எழுதிய கவிதையைப் படித்தார்! சிலிர்த்தது அவரது சிந்தனை! உடனே சரோஜினியை வாசித்து, உனக்குக் கணக்கு வராது; அறிவியலுக்கும் உனக்கும் அணுவளவு கூட சம்பந்தமில்லை; போ, கவிதையே எழுது என்று கண்டித்து விட்டார்!
சரோஜினியைப் பொறுத்தவரை, அவரது மனச் சிந்தனைகள் எழிலான புதுக் கருத்துக்கள் பூக்கும் செடிகளாக இருக்கின்றன. இதை மனதிலே பாத்திக் கட்டி வளர்க்கும் ஆர்வமே அசைந்தாடுவதாக ஆசிரியர் உணர்ந்தார்!
மாணவர்கள் மத்தியிலே சரோஜினி வெட்கித் தீ சுடப்பட்டவரைப்போல முகம் சிவந்து, புத்தகத்தை எடுத்துக்கொண்டு வகுப்பை விட்டு வெளியேறினார்; அவருடன் படித்த மாணவிகளும் ஒன்றும் புரியாமல் ஊமைகளாக வெளியேறினார்கன் ஆசிரியரே திகைத்தார்! பாவம்!
கவியுள்ளம் கணிதத்தை நாடாது என்பதால், ஆசிரியர் போ, கவிதை எழுது என்று விரட்டாதக் குறையாக விரட்டிவிட்டதால் சரோஜினி மனம் நொந்து தனது தந்தை ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்று வேதனைப்பட்டார்.
கணக்கு நோட்டில் தான் எழுதிய கவிதைக் கிறுக்கலைத் தொகுத்தார்! மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தார்; அந்த இன்பத்திலேயே மெய் மறந்தார் கணக்கு நோட்டில் தொடர்ந்து எதையெதையோ எழுதினார்.
பூந்தோட்டம் புகுவார்! பூத்த மலர்களின் வண்ணங்களை உற்று நோக்குவார்! அந்த இன்பத்திலேயே அவரது மனம் மயங்கும்! பிறகு! பூக்களுள்ளே உள்ள தேனைப் பார்ப்பார்! அதைச் சுற்றிச் சுற்றி ரீங்காரமிடும் வண்டுகளின் இசை ஒலியைக் கேட்டு இன்பம் பெறுவார்.
இங்கிலாந்து நாட்டின் பருவ மாற்றங்களால் பூக்கும் பூக்களது பலவித வனப்புகளை ஊன்றி ரசிப்பார்! ஆம் மலர்களின் நிறபேதங்கள் சரோஜினிக்குரிய பாடங்களாயின. காரணம், மங்கையின் இதயமும் மலர்கள் போன்றதல்லவா?-அதனால்!
ஒருநாள் தனது விடுதியிலே உள்ள செடிகள் மலர்கள் மலர்ந்து அழகுக்கு அழகாகப் போட்டியிட்ட வண்ணமிருப்பதைக் கண்டு, மனதைப் பறிகொடுத்தார் குமரி சரோஜினி
“பூக்களே! நீங்கள் அடர்த்தியாக, நெருக்கமாகப் பூத்திருப்பதால் செடியின் கொம்புகள் இருக்கும் இடம் புலப்படவில்லையே! பூச்சரமா? கொம்பா? என்ற குழப்பத்தை உண்டாக்குகின்றீர்களே!
பூக்களே! மனம் வீசும் உங்களைச் சுமந்து கொண்டிருக்கின்ற கொம்புகளும்-கொடிகளும் அதிருஷ்டசாலிகள் அல்லவா? எவ்வளவு அழகாக அவை உங்களைச் சுமந்து கொண்டிருக்கின்ற அழகே- அழகுக்கு அழகு!வட்டமிட்டுக் கொண்டிருக்கும் வண்டுகள் நேற்று காணப்படவில்லையே; ஏன் இன்று போட்டியிட்டு அவை உங்களையே சுற்றிச் சுற்றி வருகின்றன? உங்களுடைய நாற்றமோ! தேனோ! மகரந்த பண்போ! அந்த வண்டுகளின் இசையிலே என் மனம் மயங்குகின்றபோது, நீங்கள் தேனைப் பறிகொடுத்து மயக்கமடைகின்றீர்கள்? விடுத்திக்குள்ளே இருக்கும் என்னையே மணம் வீசி இன்புறுத்துகிறீர்களே! நியாயமா மலர்காள்!
பூக்களை சுற்றி சுற்றி வலம் வரும் சிட்டுக்குருவிகளே! என்னையும் உங்களுடன் ஏந்திச் செல்லக்கூடாதா! ரோசா வண்ண இதழ்களால் எனது உடலையே மூடி மறைத்துக் கொள்ளக்கூடாதா? அந்த மலர்களின் தேனிலே என்னை மூச்சு திணற விடக் கூடாதா? செந்திற வண்ண ரோஜா மலர்களே, உங்களுடைய இதழ்களால் என்னை இறுக்கிக் கட்டிக் கொண்டால் என்ன? நிறமா உங்களுக்குக் கெட்டு விடும்? என் நிறம், உங்களது நிழல்களால் என்ன நிறமா உங்களுக்குக் கெட்டு விடும்? என்நிறம், உங்களது நிழல்களால் வண்ணம் பெறலாமே? ஏன் என்னை அணைய மறுக்கிறீர்கள்? என்றெல்லாம் பூக்களைப் பார்த்துத் தனக்குதானே பேசுவார்.
இலண்டனில் படித்துக் கொண்டிருந்த குமாரி சரோஜினி, கணிதத்தை மறந்தார்! விஞ்ஞானத்தை இகழ்ந்தார்! இயற்கை உணர்ச்சிகளிலே மிதந்தார்! சிந்தனை வான்வெளியிலே பறந்தார்! கவிதையெனும் சிறகடித்தார்! கவிஞரெனும் காற்றோடு கலந்து மக்களது உணர்வுப் பூந்தோட்டங்களிலே மணம் வீசிக் கொண்டே பவனி வந்தார்!
இவ்வளவு ஆற்றல்கள் இருந்தாலும், கவிதை எழுதும் இலக்கணங்கள் தெரியுமா?-தெரியாது சரி, இலக்கணம் படித்தவர்கள் எல்லாருக்குமே கவிதை எழுதும் ஆற்றல் வருமா? வராது ஏதோ ஒன்றிரண்டு பேர்கள்தானே விதி விலக்கு?
சரோஜினி தனது கவிதைகளை வங்காள மொழியிலா எழுதினார்? இல்லை; தெலுங்கு மொழியிலா வரைந்தார்? இல்லை. பிறகு எந்த மொழியில் எழுதினார்?-ஆங்கிலத்தில்!
பெண்பாற்புலவரான சரோஜினி, தனது இன்பத்துக்காக உள்ளது உள்ளபடியே, கண்டதைக் கண்டவாறே கவிதைகளை மளமளவென்று எழுதியபடியே இருந்தார்!
அவரது கவிதைகளைக் கல்லூரி மாணவி-மாணவியர் படித்தார்கள்! மக்கள் நெஞ்சங்கள் சுவைத்தன! கவிஞர்கள் அவற்றின் ஆழம் என்னவென்று அளந்தார்கள்! ஆங்கில அதிகாரிகள் அதைக் கேட்டு மொய்த்தார்கள்! கவிதைப் பூக்களின் மகரந்தத்தைச் சுவைஞர்கள் எல்லாருமே சுவைத்து வியந்து போனார்கள்!
ஆங்கில மொழியிலே கவிதை எழுதிட இவருக்கு எப்படி வந்தது இந்த ஆற்றல்? சொற்குற்றம் இல்லை; பொருட்குற்றமும் இல்லை; இலக்கணம் தானே தளை தட்டுகிறது; அவை கூட ஓசை நயத்துடன் ஒன்றி விட்டனவே! இந்த இளம் கண் யார்? யார் இந்த இளம் பெண்? என்று லண்டன் மாநகரக் கல்வியாளர்கள், மக்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் ஒருவரை ஒருவர் கலந்து ஆச்சரியத்துடன் பேசினார்கள்!
சரோஜினியின் கவியாற்றல், நண்பர்கள் அறிய, நண்பர்களால் அறிஞர்கள் அறிய, அறிஞர்களால் அரசு அறிய, இவ்வாறே விளம்பரமானார் குமரி சரோஜினி அறிஞர்கள் எட்மண்ட் கர்ஸ், ஆர்தர் சைலன்ஸ், போன்றவர்கள் பாராட்டிப்பேசினார்கள்! சரோஜினி கிறுக்கிய கவிதைகளை எல்லாம், லண்டன் புத்தகாலயங்கள் நூலாக வெளியிட்டு விற்பனை செய்தன!இலண்டன் மாநகரிலே சரோஜினி, கவிதைகளுக்கு ரசிகர்கள் தோன்றினார்கள். அன்றிலிருந்து எங்கு பேசினாலும் சரோஜினி என்ற பலாச் சுளையிலே மொய்க்கும் ஈக்களானார்கள் மக்கள்!
சரோஜினி எந்த மண்டபத்திலே பேசினாலும் சரி, பொதுக் கூட்டங்களானாலும் சரி, இலக்கிய விழாக்களானாலும் சரி, ஆங்காங்கே மக்கள், ரசிகர்கள், இலக்கியவாதிகள் அனைவரும் தேடி நாடி வந்து அவர் பேச்சுக்களை மதுவுண்ட வண்டுகள் போலக் கேட்டு மயங்கினார்கள்.
நாளுக்கு நாள் சரோஜினி இலக்கியக் கவியுணர்ச்சி லண்டன் மக்களிடையியே மட்டுமல்ல; இவரது கவிதை நூற்களின் விற்பனைகள் எங்கெங்கே விற்றனவோ அங்கங்கே எல்லாம் பொங்கி பெருகியது அவரது கவிதைகளைப் பற்றி அவரே கூறும்போது:
"அழகும் பொலிவும் அமைந்த தரை, வண்ணப் பூச்சுக்களால் வனப்பான சுவர்கள், கண்களைக் கவர்ச்சி செய்யும் வீட்டுச் சாமான்களான மேசை, நாற்காலிகள், ஓவியப்படங்கள், இவற்றினூடே அமர்ந்து அமர்ந்து களைத்து சமைத்து விட்டேன்."
"இறைவழிபாடும். பூசையும், ஆடலும், பாடலும், திருவிழாக் கேளிக்கைகள், மக்கள் கூடும் அறிவுக் கோட்டங்கள் அனைத்திலும் அமர்ந்து பொறுமை இழந்து விட்டேன்!"
"பூக்கள் மலிந்த கானகம், பூந்தோட்டம், மலர்க் காட்சி, இன்னிசைக்கு வண்டுகள், பறவைகள், தேன் குடித்தக் களிப்பில் மதரீங்காரமிடும் வண்டுகளது பேரோசை இரைச்சல், இவற்றினிடையே அகப்பட்டு உடல் வியர்த்து விட்டேன்."
"எனக்கு இப்போது தேவை தனியான இடம், சந்தடியற்ற மண்டம், தாமரைக்குளம், அதிலே நீராடிடும் கோபிகா ஸ்திரிகள், காட்சியின் சாந்தி; இதற்கும் மேலாக இறைவனை வழிபாடியற்றும் அமைதியான இயற்கைச் சூழல்கள் மட்டுமே தேவை எனக்கு!" என்று பேசிக் கொள்வார்.
கல்லூரி படிப்பு தேவையா இந்த இளம் கவிக்கு? கற்றாலும் ஏறுமா கவனத்துக்கு? என்ற நிலையில் சரோஜினியின் கல்வி ஒழுக்கம் சீர்குலைந்து வந்தது என் செய்வாள் குமாரி இயற்கை அல்லவா அவளது இளமையை; மூளையை; சிந்தனையை; களவாடிவிட்டது! எனவே கல்வியில் ஊமையானாள்!
கணிதம் போச்சு கற்பனைக் கவி வந்தது டும்டும்; அறிவியல் போச்சு மேடை பேச்சு ஆற்றல் பலம் வந்தது டும்டும் என்று பாலர் பாடிடும் பாடல் பொருள் போல அந்தக் குமாரியின் சிந்தனை வளையங்கள் வளைந்தன! நெளிந்தன! முறுக்கேறின! ஆனால் முறிவு மட்டும் பெறவில்லை; காரணம் தனது தந்தையின் அன்பு!
இலண்டன் மாநகரத்துப் பேச்சு மண்டபங்களில் எல்லாம்-சரோஜினி குரலோசையின் நாதம்; அதுவும், ஆங்கில மொழியின் நயமான பெண்குரலின் நாதம்; ஆயிரக்கணக்காகத் திரண்ட மக்கட் கூட்டம் இவ்வளவு அற்புதங்களோடும் லண்டன் மாநகர் மண்டபங்கள் இன்னோசைகளோடு காட்சி தந்தன!
கவிதையாற்றல் எவ்வாறு கரும்புச் சாறென சுவை தந்ததோ, அதே ருசி, பேச்சு மேடைகளிலும் சரோஜினிக்குப் பேராதரவைத்திரட்டித் தந்தன.
இளம் ஆங்கிலக் கவியின் பேச்சு கவிஞர் பெருமக்களையும், இலக்கிய வித்தகர்களையும் ஈர்த்தது! இளம் ஆங்கிலப் புலவரின் மேடைப்பேச்சுக்களைக் கேட்டவர்கள்; ஆஹாஹா என்று வாய் திறந்தார்கள்!திறந்த வாயில் அரசியல் அலைகள் எழும்பிப் புரளுமானால், அரசியல் வாதிகளும்-அதிகாரிகளும் குடல் விழுங்கும் உணவாவார்கள்;
சரோஜினி பேச்சு இலக்கியமானால், கல்வியாளர்கள் கிடைத்ததடா கற்கண்டு என்று வாய் நிறையப் போட்டுக் குதப்பி விழுங்குவார்கள்; சுவைத்துத் தின்றிட நேரமாகுமே என்று திக்குமுக்காடி அவசர அவசர விழுங்குகளோடு மேலாய் கேட்கத் தயாராக்கிக் கொண்டு செவிகளோடு காத்திருப்பார்கள்!
ஆட்சியின் அதிகாரிகள், சீமான்கள், இந்திய மத குருமார்கள்; இந்திய பெரு மக்கள்; மாணவ-மாணவிகளது அணிகள் ஆகிய அனைவருமே மீண்டும் எப்போது, எங்கே இளம் கவிக்குயில் குரலெடுத்துப் பாடிடும் நான் எந்நாள் என்று சந்தேகமறக் கேட்டு தெரிந்து கொள்வார்கள்.
கற்றோரைக் கவிதைகள் களிக்க வைத்தன; உரை நடைகள் அரசியலாரை உற்று நோக்க வைத்தன. சரோஜினி குரலோ நான் நினைத்தால் சிம்மமாவேன் என்று சீற்ற முழக்கமிட்டது.
சரோஜினி படிப்பு நின்றது; உடலும் நோய்வாய்ப்பட்டு சிகிச்சையுடன் உறவாடியது; எனவே, சரோஜினி தனது தாயகம் திரும்பி ஓய்வு பெறுவது நலம் என்றனர் டாக்டர்கள். ஆதனால், சரோஜினி நாடு திரும்பிடத் தயாரானார்!
வரும் வழியில் இத்தாலி நாட்டையும், வர்ஜில், தாந்தே போன்ற மகாகவிகள் பிறந்த மண்ணைக் காண விருப்பினார்; சென்றார்!
மைக்கேல் ஏஞ்சலோ, ராஃபேல் போன்ற பெரும் ஓவியச் சக்கரவர்த்திகள் தோன்றிய மண்ணையும் பார்க்க பெரிதும் ஆசைப்பட்டார்-பார்த்தார்!ரோம் சாம்ராச்சிய எழுச்சியும்-வீழ்ச்சியும் அடைத்த விபரீத மனவிளைவுகளைப் பார்க்க ரோம் நகர் சென்றார்! கண்டார்! ரசித்தார்! பாடம் பெற்றார்!
பைரன், ஷெல்லி போன்ற புகழ் பெற்ற மாபெரும் கவிஞர்கள் பிரிட்டனை விட்டு, ரோமாபுரி நகர் வரக் காரணம் என்ன? தங்கிய சூழ்நிலை என்ன? கவிதை உணர்ச்சிகளை எவ்வாறு அவர்கள் தீட்டிக் கொண்டார்கள் என்ற விவரங்களை தந்தார்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் எவ்வாறு ரோம் நகருக்குள் ஆட்சி செய்கிறது? என்பதை எல்லாம் ஊடுருவி கண்ட இளம் கவி சரோஜினி பற்பல புதுமைக் கிளர்ச்சிகளைத் தமது எண்ணமென்ற சானைக் கல்லிலே தீட்டிக் கொண்டார்! அதன் பளபளப்பான கூர்மையால் ஆங்கில மொழி ஆப்பிளைக் கீற்றுக் கீற்றாக அறிந்து அரசியல் வறுமையிலே பசித்த மக்களுக்கு தீனியாக்கினார்!
கி.பி. 1893ம் ஆண்டு இளம் கவிக்குயில் குமாரி சரோஜினி தேவி ஐதராபாத் நகரம் திரும்பினார். தந்தை, தம்பிகள், தங்கைகள் வரவேற்றனர். புதுமையுடன் திரும்பிய ஒரு இளம் பெண்கவியை!