கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/05


5. நெஞ்சிலே தைத்த நெருஞ்சி முள்!

டாக்டர் கோவிந்தராஜுலு நாயுடு டாக்டர் தொழிலில் புகழ் பெற்ற வருவாயாளர்! சரோஜினிதேவி, ஆங்கிலப் புலமை உடைய அருமையான பேச்சாளர்; இளம்பெண் கவிஞர்!

கல்வி அறிவு நன்கு பெற்ற இருவர்கள் இடையே பொருளாதார வலிமை இருந்தது; இத்தனைக்கும் மேலே இருவரிடமும் ஒத்த அன்பும்-பண்பும் இருந்தது;

டாக்டர் நாயுடு பிரம்மசமாஜ தொண்டர்; அவர் இல்லத்துக்குள் எப்போதும் விருந்தாளிகள் நடமாட்டம் இருந்தகொண்டே இருக்கும்! வம்பர்களோ, துன்பர்களோ, வஞ்சர்களோ, நஞ்சர்களோ எவருமே அங்கு வாரார்!

காரணம், பிரம்ம சமாஜத் தோழர்களுடன் அடிக்கடி சமுதாய சீர்திருத்தங்களைப் பற்றி, டாக்டர் கலந்துரையாடுவார்; திட்டம் தீட்டுவார்; படித்தவர்கள், படிக்காதவர்கள், படித்துப் பக்குவம் பெற்ற பண்பாளர்கள், அன்போடு எவரையும் அரவணைத்துப் போகும் அன்பாளர்கள், சமூகப் பிரச்னைகளை அகற்றிட கலந்துரையாடுவோர். உலக மாறுதல்களைப் பற்றி உணர்ந்து பேசுவோர், சமுதாயம் என்ற நெல்லுள்ளே அரிசியை மூடிக் கொண்டிருக்கும் உமி, தவிடு போன்ற மாசுகளை அகற்றிட என்ன வழி என்று ஆய்வோர் அனைவரும் கூடி நாயுடு வீட்டில் வாதிப்பார்கள்!

இந்த சமுதாயச் சீர்திருத்தப் பேச்சுக்களிலே கவியரசி சரோஜினி நாயுடுவும் கலந்துகொண்டு, இடையிடையே தக்க யோசனைகளைக் கூறுவார். அதனால், கவிக்குயில் சிந்தனையில் கவிதை உணர்ச்சி மட்டுமல்லாமல் சீர்திருத்த எழுச்சி எண்ணங்களும் இடையிடையே தோன்றி வளர்ந்தன.

டாக்டர் கோவித்தராஜுலு சரோஜினி தம்பதிகளுக்கு குழந்தைகள் நால்வர் பிறந்தனர் தனது குழந்தைகளுக்கு கவிதையுணர்ச்சியுடன் இளம்கவி சரோஜினி பெயர் சூட்டினார்.

தனது குழந்தைகளுக்கு அவர் பெயரிட்ட சம்பவத்தை பற்றிப் பாடல்களை இயற்றியுள்ளார். இதோ அப் பாடலின் உட்பொருள்:

'ஜயசூரியா' இது அவர்களது மூத்த மகன் பெயர் கதிரவனைப் போல் ஒளிபடைத்தவனே! கவி புனைவதிலும், நாட்டுக்குச் சேவை செய்வதிலும், ஜெயசூரியா உனது பெயருக்கு ஏற்ப வெற்றிக் கொடி நாட்டி வா! என்பார்!

இரண்டாவது பெண் குழந்தை; பெயர் பத்மஜா; இவர் மேற்கு வங்கக் கவர்னராகப் பணியாற்றியவர்; பத்மஜா தாமரையில் வாழும் பெண்மணியே மலர் மகளாம் திருமகள் உனக்கு எல்லாத் திருவினையும் ‘நல்கிடுவாளாக’ என்றார்!

மூன்றாவது ஆண்மகன்; பெயர் ரணதீரன்!

போர்க் களத்தில் வீரத்துடன் விளங்குவோனே; இராமாயணத்தில் வருணிக்கப் பெறும் வீர புருடர்க்ளை நிகர்த்து, நின் வாழ்க்கைக் களத்திலே அறம் வழுவாது முன்னேறுவாயாக! அன்பில் நின்றிடுவாயாக! என்று வாழ்த்துவார்.

இறுதிப்பெண் லீலாமணி, உள்ளத்தில் உவகையூட்டும் நீலமணி நிகர்த்தவளே, நின் பெயருக்கு ஏற்ப செம்மை நெறியில் ஒளிருவாயாக இடுக்கண் ஏதுமின்றி என்றும் இன்ப நெறிகளுடன் வாழ்வாயாக! என்பார் கவியரசி சரோஜினி தேவி, தனது குழந்தைகளின் பெயர்களை இவ்வாறு கவிதைகளால் விளக்குகிறார்.

கவியரசி சரோஜினி தேவி, யாரை மனமார நேசித்தாரோ, அவரையே தனது வாழ்க்கைக்குத் துணைவராக ஏற்கும் பேறு பெற்று, “தற்காத்தி தற்கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்து சோர்விலாள் பெண்” என்ற இலக்கணத்திற்கு ஏற்ப, அமைதியும் பிறர் போற்றும் இல்லற அழகுடன் குழந்தைகள் ஈன்று வாழ்க்கையை வளமாக நடத்தி வந்தார்.

தாய்மை பண்புக்குகந்தவாறு நான்குக் குழந்தைகளைப் பெற்றெடுத்து அக்குழந்தைகளைப் பேணி, பாதுகாத்து வளர்த்தார். அப்படி வாழ்ந்தும் கூட, அவரது வாழ்க்கையில் ஏதோ ஒரு ஏக்கம், நெஞ்சிலே ஒரு நெருஞ்சி முள் தைத்தாற்போல உறுத்திக் கொண்டே இருந்தது.

கவிதையும், கற்பனையுமா வாழ்க்கை? மலர்கள் அழகும்-சோலைகளின் வனப்புகளும், வெண்ணிலாவும், தென்றலும், மேடைப் பேச்சுகளும் மேன்மையான புகழ் தரும் இலக்கிய ஆய்வுகளும் தானா வாழ்க்கை?

இல்லை; வேறு ஏதோ ஓர் ஏக்கம், பிரச்னைகள் அழுத்தம், ஆற்ற வேண்டிய மற்றும் ஒரு கடமையும் உள்ளதே- அதுதான் வாழ்க்கை என்று சரோஜினி தேவி நம்பினார். ஆனால், அந்தப் பிரச்னை என்ன என்று சிந்தித்துக் கொண்டே இருந்தார்.