கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/08
கவிக்குயில் சரோஜினி தேவி இந்தியா முழுவதுமாகச் சுற்றிச் சுற்றிச் சுயராஜ்ஜியம் பெறவேண்டும் என்பதற்காக, சுய ஆட்சிக்கட்சி நடத்தியக் கூட்டங்களிலும், மற்ற பிற கூட்டங்களிலும் சூறாவளிச் சுற்றுப்பயணம் பிரச்சாரம் செய்தார்:
ஓய்வு ஒழிவின்றி, கவிதைகள் எழுதக்கூட நேரமின்றி, தனிமையாகவும், விடுதலைப் போராட்டத் தலைவர்களோடும் சுயாட்சிக் கட்சி சார்பாகவும் கிராமம் கிராமமாகச் சென்று பேசியதால் அவரது உடல் நலம் சீர் குலைந்தது; நோயுற்றார்; லண்டன் பயணம் சென்று சிகிச்சைப் பெற்று, அங்கே சில மாதங்கள் ஓய்வு எடுக்குமாறு கவிக்குயில் நண்பர்கள் கூறியதற்கேற்ப லண்டன் மாநகர் சென்றார்.
முதல் உலகப்போர் 1914-1918-ம் ஆண்டு நடந்து முடிவுற்றது. கோபாலகிருஷ்ண கோகலே ஆங்கிலேயர்களையும், அவர்களது அரசையும் எதிர்க்காமல் அனுசரித்து போனவாறு, காந்தியடிகளும் அவரைப் பின்பற்று நடந்தார்!
உலகப்போரில் இங்கிலாந்து நாடும், பிரிட்டிஷ் ஆட்சியும் சிக்கித் தவிக்கும்போது, அதற்கு உதவி செய்வதுதான் மனிதாபிமானம் என்று காந்தியடிகள் நினைத்தார்!
அதற்கு ஏற்றவாறு பிரிட்டிஷ் போர்ப்படைக்குக் காந்தியடிகளே முன்னின்று ஆட்களைச் சேர்த்துக் கொடுத்தார்! கடுமையாகக் காந்தியார் அலைந்ததால் அவரது உடல் நலமும் நலிந்து, நோயுற்றார்! போர்க்களத்தில் இந்திய ராணுவத்தினர் ஆற்றிய அரிய செயல்களையும், உயிர்த் தியாகங்களையும், பண உதவிகளையும் ஏற்று ஆங்கிலத் தளபதிகளும், அரசு அதிகாரிகளும் மனமாரப் பாராட்டினார்கள்.
போரில் இங்கிலாந்து பெற்றது வெற்றி. ஆனால், மறந்தது நன்றியை எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு; ஆனால், செய்நன்றியைக் கொன்ற மாபாவிகளை மறக்குமா காலம்?
செய்நன்றி மட்டுமல்ல; காலத்தால் செய்த உதவியை கொன்றுவிட்ட பிரிட்டிஷ் பாம்பு நஞ்சு கக்க ஆரம்பித்தது எந்தவித விசாரணைகளும் இல்லாமல், விடுதலைப் போராட்டத்தலைவர்களைச் சிறையிலடைத்தது. இதனால் மக்கள் ஆங்காங்கே பொங்குமாங் கடலெனப் பொங்கி எழுந்தார்கள்.
பொதுமக்கள் எதிர்ப்புகளைக் கண்டு பீதியடைந்த பிரிட்டிஷ் அரசு, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடத் தயாரானது; அந்த காட்டுமிராண்டிச் செயல்களில் ஒன்று தான் ஜாலியன் வாலாபாத் துப்பாக்கிப் படுகொலை.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஓர் ஊர் ஜாலியன் வாலா பாத். விடுதலைப் போராட்ட வீரர்களையும், தலைவர்களையும் பலாத்காரமாகச் சிறை பிடித்து அடைக்கப்பட்டதால், அவ்வூர் பொதுமக்களும், சுற்றுச் சார்பு வாழ் மக்களும் கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்தினார்கள்.
அந்தக் கூட்டத்தைக் கேட்கக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆயுதம் ஏந்தாதவர்களாவார்கள். அப்படிப்பட்ட நிராயுதபாணி மக்களை, ஆங்கில தளபதியாக இருந்த ஜெனரல் டயர் என்பான், துப்பாக்கிகளிலும் இயந்திரத் துப்பாக்கிகளிலும் இருந்த குண்டுகள் எல்லாம் தீரும் வரை, சுட்டேன். சுட்டேன், சுட்டேன் என்று சிட்டுக் குருவிகளைச் சுடுவதுபோலச் சுட்டுத்தள்ளினான்.சுட்டதோடு மட்டுமா அந்த அரக்கன் நின்றான்? கூட்டத்துக்கு வந்திருந்த பொதுமக்களை அவமானப்படுத்தினான்! பெண்களைக் கேவலமாக நடத்தினான்! ராணுவ வீரர்கள் செய்த கொடுங்கோன்மைகளை வரவேற்று வாழ்த்தி ஊமைபோல வேடிக்கைப் பார்த்த வெறியனானான் டயர்!
பஞ்சாப் படுகொலை நிகழ்ச்சிகளைக் கேள்விப்பட்ட உலகநாடுகள் அதிர்ச்சி அடைந்தன! இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் கொந்தளித்து வீறு கொண்டது!
உலக நாடுகளை எல்லாம் பதைபதைக்க வைத்த இந்த பஞ்சாப் படுகொலையை விசாரணை நடத்திட பிரிட்டிஷ் அரசு ‘ஹன்டர் கமிட்டி’ என்ற ஒரு குழுவை அமைத்தது.
இந்தக் குழு ஒரு கண் துடைப்பு; இதனால் உண்மை வெளிவராது; பிரிட்டிஷ் கொடுமைகளை மூடி மறைக்கவே இந்தக் குழுவை அந்த அரசு அமைத்துள்ளது என்று இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை கிளர்ந்தெழுத்து கண்டனம் செய்தது.
எனவே, அகில இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக, ஜாலியன் வாலாபாத் தில் நடந்தது என்ன? என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திட பண்டித மோதிலால் நேரு, மகாத்மா காந்தி ஆகியோரைக் கோண்ட வேறொரு குழுவை அமைத்து விசாரணை நடத்தியது.
'பிரீட்டிஷ் அரசும், ராணுவமும் எவ்விதத் தவறும் செய்யவில்லை; இந்தியப் போலீசார்தான் அக்கிரமமான அராஜகங்களைச் செய்து விட்டார்கள்! என்று ஹன்டர் கமிட்டி தனது விசாரணையில் தெரிவித்தது.
காங்கிரஸ் மகாசபை விசாரணைக்குழு ஜாலியன் வாலாபாத் என்ற ஊருக்கே சென்று, அங்குள்ள ஊர் மக்களை விசாரித்து, துப்பாக்கித் தர்பார் வேட்டுகள் நடந்த இடத்தை நன்றாகச் சுற்றிப் பார்த்து, அந்த இடத்தை ஒரு படமாகவும் வரைந்து, செத்த உடல்களையும் புகைப்படம் எடுத்து மிக நுட்பமாக விசாரணை செய்து, ‘ராணுவம்தான் அராஜகம் செய்தது; பெண்களிடம் மிருகத்தனமாக நடந்தது’ என்ற கருத்துக்களை வெளியிட்டது.
இந்த இக்கட்டான காலகட்டத்தில்தான் சரோஜினி நாயுடு உடல்நலம் இல்லாமல் லண்டன் சென்றார்!
நடந்த கொடுமைகள் அனைத்துக்கும் ராணுவம்தான் பொறுப்பு என்ற காங்கிரஸ் மகாசபை விசாரணைக்குழு கருத்துக்களை எல்லா இந்தியப் பத்திரிகைகளும் வெளியிட்டு அதனதன் கண்டனங்களை அப்போது வெளியிட்டன.
இலண்டன் மாநகர் சென்ற கவியரசி சரோஜினி தேவி லண்டனில் இந்திய ஜிலாபத் கமிட்டியின் சார்பாக நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
பஞ்சாப் படுகொலைச் சம்பவம் மிகவும் மோசமான பழிவாங்கும் பாதகப் போக்கு என்பதை கவியரசி உணர்ந்தார். இந்த ஆவேச உந்தல்களால் லண்டன் நகரில் கிங்ஸலீ ஹாலில் நடந்தக் கூட்டத்தில் பேசுவதாக ஒப்புக் கொண்டார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு லண்டன் வந்துள்ள கவியரசி சரோஜினி நாயுடு என்னப் பேசப்போகிறார் என்பதைக் கேட்க ஆவல் கொண்ட மக்கள் திரள்திரளாக மண்டபத்துள் குழுமினார்கள்.
கூடிய அந்தக் கூட்டத்தில் சரி பாதி பேர் ஆங்கிலேயர்களே என்பது குறிப்பிடத்தக்கது. மற்றையோர் இந்திய மக்களே! மேற்கண்ட கூட்டத்தில் கவிக்குயில் சரோஜினி வீராவேசமாகப் பேசியபோது குறிப்பிட்டதாவது:
★ “ஏ, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களே இந்திய மக்களைக் கொடிய மிருகங்களை வேட்டையாடுவதுபோல வேட்டை ஆடலாமா?
நிராயுதபாணிகளாகக் கூட்டம் கேட்க வந்த நிரபராதிகளைச் சுட்டேன், சுட்டேன், வெடிமருந்து தீரும் வரைச் சுட்டேன் என்று ஜெனரல் டயர் வெறியாட்டமாடி குண்டடிப்போர் செய்தது நியாயமா? பிரிட்டிஷ் வீரம் இதுதானா? ஜனநாயகத்தின் தொட்டில் இங்கிலாந்து நாடு என்கிறீர்களே, இதுதான் அந்த ஜனநாயக வெறியாட்டமா? லட்சணமா?
பெண் குலத்துக்கு பெருமை தேடுகிறோம் என்று வாய் மேளம் அடிக்கும் பிரிட்டிஷ்காரர்களே. இந்தியப் பெண்களை அம்மணமாக நிறுத்தலாமா? ஆடைகளை அகற்றலாமா?
★ நிர்வாணமானப் பெண்களைக் கசைகளால் அடிக்கலாமா? கண்டபடி கற்பழிக்கலாமா? கதறி ஆழ ஆழ அவர்களைச் சித்ரவதை செய்யலாமா?
★ எனது நாட்டுச் சகோதரிகளை மானபங்கம் செய்தச் சண்டாளர்களை, நியாயத்திலும்-நாகரிகத்திலும் உயர்ந்தவர்கள் என்று டம்பமடித்துக்கொள்ளும் பிரிட்டிஷார் தண்டிக்காமல் விட்டது ஏன்?
மனிதாபிமானமே இல்லாத இந்த காட்டுமிராண்டிகளின் பயங்கரச் செயல்களை நடத்திய முரடர்களை, பிரிட்டிஷ் பாராளுமன்றம் பாராட்டியதே-அது நீதிதானா?
★ இந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த இந்திய மக்கள் ‘வெட்கம், வெட்கம்’ என்று கூக்குரலிட்டார்கள்.★ கூட்டத்தில் பாதியளவுக்கு மேல் கலந்துகொண்ட ஆங்கிலேயர்கள், வெட்கத்தால் முகம் கருகித் தலை குனிந்தார்கள்.
இந்திய அரசு பற்றி பிரிட்டிஷ் மக்களுக்கு இருந்த நல்லெண்ணத்தைச் சரோஜினி பேச்சு தவிடுபொடியாக்கி விட்டது.
பிரிட்டிஷ் மந்திரி சபையில் அப்போதைய இந்திய மந்திரியாக இருந்தவர் மாண்டேகு என்பவர். கவிக்குயில் பேச்சு இங்கிலாந்து மக்களிடையே ஒருவித அதிருப்தியை பிரிட்டிஷ் அரசு மீது உருவாக்கி விட்டதை அவர் நேரிடையாகவே பார்த்தார்.
அதனால், கவிக்குயில் சரோஜினி நாயுடுவுக்கு மாண்டேகு நேரிடையாகவே ஒரு கடிதம் எழுதினார் அந்தக் கடிதத்தில் அவர் எழுதியதாவது:
★ "பஞ்சாப் மாநிலத்தில், இந்தியப் பெண்கள் நிர்வாணமாய் நிறுத்தப்பட்டார்கள், கசைகளால் அடிக்கப்பட்டார்கள் என்றேல்லாம் ராணுவ அதிகாரிகள் மீது தாங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமே இல்லை.”
★ “அரசாங்கம் நியமித்த ஹண்டர் கமிட்டியில் இதைப் பற்றி ஒன்றும் இல்லை. காங்கிரஸ் விசாரணைக் குழுவின் அறிக்கையிலும் ராணுவ அதிகாரிகள் பெண்களை மானபங்கம் செய்ததாய்க் கூறப்படவில்லை.”
★ “எனவே, தாங்கள் கிங்ஸ்லி ஹாலில் பேசியபேச்சு சற்றும் ஆதாரமற்றது; ராணுவ அதிகாரிகள் மீது கூறிய குற்றச்சாட்டுக்களைத் தாங்கள் உடனே வாபஸ் பெற்று, மன்னிப்புக் கோரவேண்டும்” என்றார் மாண்டேகு.
மந்திரி மாண்டேகு சிறந்த ஒரு ராஜதந்திரி என்று பெயர் எடுத்தவர். அவருக்கு கோகலே போன்ற இந்தியத் தலைவர்களிடம் நல்ல செல்வாக்கு இருந்தது இந்த நேரத்தில் மாண்டேகு சரோஜினிதேவி பேச்சின் மீது ஓர் அறை கூவலை வேறு விட்டுவிட்டார் அல்லவா?
அதனால் பிரிட்டிஷ் பத்திரிகைகளும் அதன் எடுபிடி இந்திய ஏடுகளும், கவியரசி சரோஜினி தேவியைக் கேலியாகவும், கிண்டலாகவும் கண்டித்தும் எழுதின.
"இந்தியத் தலைவர்கள் பிரிட்டிஷ் ஆட்சி மீது இப்படித் தான் கண்டபடி புளுகுகிறார்கள் என்ற முடிவை உலகுக்கு உருவாக்கிவிட்டன பிரிட்டிஷ் சார்பு ஏடுகள்!
விடுவாரா சரோஜினிதேவியார்? இந்திய மந்திரி மாண்டேகு அறை கூவலைச் சவாலாக ஏற்றார். அவருக்கு உடனே விவரமாக மறுகடிதம் எழுதினார். என்ன விவரம் அது?
★ மாண்டேகு பெருந்தகையாளரே!
என் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவையா? பொய் என்றால் அதை நிரூபிக்க தாங்களும், பிரிட்டிஷ் அரசும், இந்திய அரசும் முன் வருமா என்று உம்மை நோக்கி அறை கூவுகின்றேன்! வருவீரா?
★ காங்கிரஸ் மகா சபையின் விசாரணைக்குழு அறிக்கையைக் கவனமாக நீர் படித்தீரா?
★ பஞ்சாப் மாநில ராணுவ ஆட்சியில் போலீசார் செய்த பயங்கர அட்டூழியங்கள் ஒன்றா? இரண்டா? பக்கம் பக்கமாக காங்கிரஸ் விசாரணைக்குழு அறிக்கை வெளிவிட்டிருக்கிறதே, அதைப் பார்த்தீரா?
★ ஒரு வேளை நீர் சூரியனையும் மறைக்கலாம்; பஞ்சாபில் என் சகோதரிகளுக்கு செய்யப்பட்டக் கொடுமைகளை நீரோ அல்லது உமது அரசோ, மறக்கவோ, மறைக்கவோ முடியாது.★ நேர்மை, இரக்கம், மரியாதை என்ற மூன்றும் பெண்களுக்கு வழங்கும் மனித நேயங்கள் என்றைக்கும் வெட்கப்பட்டுத் தலையைக் குனியத்தான் வேண்டும். மறந்து விடாதீர்!
★ இந்திய அரசின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் உமக்கு இருக்கிறதே என்றா? சரோஜினி தேவி தனது கடிதத்தில்.
மறுபடியும் மாண்டேகு மந்திரி சரோஜினியை எதிர் கேள்வி கேட்டபோது, "போலீசார் செய்த அக்ரமங்களை ராணுவ ஆட்சி மீது எவ்வாறு சுமத்தலாம்?" என்றார்.
அதற்குக் கவியரசி பதில் கூறிய போது: ராணுவ ஆட்சியில் நடந்த போலீஸ் அக்கிரமங்களுக்கு ராணுவ அதிகாரிகள் பொறுப்பன்று என்றால், வேறு யார் தாம் பொறுப்பு; ராணுவத்தையும் மீறிப் போலீஸ்காரர்கள் அவற்றைச் செய்தார்கள் என்று மந்திரி மாண்டேகு நிரூபிக்கப் போகிறாரா? என்று மறுவிடை தந்தார்.
இவ்வளவு உரையாடல் விவரங்களுக்குப் பிறகு, சிறந்த ராஜதந்திரி என்று புகழ்பெற்ற மந்திரி மாண்டேகு சரோஜினி நாயுடு பதிலைக் கண்டு மௌனமானார்.
இலண்டன் நகரில் எடுத்துக் கொண்ட சிகிச்சையால், கவியரசி உடல் தேறி நலமானது. மீண்டும் அவர் இந்தியா திரும்பினார்.
இந்தியா வந்து சேர்ந்ததும், இந்திய அரசாங்கத்துக்கும், வைசிராய்க்கும் ஒரு கடிதம் எழுதினார்; என்ன அந்தக் கடிதம், இதோ:
"பஞ்சாப் ராணுவ ஆட்சியில் ஏற்பட்ட கொடுமைகளை இந்த அஞ்சலிலே விளக்கினார். நடைபெற்ற பஞ்சாப் குற்றங்களுக்கு பொறுப்பு ஏற்க வேண்டியது அரசாங்கமாகும்.அந்த பொறுப்பை அரசு எடுக்காததால், பிரிட்டிஷ் என்னைப் பாராட்டி வழங்கிய 'கெய்சர் ஹிந்த்' என்ற பதக்கத்தை நான் அணிந்து கொள்ள முடியாது. அதனால் அதைத் திருப்பி அனுப்பி விடுகிறேன் என்று கடிதத்தில் குறிப்பிட்டு விட்டு அந்தப் பதக்கத்தை அனுப்பிவிட்டார்.
"பிரிட்டிஷ் அரசு பதக்கத்தை நான் அணிய மாட்டேன்; அது என் கௌரவத்துக்கும், சுயமரியாதைக்கும் இழுக்கானது; இந்தப் பதக்கத்தை நான் அணிவேனானால், எனது தாய் நாட்டின் தன்மானத்தை அடகு வைத்தவளாகி விடுவேன் என்று அக்கடிதத்தில் தெரிவித்து திருப்பி அனுப்பினார்
கவியரசி சரோஜினி நாயுடு பிரிட்டிஷ் ஆட்சி வழங்கிய பதக்கத்தைத் திருப்பி அனுப்பிவிட்ட சம்பவம், பெரும் கிளர்ச்சிக்கான எழுச்சியை உண்டாக்கியது. கவியரசியைப் பின்பற்றி பலர் தமது பட்டம் பதவிகளைத் தூக்கி எறிந்தார்கள். பஞ்சாப் சகோதரிகள் மானபங்கம் செய்யப்பட்டதால், பெண் சிங்கம் சரோஜினி சீறி எழுந்து கர்ஜனை செய்தது. இதனால் இந்தியாவின் எல்லா பகுதிகளுமே புதியதோர் விழிப்புணர்வு பெற்றது.
சரோஜின் தேவியின் இந்தப் பதக்கம் துறப்புச் சம்பவம் மற்ற நாடுகளிலும் ஒரு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நேரத்தில் கானாட்டுக் கோமகன், இந்தியா வருகை தந்தார். பஞ்சாப் படுகொலை சம்பவத்தால் இந்திய மக்கள் மனம் பூகம்பம் வெடித்துப் பிளவுபட்டிருப்பதை அக்கோமகன் கண்டார்.
இந்திய மக்கள் உள்ளத்தை சாந்தப்படுத்திட ஏதாவது செய்ய வேண்டுமே, அவ்வாறில்லாவிட்டால் நிலமை மிக்க விபரீதமாகிவிடுமே என்று அஞ்சியக் கோமகன், 'நடந்ததை மறந்து விடுங்கள்: என்று கூறி, பிரிட்டிஷ் ஆட்சியின் சார்பில் மன்னிப்பும் கேட்கிறேன் என்று வேண்டினார்.
இந்திய மந்திரி சிறந்த ராஜதந்திரி; அவர், கவிக்குயில் சரோஜினி நாயுடு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு சார்பாக சவால்விட்டார்.
அந்த சவாலை கவியரசி ஏற்றுத்தக்க பதில் மூலமாக வாதமிட்டார். பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட களங்கத்துக்காகப் போராடினார். அந்தப் போராட்டத்தை லண்டன் மாநகரிலே, அதாவது சிங்கத்தின் குகைக்கே சென்று அதைச் சந்தித்தார்.
இறுதியாக, சரோஜினிதேவி வாதமே வெற்றி பெற்றது; கானாட்டுக் கோமகன் பிரிட்டிஷ் அரசு சார்பாக இந்திய மக்களிடமே மன்னிப்புக் கேட்டார்.