கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/16
இரண்டாம் உலகப் போர் 1945-ம் ஆண்டில் முடிவடைந்தது; நேச நாடுகள் வெற்றி பெற்றன. இரண்டு கூறுகளாகப் பிளவுபட்டிருந்த போர்க் கூட்டணி நாடுகளில் நேச நாடுகள் கூட்டணி மகிழ்ந்தன.
இந்தியாவின் வைசியராயாக வேவல் பிரபு வந்தார்; வந்தவுடனே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இந்தியத் தலைவர்களை எல்லாம் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
அப்போதுள்ள இந்திய மக்களின் மனக்குமுறல்களை நன்கு புரிந்து கொண்டார். என்ன செய்யலாம் இதற்குப் பரிகாரம் என்று சிந்தித்த வேவல் பிரபு, "இந்தியாவை இனிமேல் துப்பாக்கியால்தான் ஆள முடியும்" என்ற கருத்தை இங்கிலாந்து அரசுக்கு தெரிவித்து விட்டார்.பிரிட்டிஷ் அரசாங்கமும் இதுவரை நடந்த அந்த இந்திய அரசியல் ரணக்களங்களைக் கண்டு, இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்து விடலாம் என்று கூறியது; ஆனால் இந்து-முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டால்தான் நல்லது என்பதைத் திட்டவட்டமாக அது முடிவு செய்தது!
முஸ்லிம் லீக்கின் தலைவரான முகமது அலி ஜின்னா காங்கிரஸ் மகாசபையில் இருந்தபோது தனிப்பெரும் செல்வாக்குடன் திகழ்ந்து வந்தார். பிறகு, முஸ்லிம் லீக் என்ற ஒரு கட்சியைத் துவக்கினார்; முஸ்லிம் மக்களுக்குத் தனி நாடு தேவை என்ற கோரிக்கையை எழுப்பிக் கொண்டிருந்தார்.
காந்தியடிகள் கூறிய எந்த யோசனைகளையும் ஜின்னர் கேட்கவில்லை; தனிநாடு என்ற மோகத்திலேயே மூழ்கிக் கிடந்தார்! அதனால்தான் பிரிட்டிஷாரும் இந்து-முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டும்; அப்படி ஒரு ஒற்றுமை உருவானால்தான் சுதந்திரம் வழங்க முடியும் என்ற நிபந்தனையை விதித்தார்கள்.
கவியரசி சரோஜினி தேவி ஜின்னாவுடன் பல ஆண்டுகள் பழகியவர்; காந்தியார் பேச்சு சுமூகமாக முடியவேண்டும் என்பதற்காக கவிக்குயிலும் அவரிடம் பல தடவைகள் பேசிப் பார்த்தார். ஆனால், ஜின்னாவும்-லீக்கும் பிடிவாதமாகவே இறுதிவரை இருந்தன.
சரோஜினி, இந்து-முஸ்லிம் ஒற்றுமைப் பற்றித் தெளிவான கருத்துடையவர். முகமதுஅலி சகோதரர்களுடனும் காந்தியடிகளுடனும், கிலாபாத் இயக்கத்தில் சேர்ந்து போராடியவர். கவிக்குயில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையைப் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார் என்பதை இங்கே பார்ப்பது நல்லதல்லவா? இதோ ஒரு கூட்டத்தில் அவர் ஆற்றிய பேச்சின் ஒருபகுதி:"உலக மதங்களில் முதன்முதலாக ஜனநாயகத்தின் உண்மையான தத்துவங்களைப் பகிரங்கமாகப் போதித்துக் காட்டிய பெரிய மதம் இஸ்லாம் ஒன்றே!"
மேல்நாட்டினர் ஏதோ தமது நாட்டில்தான் முதன் முதலாக ஜனநாயகம் தோன்றிவிட்டதாகப் பெருமையோடு பேசுகிறார்கள். ஆனால், அதுவல்ல உண்மை! ஜனநாயகம் என்பது பரந்த பொருளில் ஆசியாவின் ஒரு பகுதியான அரேபியா பாலைவனத்தில் தோன்றிய ஒரு தீர்க்கதரிசியால் உருவாக்கப்பட்ட ஒன்று!
இந்த தத்துவத்தை, பெருமைமிக்க அக்பர், சக்ரவர்த்தி இஸ்லாத்தின் ஜனநாயகத்தை, அதன் உண்மை வடிவத்தில் காட்டினார்; அவரைப் பின்பற்றியாவது எனது இந்து-முஸ்லிம் சகோதரர்கள் மனத்திற்கொண்டு ஒற்றுமையை வளர்க்கப் பாடுபட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்."
சரோஜினி இவ்வளவு கருத்துக்களைக் கூறியும் ஜின்னா அதை மதிக்கவில்லை; அதனால், இடைக்கால அரசு ஒன்று ஜவகர்லால் நேருவால் அமைக்கப்பட்டது. அதில் சேருமாறு நேரு ஜின்னாவை அழைத்தார்.
முதலில் அந்த அரசில் அங்கம் வகித்த ஜின்னா, இடையில் இடையூறு சில செய்தார்.
இந்தியாவுக்கு மவுண்ட் பேட்டன் பிரபு 1947-ம் ஆண்டு மார்ச் 21 அன்று வைசியராயாக வந்து பதவி ஏற்றார்; இந்தியாவை இரண்டு துண்டாக்கினார்; ஒன்றை இந்துஸ்தான் என்றார்; மற்றொன்றைப் பாகிஸ்தான் என்று அறிவித்தார்.
இந்த பிளவுகளுக்குப் பிறகு 1941-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர இந்தியா உதயமாயிற்று. பண்டித நேரு முதல் பிரதமரானார்.நாட்டில் நடைபெற்ற கலவரங்களைக் கண்ட கவிக்குயில் காந்தியடிகளாரைப் போலவே, அவரும் கவலை அடைந்தார். நாடு எங்கு பார்த்தாலும் போர்க்கள இரத்த காடாகக் காட்சி தந்தது.
"இரத்தப் பலி இல்லாமல், சுதந்திர தேவியைப் பெற முடியாது”. என்று சுவாமி விவேகானந்தர் கூறிய வாக்கு உண்மையாகவே மாறிவிட்டது.