கவிஞர் பேசுகிறார்/இசை என்பது என்ன?
இசை என்பது என்ன?
இசை என்பது என்ன? அந்த நாட்டில், பழைய நாள் தொட்டு மக்களின் உணர்வில் ஊறி நாளடைவில் உருப்பட்ட இலக்கணம் உடையது. பாட்டுக்கு
பாவம் எப்படியோ, அப்படியே இசையும் முக்கியம்.
இனிய மொழி என்பது அந்நாட்டின் பேச்சு, பாட்டுக்கு வேண்டிய மொழிகள், எல்லாருக்கும் புரியும்படி இருக்கவேண்டும்! இலக்கண முடையவையாகவும் இருக்கவேண்டும்.
இப்படிப்பட்ட பாவமும், இசையும், கருத்தும் பிறக்கின்ற கவிஞனின் உள்ளமானது மொழியிலக்கணம், யாப்பிலக்கணம், பயின்ற தாயிருக்கவேண்டும். இல்லா விட்டால் பாடும் பாடல்கள் பாடியவனுடைய பெருமையைக் கெடுத்து விடுவதோடு, எதைக்குறித்துப் பாடினானோ அந்தச் செய்தியே இகழ்ச்சிக் குரியதாகி விடும்.
பாடல்களின் நோக்கம் என்ன எனில், பாவமும் இசையும் மொழியும் இருப்பது மாத்திரமல்ல; பாடும் போது கருத்து விளக்கமுறவேண்டும். பாடலில் மொழி அதாவது கருத்துத்தான் இரத்தினம். பாவமும் இசையும் வர்ணத்தகடும், வேளைப்பாடுந்தான்.
இப்போது உரை நடைக்கும் பாடலுக்கும் உள்ள வேறுபாடு விளங்கி யிருக்கும். பாடலின் மேன்மையை இன்னம் கூற வேண்டுமானால், உரைநடையானது கேட்கமுடியும்; எழுதிவைக்க முடியும்; நினைவில் நிறுத்த ஏற்ற தல்ல. பாட்டு நினைவில் நிற்கும். பாடுவது பாட்டின் கருத்தை மக்கள் நினைவில் நிற்கச் செய்யத்தானே!
பாடலினால் ஒரு கருத்தை மற்றொருவன் நெஞ்சில், உரித்த சுளை போல் புகுத்த முடியும். அது போலவே இன்பம் பயக்கும். ஆயிரம் பேர் பேசட்டும்; அது சந்தைக் கடைக் கூச்சலாகவோ அல்லது அறிஞரின் சொற் பொழிவாகவோ இருக்கட்டும். எதுவாயிருந்தாலும் அந்தப் பேச்சு நடுவில் ஒரு பாடல் கிளம்பினால், எல்லோருடைய செவிகளும் அப்பாட்டை நோக்கியே திரும்பும். சூரியனை நோக்கிச் சூரிய காந்திப் பூத் திரும்புவது போல. அதென்னமோ பாடலில் மக்கள் நெஞ்சை அள்ளும் ஒரு வகை வன்மை அமைத்திருக்கிறது.
பாடலின் மேன்மை அதன் உபயோகம் இவற்றைக் கருதியல்லவா மதத் தலைவர்களும், தம் தம் கொள்கையைப் பாடலால் அமைத்தார்கள். சைவக் கொள்கையை நிறுவத் தேவார, திருவாசகங்கள் என்ன? வைணவத்திற்குத்திருவாய் மொழி என்ன? மற்றும் வேதாந்த கருத்துக்களுக்குத் திருப்புகழ், தாயுமானார் என்ன, இவைகள் எல்லாம் இன்னிசைப் பாடல்கள். இன்னும் கிறிஸ்தவம், இஸ்லாமியம் கூடப் பாடலால் மக்கள் உள்ளத்தைக் கவரும் நோக்கம் உடையவை.
பாட்டுக்கு மகிழ்வதென்பது, உயிரின் இயற்கை என்று கூடச் சொல்லலாம். மனிதனின் இயல்பான நிலை தவிரச் சிறிது மகிழ்ச்சி உண்டானால், அவன் பாட அல்லவா தொடங்கி விடுகிறான். ஏணைக் குழந்தை பாட்டை விரும்புகிறதென்றால், பாட்டில் உள்ள பாசத்தன்மை பற்றிக் கூறவா வேண்டும்?
உடல் நலியப் பாடுபடுகிறவர்களும் பாடுகிறார்கள். உழுபவன் பாடுகிறான். ஏற்றம் இரைப்பவன் பாடுகிறான். இவ்விடத்தில் மற்றோர் உண்மை நமக்கு விளங்குகிறது. பாட்டானது மனிதனுக்கு இன்பந்தருவது மட்டிலும் அல்லாமல், அது இருக்கும் துன்பத்தையும் நீக்கக்கூடியது. சேற்றில் முள் தைப்பது கூடத் தெரிய வில்லை உழவுப் பாடகனுக்கு.
பாட்டின் உபயோகத்தைச் சொல்ல வேண்டுமானால், நன்றாக அமைந்த பாடல் தன் கருத்துப்படி மனிதனைத் திருப்புகிறது. இதுதான் பாட்டினிடத்தில் உள்ள குறிப்பிடத்தக்க மேன்மை.வீரப்பாடல் எனில் பசையற்ற நெஞ்சையும் துடித்தெழும்படி செய்கிறது. இதற்குச்சான்று பிரான்ஸ் தேசத்து உலகம் புகழ் பெற்ற மர்ஸேயேஸ் என்னும் போர் நடைப் பாட்டு ஒன்றே போதும்.
சோகப் பாட்டு, சோகம் பொழிவதைச் சந்திரமதி புலம்பலே சொல்லிவிடும்.
பாட்டுக்கு முன் வறுமை பறக்கிறது. பாட்டுக்கு முன் பசி பறக்கிறது. "செவிக்குணவில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்" என்று கூறினார் வள்ளுவர்.
பிச்சைக்காரன் பாடிக்கொண்டே பிச்சை கேட்கிறான். அவனுக்குச் சோறு கிடைக்காவிடில், பாட்டோடு தூங்கி விடுகிறான் இரவில்.
பாட்டில் இன்னொரு சொக்குப் பொடி. பகலெல்லாம் உழைத்து, அரைத்தூக்கத்தில் கிடக்கும் ஒரு பெண்ணையும், பிச்சைக்காரனின் தெருப்பாட்டு எழுப்பி விடுகிறது. விசையாய் எழுந்து பிச்சையிடுகிறாள்.
இன்னொன்று கேளுங்கள். மூக்கறையன் பாடினால் நன்றாயிராது. பாடாமல் இருப்பதில்லை. ஙொண ஙொண என்று பாடுகிறான் உரக்க, பல்லில்லாக் கிழவர்க்கும் பாட்டு வெறி, இது மட்டுமா? பாடும் உணர்வே யில்லாதவன் கூட, மற்றவன் பாடும் விருத்தத்துக்குத் தாளம் போட்டுத் தலையசைத்து மகிழ்கின்றான்.
இவற்றை யெல்லாம் எண்ணித்தான் நம் தமிழையே மூன்றாகப் பிரித்து இசையை நடுவில் அமைத்தார்கள். மேலும் ஆய கலைகள் அறுபத்து நான்கில் பாட்டையும், ஓவியத்தையும், பெருங்கலை என்றும் இனிய கலை (லலித வித்யா) என்றும் கூறினார்கள்.