கவிபாடிய காவலர்/கோப்பெருஞ் சோழன்
7. கோப்பெருஞ் சோழன்
கோப்பெருஞ் சோழர் முடியுடை மூவேந்தர் குடியாகிய சோழர் குடியினர். இவர் அக் குடியில் பெருமை மிக்கவராகவும் தலைசிறந்தவராகவும் விளங்கிய காரணத்தால் கோப்பெருஞ் சோழர் என்று கூறப்பட்டார் போலும்! சோழர்கட்குரிய தலைநகரங்கள் ஐந்து. அவற்றுள் ஒன்று உறையூர். அதனைத் தம் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டு வந்தனர். இவருக்கு உயிரனைய நண்பர்கள் இரு பெரும் புலவர்கள். அவர்கள் பிசிராந்தையார், பொத்தியார் என்பவர்கள். இந்த உண்மையினை திருக்குறள் உரையா சிரியராகிய பரிமேலழகர்
“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
என்னும், நட்பின் மாண்பை உணர்த்தும் குறட்பாவிற்கு உரை எழுதியபின், விசேடப் பொருள் உரைக்கும்போது “கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி ஒப்பின் அதுவே உடன் உயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும்” என்று எடுத்து மொழிந்து கோப்பெருஞ் சோழனுக்கும், சிராந்தையார்க்கும் இருந்த நட்பின் மாண்பினை நன்கு விளக்கிப் போந்தனர். ஒல்காப் பெருமைத் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியப் பொருளதிகாரக் கற்பியல் ஐம்பத்திரண்டாம் சூத்திர உரையிலும், உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர், “இதற்குக் கோப்பெருஞ் சோழன் துறந்துழிப் பிசிராந்தையாரும் பொத்தியாரும் போல்வார் துறந்தார்” என்று கூறி இருப்பதனாலும் அறியலாம். பிசிராந்தையாரும், இவ்வரசருக்கும் பொத்தியாருக்கும், இருந்த நட்பினை, “பொந்தில் நட்பில் பொத்தியொடு கெழீஇ” என்று கூறினர். பிசிராந்தையார்க்கும் இம்மன்னருக்கும் இருந்த நட்பின் மேம்பாட்டினை அகச் சான்றினாலும் அறியலாம். பிசிராந்தையார் அன்னச் சேவலைப் பார்த்து, “அன்னமே! நீ வடதிசை செல்வையாயின், இடையே சோழ நாட்டினை அடைந்து, எம் நண்பர் கோப்பெருஞ் சோழரைக் கண்டு, ‘யான் பாண்டிய நாட்டுப் பிசிராந்தையார் அடியின் கீழ் வாழ்வது’ என்று கூறிய உடன் நீ இன்புறும் பெண் அன்னம் பூணத்தக்க அணிகலங்களை அளிப்பன்” என்று கூறியதனாலும் இப்புலவர் பெருமான் தாம் பாண்டிய நாட்டினராக இருந்தும் தமது இறைவன் கோப்பெருஞ் சோழன் என்றும் செப்பியதனாலும் அறியலாம்.
கோப்பெருஞ் சோழர் பிசிராந்தையார் புல்லாற்றூர் ஏயிற்றியனார், பொத்தியார், கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் ஆகிய புலவர்களால் சிறப்பித்துப் பாடப்பட்ட மன்னர் ஆவார். இப்புலவர் பெரு மக்கள் பாடிய பாடல்களால் இவ்வரசர் பெரு மகனாரது வாழ்க்கைக் குறிப்புக்கள் பல வெளி யாகின்றன. “பிள்ளை தான் வயதில் மூத்தால் பிதாவின் சொற் புத்தி கேளான்” என்பது நம் நாட்டு முதுமொழி யாதலின், கோப்பெருஞ் சோழருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் மனம் ஒன்றுபடாத காரணத்தால் போரும் மூண்டது. அது பிற நாட்டுப் பகை மன்னர்களால் தொடுக்கப்பட்ட போராக இன்றிக் குடும்பத்திற்குள்ளேயே எழுந்த போராக அமைந்தமையால், இது கண்டு புலவர்கள் சும்மா இருந்திலர். இதனை மூண்டு எழ ஒட்டாமல் தடுக்கமுயன்றனர். புல்லாற்றூர் எயிற்றியனார் இதில் முனைந்து நின்றார். புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார் கோப்பெருஞ் சோழனை அணுகி, “புகழால் விளங்கும் வெற்றி வாய்ந்த வேந்தே! உன்னோடு எதிர்த்துப் போரிடுபவர் உன் பகை வேந்தர்களாகிய சேரரும் அல்லர்; பாண்டியரும் அல்லர். உன் எதிரே போர்க்கோலம் பூண்டு போர் புரிபவர்க்கு நீ பகைவனும் அல்லன். நீ நிலவுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து விண்ணுலகிற்கு விருந்தாகச் சென்றபின், உன் அரசு இது போது உன்னோடு எதிர்த்து நிற்கும் இம் மக்களுக்கே சேர்தற்குரியது. உன்னோடு எதிர்த்துப் போர் புரியும் உன் மக்கள் சூழ்ச்சி இல்லாத அறிவுடையவர்கள். இவர்கள் உன்னோடு சண்டை செய்து தோற்பின் உன் அரசையும் செல்வத்தையும் வேறு எவர்க் கேனும் கொடுத்து விடுவாயோ? அவற்றை இவர்களுக்கே அன்றோ கொடுப்பாய்? நீ தோற்றால் உன் பகைவர் உன்னை எள்ளி நகைப்பர் அல்லவா? உனக்குப் பழியும் உண்டாகும் அல்லவா? ஆகவே, நீ கொண் டுள்ள கோபந் தணிக” என்று கூறி இம் மன்னர் கோபம் தணியுமாறு செய்தார். இதனால், இவருக்கும் இவர் பிள்ளைகட்கும் பகைமை இருந்ததை அறிகிறோம் அல்லவா? புலவர் மொழிகள் அரசர் கோபத்தைத் தணித்தன.
இவ்வரசப் பெருமகனார் பின்பு எல்லாவற்றையும் துறந்து வடக்கிருந்து உயிர் துறக்கத் தீர்மானித்தார். இவர் வடக்கிருந்தபோது இவர் தம் உடல் தசையை வாட்டி வடக்கிருத் தலைக் கண்டு “முழூஉம் வள்ளுரம் (தசை) உணக்கும் மள்ள” என்று கனிந்து கூறினர் கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதனார். வடக்கிருத்தலாவது மேலுலகத்தை அடைய விரும்பினோர் இவ்வுலகில் அனுபவிக்கும் இன்பத்தைத் துறந்து, விரதத்தாலும் உடலை மெலியச் செய்து யோகப் பயிற்சியால் உயிரை விடுத்தற்குத் தாம் வாழ்ந்த இடத்தைவிட்டு நீங்கி வடதிசை ஆற்றிடைக் குறையில் மழை நாள், வெயில் நாள், பனி நாள் என்றும் பாராமல் தங்குதலாம். மீளாமல் நியமத்துடன் வடதிசையில் செல்லுதலும் உண்டு. இங்ஙனம் செல்லுதலை உத்தர கமனம் என்றும் மகாப் பிரத்தானம் என்றும் கூறுவர்.
கோப்பெருஞ் சோழர் துறக்கம் புக வடக்கிருந்தார். அதுபோது இவரது உயிரனைய நண்பர் பிசிராந்தையார் அங்கு வந்தனர். அது கண்ட பொத்தியார், சோழர் எல்லாவற்றையும் துறந்து வடக்கிருக்கச் சென்ற துணிவினையும், இவர் வடக்கிருத்தலை அறிந்து நட்பே பற்றுக் கோடாகப் பிசிராந்தையார் அங்கு வந்ததையும், பிசிராந்தையார் எப்படியும் இங்கு வருவர் என்று உறுதியோடு சோழர் கூறிய கூற்றையும் வியந்து பாராட்டினர். “இத்தகைய அரசரை இழந்த நாடு இரங்கத்தக்கது.” என்றும் கூறினர்.
பொத்தியார் கோப்பெருஞ் சோழரை விட்டுப் பிரிந்திருக்கும் நிலையினைக் குறித்து ஓர் உவமை வாயிலாகக் கூறியிருப்பது நயமாக உள்ளது. அவர் உணவு தந்து காத்து வந்த யானையை இழந்த பாகன் உற்ற துன்பத்தை உவமை காட்டினர்.
கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்தே உயிர் துறந்தார். அங்கு நடுகல் நடப்பட்டது. அந்நடுகல்லைக் கண்ட பொத்தியார் இச் சோழர் பண்பாடுகளை எண்ணி எண்ணி, “எம்மரசர் பாடுநர்க்குக் கொடுத்த பல புகழ் உடையவர் ; கூத்தர்க்குக் கொடுத்த அன்புடையவர் ; நீதி வழுவாச் செங்கோலர்; திண்ணிய நட்புப் பண்பு உடையவர் ; அந்தணர்க்குப் புகலிடமாய் இருப்பவர் என்று கனிந்து கூறினர்.
பொத்தியாருக்குக் கோப்பெருஞ் சோழரை விட்டுப் பிரிந்து வாழ மனம் இல்லை. ஆகவே, தாமும் வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தார். அதுபோது அவரது இல்லக் கிழத்தியார் கருவுற்றிருந்தார். அஃது அரசர்க்குத் தெரியும். ஆதலின், குழந்தை பிறந்த பின் தம்மைத் தொடர்ந்து வருமாறு கூறி இருந்தார். அவ்வாறே தம் நண்பர் மொழியினை மாறாது பிள்ளை பிறக்கும்வரை இல்லத்தில் இருந்தார். பிள்ளையும் பிறந்தது. பின்பு கோப் பெருஞ்சோழர் நடுகல் கண்டு, “நீ கூறியபடி பிள்ளை பெறும் அளவு இருந்தேன். இனியும் நின்னைப் பிரிந்து ஆற்றியிரேன். எனக்கும் நின் நடு கல்லில் இடந்தருக.” என்று கேட்டனர். நடு கல்லும் இடம் தந்தது. அதுபோது பொத்தியார், “பழமையான நட்புடையவர்கள், கல்லானாலும் இடம் கொடுப்பர்” என்று வியந்து கூறினார். என்னே இவர்கள் நட்பின் மாண்பு !
இங்ஙனம் புலவர்களால் பாராட்டப்பட்ட பெருமன்னராம் கோப்பெருஞ் சோழர் பாடிய பாடல்கள் ஏழு. அவை குறுந்தொகையில் நான்கு, புறநானூற்றில் மூன்றும் ஆகும். குறுந்தொகைச் செய்யுட்கள் காதலர்களின் உளப் பண்புகளை உணர்த்துவன, அவற்றைப் பின்னால் நீங்களே படித்து இன்புறுக.
இனிப் புறநானூற்றில் காணப்படும் செய்யுட்களின் பண்பைச் சிறிது காண்போமாக.
முன்பே கோப்பெருஞ் சோழர்க்கும் புலவர்கள் பிசிராந்தையார், பொத்தியார் ஆகிய இவ்விருவர்க்கும் உளம் ஒத்த நட்பு இருந்தது என்பதைக் கண்டோம். அதனைப் புலவர் வாயிலாக உணர்ந்த நாம் கோப்பெருஞ் சோழர் வாயிலாகவும் அறியவேண்டும் அல்லவா? கோப்பெருஞ் சோழர் வடக்கிருந்தார். அப்போது சோழர் தம்மோடு இருந்த வர்களை நோக்கி, “எம் உயிரினைப் பாதுகாப் பவர் பாண்டிய நாட்டுப் பிசிர் என்னும் ஊரில் வாழ்பவராகிய ஆந்தையார் என்பவர். அவர் யான் வடக்கிருத்தலை அறிந்து ஈண்டு எப்படியும் வந்தே தீருவர். அவர் செல்வம் உள்ள காலத்தில் வருதற்குத் தடைப் பட்டாலும், துன்புற்ற காலத்தில் வருதற்குச் சிறிதும் தடைப்படார்.” என்று கூறியருளினர். இதனை
“செல்வக் காலை நிற்பினும்
என்ற இம்மன்னரது வாக்கால் அறியலாம்.
மேலும், கோப்பெருஞ்சோழர் தம் நண்பரைப்பற்றிக் குறிப்பிடும்போது “என் நண்பர் வருவரோ? வாராரோ?” என்று ஐயம் கொள்ளாதீர். அவர் என்னிடம் என்றும் இகழ்ச்சியில்லாதவர்; இனிய குணமுடையவர்; பிணிப் புண்ட நட்புடையவர் ; பொய்யை என்றும் புறக்கணிப்பவர்; தம் பெயரைக் கூறாமல் என் பெயரையே பிறர்க்குக் கூறுபவர். ஆகவே, அவர் வராமல் இரார், அவருக்கும் என்னோடு வடக்கிருக்க இடம் ஒழித்துத் தருக” என்று அறிவுறுத்தியுள்ளார். பிசிராந்தையாரைப் பற்றிக் கோப்பெருஞ்சோழர் கூறிய தொடர் களையும் ஈண்டு நினைவு கூர்க. “இகழ்விலன் ; இனிய யாத்த நண்பினன் ; புகழ்கெடவரூஉ பொய் வேண்டலன் ; சிறந்த காதல் கிழமையும் உடையோன்” என்பன அத்தொடர்கள். இங்ஙனம் பாடும் புலவராயும், புலவர்களால் பாடப்பட்ட புரவலராயும் கோப்பெருஞ்சோழர் துலங்கினார்.