கவிபாடிய காவலர்/பாண்டியன் அறிவுடை நம்பி

13. பாண்டியன் அறிவுடை நம்பி

தமிழ் இலக்கணத்தில் விகுதிபெற்ற ஆண்பாற் பெயர்களும், விகுதிபெறாத ஆண்பாற் சிறப்புப் பெயர்களும் உண்டு. அவை விடலை, நம்பி, வேள் முதலியன. அத்தகைய சிறப்புப் பெயர் உடையர் இப்பாண்டியர் குலப்பாவலர் என்பதற்காகவே நம்பி என்ற சொல்லாலேயே குறிக்கப்பட்டுள்ளார். இவரது சிறப்பு மற்றைய ஏனைய காரணங்களால் அமைந்தது என்றாலும், அறிவு காரணமாகவே இவர்க்கு அமைந்த சிறப்பாகும் என்னும் காரணத்தை முன்னிட்டடே அதனை நன்கு விளக்கமுறத் தோற்றுவிக்கவே அறிவுடை நம்பி என்று அடைகொடுத்தும் மொழியப்பட்டார். இவ்வறிவுடை நம்பி பாண்டியர்குலப் பார்த்திபர் என்பதை அறிவிக்கப் பாண்டியன் அறிவுடை நம்பி என்று சிறப்பிக்கப்பட்டனர். பாண்டியன் என்பதனால் அரச இனத்தினர் என்பதும் அறிவுடை என்றதனால் அறிஞர் இனத்தினர் என்பதும் நாம் அறிந்து இன்புறுதற் குரியனவாகும். இத்தகைய பெருமைசான்ற புரவலர்ப் புலவரைப் பாடிய புலவர் பெருமான் பிசிராந்தையார் என்பவர். பாண்டியன் அறிவுடை நம்பி தாமே அறிவு சான்ற பெருமகனாராக இருந்தும், புலவர் பெருமக்கள் கூறும் அறவுரைகளை அகங்குளிரக் கேட்டு அதன்படி நடக்கும் இயல்பினர் என்பது பிசிராந்தையார் இவருக்குக் கூறியுள்ள அறவுரைப் பகுதிகளால் அறிய வருகிறது. அவ்வறவுரை அறிவுடை. நம்பிக்கு அறிவுறுத்தப் பட்டதேனும், அகிலம் காக்கும் எல்லா அரசர்க்கும் உகந்த அறவுரையாகும்.

பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை, நம்பியை நோக்கி, "மன்னா! ஒருமா என்னும் அளவில் குறைந்த நிலத்தில் விளைந்த நெல்லினை அறுத்துக் கவளம் கவளமாக யானைக்கு உண்ணுமாறு செய்துவரின், அவ்வுணவு பல நாளைக்கும் ஆகிவரும். அவ்வாறு இன்றி, நூறு என்னும் எண்ணிக்கைக்குரிய பெருநிலங்களைப் பெற்றிருந்தும், யானையைத் தனித்து விட்டு உண்ணுமாறு செய்தால், அவ் யானை உண்ணும் உணவினும் அதன் காலால் மிதியுண்டு அழியும் நெல் மிகுதியாகி, அப்பெரு எண்ணிக்கையுள்ள நிலங்களிலிருந்து கிடைக்கும் நெல் சின்னாட்களுக்கே உதவக் கூடியதாக இருக்கும். இதுபோலவே அரசர்களும் குடிமக்களிடமிருந்து வரிப் பணமாகச் சிறிது சிறிதாகப் பெற்றால், நாடு செழித்துப் பல நாள் அழிவின்றித் துலங்கும். அரசரும் பன்னாள் நலனுற வாழ்வர். அவ்வாறு இன்றிக் குடிமக்களை வருத்தி மிகுதியாக வரிப் பணத்தை வாங்கினால் நாடு விரைவில் அழிந்துபடும். அரசரும் கெட்டொழிவர். ஆகவே, உறுதி கூறும் நல்லமைச்சைப் பெற்று அரசர் அரசு புரிதல் தக்கது" என்று அறிவுறுத்தியுள்ளார். இத்துணைக் கருத்துக்களையும் புலவர் பிசிராந்தையார் கூறிய பாடலில் படித்து இன்புறும் ஒரு பகுதி,

"யானை புக்க புலம் போலத்

தானும் உண்ணான் உலகமும் கெடுமே"

என்னும் அடிகளே என்க.

இத்தகைய மாண்புடைய புலவர் பெருமானின் அறவுரைகளைச் செவி சாய்க்கும் அர சப்புலவர் அறிவு சான்றவராய் அருங்கவி புனையும் ஆற்றல் பெறாது இருப்பாரோ? ஒருக்காலும் இரார். ஆகவே, இவரும் ஒரு செய்யுளினைச் செய்துள்ளார். அது புறநானூற்றில் மிளிரும் செய்யுளாகும். அப்பாடல் பிள்ளைப் பேற்றின் மாண்பினை நன்கு எடுத்து மொழிவது. இப்புலவர் பெருமானுக்கு எந்தக் கருத்திலும் தம் மனம் செல்லாது புத்திர பாக்கியத்தின் பெருமையினைக் கூறக் கருதியது ஒரு சிறப்புத்தான். இவர் பெருஞ் செல்வம் உடைமையைக் கூடப் பெருஞ் சிறப்பாகக் கருதிலர். அச்செல்வம் காரணமாகப் பலரோடு உண்டு களிக்கும் களிப்பினையும்கூடச் சிறப்பாகக் கருதிலர். ஆனால், பலரோடு உண்ணும் காலத்துத் தத்தித்தத்தி நடந்து வந்து, தம் சிறிய கையை நீட்டி உண்கலத்தில் வைக்கப்பட்ட உணவில் கையை வைத்து அவ்வுணவை எடுத்துத் தரையில் சிதறி அதனைப் பிசைந்து, வாயால், கவ்வி மீண்டும் கையால் துழாவியும் நெய் பெய்த சோற்றை உடம்பில்படச் சிதறியும் இன்புறுத்தும் மக்களைப் பெற்று வாழ்தலே செல்வத்தின் சிறப்பு என்றும் பலரோடு உண்ணும் களிப்பிற்கும் சிறப்பு என்றும் கருதினர். இத்தகைய மக்கட் பேற்றைப் பெருதவர்கட்குத் தாம் உயிர் வாழும் நாளில் பயனுகிய முடிக்கப்படும் பொருள் இல்லை என்றே கூறி விடுகின்றார். மக்கள் செய்யும் அட்டகாசத்தினை எவ்வளவு அழகாகத் தம் செய்யுளில் சித்திரித்துள்ளார் பாருங்கள் !

"குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கல்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்

மயக்குறும் மக்கள்"

என்பது அச்சொல் சித்திரம்.