கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்/அரசியல் தொண்டு

6. அரசியல் தொண்டு

மனைவியாக மட்டுமன்று-மங்கையர்களுக்கு அரசி போல வாழ்ந்து கொண்டிருந்த மிருணாளினி தேவி மரணமடைந்த பிறகு, கவிஞர் தாகூர் ஒரு மகானைப் போல வாழ்ந்து கொண்டிருந்தார்.

கடைசி மருமகள் இறந்த அதிர்ச்சியால் கவிஞர் தாகூரின் தந்தையார் தேவேந்திரர் நாத் மிகவும் தளர்ச்சி அடைந்தார். கவிஞர் தாகூர், தனது தந்தையை ஆறுதல் படுத்தி, தந்தையார் இறை வழிபாட்டிலும் தியான நிலையிலும் இருக்கும்போது, அவருடன் இருந்து, தான் எழுதிய ‘நை வேத்தியம்’ என்ற நூலிலுள்ள பல பாடல்களைப் பாடி மன அமைதிப் படுத்தி வந்தார்.

மகன் எழுதிய பாடல்களைக் கேட்டுக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த தேவேந்திரர் தனது செல்வனைப் பார்த்து, “பழங்காலத்திலே வாழ்ந்த புலவர் பெருமக்கள் மன்னர்களிடமும், செல்வந்தர்களிடமும் சென்று, தாம் பாடிய பாடலைப் பாடிக் காட்டினால் பரிசு வழங்குவது வழக்கம். அதுபோல நானும் உனக்குப் பரிசு தருகிறேன்” என்று ஒரு பெருந்தொகையை ரவீந்திரருக்குப் பரிசாகக் கொடுத்தார். அந்தப் பரிசால் தனது நூலை அச்சிட்டு வெளியிட்டார்.

கவிஞர் தாகூர் தனது குடும்பத்துடன் 1901ஆம் ஆண்டில் சாந்தி நிகேதன் சென்று குடியேறிய பின்பு வந்த நூல் ‘நைவேத்தியம்’ அதற்கடுத்து வேறு இரண்டு நூல்களையும் சாந்தி நிகேதனில், இருக்கும்போது அவரது வெளியிட்டது தந்தைக்கு மேலும் மகிழ்ச்சியூட்டியது.

வழிபாட்டுக் கொள்கை

தேவேந்திர நாத்துடன் அவரது மூத்த மகனும், ரவீந்திரரும் இணைந்து சாந்திநிகேதனில் யோகக் கலைகளையும், தியான வழிபாடுகள் மற்றும் இறைத் தொண்டுகளையும் தொடர்ந்து செய்து வந்ததால், அந்தக் கலைக் கோயிலுக்கு இந்திய மாநிலங்களிலிலே உள்ள பேரறிவாளர்கள் பலர் அங்கே அடிக்கடி வந்து அதன் பயனை மக்களும் அனுபவிக்க வேண்டும் என்று விரிவுபடுத்திச் சென்றார்கள். அதற்கான பொருளாதார வரவும் பெருகியது.

மக்கள் வழிபாட்டுக்காக ஒர் தனி இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டு வந்தன. வழிபாட்டுக்குரிய சில விதிகளும் அங்கே உருவாயின. கடவுள் உருவமற்றவர்! விக்கிரக வழிபாடு கூடாது; எந்தச் சமயத்தையும் குறை சொல்லக் கூடாது; எந்த உயிருக்கும் துன்பம் செய்யக் கூடாது என்பவை சாந்தி நிகேதனில் நடைபெறும் சில வழிபாட்டு விதிமுறைகளாகும். இதனால் அந்தப் பகுதி வாழ் மக்கள் அந்த வழிபாடுகளில் ஏராளமாக வந்து கலந்து கொள்வார்கள்.

இந்த சமயத்தில் ரவீந்திரர், சாந்திநிகேதனில் குழந்தைகள் பள்ளி ஒன்றையும் தனது தந்தையின் வாழ்த்துதலோடு துவங்கினார். அவர் ஆரம்பித்த பள்ளியிலே தொடக்க காலத்தில் தனது மகளுட்பட ஐவரைத்தான் சேர்க்க முடிந்தது. நாளடைவில் அதே பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து சேர்ந்தார்கள்.

அந்தப் பள்ளி, பழங்காலத்தில் சான்றோர்கள் கற்ற கல்வியைப் போல, ஒழுக்கம், தியானநிலை, இறை வழிபாடு, இயற்கையோடு ஒன்றிய எளிய வாழ்க்கை போன்று போல நடைபெற்றது.

பள்ளிக் கூடங்களைப் பற்றித் தாகூர் கூறிய கருத்துக்கள் என்ன வென்றால், ஏராளமான பெரிய பெரிய கட்டடங்கள் தேவையில்லை. பொருள்கள் சேர்க்க வேண்டும் என்ற ஆசை பள்ளி நடத்துபவர்களுக்கு வரக் கூடாது. அதுதான் இன்ப வாழ்வு என்ற எண்ணமே எழக்கூடாது. எளிமையில் செம்மை என்ற விதிப்படிபள்ளிகள் இயங்கவேண்டும்.அப்போதுதான் அங்கே அமைதி தவழும்; இயற்கை நிலையோடு ஒன்றி வாழும் எண்ணங்கள் தோன்றும். நகரங்களின் நெருக்கடிகளுக்கு நடுவே பள்ளிகளை நடத்தக்கூடாது. காடுகள் போன்ற இயற்கைச் சூழலில் பாதுகாப்போடு பள்ளிகள் அமைவது எல்லாநலன்களுக்கும் நல்லது” என்றார்.

சாந்தி நிகேதன் நடைமுறைகள்

சாந்தி நிகேதன் பள்ளியிலே புதிதாக ஒருவர் புகுந்தால் அவ்வளவு விரைவில் அவர் வெளியே வர முடியாது. மெய் மறந்து அங்கேயே தங்கி விடலாமா? என்று நினைப்பார். பாடம் நடந்தநேரம் போக மிகுதியான வேளைகளில் பாட்டும் இசையுமே பெருகிக் காட்சி தரும்.

தினந்தேறும் காலையிலே பள்ளி இசை முழக்கத்தோடு ஆரம்பமாகும்! முடியும்போது இசை ஒலியோடு தான் முடியும். காலை விடியலில் சிறுவர்கள் எழுந்து ஆசிரமத்தை சுற்றியபடியே இசைவலம் வருவார்கள். இந்த இசை ஒலி மற்ற சிறுவர்களையும் எழுப்பிவிடும். சுருக்கமாக, இப்பாடலொலிகள் சிறுவர்களது பள்ளி எழுச்சியாகவே இருக்கும். இங்கே பாடப்படும் பாடல்கள் எல்லாம் கவிஞர் தாகூர் எழுதிய குழந்தைகள் பாடல்களே. காலை, மாலை இரண்டு நேர இறை வழிபாடுகளிலும் இசைஒலிக்கும். அந்தந்த பருவ காலத்துக்கு ஏற்றவாறு பள்ளிக் கூடத்து உள்ளேயே, மாணவர்கள் விருந்தினர்களைச் சூழ்ந்தபடியே திருவிழாக் கொண்டாட்டங்கள் நடைபெறும்.

உழவர்கள் உழத் தொடங்கும் போது, சாந்தி நிகேதனில் உழவர் திருவிழா நடக்கும். அந்த விழா விவசாய மக்களுக்கு மகிழ்ச்சியை விளைவிக்கும். அந்த நேரங்களில் ஆடலுண்டு, பாடலுண்டு, கண்காட்சி மற்றும் நாடக இன்பமும் உண்டு. ஒவ்வொரு விழாவிலும் தாகூரின் நாடகம் அரங்கேறும். இவ்வாறு எழுதப்பட்டது தான் அவர் எழுதிய நாடகங்கள் எல்லாமே!

கவிஞர் தாகூர் சாந்தி நிகேதனத்துக்கான ஆசிரியர்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நியமித்தார். உலகவாழ்க்கை என்றால் என்ன? மக்கள் அவ்வாழ்க்கையை எவ்வாறு நடத்த வேண்டும்? என்பதைச் சிறுவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் களாக அவர்களை உருவாக்கினார்!

பயனில்லாத, பழங்காலப் பெருமைகளை சொல்வதையும் கற்பிப்பதையும் ஒதுக்கித் தள்ளினார்.

மாணவர்களின் விரும்பியபடி கல்வி கற்பிக்கும் வழிகளை ஆராய்ந்து தாகூர் அறிவித்தார். விளையாட்டுக் கல்வியிலும் மாறுதல் செய்தார்.

மாணவர்கள் விருப்பப்படி செய்தால், வேலைக்கும் விளையாட்டிற்கும் உள்ள வேறுபாடுகள் மறையும். வீட்டிற்கும் பள்ளிக் கூடத்திற்கும் இடையே உள்ள வேறுபாடும் அகன்றுவிடும் என்று கவிஞர் தாகூர் எண்ணினார்.

ஆள்வோர் ஆளப்படுவோர் என்ற வேறுபாடில்லாமல் பள்ளியை நடத்தினார். ஆசிரியர்களும்-மாணவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்ச்சிக்குப் பாதை அமைத்தார். அதனால் மாணவர்களும்-ஆசிரியர்களும் பிரச்சினைகள் ஒன்றும் தோன்றதபடி பழகி பாசத்தோடு கல்வி கற்க முடிந்தது.

சாந்திநிகேதன் பள்ளியில், சட்ட திட்ட ஆட்சியும், அடக்குமுறையும் இல்லாமல் செய்தார். அதே நேரத்தில், மாணவர்-ஆசிரியர்கள் இடையே கட்டுப்பாடுகள், ஒழுக்க முறைகள் தவறாதபடியும் பள்ளியை நடத்திவந்தார்.

எல்லார்க்கும் பொதுவான, எல்லார்க்கும் நன்மையான, எவருக்கும் தீமைகள் ஏற்படாத, செயல்முறை ஒழுக்கங்களை வளர வைத்தார். ஒருவேளை இந்த ஒழுங்குமுறைகளிலே யாராவது தவறுவார்களேயானால், அவர்களைத் தண்டிக்கும் பொறுப்பை ஒருவரிடமும் அவர் ஒப்படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி, மாணவர்களே மன்றம் அமைத்துக் கூடி அவர்கள் நிலைக்கு ஏற்றவாறு தண்டனை வழங்கலாம் என்ற முறையை கவிஞர் தாகூர் உருவாக்கினார்!

எல்லா உயிரிடத்தும் அன்பு செலுத்தவேண்டும் என்பதைக் கவிஞர் பொது விதியாக்கினார். மற்றவர்களது பழக்க வழக்கங்களையும், மொழி உணர்வுகளையும் கேலி பேசிடாமல், மதிப்பும் மரியாதையும் கொடுத்து நடக்குமாறு அம்மாணவ மணிகளுக்கு கல்வியோடு கல்வியாகக் கற்பித்தார்.

பொருளாதார இடையூறுகள்

சாந்திநிகேதன் பள்ளியின் பழக்க வழக்கம் அக்காலத்திலிருந்த கல்விமுறைப்படி இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. இதை இந்திய மக்களும், குறிப்பாக உலகக் கல்வியாளர்களும் உணரும் நிலை ஏற்பட்டது. அப்படி ஒரு சிறந்த கல்விமுறைப் பள்ளியை உருவாக்குவது என்றால் சாமான்யமான வேலையா என்ன?

கவிஞர் தாகூர் இப்பணி வெற்றிகரமாக அமைய அரும்பாடு பட்டாலும், அந்த முயற்சிகளும், சிந்தனைகளும், ஆக்கவேலைகளும் அவருக்குச் சலிப்பைத் தரவில்லை மகிழ்ச்சியையே வழங்கின. ஆனால், இதற்கெல்லாம் பணம் வேண்டாமா?

தாகூர் மனைவியான மிருனாளினி தேவியார் உயிரோடு இருந்தபோது பெட்டிக்குள் பூட்டிவைத்திருந்த தனது நகைகளை எல்லாம் கணவரிடம் கொடுத்து, பள்ளிப் பணிகளைக் கவனிக்க ஏற்பாடு செய்தார்!

நகைகளை எல்லாம் கொடையாகக் கொடுத்த மிருணாளினி தேவியார் 1902ஆம் ஆண்டில் சாந்தி நிகேதனிலேயே மரணமடைந்தார். கவிஞருக்கு இது மிகப்பெரிய இடையூறாக அமைந்து விட்டது. மனைவியைப் பறிகொடுத்து விட்ட மறுஆண்டே கவிஞர் தனது அருமை மகள் ரேணுகா என்பவளை இருமல் நோய்க்குப் பலி கொடுத்து விட்டார். அவளுக்கு செலவு செய்த பணமும், முயற்சியும் வீணாகிவிட்டதே என்ற வருத்தம் கவிஞர் தாகூரை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கியது.

1904ஆம் ஆண்டில், சாந்தி நிகேதனை மிகப்பொறுப்புடன் நிர்வாகம் செய்துவந்த சதீஸ்சந்திர ராய் என்ற ஆசிரியர் காலமானதும் கவிஞருக்கு மேலும் கவலை ஏற்பட்டது.

சாந்தி நிகேதன் என்ற ஆசிரமத்தை முதன் முதல் உருவாக்கிய தேவேந்திரரநாத் தாகூர், ரவீந்திரரின் உயிருக்கும் உயிரான தந்தையார், 1905ஆம் ஆண்டில் மரணமுற்றார்.

கவிஞர் தாகூரின் இளைய மகனான சமீந்திர நாதன் என்பவர், தனது பதின்மூன்றாம் வயதிலே, 1907ஆம் ஆண்டில் உயிர்நீத்தார். அடுத்தடுத்து வந்த இவ்வளவு மரணத் துன்பங்களுக்கு இடையே கவிஞர் ஓயாமல் உழைத்துவரும் நிலையேற்பட்டு விட்டது. இந்த துன்பங்களுக்கு இடையே அவ்வப்போது எதிர்பாராமல் ஏற்பட்டு வந்த பொருளாதாரச் சிக்கலும் அவரை வருத்தியபடியே இருந்தது.

தாகூரின் நண்பர்களிலே சிலர் வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து, இங்கிலாந்திலே இருந்து உற்பத்தியாகி வரும் பொருட்களை நாம் வாங்க கூடாது. இந்தியப் பொருளாதார லாபம் பிரிட்டிஷ் நாடுகளுக்குப் போகக் கூடாது என்று போராடினார்கள்.

சுதேசிக் கைத் தொழிலும் சுதேச வாணிகமும் மேலோங்கி வளர வேண்டும் என்ற ஆர்வத்தால், கவிஞர் தாகூர் கூட அக்கொள்கைகளின் உணர்ச்சிகளைப் போற்றி மதித்தார். அது மட்டுமன்று; இது காந்தீயக் கொள்கைகளில் ஒன்றாக உள்ளது என்பதனால் அவற்றுக்கு ஆதரவும் அளித்தார்.

கவிஞருடைய நண்பர்களும், உறவினர்களும் தொடங்கிய இந்த இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குரிய அமைப்புகளில் கவிஞர் தாகூரும் பங்கு கொண்டு, தனது பணத்தை அதிலே பங்குகளாகச் செலுத்தினார். ஆனால் அவற்றுக்கு எப்படி அரசு ஆதரவு கிடைக்கும்? அதனால் அந்த தொழில் வளர்ச்சி பெறாமல் வீழ்ச்சியுற்றது. கவிஞர் ரவீந்திரர் போட்ட முதலும், பங்கும் நட்டத்தை விளைவித்தது. தாகூர் பெருங் கடன்காரரானார். அவரது பொருளாதார நிலைக்கு மேலும் பெருத்த அடி வீழ்ந்தது. தனது சொத்துக்களை எல்லாம் இழந்தார்!

அரசியல் பிரவேசம்

எப்போதெல்லாம் நாட்டு மக்களுக்குத் துன்பம் நேர்கின்றதோ, அப்போதெல்லாம் ரவீந்திரர் தனது நிலைகளைக் கூட ஆராயாமல் தேசத் தொண்டாற்றிட முன்வரிசையிலே நிற்பார்.

1889ஆம் ஆண்டு கல்கத்தா நகரிலே பிளேக் நோய் பரவியபோது, முதன் முதலாக ரவீந்திரர் மக்கள் தொண்டாற்றிடப் புறப்பட்டார். அந்த நேரத்தில் வங்க ஞானி ராமகிருஷ்ணர் மடத்திலே ஆன்மிகத் தொண்டாற்றிய நிவேதிதை என்ற அம்மையாருடன் சேர்ந்து, இரவும் பகலுமாக ஓய்வில்லாமல் நோய் தடுப்புப் பணிகளிலே ஈடுபட்டு சேவையாற்றினார். பணம் திரட்டி மக்களுக்குரிய வசதிகளைச் செய்து தந்தார்.

வங்காள மாநிலத்தில் அடிக்கடி ஏற்படும் கங்கையாற்று வெள்ள கோர அழிவுகளால், துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கும் முன்னின்று பணம் சேகரித்துத்தக்க உதவவிகளை வழங்கினார்.

பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் பூகம்ப அழிவுகளால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கும், குவெட்டா நகரினை ஆட்டிப்படைத்து உலுக்கிய பூகம்ப நாசங்களால் அவதிப்பட்ட மக்களுக்கும், தாகூர் செய்த உதவிகளை மக்கள் துயர் துடைத்த பணிகளை யாரும் மறக்க முடியாது. அவ்வளவு கடும் உழைப்புகளை ஆங்காங்குள்ள அரசு அதிகாரிகளுடனும் பொது மக்கள் நிறுவனங்களுடனும் சேர்ந்து செய்தார்.

பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த கர்சான் பிரபு, 1905ஆம் ஆண்டில் வங்காள மாநிலத்தை கிழக்கு வங்கம், மேற்கு வங்கம் என்று இரண்டாகப் பிளந்தார். வெள்ளையர் ஆட்சியின் இந்த ஆணவச் செயலை வங்க மக்கள் கங்கையின் பெருவெள்ளம் போல பொங்கித் திரண்டு எதிர்த்தார்கள். அந்தப் போராட்டங்களைப் பல அணிகள் செய்தன. அவற்றுக்குத் தலைமை தாங்கிப் போராட்டம் நடத்திய பெருமை ரவீந்திரநாத் தாகூரையே பெரும்பாலும் சாரும்! அவ்வளவு தீவிரமாக மக்களைத்திரட்டிப் போராடினார்.

அந்தப் போராட்டம் வெற்றி பெற அவர் கண்டன முழக்கமிட்ட கூட்டங்கள் பல. அவருடைய பேச்சுக்களின் இடிமுழக்க ஒசைகளை உலகமே கேட்டு வியந்தது எனலாம்! பெரிய போர்த் தளபதி போலவே வங்க மக்களும், இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்துத் தலைவர்களும் தாகூரை மதித்தார்கள். மரியாதை தந்தார்கள்.

பேச்சு முழக்கங்களோடு மட்டுமா நின்றார் தாகூர்! வங்கத்து ஷெல்லி என்றல்லவா வங்கம் போற்றியது அவரை! அதனால், தனது கவிதை வரிகளால் மக்களை எழுச்சி பெற வைத்தார்! மக்களும் ஆயிரக் கணக்கில் திரண்டு போராடினார்கள்! அதற்குக் காரணம் ரவீந்திரருடைய கவிதைகளே. என்றால் மிகையன்று!

இன்றைய புதுச்சேரி மாநிலத்தில் அரவிந்தர் ஆசிரமம் என்ற ஒன்று உள்ளதல்லவா? அந்த ஆசிரம நிறுவனரான அரவிந்த மகரிஷி, அன்று கவிஞர் பெருமான் தாகூரின் பேச்சுக்களையும், கவிதை முழக்கங்களையும் கேட்டும், படித்தும் வங்கப் பிரிவினை தடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கவிஞர் தாகூர், கல்கத்தா நகரில் மிகப் பெரிய போராட்ட ஊர்வலத்தை தலைமையேற்று நடத்திக் காட்டினார். பல கூட்டங்களில் பேசி, ஏறக்குறைய ஐம்பதினாயிரம் ரூபாய் வரை போராட்ட நிதியாக மக்களிடையே திரட்டிக் கொடுத்தார். அவ்வளவு செல்வாக்கும், மக்கள் பலமும் இருந்தது அவருக்கு.

பகை கொள்ளாத ஒத்துழையாமை

“பகை கொள்ளாத ஒத்துழையாமை வேண்டும்” என்று பகிரங்கமாக மேடையிலே கூறியே போராட்டம் நடத்தினார் அவர். அரசு அதிகாரிகளைத் தாக்கக் கூடாது. அதிகாரிகளை வருத்த வேண்டிய அவசியமில்லை!

ஆனால் நாளா வட்டத்தில் கவிஞருடைய பகை கொள்ளாப் போரின் அன்பு நெறிகள் ஓடிவிட்டன; அதனால் தாகூர் அரசியல் போராட்டத்தை விட்டு அகன்றுவிட்டார். பழையபடி சாந்தி நிகேதன் சென்று அமைதித் தொண்டாற்றிடலானார்!

கவிஞர் பெருமானுடைய அரசியல் போராட்டத்திலே ஆழ்ந்து கிடந்த தத்துவ உணர்வுகளையும், மனித நேய மாண்புகளையும் ஆழ்ந்தறிய முடியாத வங்கத்துப் பொது மக்களில் பலர், தாகூரை பழித்தார்கள், வைதார்கள், இழிந்துரையாடினார்கள், ஏசினார்கள்! ஆனால் தாகூர் எவருடைய இழிவையும் புகழையும் எதிர்பாராமல் நாட்டுப்பற்றோடு நடந்தார்! அதனால் அவர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. மக்கள் தொண்டு என்ற கடமையிலேயே கண்ணாய் இருந்தார்.

அரசியல் போராட்டத்தை நெறிதவறி, மனித நேயம் மீறி, வன்முறைகளுடன் நடத்துவதைவிட, சிறந்த சேவைகளை பள்ளிக் கூடத்திலும், எழுத்திலும், கிராம மக்களிடத்திலும் செய்ய முடியும் என்ற மன உரத்தோடும், பொறுமையோடும் தனது அரசியல் பகையாளர்களுக்கு உணர்த்தினார்.

இந்து-முஸ்லீம் கலகங்கள் 1908ஆம் ஆண்டிலும் ஏற்பட்டது. அந்தப் பிணக்கத்தைத் தடுக்க அமைதியான முறையிலே எவ்வளவோ அரும்பாடுபட்டார்! இணக்கமே ஏற்படவில்லை. அதற்கு நேர்மாறாக வங்காள மாநிலம், இரண்டாக மதத்தின் பெயராலேயே துண்டாடப்பட்டு விட்டதே என்று ஆற்றொணாத் துயருற்றார் கவிஞர் தாகூர்.

மறுபடியும் சாந்தி நிகேதன்

உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசு பெற்று இந்திய அறிவுக்குப் புகழ் ஈட்டிய ‘கீதாஞ்சலி’ எனும் நூலை கவிஞர் தாகூர் அரசியலை விட்டு விலகிய பின்னர்தான் எழுதினார்.

கவிஞர் தாகூர் பல நாடகங்களை எழுதினார்! அந்தநாடகங்களை சாந்திநிகேதனிலேயே அரங்கேற்றினார். அதற்கான ஒத்திகைகளை கவிஞர் ரவீந்திரரே முன்னின்று நடத்தினார் என்பது மட்டுமன்று, அவரே நாடகத்தில் நடித்தார். இந்த நாடக ஒத்திகைகளும், நாடகங்களும், அவரது நடிப்பும் ஏதோ பொழுது போக்கிற்காக நடத்தப்பட்டவை அல்ல! சாந்தி நிகேதன் வந்து பல்கலைகள் பயிலும் மாணவ மணிகளுக்குரிய இலக்கியமாக, நாடகத் துறைக்கு இலக்கணமாக, கல்வித் துறைக்குரிய பாடபோதனைகளாகவும் திகழ்ந்தன.

கவிஞர் தாகூர் பெருமானுக்கு 1911ஆம் ஆண்டில் ஐம்பதாவது பிறந்த நாள் விழா, சாந்திநிகேதனில் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதே நேரம் வங்காள மாநிலத்து அறிஞர்களால். கல்வியாளர்களால் பல இடங்களிலே அந்த புகழ் மகனுக்கு விழா எடுக்கப்பட்டது. யார் யார் அரசியல் பெயரால் கவிஞரை அவமதித்தார்களோ, பழித்துப் பேசினார்களோ, அவர்கள் அனைவரும் ‘தாகூர் பெருமானைப் போற்றித் திரு அகவல்கள் பாடினார்கள்!

1912-ஆம் ஆண்டில், கல்கத்தா நகர மண்டபத்தில் நடை பெற்ற கவிஞர் தாகூர் பாராட்டுவிழாக் கூட்டத்தில் வங்க இலக்கியக் கழகம் அவருக்கு விருது வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தது. பிரம்ம சமாஜ ஆண்டு விழாவில் கவிஞர் தாகூர் கலந்து கொண்டு, இந்திய நாட்டு வணக்கப் பாடலாக ‘ஜன கண மன’ என்ற புகழ் பெற்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடல் தான்.

இன்று இந்திய தேசிய கீதமாக ஒலிக்கிறது.

ஜன கணமன அதிநாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப லிந்து குஜராத மராட்டா
திராவிட உத்கல பங்கா

விந்திய ஹிமாசல யமுனா கங்கா
உக்சல ஜலதி தரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆசிஸ் மாகே
காஹே தவஜயகாதா
ஜன கண மங்கள நாயக ஜயஹே
பாரத பாக்ய விதாதா
ஜயஹே ஜயஹே ஜயஹே
ஜய ஐயஜய ஜயஹே

இந்தப் பாடலைத்தான் மஹாகவி ரவீந்திர நாத் தாகூர், 1911-ஆம் ஆண்டில், தனது ஐம்பதாம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக பிரம்ம சமாஜ ஆண்டு விழா நடைபெற்ற போது பாடிக்காட்டினார்!

தாகூர் பாடலின் தமிழாக்கம்:

இந்தியத் தாயே!
மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே
எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.
நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும்,
குஜராத்தையும் மராட்டியத்தையும், திராவிடத்தையும்,
ஒரிசாவையும், வங்காளத்தையும்
உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.
நின் திருப்பெயர்
விந்திய, இமயமலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது;
யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது.
அவை நின்னருளை வேண்டுகின்றன;



நின் புகழைப் பரப்புகின்றன.
இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே!
உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!

இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, கவிஞர் பெருமான் ரவீந்திர நாத் தாகூர் பாடிய அந்தப் பாடலை, இந்திய அரசாங்கம் நாட்டு வணக்கப் பாடலாக ஏற்றுக் கொண்டு, கவிஞர் தாகூரைக் கௌரவித்துள்ளது அந்தப் பாடல் இந்திய அரசு மூவண்ண அரசுக் கொடியை ஏற்றும்போது கவிஞர் தாகூரது தேசப் பக்தியை நினைவிருத்திக் கொண்டு ஒலிக்கப்படுகிறது. இந்திய அரசும் மாநில அரசுகளும் நடத்தும் ஒவ்வொரு அரசு நிகழ்ச்சிகளின் இறுதியிலும் கவிஞர் தாகூர் பெருமகன் எழுதிய ‘ஜன கண மன’ பாடலைப் பாடியே முடிப்பதை இன்று நாம் பார்த்துப் பரவசப்படுகிறோம்!