கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்/தாகூர் பார்வையில் காந்தியடிகள்
காந்தியடிகள்
இந்திய நாடு வெள்ளையர் ஆட்சியிலே இருந்து முழு சுதந்திரம் பெற வேண்டும் என்று அண்ணல் காந்தியடிகள் அல்லும் பகலும் அயராது பாடுபட்டார்! இது உலகறிந்த உண்மை. அதற்காக மகாத்மா ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். வழக்கறிஞர்கள் முதல் மாணவர்கள் வரையில் எல்லோரையும் நாட்டு விடுதலைப் போரில் கலந்து கொள்ளுமாறு அவர் அறை கூவல் விடுத்தார்
கவிஞர் தாகூர் காந்தியடிகளது செயலைக் கண்டு மனம் வருந்தினார். மாணவர்கள் ஒத்துழையாமைப் போராட்டத்தில் கலந்து கொள்வதைத் தாகூர் விரும்பவில்லை. கல்லூரிகளை விட்டு அவர்கள் வெளியேறிப் போராட்டத்தில் கலந்து கொண்டால், அவர்களது கல்வி பாழாகிவிடும் என்பதால் அந்தத் திட்டத்தை ரவீந்திரர் வெறுத்தார்.
மாணவர் உலகம் தாகூர் கருத்தை வெறுத்தது; பழித்தது. அவரது எண்ணத்தின் உண்மையை உணர மறுத்தது. காந்தியடிகளின் போர் முறையைத் தாகூர் வெறுத்தாரே ஒழிய, காந்தியடிகளை அவர் தனிப்பட்ட முறையில் வெறுத்தவரல்லர் எதிர்த்தவரல்லார்! மாறாக, அண்ணலின் தன்னலமற்ற தியாக வாழ்வைப் போற்றிப் பாராட்டியவர் கவிஞர் பெருமகன்.
மகாத்மா காந்தியடிகள், இராட்டைச் சக்கரத்தில் நூல் நூற்றுக் கதர் துணிகளை அணிய வேண்டும் என்றார். அதை ஓர் இயக்கமாகவே அவர் நடத்தி வந்தார்.
கவிஞர் தாகூர் காந்தியடிகளின் இராட்டைப் பொருளாதாரத்தை, லட்சியத்தை வெறுத்தார்; குறைகளைக் கூறினார். தனது கருத்தை ஆதரித்து தாகூர் கட்டுரைகளை எழுதினார். கையால் நூல் நூற்று ஒரு நாட்டுக்கு சுதந்திரம் வாங்க முடியுமா? என்று வங்க அறிஞர் சரத் சந்திர போஸைப் போலக் கேட்டார். எச்சில் துப்பினால் ஏரி நிரம்பிவிடுமா? என்றெல்லாம் தனது கட்டுரைகள் மூலமாகக் காந்தியடிகளைக் கேட்டார். அவரது கொள்கைகளைத்தான் தாகூர் விமரிசனம் செய்தாரே தவிர, காந்தியடிகளைத் தனிப்பட்ட முறையில் தாகூர் வெறுக்கவில்லை.
காந்தி பெருமானுடைய தூய வாழ்க்கையையும், அற நெறியையும் தாகூர் பெருமகன் மதிப்புக் கொடுத்துப் பாராட்டிப் போற்றி வந்தார் என்பதற்கு காந்தி அடிகள் சாந்திநிகேதன் வந்த போது ‘மகாத்மா’ என்ற பட்டம் சூட்டி உலகறியப் புகழ்ந்தவரே கவிஞர் தாகூர்தான் என்றால், அவர் அண்ணல் மீது எத்தகைய அளப்பரிய அன்பை வைத்திருந்தார் என்பதை எண்ணிப் பார்த்து தான் அதன் உண்மையை உணர முடியும்.
காந்தியடிகள் தாகூர் நடத்தி வந்த சாந்திநிகேதன் கலைக் கோட்டத்திற்கு வருகை தந்த போது, தாகூர் பெருமகன் தானே கதராடைகளை அணிந்து கொண்டு மகாத்மாவை எதிர் நோக்கி வரவேற்றார். கொள்கையில் மிக உறுதி கொண்ட கவிஞர் தாகூர். மற்றவர்களிடம் பழகும் போது குழந்தையிலும் குழந்தையாய் விளங்கி வந்தார்.
மனித குலமேதைகளாகச் சிறந்த இவர்கள், அவரவர் கொள்கைகளில் மிகமிக உறுதியாக நின்று உயிரையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்த சான்றாண்மையே அவர்கள் இருவரையும் வானளாவ உயர்த்தியது. பகைவர்க்கும் அருள்வாய் நெஞ்சே என்ற பண்பும், தூய நெஞ்சும், தூய வாழ்க்கையும் ஒருவரை ஒருவர் வெறுப்பது, விரோதிப்பது, அவமதிப்பது, என்பனவற்றைக் கணவிலும் எண்ணாமல் வாழவல்லவர்கள் என்பதை மெய்பித்துக் காட்டிய மனித நேயர்களாக அவர்கள் வாழ்ந்தவர்கள்.
காந்தியடிகளும், கவிஞர் தாகூரும் இருவேறு வகையில் தொண்டாற்றி அவரவர் லட்சியங்களுக்கு சந்திர சூரியர்களாக, ஒருவர்க்கு ஒருவர் துணையாக, விளங்கி மறைந்தவர்களாவர்.
தாகூர் நடத்தி வந்த சாந்திநிகேதன் பொருளாதாரச் சிக்கலால் தடைப்பட்டு விடக் கூடாது என்ற நோக்க முடையவராக காந்தியடிகளும், அதனைப் போலவே, காந்தியடிகளது அரசியல் கிளர்ச்சிகள் ஆங்கிலேயர்களது அடக்கு முறைகளால் பலவீனப்பட்டுவிடக் கூடாது என்று தாகூரும் அரும்பாடுபட்டார்.
தாகூரின் எழுபதாம் ஆண்டு விழா, 1931-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் மிகச் சிறப்பாக நடைபெற எல்லா ஏற்பாடுகளும் நடந்தேறியது. உலக அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளை எல்லாம் திரட்டி தாகூர் பிறந்த நாள் நினைவு மலா் வெளியானது. கல்கத்தா நகர விழா மண்டபத்தில் கண்கொள்ளாக் காட்சியாகக் கூடிய மக்கள் கூட்டத்தில் தாகூரிடம் அந்த மலர் வழங்கப்பட்டது.
ஆனால், லண்டன் வட்ட மேசை மாநாட்டிலே இருந்து காந்தியடிகள் இந்தியா திரும்பிவந்தபோது, 1931 ஜனவரி 6-ஆம் நாள் அவர் கைது செய்யப்பட்டார் பிரிட்டிஷ் ஆட்சியினரால், என்ற செய்தி காதுக்கு எட்டியவுடனே மகிழ்ச்சியின் கோலாகல ஆரவாரங்களிலே மூழ்கிக் கிடந்த தாகூர் பெருமகன் இந்தியா முழுவதிலும், எங்கும் எனது பிறந்த நாள் விழாவை நடத்தக் கூடாது என்று அறிக்கை விடுத்து, தனது பிறந்த நாள் விழாவைத் துயர நாளாக மாற்றி விட்டார்.
அத்தோடு நின்ற வரல்லர் தாகூர்! காந்தியடிகள் எரவாடா சிறையிலே உண்ணா நோன்பு கொண்டு பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தபோது, தாகூர் பெருமகன் பூனா நகரிலே உள்ள அந்தச் சிறைக்குச் சென்று, உண்ணா நோன்பு முடியும் வரையில் காந்தியடிகளுடனே இருந்தார் என்றால், இந்த நட்பு நேயம் எப்படிப்பட்டதாக இருக்க முடியும்? எண்ணிப் பாருங்கள்!
காந்தியடிகளும், கவிஞர் தாகூரும் இவ்வாறு இரு பெரும் பண்பாளர்களாக, அன்பாளர்களாக, நடந்து இந்திய நாட்டின் கலங்கரை விளக்கங்களாக இந்திய நாட்டிறகு மட்டுமன்று, மனித நேய உலகுக்கே வழிகாட்டிய மாண்டாளர்களாக இருந்தார்கள்.
கவிஞர் தாகூர் எல்லாரிடமும் அன்பு காட்டிய மாமேதை அவர் உளப்பூர்வமாக வெறுத்தது ஏதாவது ஒன்று உண்டு என்றால், அது மனித உயிர்களைக் கொன்று குவிக்கும் போர் ஒன்றே ஆகும்.
போர் நடந்து முடிந்தவுடன் பிரெஞ்சு நாடு சென்றார். போரால் பாழடைந்து போன பல ஊர்களைக் கண்டு மனம் வருந்தினார். ஆயிரக் கணக்காக மாண்டொழிந்த மக்களின் மயானக் கல்லறைகளைக் கண்டு மனம் கலங்கினார்! அங்கிருந்து ஜெர்மன் நாடு சென்றார்! நெஞ்சம் நெருப்பிலே மூழ்கியது போலானார்! அவ்வளவு போர்க் கொடுமைகளைத் தான் அங்கே அவர் கண்டார்!
சீன நாட்டிற்கு 1944-ஆம் ஆண்டு சென்றார். அந்த நாட்டு அறிஞர்கள் அவரை அமோகமாக வரவேற்று மகிழ்ச்சியுற்றார்கள். அதேபோல சீன அறிஞர்களும் தாகூர் சாந்திநிகேதன் வந்து, அங்குள்ள விசுவபாரதி, ஸ்ரீ நிகேதன் போன்ற கலைக் கோட்டங்களைக் கண்டு வியந்து போனார்கள்!
கவிஞர் தாகூர் இத்தாலி, ரஷ்யா, போன்ற நாடுகளுக்கும் சென்றார்! அந்தந்த நாட்டின் கல்வி முறை, விவசாய முறை ஆகியவற்றைக் கண்டார். ஒவ்வொரு நாட்டிலும் பள்ளி மாணவர்களைப் பார்ப்பதே அவர் செல்லும் நாடுகளில் முதல் பணியாக திட்டமிட்டார்! அதற்கேற்ப மாணவர்களைக் கண்டு மகிழ்ந்தார்!
மாணவர்களும் அவரவர் புத்தகங்களிலே கவிஞர் தாகூரின் புகைப்படங்களை ஒட்டி வைத்துக் கொண்டு அப்படத்தின் அடியில் தாகூர் கையெழுத்துக்களைப் பெற்றுக்கொண்டார்கள். அது போலவே, அந்தந்த பள்ளி மாணவர்கள் தாகூரைப் பற்றி எழுதி வைத்திருந்த கட்டுரைகளையும் பெற்றுக்கொண்டு வந்து தனது வாழ்நாள் இறுதிவரை அவற்றைச் சாந்திநிகேதன் நூல் நிலையத்திலே பாதுகாத்து வந்தார்.
தாகூரின் அரிய பண்புகளில் மிக முக்கியமானது அனைவரிடமும் அன்பு செலுத்துவதுதான். அன்புக்கு உண்டோ அடைக்குந் தாழ்? அன்பு என்றால், உறவினர்களிடம், நண்பர்களிடம் காட்டிடும் அன்பன்று! எங்கு இயல்பாக அன்பு செய்வதில்லையோ அங்கு அன்பு செலுத்துவதே அன்புக்குரிய இலக்கணமாகும். தாகூரது அன்பின் மிகுதி அவர் யாரையும் விரோதித்தவரல்லர், வெறுத்தவரல்லர், பகைத்தவரல்லர். அதனால், விருப்பு வெறுப்பு என்பது அவரிடம் அண்டவே இல்லை எனலாம். அதனால்தான் தனிப்பட்டவர்கள் மேல் அவருக்கு வெறுப்புணர்ச்சி உருவானதில்லை. ஆனால், ஆங்கிலேயர்களது ஆட்சியை மட்டும் அடியோடு வெறுத்தார்! வெள்ளையர்களை அல்ல!
தாகூர் மறைந்தார்
கவிஞர் தாகூர், தனது தாயார், தந்தையார், தன்னுடன் பிறந்து வளர்ந்த அண்ணன்மார், தமக்கையர், நண்பர்கள் தன்னிடம் பணிபுரிந்த அன்பு பணியாளர்கள் ஒவ்வொருவராக மரணமடைந்து வருவதைத் தனது வயோதிகக் காலத்தில் கேட்டுக் கேட்டு நெஞ்சமே கலங்கிப் போய் விட்டார். கடைசியாக ஒரே ஒருவர் தான் மரணத்தை மீறி கவிஞர் தாகூருடன் இருந்தார். அவரோடு பிறந்த ஒரே ஒரு தமக்கைதான் அப் பெருமாட்டி!
கவிஞர் தாகூரின் அருமை மனைவியும், மூன்று மக்களும் முன்பே மறைந்து போனார்கள். அவருடன் உயிரோடு ஒரு மகனும் ஒரே மகளும், ஒரே ஒரு பேரனும், பேத்தி ஒருத்தி மட்டுமே இருந்தார்கள் அந்த ஒரு பேரனும் ஜெர்மனியில் கல்வி கற்கச் சென்றான். அங்கே 1932லே இறந்துபோனான்!
கவிஞர் தாகூரின் உயிருக்கு உயிரான நண்பர் சி.எஃப். ஆண்ட்ரூஸ் 1940-ஆம் ஆண்டில் இறந்தார்! மற்றோர் அருமை நண்பரான பியர்சன், ஒரு ரயில் விபத்தில் மாண்டார். எல்லாரையும் ஒன்றன்பின் ஒன்றாக இழந்து இழந்து அவர் கலங்கினார்.
ஆனாலும், இந்திய நாடு விடுதலை பெற வேண்டும்; அதற்காக காந்தி பெருமான் நீண்ட ஆயுளைப் பெறவேண்டும் என்று இறை வழிபாடு செய்துவந்தார்! சாந்திநிகேதனில் காலை, மாலை இசை வழிபாடுகள் நடைபெறும் போது, இந்த வழிபாட்டையும் சேர்த்தே செய்து வந்தார். எல்லாநாடுகளிலும் இருக்கும் எல்லா நண்பர்களும் நீண்ட நாள் வாழ விரும்பி வழிபாடுகளைச் செய்வார்.
கவிஞர் உடல் முதுமைத் துன்பத்தால் நலிந்தது; அடிக்கடி நோய் அவரை அலைக்கழித்தது; பல நாள் படுத்த படுக்கையோடு நலிந்தார்! ஒவ்வொரு நாளும் சாந்திநிகேதன் விசுவபாரதி, ஸ்ரீநிகேதன் பணியாளர்கள் அவருடனே இருந்து தக்க உதவிகளைச் செய்து வந்தார்கள்.
மாபெரும் கவி உள்ளம் மறைந்தது
கவிஞர் தாகூர் பெருமகனுடைய எண்பதாம் ஆண்டு பிறந்த நாள்விழா 1941-ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த விழாக் கூட்டத்திற்கு தாகூர் சென்றார். அந்தக் கூட்டத்தில் அவரால் பேச முடியவில்லை.
உடலில் நலிவு நகா்ந்து கொண்டே சென்றது. நண்பா்கள், பணியாளர்கள், மாணவா்கள் எல்லாரும் அருகமா்ந்து கண்ணைக் காக்கும் இமைகள் போல அவரிடம் செயல்பட்டார்கள் சாந்தி நிகெதன் கலைக் கழகத்தை விட்டு,சத்திர சிகிச்சைக்காகக் கவிஞர் கல்கத்தா நகா் சென்றார்.
“மனிதன் தெய்வமானான்”
காந்தியடிகள் கண்ணீர்
சிகிச்சையும் முடிந்தது, கவிஞர் பெருமான் தாகூரின் ஆவியும் பிரிந்தது! 1941-ஆகஸ்டு 7-ஆம் நாள் ரவீந்திர நாத் வங்க மண்ணைவிட்டு மறைந்தார். இந்த ஆறாத் துக்கத்தைக் கேட்ட காந்தியடிகள் மனம் மயங்கிப் பதறி, சொல்லொணாக் கவலையடைந்தார். ‘மனிதன் தெய்வமானான்’ என்று அறிக்கை விடுத்து ஆறுதல் பெற்றார்.
“நான் மக்களிலே ஒருவன்! அவர்களை விட உயர்ந்தவன் அல்லன்! நான் வணங்கும் மக்கள் அவர்களிலே அநேகர் உண்டு! என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய அறிவுத் திருமகள், இந்தியாவின் அன்புச் செல்வன்” என்றார். காந்தியடிகள் கவிஞர் தாகூர் பெருமகனுடைய மறைவால், அவர் உருவாக்கிய அறிவாலயங்களான சாந்திநிகேதன், விசுவபாரதி, ஸ்ரீ நிகேதன் பணியாளர்கள் கண்ணிர் பெருக்கினர்.