காகித உறவு/ஒரு ஏழைப் பெண்ணின் வாள்



ஒரு ஏழைப் பெண்ணின் வாள்

ந்தச் சிறுமி செல்லக்கிளிக்கு ஆங்கிலத்தில் அதிர்ஷ்டம் கெட்டதாகக் கூறப்படும் எண்ணளவு வயதிருக்கலாம். குற்றால மலையில் சற்று உயரத்தில் மரக் கொம்புகளை விறகுகளாக்கும் பணியில் அவள் ஈடுபட்டிருந்தாள். பாவாடையைச் சற்றுத் துக்கி இடுப்பிலே சொருகியிருந்ததால், அவள் முழங்கால்களும் சுள்ளி விறகுகளைப் போலவே தோன்றின. ஜாக்கெட் என்று கூறப்படும் ஒட்டுக் கந்தையின் முன் பக்கம் இரண்டு மூன்று ஊக்குகளால் பூட்டப்பட்டிருக்க, பின் பக்கம் பல பொத்தல்கள்; அவள் விறகுகளை ஒடிக்கும் கைகளைப் பார்த்தால் ஒரு கொம்பு இன்னொரு கொம்பை ஒடிப்பது போலவும், அவள் தனக்கு மாற்றுக் கால்கள் மாற்றுக் கைகள் தயாரித்துக் கொண்டிருப்பது போலவும் தோன்றும். மனிதனுக்குப் பயப்பட்டுப் பதுங்கும் புலியைப் போல, புலிக்குப் பயந்து தன்னை மறைத்துக் கொள்ளும் மானைப் போல புதர்களுக்குள் தன்னை மறைத்துக் கொண்டே விறகுகளை ஒடித்தாள். காட்டிலாகா அதிகாரிகள் குறிப்பாக ரேஞ்சர் தான் அவளுக்கு வேங்கைப் புலி. ஒரு தடவை விறகுகளை ஒடிக்கும்போது விறகும் கையுமாகப் பிடிபட்டு, அந்த விறகுகளில் ஒன்றாலேயே அடிபட்டு, அந்த விறகளவிற்கு முதுகில் வீக்கம் பெற்றவள். ஆகையால் ஒரு தடவை உணவைக் கொத்தும் காகம், பல தடவைத் திரும்பிப் பார்ப்பது போல் அவள் ரேஞ்சரை எச்சரிக்கையாகப் பார்த்துக் கொண்டாள்.

ஆயிற்று. கட்டு விறகு சேர்ந்து விட்டது. அவற்றைக் காட்டுக் கொடிகளால் கட்டி மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் விறகுக்கடையாரிடம் கொடுத்தால் ஒரு ரூபாய் கிடைக்கும். அதை வைத்து அங்கிருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ள வீட்டில் படுக்கையில் கிடக்கும் அம்மாவுக்கு அரிசி வாங்கிச் சமைத்துப் போடலாம்.

மணி 11-30 ஆகிவிட்டது. இப்போது புறப்பட்டால்தான் வீட்டிற்கு இரண்டு மணிக்குப் போய் சேரலாம். செல்லக்கிளி திடீரென்று சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். 'அய்யய்யோ ரேஞ்சரா?" மருண்டு போன செல்லக்கிளி மகிழ்ச்சியடைந்தாள் அழகான ஒரு கார், டிரான்ஸிஸ்டர் ஒலிக்க இரண்டு குமரிப் பெண்கள் சிரிக்க, இரண்டு வாலிபர்கள் குதிக்க, ஒர் ஏழு வயதுப் பாப்பா சிணுங்க, ஐம்பது வயதுக் கண்ணாடி ஆசாமியும், அவரை ஒரு காலத்தில் கைப்பிடித்ததுபோல் தோன்றிய நடுத்தர வயதுப் பெண்மணியுடன் இறங்குவதற்காகக் குலுங்கி நின்றது. சீமை நாயும் இருந்தது; இறங்கியது.

செல்லக்கிளி கீழே நின்ற அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றாள். விறகைக் கட்டினாள்.

அருவிக்கு அப்பால் ஒரு சிறு குன்றின் அருகேயுள்ள பசும் புல்தரையில் வயதான அம்மாள் ஒரு சிவப்புக் கம்பளியை எடுத்துப் போட்டாள். கண்ணாடி மனிதர் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தார். கூடை நிறைய இருந்த ஆப்பிள் பழங்கள், தெர்மாஸ் பிளாஸ்க், உருளைக் கிழங்கு, உப்புப் புளி வகையறாக்களைக் கொண்ட எவர்சில்வர் பாத்திரம்; ஒர் அலுமினியப் பாத்திரம் - இன்ன பிற.

பாத்திரங்களை வாங்கி வைத்த அம்மாவுக்குக் கை வலித்திருக்க வேண்டும். வாய் வலிக்கும்படியாக கேட்போருக்கு காது வலிக்கும்படியாக “ஏண்டி... அங்கேயே நின்னா எப்டி? கொஞ்சம் ஒத்தாசை பண்ணுங்க..." என்று கத்தினாள்.

வாலிபப் பெண்களில் குதிரை மாதிரி கொண்டையின் பின் பகுதி தூக்கி நிற்க, நின்றவள் மூத்தவளாக இருக்க வேண்டும் தன் பங்குக்கு இரண்டு எவர்சில்வர் டம்ளர்களை எடுத்துக் கொடுத்து ஒத்தாசை செய்தாள். இன்னொருத்தி ஒரு பையனுடன் உலவிக் கொண்டிருந்தாள். ஏழு வயதுப் பாப்பா, அவர்களோடு போகலாமா அல்லது வயதானவர் பக்கம் போகலாமா என்று யோசித்து விட்டு, பின்பு கார் பக்கம் நின்ற நாயின்மீது லேசாக சாய்ந்து கொண்டு நின்றது.

"ஸ்டவ்வ எடுத்துட்டு வாங்கோ!'

கண்ணாடி மனிதரின் முதுகு காருக்குள் போனது. பிறகு டிக்கியைத் திறந்தார். ஸ்டவ் இல்லை - இல்லவே இல்லை. "அங்க இருக்கான்னு பாரு" என்று டிக்கிக்குள் இருந்தே குரல் கொடுத்தார். வயதான அந்தப் பெரியம்மா பலங்கொண்ட மட்டும் கத்தினாள் : "ஒங்கள எடுத்து வைக்கச் சொன்னேன். வைக்கலியா? படிச்சிப் படிச்சி சொன்னேன்...!"

வயதானவரும் திரும்பிக் கத்தினார் :

"நீ செக் பண்றதுதானே?"

ஆசைதீர சாப்பிடலாம் என்ற தைரியத்தில் உலவிக் கொண்டிருந்த இளம் பெண்டுகள் பாப்பாவின் கையைப் பிடித்து அதை நண்டு மாதிரி தூக்கிக் கொண்டு முகாமருகே வந்தார்கள். "அதுக்குத்தான். நான் ரெண்டு ஸ்டவ் எடுத்து வைக்கச் சொன்னேன். நீங்க ஒண்ணுகூட வைக்கல..." என்றாள் இளம் பெண் ஒருத்தி.

"பேசாம தென்காசில போய் சாப்புடலாம். இப்பவே பசிக்குது” என்றான் ஒரு வாலிபன்.

வயதான அம்மா, கண்ணாடிக் கணவனை எரித்து விடுவது போல் பார்த்தாள். அவள் வயிறு ஸ்டவ் மாதிரி பற்றி எரிந்தது. என்ன செய்வதென்று எல்லோரும் குழம்பிப்போய் இருக்கையில் செல்லக்கிளி விறகுக் கட்டைச் சுமந்துகொண்டு மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தாள்.

கண்ணாடிக்காரருக்கு ஒரு ஐடியா உதித்தது.

"அந்தப் பொண்னோட விறக வாங்கிச் சமைக்கலாமா?"

“விறகையா சமைக்கப்போlங்க" என்று ஒருத்தி 'விட்' அடித்தாள். வயதான அம்மா இந்த விட்டை ரசிக்கவில்லை. நல்ல பசி அவளுக்கு அதோடு சமைக்கப் போகிறவள் அவள் இல்லை. "ஆமா அதுதான் நல்ல யோசன. விறகால சமையல் பண்ணுனா ருசியா இருக்கும்."

பேச்சு மேற்கொண்டு நீள்வதற்கு முன்னதாக அந்தச் சிறுமி அடிவாரத்திற்கு வந்துவிட்டாள். அவர்களிடம் ஏதோ பேச வேண்டும் என்று நினைத்தாள். பளபளப்பாக இருந்த அவர்களிடம் பேசுவதற்குக் கொஞ்சம் வெட்கப்பட்டாள். பின்னர் விற்குக் கட்டைச் சிறிது தலைக்குள்ளேயே நகர்த்தி பாலன்ஸ் செய்து கொண்டே ஒரு தகவலை வெளியிட்டாள்.

"பொழுது சாயறதுக்கு முன்னாலே போங்க. ஏன்னா, தண்ணி குடிக்க புலி, ஓநாயில்லாம் அப்பவரும். ஒரு தடவை குளிச்சிக்கிட்டிருந்த ஒரு ஆள ஒரு புலி கொன்னுட்டு." எல்லோரும் ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு காரைப் பார்த்து ஒடப் போனார்கள் சிறுமியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்து முடித்ததும் சீரியஸாகப் பேசினாள் :

"இப்ப வராது. பொழுது சாஞ்ச பொறவுதான் வரும்."

போன உயிர் திரும்பியவர்களாய் அந்தக் கோஷ்டி மீண்டும் உட்கார்ந்தாலும் அனிச்சையாக மலைப் பகுதிகளையும் அருகே இருந்த ஒரு குகையையும் பார்த்துக் கொண்டு ஒருவரோடொருவர் நெருங்கி நெருங்கி இருந்து கொண்டார்கள்.

"ஏ பொண்ணு, ஒன் பேரு என்ன?”

  • செல்லக்கிளி"

"ஒனக்கு சமைக்கத் தெரியுமா?"

"வீட்ல நான்தான் சமைப்பேன்"

“ஒன்ன கவனிச்சுக்கிறோம். இந்த விறகுக்கும் பணம் கொடுத்துடுகிறோம். இதோ அரிசி இருக்கு, எல்லாம் இருக்கு. சமைச்சுக் கொடுக்கிறியா?"

செல்லக்கிளி அந்த யோசனையைப் பரிசீலனை செய்பவள் போல் தலைக்கு மேல் இருந்த விறகுக்கட்டுக்கு மேல் இரண்டு கைகளையும் கொண்டு போய்ப் பின்னிக் கொண்டு நின்றாள். அவள் வீட்டில் நாலு மணிக்குத்தான் சாப்பாடு; இப்படி நாலு மணிக்குச் சாப்பிடுவதால் பகல் சாப்பாட்டை முடித்தது மாதிரியும் ராத்திரி சாப்பாட்டை முடித்தது மாதிரியும் ஆகிவிடும். அம்மா பசியில துடிப்பா.. இப்ப போனாதான் நாலு மணிக்குச் சோறு திங்கலாம். ஏன், இவியதான் கவனிச்சிக்குறேனு சொல்றாவள. நாமளுஞ் சாப்பிடலாம், அம்மைக்கும் கொண்டு போவலாம். எதுல கொண்டுபோவ முடியும்? ஏன் முடியாது? நாலு ஆல இலய எடுத்து ஈர்க்கால் குத்திட்டா போச்சு. எனக்கும் எங்கம்மாவுக்கும் சாப்பாடு போட்டு விறகுக்கு ரெண்டு ருவாயும் சமையல் கூலி ரெண்டு ரூவாயுமா நாலு ரூவா தருவியளான்னு கேக்கலாமா? சீச்சி. அதிகமா ஆசைப்படப்படாது. சமைக்கதுக்குச் சாப்பாடு. விறவுக்கு மட்டும் ஒண்ணர ரூவா தந்தாப் போதும். கண்டிஷனா பேசிக்கலாமா? சீச்சி. பெரிய இடத்துல போயி கறார் பேசுறது தப்பு. தருவாவ தருவாவ போயும் போயும் சோறு போடுங்கன்னா பிச்சைக்காரி மாதிரி கேக்கது? ஏன் கேக்கப்படாது?'

 சிறுமி யோசித்துக் கொண்டிருந்தபோது அவள் வாயிலிருந்து வருவதை தேவ வாக்காக நினைத்துக் கொண்டு அந்தப் பசிக் கோஷ்டி காத்து நின்றபோது கண்ணாடிப் பெரியவர், “சீக்கிரமா சொல்லு. நேரமாவுது" என்றார்.

அவள் சீக்கிரமாகச் சொல்லவில்லை. விறகுக் கட்டை சீக்கிரமாக இறக்கி வைத்துவிட்டுக் கொஞ்சம் தொலைவில் கிடந்த மூன்று பெரிய உருண்டையான கற்களை ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து போட்டாள் பிறகு மூன்றையும் முக்கோண வடிவத்தில் வைத்து அண்டைக் கொடுத்து விட்டு விறகுக்கட்டில் இருந்த சுள்ளிகளை எடுத்து முருங்கைக்காய் அளவிற்கு ஒடித்து அடுப்புக்குள் வைத்துவிட்டு அங்கேயும் இங்கேயுமாகக் கிடந்த சருகுகளைப் பொறுக்கி சுள்ளிகளுக்கு மேலே வைத்துவிட்டுத் "தீப்பொட்டி" என்றாள்.

ல்லாம் ரெடி!

ஏழு பேரடங்கிய அந்தக் கோஷ்டியில் அறுவர் வட்டமாக உட்கார்ந்து கொண்டார்கள். கண்ணாடிக்காரர் வட்டத்துக்கு உள்ளே நின்றார். சீமை நாய் பெளவியமாகச் சிறிது மரியாதையான தூரத்தில் நின்றது. செல்லக்கிளி ஒவ்வொன்றாக எடுத்து வட்டத்திற்கு உள்ளே வைத்தாள். எவர்சில்வர் தட்டுக்கள் வட்டமிட்டன.

இதற்குள் சாப்பாட்டுத் தட்டிற்குள் கையைக் கொண்டு போன குதிரைக் கொண்டைக்காரி, 'அய்யய்யோ! என் மோதிரம். என் மோதிரத்தைக் காணல...' என்று கத்தினாள். உட்கார்ந்தவர்கள் எழுந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வோர் இடத்தில் தேடினாலும் எல்லார் கண்களும் அருவிப் பக்கம் ஒடிப் போய்த் தேடிக் கொண்டிருந்த சிறுமியையே சந்தேகமாகப் பார்த்ததால் அவர்களால் சரியாகத் தேடமுடியவில்லை. புலிக்குப் பயந்து குறிப்பிட்ட துரத்திற்கு மேல் அவர்களால் போகவும் முடியவில்லை. 'அய்யய்யோ... ஒரு பவுன் மோதிரம்.ஆசையோட போட்ட மோதிரம்."

“லாட்ஜ்ல வச்சிட்டு வந்திட்டியா...?"

"இவா லாட்ஜ்ல கைய வச்சாலும் வைப்பாளே தவிர... மோதிரத்தை வைச்சிட்டு வரமாட்டா..."

"குமார். இது விளையாட்டுக்குச் சமயமா? அந்தப் பக்கமாப் பாரு."

‘'வேலைக்காரக்குட்டி அமுக்கியிருக்கும். அது முழியே சரியில்ல. தேடுகிறது மாதிரி பாசாங்கு பண்ணுது பாரு..."

'அய்யய்யோ... என் மோதிரம்... மோதிரம் கிடைக்காம நகரமாட்டேன்."

"அதுக்குள்ள புலி வந்துட்டா..?

“சீ... என்ன விளையாட்டு இது? நல்லா தேடுங்க..."

"அவாகிட்ட. இருக்கான்னு சோதனை போடலாம்."

அவர்கள் செல்லக்கிளியைக் கூப்பிட வேண்டிய அவசியமே எழவில்லை. அவளே, பாறை மேல கிடந்தது' என்று சொல்லிவிட்டு மோதிரத்தை எடுத்துக் கொண்டு வந்தாள். குளிக்கும் போது மோதிரத்தைக் கழற்றி வைத்ததை நினைவுபடுத்திக் கொண்டே மோதிரக்காரி அந்தச் சிறுமியைச் சோதனைபோட யோசனை சொன்ன அவள் ஒன்றும் பேசாமல் மோதிரத்தை வாங்கிப் போட்டுக் கொண்டாள். -

பிக்னிக் கோஷ்டி சாப்பாட்டில் இறங்கியது. சிறுமி, பாத்திரத்தில் இருந்த சோற்றைப் பரிமாறப் போனபோது அவள் கைகளையும் கால்களையும் பார்த்து முகத்தைச் சுழித்த பெரியம்மா, "ஐயாகிட்டே கொடு. அவரு பரிமாறுவாரு" என்று சொல்லிவிட்டுச் செல்லக்கிளியின் பொறுப்பைக் கண்ணாடி ஐயாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாள்.

உருளைக்கிழங்கு பொரியலாகவும் முட்டைக்கோஸ் கூட்டாகவும் கையோடு கொண்டு வந்த சிப்ஸ் காரமாகவும் கத்தரிக்காய் - வாழைக்காய் முருங்கைக்காய் சாம்பாராகவும் தட்டுக்களில் பாய்ந்தன. போதாக்குறைக்குக் கண்ணைச் சிமிட்டும் 'ஆம்லெட்டு'கள்.

செல்லக்கிளிக்கு அப்போதே சாப்பிட வேண்டும் போலிருந்தது. அதே சமயம் கொஞ்சம் குறைவாகச் சாப்பிட்டு விட்டு அம்மாவுக்கு அதிகமாகக் கொண்டு போக வேண்டும் என்று நினைத்தாள். கை காலெல்லாம் வேர்வை, தலையில் அடுப்புக்கரி, இவ்வளவு அருமையான சாப்பாட்டைக் குளிக்காமல் சாப்பிட அவளுக்கு விருப்பமில்லை. அதோடு, அவர்கள் சாப்பிடுபோது அங்கே நிற்பது 'பெளசாகவும்' தோன்றவில்லை.

செல்லக்கிளி குளிக்கப்போனாள். குளித்தாள். உடம்போடு ஒட்டிக் கொண்டிருந்த பாவாடையைப் பிழிந்து விட்டுக் கொண்டு ஈர ஜாக்கெட்டோடு திரும்புவதற்கு அவளுக்குக் கொஞ்சம் வெட்கமாக இருந்தது. அதற்குள், “ஏ பொண்ணு... நாளைக்கு நல்லா குளிச்சிக்கலாம். சீக்கிரமாவா" என்ற பெரியம்மாவின் குரலைக் கேட்டு, கிட்டத்தட்ட ஒடினாள். ராத்திரிக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் இந்த மாதிரி சாப்பாடு இனிமேல் எப்போ கிடைக்கப் போவுதோ...?"

சாப்பிடக் கூப்பிடுவதாக நினைத்துப் போனால் அவர்கள் சாப்பிட்ட தட்டைக் கழுவச் சொன்னார்கள். செல்லக்கிளி ஜாடையாகப் பாத்திரத்தைப் பார்த்தாள். அதில் ஒர் பருக்கை கூட இல்லை. எங்கேயாவது எடுத்து வைத்திருப்பார்களோ iன்று கண்களைச் சுழல விட்டாள். வெங்காயத் தோல்களும் கறிவேப்பிலை இலைகளும் நைந்துபோன மிளகாய்களும் சூப்பிப் போடப்பட்ட முருங்கைக்காய் துண்டுகளும் கிடந்தன. ஏழு வயது பாப்பா மட்டும் "அவளுக்குச் சோறு போதுங்கோ" என்றது. உடனே கண்ணாடிக்காரர் வேலக்காரக் குட்டிக்கு வைக்கலியா" என்று கேட்டார். அவர் 'டோன்' பாப்பாவைச் சமாதானப் படுத்துவதற்காக மட்டுமே சொல்வதுபோல் ஒலித்தது.

பெரியம்மா மட்டும் சலிப்போடு சொன்னாள் :

"நல்ல பசி எல்லாம் காணாததைக் கண்டது மாதிரி சாப்புட்டுட்டுதுங்க இதே மாதிரி வீட்ல சாப்பிட்டா எவ்வளவு நல்ல இருக்கும்..?

"நான் சாப்பிடல, வசந்திதான் ஒரு பிடி பிடிச்சிட்டா..."

"ஏய் பொய் சொல்லாத. பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது."

எல்லோரும் வாய் விட்டுச் சிரித்தார்கள். செல்லக்கிளிக்கோ வாய்விட்டு, மனம்விட்டு, உடம்பெல்லாம் குலுங்கக் குலுங்க அழ வேண்டும் போலிருந்தது.

பட்டினியால் தவிக்கும் அம்மாவுக்கு.?'இப்பவே மூணு மணி இருக்கும். அவள் ஏகாங்கி மாதிரி மெல்ல நடந்தாள். ஒரு குவியல் உணவைத் தின்று கொண்டிருந்த சீமை நாய், அவள் தன்னோடு போட்டிக்கு வரப்போகிறாள் என்று பயந்தது மாதிரி 'லொள்' என்றது.

"ஏ பொண்ணு. சீக்கிரமா பாத்திரத்தைக் கழுவு. புலி வந்துடப் போவுது'என்று பெரியவர் சொன்னதும், செல்லக்கிளி சுயநினைவுக்கு வந்தாள்.

அவள் தனக்குத்தானே சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டாள். பரவால்ல. சாப்புடாட்டா செத்தா போவோம்? ஒரு வகையில சாப்புடாமப் போவது நல்லதுதான். நிறைய துட்டுக் கொடுப்பாங்க... அம்மாவுக்கு ஏதாவது வாங்கிட்டுப் போவலாம். ஒண்ணும் குடி முழுவிப் போவல. ஒண்ணே ஒண்ணுதான். இப்டி தெரிஞ்சிருந்தா... தூர ஊத்துன கஞ்சித் தண்ணிய குடிச்சிருக்கலாம். பரவால்ல. காசு நிறையக் கிடைக்கும்.'

செல்லக்கிளி அவசர அவசரமாகப் பாத்திரங்களைக் கழுவினாள். இதற்குள் வாலிபப் பையன்களில் ஒருவன் காரை 'ரிவர்ஸ்"ஸில் கொண்டு வந்தான். பெரியவர் டிக்கியைத் திறந்தார். முதலை மாதிரி வாயைப் பிளந்து கொண்டிருந்த டிக்கிக்குள்ளும் கார் ஸீட்டுக்குக் கீழேயும் எல்லா சாமான்களும் ஏற்றப்பட்டன. பையன், டிரைவர் இருக்கையில் உட்கார்ந்தான். எல்லோரும் ஏறினார்கள் நாயுந்தான்.

செல்லக்கிளி கைகளைப் பிசைந்து கொண்டு நின்றாள். கண்ணாடிக்காரர் பைக்குள் கையை விட்டு ஒர் ஐந்து ரூபாய் நோட்டையும் ஒரு ரூபாய் நோட்டையும் எடுத்தார். சிறுமிக்குப் பயங்கரமான மகிழ்ச்சி.

பெரியவர் முகத்தைச் சுழித்துக்கொண்டே, அஞ்சு ரூபா நோட்டா இருக்கே. ரெண்டு ரூபாய் சேஞ்ஜ் இருக்கா?' என்று கேட்டார்.

எல்லோரும் 'இல்லை' என்பதற்கு அடையாளமாகத் தலையை மைனஸ் மாதிரி ஆட்டியபோது கஞ்சியிலும் படு கஞ்சியான பெரியம்மா, "ஒரு ரூபாய் போதும். விறகுக்கு ஐம்பது பைசா வேலைக்கு ஐம்பது பைசா... கொஞ்சமாவது பொறுப்பிருந்தா... ரெண்டு ரூபாய் கொடுக் கணும்னு சொல்லுவீங்களா" என்றாள்.

“இது மெட்ராஸ் இல்ல டாடி... அங்கதான் விலைவாசி அதிகம். ஒசில விறகு பொறுக்குகிற ஊரு இது. இதுங்களுக்கு இருபத்தஞ்சு பைசாவே லட்சம் ரூபாய் மாதிரி' என்றாள் பொருளாதாரப் பட்டதாரியான குதிரைக் கொண்டை.

 டிரைவர் பையன் காரை ஸ்டார்ட் செய்து அதை நகர்த்திக் கொண்டிருந்தான். சிறுமியும் காரோடு சேர்ந்து நடந்தாள். கண்ணாடிக்காரர் ஒரு ரூபாய் நோட்டை அவள் கையில் திணித்தபோது கார் உறுமிக்கொண்டு ஓடியது.

சிறுமி அந்த ஒரு ரூபாய் நோட்டையே வெறித்துப் பார்த்தாள். பின்பு ஆத்திரம் தாங்க முடியாமல் அதைச் சுக்குநூறாகக் கிழித்துப் போட்டாள். இரைச்சலோடு விழுந்து கொண்டிருந்த அருவி, ஓங்கி வளர்ந்த மரங்கள், பச்சைப் பசேலென்று பாசி படிந்த பாறைகள், அங்குமிங்குமாகப் பறந்து கொண்டிருந்த மைனாக் குருவிகள் அத்தனையும் அவளுக்குப் பொய்மையாகத் தெரிந்தன. சிறிது நேரத்திற்குப் பிறகு கிழித்துப் போட்ட ரூபாய்ச் சிதறல்களை ஒன்று சேர்க்கப் பார்த்தாள் முடியவில்லை. அம்மா முகத்தில் எப்படி விழிப்பது? அவள் பசித் தீயை எப்படி அணைப்பது?

செல்லக்கிளியின் கண்களிலிருந்து இரண்டு சொட்டு இரண்டே சொட்டு உஷ்ணநீர் கொதித்துக்கொண்டிருந்த பாறாங்கல் ஒன்றில் விழுந்த சமயத்தில்

மெட்ராஸ் கோஷ்டி போய்க் கொண்டிருந்த அந்தக் கார் ஒரு பள்ளத்தில் உருண்டு விழுந்து குப்புறக் கிடந்தது. பெட்ரோலில் தீப்பற்றி காரும் அதற்குள்ளிருந்த சாமான்களும் எரிந்து கொண்டிருந்தன. ஒரு ரூபாய்த் தாளை நீட்டிய கண்ணாடிக்காரர் ஒடியாமல் இருந்த ஒரே ஒரு கையால் காருக்குள் இருந்தவர்களை வெளியே இழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்.

பாப்பாவுக்கும் நாய்க்கும் தவிர எல்லோருக்கும் பயங்கரமான அடி.

ஏழையின் கண்ணீர் கூர்வாளை ஒக்கும்' என்பார்கள் அந்த வாள், கார் சக்கரங்களாகவும் கண்ணாடிகளாகவும் பாதாளப் பள்ளமாகவும் பெட்ரோல் தீயாகவும் மாறலாமோ?


***