காகித உறவு/குடிக்காத போதை
குடிக்காத போதை
ஊருக்குச் சற்றுத் தொலைவில், ஹிப்பி மாதிரி ஒதுங்கிய இடம். சுற்றிலும் கருவேல மரங்கள் இரும்புக் கம்பிகள் மாதிரியும் அவற்றிற்கு இடையே இருந்த வேலிக்காத்தான் செடிகள், முட்கம்பி வலைகள் மாதிரியும் இருந்த இடம். மொத்தத்தில் அது ஒரு மாதிரி இடமல்ல. ஒரு மாதிரியான இடம். இந்த இடத்தைச் சுற்றிக் கரைவரை மணல் புரளும் ஒடை 'அகழி' மாதிரி மூன்று பக்கமும் சுற்றி இருந்தது. கிட்டத்தட்ட காடு, தலைகீழ் பரிணாமத்தால் தோப்பானது போலவும், தோப்பு காடாகப் பரிணாமமாகிக் கொண்டிருப்பது போன்றும் தோன்றும் பகுதி.
இந்தப் பகுதியில் ஒர் ஒரத்தில், பாழடைந்த கட்டிடம். அந்தச் செங்கல் கட்டிடத்தில், இன்னும் இடியாமலே விழுந்து கொண்டிருந்த ஒரு சுவருக்குப் பக்கத்தில், இரும்பு அடுப்பிற்கு மேலே, பத்து 'பிளாடர்' அளவுக்கு அதாவது ஐம்பது லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம். டிரம்மிற்கு மேலே பதினைந்து லிட்டர் சரக்கைப் பிடிக்கும் தவலைப் பாத்திரம், அதற்கு மேலே 'டேங்கா' - அதாவது ஒரு சின்னப்பாத்திரம். இந்த மூன்று உபகரணங்களும் காற்றுப் புகாதபடி, எதையோ வைத்துக் கட்டப்பட்டிருந்தன. உச்சியில் இருந்த பாத்திரம், அலுமினியத் தகட்டால் மூடப்பட்டு, பிரிக்க முடியாத பிராண சிநேகிதர்கள் போல் இறுக்கப்பட்டிருந்தது.
மேலே இருந்த 'டேங்கா'வில் முழுக்க முழுக்கத் தண்ணீர் இருக்கிறதாம். அதற்குக் கீழே இருந்த டிரம்மில் ஊறப்போட்ட வெல்லமும், பட்டைகளும் கொட்டைகளும் கொஞ்சம் சல்போட்டா வகைகளும் இன்னும் பல கிக் வகையறாக்களும் இருக்கின்றனவாம். இரும்படுப்பில் எரியும் செந்தீ அனலைக் கக்கியதால், டிரம்மிற்குள் இருப்பவை பொங்கி எழுந்து, 'ஆவியாகி' 'டேங்காவில்' பட்டுக் குளிர்ச்சியாகி, ஜீவாத்மாவான அந்த ஆவி, 'பரமாத்மாவாகி, நடுவில் இருந்த தவலைப் பாத்திரத்திற்குள், சொட்டோ சொட்டென்று சொட்டிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், ஜில்லா கலெக்டரை விட பலமடங்கு சர்வவல்லமையுள்ள, மாவட்டக் காய்ச்சும் அதிகாரியிடம் தாலுக்கா சப்ளை அதிகாரியாக இருந்தவன் காளிமுத்து. அவருடைய பல கார்களில் ஒரு கார் இவனிடமே எப்போதும் இருக்கும். இந்த அளவுக்கு, மா.கா. அதிகாரியிடம், தா.ச. அதிகாரியாகப் பணி புரிந்தவன். சொந்தத்தில் தொழில் செய்ய நினைத்து, கொஞ்ச காலத்திற்கு முன்புதான், இந்தக் காய்ச்சும் தொழிலில் இறங்கினான். சப்ளை அதிகாரியாக இருந்தபோது, தெரிந்து கொண்ட தொழில் நுட்ப விவரங்களை வைத்து, இந்தக் குடிசைத் தொழிலைத் துவக்கி போது, பல கார்களையும் பல அரசியல் தலைவர்களையும், பல அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டிருந்த மாவட்டக் காய்ச்சும் அதிகாரி, அவனைச் சொந்தத் தொழில் வேண்டாம் என்று கெஞ்சினார். அதற்கு அவன் மசியாததால், அடியாட்களை வைத்து மிஞ்சிப் பார்த்தார். 'மாமூல்' ஆட்களை வைத்து மடக்கப் பார்த்தார். ஆனால் எதற்கும் காளிமுத்து கலங்கவில்லை.
மாவட்ட காய்ச்சும் அதிகாரியும், புரொடெக்ஷன் மானேஜர், சப்ளை அதிகாரிகள் முதலிய முக்கியப் புள்ளிகளும், அவனைப் புள்ளி வைக்க முடியாது எனத் தெரிந்து கொண்டு, சமாதான - சாராய சகவாழ்வுக் கொள்கையை, நேசக் கரத்தோடு நீட்டினார்கள். நீட்டிய கரத்தைப் பிடித்துக் கொண்ட காளிமுத்து, அவர்களிடமிருந்து "ஏரியா எல்லையை' வரையறுத்துக் கொண்டதுடன், ஆக்கிரமிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தத்தையும், பரஸ்பர ரகசியப் பாதுகாப்பு உடன்பாட்டையும் செய்து கொண்டான்.
இப்படிப்பட்ட காளிமுத்துவை, அடியாளுக்கு அடியாளாக, அடியார்க்கும் அடியானாக விளங்கும் இதோ இந்த காளிமுத்துவை - ஒரு பொடிப்பயல் மிரட்டுகிறான் என்றால், அதுவும் "கிக் கொடுக்கும் இவனையே கிக் பண்ணப் பார்க்கிறான் என்றால்...
அதே ஊரைச் சேர்ந்த மூர்த்தி கொஞ்சம் வசதியான வாலிபன். கல்லூரியில் முழுதும் கால் வைத்துவிட்டு, மழை இல்லாத சமயத்தில்கூட, அங்கே ஒதுங்கிய திருப்தியில் அதற்கு அத்தாட்சியாக, ஒரு சர்ட்டிஃபிகேட்டையும் வாங்கிக் கொண்டு, சமீபத்தில் ஊருக்குள் நிரந்தரமாக இருக்கிறான். கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில் பல கோப்பைகளை வாங்கியிருக்கிறான். வாங்கட்டும்; அதுக்காக, அந்த ஊரில் வழக்கமாக நடக்கும் மதுவிலக்குப் பொதுக் கூட்டம் ஒன்றில், பல தாலுக்கா அதிகாரிகளும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கலந்து கொண்ட, பலர் குடித்துப் புரண்ட அந்தக் கூட்டத்தில், காளிமுத்துவை வாங்கு வாங்குன்னு வாங்க வேண்டுமா?கூடாதுதான். காளிமுத்து யோசித்தான். இவனை இந்தக் கிறுக்குப் பயல் மூர்த்தியை, மாறுகால், மாறுகை வாங்கினால் என்ன?
வாங்க முடியாது. ஏனென்றால், மூர்த்தி வசதியானவன். பங்காளி பலங் கொண்டவன். பெரும்பாலும் குடியர்களாக இருந்தாலும், அவனைத் திட்டினாலே பொறுத்துக் கொள்ளாத ஊரார்கள், தீர்த்துக் கட்டினால் விடுவார்களா. மாட்டார்கள். ஊரில் முக்கால் வாசிப்பேர் எதிரியாவார்கள்? சமயத்தை எதிர் நோக்கி நிற்கும் மாவட்ட காய்ச்சும் அதிகாரி, இவனைக் கொக்குபோல் கொத்தி விடுவார். 'தொழில்' லாபத்தால், மோட்டார் பைக்கிலிருந்து மோட்டார் கார் வாங்கும் அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், இந்தப் பயலை எப்படி மடக்கலாம் என்று காளிமுத்து தீவிரமாகச் சிந்திக்கலானான். ஒசிக் குடிக்கு யோசனை கூறும் சிலர் ஒன்று கூடினார்கள். ஒரு பெரிய வியூகம் வகுக்கப்பட்டது. மூர்த்திப்பயல் எப்படியும் விழுந்துதான் ஆகவேண்டும்! தனக்கு எல்லா வகையிலும் பரிச்சயமான ஓர் இளம் பெண்ணை, மூர்த்திமேல் ஏவினான். இவள் சிரித்துப் பார்த்தாள், கைகளை ஆட்டிப் பார்த்தாள். வாய் வலித்ததும், கை ஒய்ந்ததும்தான் மிச்சம். இது போதாதென்று காளிமுத்து தன் ஒரே பெண்ணான மங்காத்தாவை நகை நட்டோடு, கட்டிக் கொடுப்பதாக, மூர்த்தியின் அப்பாவுக்கு முறைப் படி சொல்லியனுப்பினான். அப்பாக்காரர் சம்மதித்தார். ஆனால் மகன்காரன், "மங்காத்தா. தங்காத்தா தாராளமாய்க் கட்டிக்கிறேன். அதுக்கு முன்னால்... அவளுக்கும் குடிப்பழக்கம் உண்டான்னு தெரிஞ்சாகணும்' என்று சென்னான். இதைக் கேள்விப்பட்ட, ஏற்கெனவே இன்னொருவனைக் காதலிக்கும் மங்காத்தா இதைச் சாக்காக வைத்து, குடிகார அப்பனுக்கு... பிறந்ததுனால... என்னையும். குடிகாரின்னு, மூர்த்தி தடியன் சொல்லிட்டான். எல்லாம் ஒங்களால.. ஒங்களால...! கட்டுனால் ராமதுரை மச்சானைத்தான் கட்டுவேன். ஆம். ஆமாம் கட்டுவேன்!" என்று காளிமுத்து வெட்டிய திட்டக்கிணற்றுக்குள், ராமதுரை என்கிற பூதத்தைக் கிளப்பி விட்டாள். எல்லா விதத்திலும் தன்னைப் போல் விளங்கும் ராமதுரைக்கு மகளைக் கொடுக்க முடியாமல், காளிமுத்து 'மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திண்டாடினான்.காளிமுத்துவுக்கு ஒன்று ஒடவில்லை. இந்தத் தொழிலைத் தவிர எந்தத் தொழிலையும் அவனால் செய்ய முடியாது. மாவட்டக் காய்ச்சும் 'அதிகாரி'யும் அவனை, மீண்டும் தன் டிபார்ட்மெண்டுக்குள் எடுத்துக் கொள்ள மறுத்து விட்டார். இனி பொறுப்பதில் நியாயமில்லை. என்ன வந்தாலுஞ் சரி... மூர்த்திப்பயலை, தீர்த்துக் கட்டியாக வேண்டும். ஒரே வெட்டாக வெட்டியாக வேண்டும். தலைவேறு... முண்டம் வேறாக ஆக்கியாகி வேண்டும்.
'வேலையை' முடிக்க, ஆட்களை அமர்த்துவதற்கு முன்னதாகவே, போலீஸ் நிலையத்தில் இருந்து, காளிமுத்துவுக்கு அழைப்பு வந்தது. போனான். சப் இன்ஸ்பெக்டர் எரிந்து விழுந்தார்; காளிமுத்து, தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும், தனக்குத் தக்க பாதுகாப்பு அளிக்கும்படியும் கலெக்டரிடம் "கிரீவ்வன்ஸ்டே'யில் (மனுநீதி திட்டநாள்) மூர்த்தி கொடுத்திருந்த விண்ணப்ப மனுவை, அவனிடம், காட்டினார். "மூர்த்தி மேல. ஒரு சின்னக்காயம் ஏற்பட்டாலுஞ் சரி... ஒன் முதுகிலே. பெரிய காயம் ஏற்படும். ஜாக்கிரதை' என்று சப் இன்ஸ்பெக்டர், அவனைத் திட்டினார். லேசாகத் தட்டிக்கூடப் பார்த்தார். அவனை... எவன் தாக்கினாலும். நீ தாக்கியதாய்க் கருதப்படும்" என்று தாக்கீதும் கொடுத்தார்.
இப்போது, மூர்த்திக்கு, வேறு விரோதத்தில், வேறு எவனும் 'சின்னக்காயங்' கூட விளைவிக்காமல் இருப்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு காளிமுத்துவுக்கு வந்துவிட்டது. ஏற்கெனவே, மூர்த்திமீது, இன்னொரு 'ஏரியா' ஆசாமிகள் குறி வைத்திருப்பது தெரிந்ததும், அவர்களின் காலில் விழாக் குறையாக விழுந்து அழாக் குறையாக அழுது அவர்களைத் தடுப்பதற்குள் காளிமுத்துவிற்குப் போதும் போதுமென்றாகிவிட்டது.
இதற்கிடையே போலீஸ்காரர்கள், 'ரெய்ட்' பண்ண வரப்போவதாக, காளிமுத்துவுக்குத் தகவல் வந்தது. இந்தத் தொழிலை எப்படிவிட முடியும்? இந்தச் சண்டாளனை, எப்படிச் சமாளிக்க முடியும், என்ன பண்ணலாம். ஒரே ஒரு வழிதான். காளிமுத்து வெளியூருக்குப் போய்விட்டு வந்தான். அங்கே... தொழில் சகாவின் காதைக் கடித்து விட்டு, ஊருக்குத் திரும்பினான். இதிலாவது வெற்றி கிடைக்குமா? காதலியை கடைசி முறையாகப் பார்ப்பவன் போல், காளிமுத்து சாராயப் பானையைப் பார்த்துக் கொண்டிருந்த போது, கையாட்கள் கிளாஸ்களை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். காளிமுத்துவின் பகுதிக்குள் தைரியமாக வரும் அந்த வாடிக்கைக்காரர்கள் இப்போது போலீஸ் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற பயத்தால் அவசர அவசரமாக குடித்துக் கொண்டிருந்தார்கள். நாளையிலிருந்து தொழிலை நிறுத்தப்போகும் வேதனைச் செயலை நினைத்து, வெம்பிக் கொண்டே காளிமுத்து இருந்தபோது ஒருவர் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு உள்ளே வந்தார். காளிமுத்து அவரைக் கோபமாகப் பார்த்தான். அது, வெட்டிக் கோபமல்ல. வெற்றிக் கோபம்.
"என்ன ராமு மச்சான்! ஏது இந்தப் பக்கம்"
'அத ஏண்டா கேக்குற... சட்டாம் பட்டிக்காரன். கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான். கேட்டால் காரணமும் சொல்ல மாட்டாக்கான். சரி. ஒன்கிட்டேயே இனிமேல். பத்து வச்சுக்கதா. தீர்மானம் பண்ணிட்டேன். நாலு கிளாஸ் கொடு. சரக்கு நல்லா இருக்கணும்."
காளிமுத்து கோபமாகப் பேசினான்.
"தொட்டிலையும் ஆட்டி. குழந்தையையும். கிள்ளி விட்டால் என்ன மச்சான் அர்த்தம்?"
"என்னடா சொல்றே?"
"பின்ன என்ன மச்சான்? முளைச்சி. மூணு இலை விடல. இந்த மூர்த்திப் பயலோட அட்டகாசம் தாங்க முடியல... அவனை... கண்டிச்சுப்பேச. முடியாத ஒங்க... வாய்க்கு... சாராயம் எதுக்கு. எதுக்குன்னேன்?..."
"அந்தக் கதையை. அப்புறமா பேசலாம். இப்போ. கிளாஸ் எடு:
'முடியாது. முடியவே முடியாது. மூர்த்திய. அடக்க முடியாத ஒங்க கையால கிளாஸை. பிடிக்க முடியாது."
"அவனை... அடக்குறதுக்கு நானாச்சு... கிளாஸ்ல... ஊத்துடா..."
'முடியாது அடக்கிட்டு வாரும்... அப்புறமா... இந்தப் பானையை ஒங்கிட்டத் தந்துடுறேன்..."
"ஒரே ஒரு கிளாஸாவது ஊத்துடா..."
'முடியாது.""சரி. ஒரு அரை கிளாஸாவது ஊத்துடா..."
"இந்த ஊர்ல மூர்த்தி இருக்கற வரைக்கும், ஒரு சொட்டுக்கூட கிடையாது. மாரியாத்தா சத்தியமா. கிடையாது. ஆமாம் ராமு மச்சான். நீங்க... இங்க இருக்கறதுல. அர்த்தமில்ல."
ராமு மச்சான், வாசனை வீசும் பானையைப் பார்த்தார். வாடிக்கைக்காரர்களைப் பார்த்தார். ஒரு பயலாவது. குடிக்கச் சொல்றானா. இருக்கட்டும். இருக்கட்டும். கவனிக்கிற விதமா... கவனிச்சுக்கிறேன.
ராமு வுக்கு, குடித்தால் கூட, அவ்வளவு போதை இருந்திருக்காது. குடிக்காத போதை, முகத்தைச் சிவப்பாக்க, குடிக்க முடியாதநிலை, அவரை நிலை குலையச் செய்ய, "டேய் மூர்த்தி. ஒன்னை. என்ன பண்றேன் பாருடா" என்று உளறிக் கொண்டே வெளியேறினார்.
இரண்டே இரண்டு நாட்கள்தான்.
காளிமுத்து வெற்றிக் களிப்புடன், மாமூலான வாடிக்கைக்காரர்கள் வயிறார வாழ்த்த, தக்காரும் மிக்காருமின்றி, தொழிலை ஒஹோன்னு செய்து வருகிறான். விரைவில் காரும் வாங்கப் போகிறான்.
குடிக்க முடியாமல் போன கோபத்தில், வீட்டுக்கு திரும்பிய, மூர்த்தியின் தந்தையான ராமுவும், இதேபோல் திட்டமிட்டபடி வெளியூரில் குடிக்கக் கொடுக்காமல் திருப்பி அனுப்பப்பட்ட அவன் அண்ணனும், "ஊர்ல. ஆயிரம் நடக்கும். உனக்கென்னடா வந்தது? பெட்டிஷன் எழுதினியாக்கும். பெட்டிஷன். நம்ம குடும்ப கெளரவத்தைக் காற்றிலே விட்டுட்டியேடா... காவாலிப்பயலே" என்று செல்லிக்கொண்டு ஒருவர், பெட்டிஷன் எழுதிய மூர்த்தியின் கைகளைச் சாராயக்கிளாசைப் பிடிப்பது போல் பிடித்துக் கொள்ள, இன்னொருவர் அவனை அடிஅடியென்று அடித்து நொறுக்கினார். இதுநாள் வரைக்கும், தன்னை ஏடா என்று கூடக் கூப்பிடாத தந்தையும், தமையனும் இப்போது அடித்ததால் ஏற்பட்ட நெஞ்சுவலி பொறுக்க முடியாமல் எங்கேயோ ஒடிப்போய்விட்டான். அநேகமாக, சென்னையில் வசிக்கும் அக்காள் வீட்டில் தங்கி வேலை தேடிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.
எப்படியோ, பல்லோர் அறிய, பகிரங்க ரகளிலியமாகக் காளிமுத்துவின் பானைக்குள், இப்போதும் சொர்க்க மழை பெய்து கொண்டிருக்கிறது! -
***