காகித உறவு/சனிக்கிழமை



சனிக்கிழமை

ன்று வெள்ளிகிக் கிழமை, சனிக்கிழமை அல்ல. என்றாலும், சனிக்கிழமை அன்றே வந்தது போல, கல்லூரி முதல்வர் சுழற் நாற்காலியைச் சுற்றாமல், உட்கார்ந்திருந்தார். நாளை பல காரியங்கள் நடப்பதற்கு, இன்றே பல நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும். சென்னையில் இருந்து கல்லூரி நிர்வாக டிரஸ்ட், ஆடிட்டர்களை அனுப்புகிறார்கள். அதற்காகக் கணக்குப் புத்தகங்களை 'அப்-டு-டேட்டாக்'க வேண்டும். சாப்பாடு சரியில்லை என்று ஹாஸ்டல் மாணவர்கள் எழுத்து மூலமாக புகார் கொடுத்திருக்கிறார்கள். வார்டனிடம் பேச வேண்டும். ஏனென்றால் இன்று மத்தியானமே சாப்பாடு சீர்திருந்தவில்லையானால், பீஸ் கட்ட் வேண்டியதில்லை என்று மாணவர்கள் சபதமிட்டிருக்கிறார்கள்.

கல்லூரி முதல்வர் பீஸான பல்ப் போல், களையிழந்து காணப்பட்டார். எல்லாக் காரியங்களையும் செய்வதற்கு அன்றே ஏற்பாடு செய்ய வேண்டியது இருந்ததால், அவரால் ஒரு காரியத்தையும் உருப்படியாகச் செய்ய இயலவில்லை

பிரின்ஸிபால், கலெக்டருக்குக் கால் போட்டார். கலெக்டர் "எங்கேஜ்ட், கால் கிடைக்காமல், கைகளை டயலில் இருந்து எடுத்து விட்டு, வைஸ்-பிரின்ஸிபாலிடம் ஏதோ சொல்லப் போனார். அந்தச் சமயத்தில் கல்லூரி மணி அடித்தது. காலையில் எட்டு மணிக்கே வந்துவிட்ட முதல்வர், அப்போதுதான் நேரத்தை, உணர்ந்தவராய் கையோடவே கொண்டு வந்திருந்த டிபன் பொட்டலத்தைப் பிரிக்கப் போன போது, பாடம் நடத்துவதற்காக வைஸ்பிரின்ஸிபால் எழுந்த போது

இரண்டு மாணவர்கள் திடுதிப்பென்று உள்ளே வந்தார்கள். ஒருவன் அளவுக்கு மீறிய உயரம். அவன் சைட்பர்ன். அதற்கேற்ற நீளம், சட்டியைத் தலைகீழாய்க் கவிழ்த்தது போன்ற மீசை, தொளதொள பேண்ட். இவன் தன் இனிஷியலைச் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். காலேஜ் யூனியன் பிரஸிடெண்ட் கோபால் என்றுதான் சொல்வான். மாணவர்களும் அவனை செல்லமாக, சி.யூ.பி. கோபால் என்பார்கள். இன்னொருவன் குட்டை; ஆனால் உடம்பு பக்கவாட்டில் நீண்டிருந்தது. நாற்பத்தெட்டில் வரக்கூடிய தொந்தி, இந்தப் பதினெட்டிலேயே வந்துவிட்டது. யூனியன் செயலாளர் ராமு என்றால், எல்லாருக்கும் தெரியும். இந்த இரண்டு பேரும் அரசியல்வாதிகள் கொடுத்த, ஆயிரம் ரூபாய்க்கும் போஸ்டர் போட்டு, பிரசுரங்கள் அடித்து, பல வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஐம்பது ஒட்டுக்கள் வித்தியாசத்தில் காலேஜ் யூனியன் தேர்தலில் ஜெயித்தவர்கள். இவர்களைப் பகைக்க முடியாது. கூடாது.

பிரின்ஸ்பால், "உட்கார் கோபால்" என்று சொன்னபோது, செயலாளர் ராமு உட்கார்ந்தான். கோபால் உட்காரவில்லை. அவன் அரசியல் மேடையில் பேசுபவன், நின்றால்தான் பேச்சே வரும்!

முதல்வர் அமைதியாக முகத்தை வைத்துக் கொண்டு அழாக் குறையாகப் பார்த்தார், ‘எப்பா. வகுப்பு நடக்கும் போதுதானா வரணும்? முன்னாலேயோ, பின்னாலேயோ வரப்படாதா? என்று கேட்கப் போனவர் வராண்டாவில் நின்ற ஏழெட்டு மாணவர்களைப் பார்த்ததும், சுருதியை மாற்றினார்.

வாட் ஐ கேன் டு பார் யூ. டெல் மி... ப்ளீஸ்...

கோபால் அவரை அரை மரியாதையோடும் வைஸ்பிரின்ஸ்பாலை அரை அவமரியாதையோடும் பார்த்துக் கொண்டே கேட்டான் :

'ஸார், இன்னைக்கு ரெண்டில் ஒண்ணு தெரியணும். ஒங்க பைனல் டிஸிஷனைச் சொல்லிடணும்.

முதல்வர் மருண்டு கொண்டே கேட்டார். எது ரெண்டு...? எது ஒன்று...?

"இனிமேல் சனிக்கிழமை கல்லூரி வைக்கக் கூடாது. எந்த ஸிட்டி காலேஜும், சாட்டர் டேயில் ஒர்க் பண்ணல்லே. இந்த ஜில்லா காலேஜ்ல மட்டும் ஏன் வைக்கணும்? நாங்க என்ன, ஸிட்டி காலேஜ் பையன்களைவிட மட்டமா? சொல்லுங்க ஸார்...?

முதல்வர் சொன்னார் :

"கோபால், ப்ளீஸ், நான் சொல்றதை தயவு செய்து கேளு."

'கேக்குற ஸ்டேஜ் தாண்டிட்டுது ஸார்.'

"முதல்ல கேளுப்பா. ஒனக்கே தெரியும், நான் பிரின்ஸிபாலா வந்து, மூன்று மாசந்தான் ஆகுது. இதுக்கு முன்னால இருந்த பிரின்ஸிபால் சனிக்கிழமையைக் கல்லூரி நாளாய் ஆக்கி, யூனிவர்சிட்டிக்குத் தெரியப்படுத்திட்டார். அதுக்கு ஏத்தாப்போல, மற்ற நாட்களில் லோகல் விடுமுறைகள் அதிகமாய் வச்சிட்டார். இப்போ நான் யூனிவர்சிட்டி பெர்மிஷன் இல்லாமல் விடுமுறை விடமுடியாது. யூனிவர்சிட்டிலேயும் பெர்மிஷன் கொடுக்க மாட்டாங்க. ஏன்னா கல்லூரி இத்தனை நாட்களுக்கு நடந்தாக வேணுமுன்னு ஒரு விதி இருக்கு. அதனாலதான்...'

கோபாலுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. விதியை மாற்றத்தானே அவன் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்?

எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. இனிமேல் சனிக்கிழமை கல்லூரி நடக்கக் கூடாது. -

கோபால்... ப்ளீஸ்... நான் சொல்றதைக் கேளு. இப்போ நாம் ஒண்னும் பண்ணமுடியாது. அடுத்த கல்வி ஆண்டில் இருந்து நிச்சயமாய் சனிக்கிழமைகளை விடுமுறையாய் ஆக்கிடுறேன். தயவு செய்து, என் பிளேஸில் இருந்து பாரு. அப்போ ஒனக்குப் புரியும்.'

ஒங்க வேலையைவிட எனக்கு நல்ல வேலை கிடைக்கும் சார்...'

கோபால் இப்படிச் சொன்னதும், வராண்டாவில் இருந்து முதல்வர் அறைக்குள் வந்துவிட்ட மாணவர்கள், கொல்லென்று சிரித்தார்கள். 'வெல் செட்' என்று விசிலடித்தார்கள்.

"இந்த 'சனிப்' பிரச்னையை உடனே தீர்த்திடுவேன். மனமிருந்தால் மார்க்கமுண்டு சார் என்று ராமு முடித்தான்.

நீயே ஒரு மார்க்கத்தைச் சொல்லுப்பா என்றார் முதல்வர்; பரீட்சையில் மார்க்கே வாங்காத அந்த ராமுவைப் பார்த்து, கோபால் இடைமறித்தான். செயலாளரை அதிமாய்ப் பேசவிடலாமா? கூடாது. அவன் அவனைப் பேச விடாமல், தான் மட்டும் விடாமலும், விட்டுக் கொடுக்காமலும் பேசினான்.

'ஸார்' சனிக்கிழமை தோறும் நாங்களே வராமல் இருக்க எங்களுக்கு அதிக நேரம் பிடிக்காது. ஒரு மரியாதைக்காக ஒங்களிடம் கேட்டோம். மரியாதையை காப்பாற்றிக்க வேண்டியது. இனிமேல் உங்கள் பொறுப்பு.'

முதல்வர் மரியாதையாகவே பதில் அளித்தார் : என்னால் முடிந்தால் விடாமல் இருப்பேனா? யுனிவர்சிட்டியில் பெர்மிஷன் கொடுக்க மாட்டாங்க... அதனாலதான்."

சொன்னதையே சொல்லிக்கிட்டிருந்தால் என்ன சார் அர்த்தம்? இப்ப சொல்றது பைனல். இனிமேல் சனிக்கிழமை கல்லூரி நடக்கக் கூடாது. நான் என், எலெக்க்ஷன் அறிக்கையில் சனிக்கிழமையை விடுமுறை நாளாய் ஆக்குறதாய் வாக்குறுதி கொடுத்திட்டேன். என் வாக்கை நான் காப்பாற்றியாகணும்.

வைஸ்-பிரின்ஸிடாலால் இதற்கு மேல் தாங்க முடியவில்லை. இந்த கோபாலை சின்னப் பையனாக இருக்கும் போதே அவருக்குத் தெரியும். ஒர் ஏழைப்பையன். தங்கள் எதிர் காலத்தையே இவனிடம் ஒப்படைத்திருக்கும் ஒரு வறுமைக் குடும்பத்தின் மூத்த பையன் நல்ல நிலைக்குப் போகத் தகுதியுள்ள ஓர் இன்டலிஜென்ட் பாய், கெட்டுப் போவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை அவரால். இருக்கையை விட்டு எழுந்து, கத்தினார் :

'கோபால், ஒன் மனசில் என்னதான் நினைச்சிக்கிட்டு இருக்கே? காலேஜ் யூனியன் தேர்தலை, பார்லிமெண்ட் தேர்தல் மாதிரியும், நீ ஏதோ பெரிய அரசியல் தலைவராய் ஆகிட்டது மாதிரியும் பேசுறியே. இது நல்லா இல்லே. டோண்ட் பி எ ஸில்லி. தேர்தல் வாக்குறுதியாம். நிறை வேற்றணுமாம். பொல்லாத தேர்தல். பொல்லாத வாக்குறுதி. ஐ...ஸே...கோ.டு.யுவர்...கிளாஸ்.'

கோபாலுக்கு லேசான அதிர்ச்சி. அந்த அதிர்ச்சி, கோபத்தில் அதிர்ந்தது. வைஸ்-பிரின்ஸிபாலை, கண்களை உருளைக்கிழங்கு மாதிரி வைத்துக் கொண்டு, முறைத்தான். வைஸ்-பிரின்ஸிபால் அவன் பார்வை தாளமாட்டாது, வேறு பக்கமாக முகத்தை வைத்தபோது, செயலாளர் ராமு, கல்லூரி முதல்வரை நோக்கி, அமைதியாகச் சிரித்துக் கொண்டே சீரியஸாகக் கேட்டான் :

'ஸார் எங்களுக்கு ஒன்று தெரிஞ்சாகணும். நீங்க பிரின்ஸிபாலா. இல்லே இவரா?. இவரு இப்போ மன்னிப்புக் கேட்கணும். இல்லைன்னா...' - உடனே அங்கே நின்று கொண்டிருந்த மாணவர்கள், வைஸ் பிரின்ஸிபால் மன்னிப்புக் கேட்கணும் இல்லைன்னா, 'ஸ்டிரைக்'. இல்லைன்னா ஸ்டிரைக்' என்று கத்தினார்கள். சில மாணவர்கள் வகுப்புக்களில் இருந்த மாணவர்களைக் கூப்பிடுவதற்காக ஓடினார்கள். இதற்குள் பாடங்களை நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்களும், வகுப்புக்களில் தூங்காமல் இருந்த மாணவர்களும், அங்கே ஒடி வந்தார்கள். ஒரே பரபரப்பு ஒரே கத்தல் "மன்னிப்புக் கேள். மன்னிப்புக் கேள்...

முதல்வர் நிலைமையைப் புரிந்து கொண்டார். 'ஐ.ஆம்...ஸாரி. அவர் சார்பில் நான் மன்னிப்புக் கேட்கிறேன். ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மி. எக்ஸ்க்யூஸ் ஹிம்.'

மாணவர்கள் திருப்பிக் கத்தினார்கள் 'வைஸ்' என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்துக் கத்தினார்கள், விட்டுடுங்கடா என்று சொல்லப் போன கோபாலால் அப்படி ஒரு வார்த்தையை வாய் வழியாக விட முடியவில்லை.

முடியாது, வைஸ்-பிரின்ஸிபால் மன்னிப்புக் கேட்கணும் சம்பந்தப்படாத வைஸ் பிரின்ஸிபால் சம்பந்தமில்லாமல் ஏசினதுக்கு, பகிரங்கமாய் மன்னிப்புக் கேட்கணும். இப்பவே கேட்கணும். இல்லைன்னா...'

கல்லூரி முதல்வர் நிலைமையைப் புரிந்து கொண்டார். தலைக்குமேல் வெள்ளத்தை விடக்கூடாது, விட்டால் சேதம் வெள்ளத்துக்கு அல்ல.

"மிஸ்டர் வைஸ்-பிரின்ஸிபால், ஒங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயத்துல, நீங் தலையிட்டது தப்பு. நீங்க வருத்தம் தெரிவிக்கணும். பொறுங்கப்பா. அவரு மன்னிப்புக் கேட்பாரு...'

வைஸ்-பிரின் ஸிப்பால் முதல்வரைப் பார்த்தார். சக ஆசிரியர்களைப் பார்த்தார். ஒருவராவது ஏன் கேட்கணும் என்று கேட்கவில்லை. மாணவர்களோ, பல்லைக் கடித்துக் கொண்டு நின்றார்கள். ஐ. ஆம். ஸாரி. மன்னிச்சிடுங்க. என்று சொல்லி விட்டு தன்னையே தான் மன்னிக்க முடியாதவர் போல் கைகளை நெறித்தார். பின்னர் கண்களைத் துடைத்துக் கொண்டார். கூனிக் குறுகி உட்கார்ந்தார். மாணவர்கள் 'ஒன்ஸ் மோர்' என்றார்கள்.

சில நிமிடம் மெளனம். கோபால் வெற்றி விழாக் கூட்டத்தில் பேசுபவன் போல் கேட்டான் :

"அப்புறம் இந்த சனிக்கிழமை விவகாரம்...'

முதல்வர் பரிதாபமாகப் பதிலளித்தார்.

'எனக்கு 'பவர்' இல்லேப்பா. இருந்தால் விட மாட்டனா?”

ராமு ஒரு யோசனை சொன்னான் :

'ஆல்ரைட், நாளைக்குப் புரட்டாசி சனிக்கிழமை அதனால நீங்க லீவ் விடலாம். அடுத்த திங்கட் கிழமை பேசலாம்...'.

கல்லூரி முதல்வர் எதை நினைத்தோ அல்லது தற்செயலாகவோ தலையாட்டியபோது, அவர், தங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாக மாணவர்கள் நினைத்து வெற்றி வெற்றி. என்று சொல்லிக் கொண்டே கோபாலையும் ராமுவையும், ரெண்டு பேர் தூக்கி வைத்துக் கொண்டு போனார்கள். இதரர்களில் பலர் விசிலடித்தார்கள்; சிலர் நாட்டியம் ஆடினார்கள். வெற்றியாச்சே விடமுடியுமா?

மாணவர்கள் அட்டகாசமாய்ப் போவதை ஆசனத்தில் அட்டை போல் ஒட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த முதல்வரால் வைஸ்-பிரின்ஸ்பாலை நேருக்கு நேராய்ப் பார்க்க முடியவில்லை. எங்கேயோ பார்த்துக்கொண்டே அவருக்குச் சமாதானம் சொன்னார் :

"ஐ ஆம் ஸாரி மிஸ்டர் வெங்கு. இவங்களுடைய போக்கு விசித்திரமா இருக்கு. நானும் காலேஜ்ல ஸ்டூடண்ட் லீடராய் இருந்திருக்கேன். பல ஸ்டிரைக்கை நடத்தி இருக்கேன். அதுல, நாட்டுப் பிரச்னை இருந்தது. ஒரு லட்சியம் இருந்தது. எப்போதும் ஆசிரியர்களுக்கு எதிராய் நடந்தது கிடையாது.

'இப்போ காலம் மாறிட்டுது, ஆனாலும் இந்த பையன்களை என்னால் வெறுக்க முடியல. இவர்களின் கொட்டம், ஒரு நோயின் அறிகுறியே தவிர, நோயல்ல. சமுதாய அமைப்பில் ஏதோ ஒரு மூலையில், எப்படியோ ஏற்பட்ட ஒரு ஒட்டை. இவன்களையும் பிடிச்சுக் கிட்டிருக்குது. அந்த ஒட்டையைக் கண்டுபிடித்து அடைச்சால்தான் இவங்களையும் அடக்க முடியும் இல்லை மீட்க முடியும். இப்போ, நாம் பெற்ற பிள்ளைகளே, நாம் நம் அப்பா அம்மாவிடம் நடந்தது மாதிரி நடக்குதா? டோன்ட் டேக் இட் ஸீரியஸ்லி..”

வைஸ் பிரின்ஸிபால் எழுந்தார்; விரக்தியோடு பேசினார்.

"இந்த நாட்ல, குறிப்பாக, இந்த ஊர்ல, ஒண்டக்கூட திண்னை கிடைக்காமல் எத்தனையோ ஏழைங்க ரோட்ல படுக்கறாங்க. இந்த தரித்திர நாராயனர்களை நினைத்துப் பார்க்காதது மாதிரி இவங்க ஆடுறதையும், பாடுறதையும் நினைத்தால், அந்த ஏழைங்களையே, இவங்க இன்ஸ்ல்ட் பண்ணுறதாய் நினைக்கிறேன். அதனால, என்னை இன்ஸல்ட் பண்ணுனதை நான் பெரிசா நினைக்கல. கருமாதி வீட்டுக்குக் கல்யாண டிரஸ்ல போற பசங்க. ஐ டோண்ட் கேர்.'

வைஸ் பிரின்ஸிபால் புறப்படப் போனார். அதற்குள் டெலிபோன் மணி அடித்தது. முதல்வர் டெலிபோனை எடுத்துப் பரபரப்பாகக் கேட்டுவிட்டு ‘அப்படியா. நான். வரேன் ஸார். தயவு செய்து ஒங்க காலை வேணுமுன்னாலும் பிடிக்கறேன். ஸார். என் பையன்கள் சின்னஞ் சிறிசுகள் ஸார். ஸார். கண்டிக்கறேன் ஸார். இதோ புறப்பட்டுக்கிட்டே இருக்கேன்’ என்று சொல்லி விட்டு, டெலிபோனை வைத்தார். பிறகு அர்த்தபுஷ்டியாகப் பார்த்த வைஸ் பிரின்ஸிபாலைப் பார்த்து நம்ம பாய்ஸ். டவுன் பஸ் கண்டக்டர் ஒருவனை அடிச்சிட்டாங்களாம். அவங்க இவங்களை அடிக்கறத்துக்காக கத்தி கம்போடு புறப்படுறாங்களாம். டிரான்ஸ்போர்ட் மானேஜர் சொன்னார். நான் அங்கே போய் அவங்க காலுல விழுந்தாவது தடுக்கிறேன். நீங்க, நம்ம பையன்களை உஷார்ப் படுத்துங்க. நோ. நோ. வேண்டாம் இவங்களுக்குத் தெரிஞ்சால், தப்பு. நான் சமாளிச்சுக்கிறேன் என்றார்.

வைஸ் பிரின்ஸ்பால் படபடப்பாகப் பேசினார். "ஸார். நம்ம பையன் மேலே கைவைச்சாங்கனா, விஷயம் ஸீரியாஸாப் போகுமுன்னு சொல்லுங்க. இந்தக் கண்டக்டர்கள்; என்னதான் நினைச்சுக்கிட்டாங்க...?”

முதல்வர் மேற்கொண்டு பேசுவதற்கு நேரமில்லாதவர் போல் ஒடினார். வைஸ்பிரின்ஸிபாலான அந்தக் குழந்தையோ கல்லூரி கேட்டை மூடவும் ரோட்டிலேயே எதிரிப்பட்டாளத்தை வழி மறிப்பதற்காகவும், ஓசைப்படாமலே ஓடினார்.

ரு வாரம் ஒடியது.

கண்டக்டர்கள் கல்லூரி முதல்வரின் உருக்கமான வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு வரவில்லை. “என் பிள்ளைகளை அடிக்கறத்துக்கு முன்னால என்னை அடியுங்க” என்று முதல்வர் முதுகைக் காட்டியபோது, பஸ் ஊழியர்கள், புறமுதுகிட்டு நின்றனர்.

"பரவாயில்லையே... நம்ம பயலுக கலாட்டா பண்ணாமல் இருக்காங்களே” என்று முதல்வர் எந்த நேரத்தில் நினைத்தாரோ, அந்த நேரத்தில் கோபால் மீண்டும் புடை சூழ முதல்வரிடம் வந்தான்.

'ஸார் - நம் காலேஜ் யூனியனை, இனாகுரேட் செய்யாமல் இருந்தால் என்ன அர்த்தம் ஸார்...?’

நான்தான் ரெடின்னு சொல்லிட்டேனே. நீதான் அந்த அரசியல் தலைவரைக் கொண்டு வரணுமுன்னு பிடிவாதமாய் நிற்கிறே. மோகன் கோஷ்டி, அவரு வந்தால் கல்லெறிவோமுன்னு சொல்றாங்க. 'இளமையில் கல்' என்கிறதை நல்லாப் புரிஞ்சு வச்சிருக்கீங்க...'

'ஸார். சுத்தி வளைச்சுப் பேச வேண்டாம். வெள்ளி விழாத் தலைவர் வெண்தாமரைதான் வரணும்.'

இந்தா பாருப்பா. நீ அரசியல் மேடையில் பேசுறது எனக்குத் தெரியும். இப்போ, ஒரு குறிப்பிட்ட கட்சிக்காரர்கள், உன்னைச் சுற்றிவர்றதும் தெரியும். ஒன்றை மட்டும் நினைச்சுக்கோ. நீ மாணவனாய் இருக்கிற வரைக்கும்தான் இந்தப் பயல்கள் உன்கிட்ட வருவாங்க, உன் மூலம் மாணவர்களை, தங்கள் அரசியல் சுயநலத்துக்குப் பயன்படுத்தப் பார்க்கிறாங்க. நீ எப்போ கல்லூரியில் இருந்து வெளியேறுகிறாயோ அப்பவே ஒன்னை வள்ளுவர் சொல்ற மாதிரி, தலையிலிருந்து கழிந்த முடிமாதிரி நினைப்பாங்க. இன்னும் ஒண்ணு. நீ புத்திசாலிப்பையன்; தனியாய் இருந்தால் நல்ல பையன். வாழ்க்கை கல்லூரி இல்ல, நீ சந்திக்கப் போற சகாக்கள் மாணவர்கள் மாதிரி, வெள்ளையுள்ளமாய்ப் பழக மாட்டாங்க. ஆபீஸர், கல்லூரி முதல்வர் மாதிரி இருக்க மாட்டார். லைப் இஸ் நாட் லைக் காலேஜ் மேட்ஸ். பாஸ் வில் நாட் பி லைக் யுவர் பிரின்ஸ்பால். இதைப் புரிஞ்சிக்கிட்டு, இப்பவே அரசியலில் கலக்காமல் படிக்கணுமுன்னா படி. அப்புறம் உன் இஷ்டம். நான் சொல்றது புரியும்னு நினைக்கிறேன்."

கோபாலனுக்குப் புரியவில்லை. முதல்வரின் அறிவுரையை மீறி, அவன் தன் அபிமானத் தலைவர் வெண்தாமரையைக் கல்லூரிக்குக் கொண்டு வந்தான். அந்தத் தலைவரை பேமானியாகக் கருதிய, இன்னொரு தலைவரின் பைக்குள் கிடந்த மோகன் கோஷ்டி கல்லெறிந்தது. அப்புறம் போலீஸ் வந்தது. லத்தி வந்தது. கல்லூரிக்கு கால வரம்பில்லாமல் விடுமுறை வந்தது. பத்திரிகைகளில் அதன் பெயர் வந்தது. சனிக்கிழமை விடுமுறை வேண்டுமென்று கேட்க முடியாத அளவிற்குக் கல்லூரி மூடிக் கிடந்தது.

அப்புறம்...

பரீட்சை வந்தது. அதற்குப் பலர் வந்தாலும், ரிசல்ட் தெரிவித்த பத்திரிகைகளில் சிலரே வந்தார்கள். கோபால் மெஜாரிட்டியின் பக்கம் நிற்கும் ஜனநாயகவாதி. ஆகையால் அவன் பலரில் ஒருவனானான். பள்ளிக்கூடத்தில் முதலில் வந்த அவன் -பியூசியில் முதல் வகுப்பில் தேறிய அவன் சட்டப்படிப்பு படித்து வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டே, அரசியல் வானில் நட்சத்திரமாக ஜொலிக்க நினைத்த அந்த ஏழை கோபால், எரி நட்சத்திரமாய், ஒரு தாலுக்கா அலுவலகத்தில், கீழ் நிலை எழுத்தாளராக, கீழே விழுந்தான்.

ன்று வெள்ளிக்கிழமை; சனிக்கிழமை அல்ல. தாசில்தார் முன்னால் ஒரு பைலை வைத்துவிட்டு, நழுவப்போன கோபாலை, ஆபீசர் கண்களால் எடை போட்டுக் கொண்டே, 'கோபால் ஒன்னைத் தாய்யா, தூங்குமூஞ்சி! கலெக்டருக்கு அனுப்பணுமுன்னு சொன்னேனே, அந்த ஸ்டேட்மெண்ட் எங்கே? அதை... டைப் அடிச்சிட்டியா...' என்றார்.

'இல்ல ஸார். இன்னும் ரெவின்யூ இன்ஸ்பெக்டர்கள், பர்ட்டிகுலர்ஸ் தரல்லே...'

'நீங்கள்ளாம் ஏன்யா வேலைக்கு வர்றீங்க? ரெண்டு எருமைமாட்ட மேய்க்கலாம். எத்தனை தடவய்யா, ஒனக்குச் சொல்றது? கலெக்டர் டி-ஒ' லட்டர் வேற எழுதிட்டார். இன்னும் ஆக்க்ஷன் எடுக்காமல் இருக்கறியே, சென்ஸ் இருக்கா? ரெஸ்பான்ஸிபிலிட்டி இருக்கா? ரெவின்யூ இன்ஸ்பெக்டர்களை வரச் சொல்லி, ஒரு மெமோ வைக்கிறதுக்கு என்ன? நான்சென்ஸ்...!

கோபால், கோபமாக அவரைப் பார்த்து விட்டு, பின்பு தன் செல்லாக் கோபத்தை பொறுமையாக்கிக் கொண்டு உயரமான தன் உடம்பை, கூனிக் குறுக்கி, நெளித்தான். எந்த அரசியல் வாதிகளை நம்பி இருந்தானோ, அந்த அரசியல்வாதிகளால் தலையினின்று கழிந்த முடிபோல் கருதப்பட்ட அவனால், ஒன்றும் செய்ய இயலாது. அதோடு, ஏற்கெனவே ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கும் அவன் அப்பா - அம்மாவையும் தம்பி தங்கைகளையும் இதற்குமேல் ஏய்க்கக் கூடாது. போதாக் குறைக்கு அவனுக்குக் கல்யாணம் வேறு நிச்சயமாகப் போகிறது.

கோபால் அமைதியாகவும் அழப்போகிறவன் போலவும் இருப்பதைப் பார்த்துவிட்டு படுகளத்தில் ஒப்பாரியைக் கேட்கக் கூடாது என்ற பழமொழியை 'பைல் களத்தில்.நாகரீகமாகப் பேசக் கூடாது' என்று. புது மொழியாக்கிக் கொண்ட தாசில்தார்கூட இரக்கப்பட்டவர் போல் பேசினார்.

சரி சரி, நாளைக்குள்ளே, ஸ்டேட்மென்டை ரெடி பண்ணிடு. நாளைக்கே, மெசஞ்சர் மூலம் கலெக்டரிடம் சேர்த்துடணும்.'

கோபால் திக்கித் திணறிப் பேசினான்.

'ஸார் நாளைக்கு செகண்ட் சேட்டர் டே, இரண்டாவது சனிக்கிழமை சார்.'

'எனக்கு செகண்ட் சேட்டர் டேக்கு அர்த்தம் சொல்லிக் கொடுக்கிறாயா? இந்தா பாருய்யா, நீ அரசாங்க ஊழியன். இருபத்து நான்கு மணி நேர ஊழியன். பேய்க்கு வாழ்க்கைப் பட்டால், புளியமரத்தில் ஏறித்தான். ஆகணும். நாளைக்கு வர முடியுமா முடியாதா? ரெண்டுல ஒண்ணைச் சொல்லு...'

'வரேன் சார். ஆனா நாளைக்குள்ள முடிக்க முடியாது சார்."

'முடியாவிட்டால் ஞாயிற்றுக் கிழமையும் வா. முடியுமா முடியாதா?

'முடியும் சார். ஆனால் இந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும்...'

ஒங்களுக்கெல்லாம் வேலை கொடுத்ததே தப்புய்யா. நீ எல்லாம் இங்க வந்து என் பிரானனை, ஏன்யா வாங்குறே? சொல்லுய்யா, வர முடியுமா? இல்ல வரவழைக்கணுமா?

'வரேன் சார்...'

'போய்த் தொலை...'

கோபால், தாசில்தார் அறையை விட்டுத் தொலைந்தான்." தொலைந்து போன தன்னைத் தேடுவதுபோல், தன்னையே ஒரு தடவை மேலும் கீழுமாய்ப் பார்த்துக் கொண்டே வெளியே வந்தான். வெளியே அவனது சீனியர் சகாக்கள், பைல்களை எழுதிக் கொண்டும், அதே சமயம் ஒருவர் மற்றவர்களிடம் பேசிக் கொண்டும் இருந்தார்கள். இது சகஜம் என்பது போல், அவனை ஏறிட்டுப் பார்த்தார்கள். ஒருவன் கூட ஒருத்திகூட, அவனை அனுதாபத்தோடு விசாரிப்பது இருக்கட்டும், அப்படிப்பட்ட பாவனையில் பார்க்கக்கூட இல்லை. |

'சனிக்கிழமை' புகழ் கோபால், கல்லூரித் தேர்தலில் 'வாக்குறுதி, வழங்கிய கோபால், படித்த வாழ்க்கையை இந்தப் பாழும் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தான்; கல்லூரி முதல்வர் அப்போதுதான் அவனுடன் பேசுவது போல் தோன்றியது.

வாழ்க்கை கல்லூரி இல்லே. சகாக்கள் மாணவர்கள் அல்ல. ஆபீசர் பிரின்ஸிபால் ஆகமாட்டார். புரியதா?

கோபால், புரிந்து கொண்டான். பிராயச்சித்தம் செய்ய முடியாத காலவெளி கடந்து, புரிந்து கொண்டான்.


***

"https://ta.wikisource.org/w/index.php?title=காகித_உறவு/சனிக்கிழமை&oldid=1384311" இலிருந்து மீள்விக்கப்பட்டது