காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக





முதற்பதிப்பு : மார்ச் 1962

1. முதல் இரவில்0—25
2. ஆண் பெண்ணான ரகசியம்0—25
3. காமத்தின் ரகசியம்0—25

விலை 25 காசு
வானத்திற்கோர் நிலவு
வையகத்திற்கோர் அண்ணா
அவர் தரும் அரசியல்
தெளிவுரை இது...
தொகுத்தவர்:
தமிழ் மதி


பதிப்புரிமை:

அச்சிட்டோர் :
ஸ்ரீநிவாஸ் பிரிண்டிங் பிரஸ்,
சென்னை—1.



எங்கும் நிறைவோம்

நடைபெற்ற பொதுத் தேர்தலில் சட்டமன்றத்துக்கு 50 பேரும், பாராளு மன்றத்துக்கு 7 பேர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதற்குக் காரணம், கழகத்தவர்கள் கொண்ட கொள்கையை காப்பாற்றக்கூடியவர்கள் என்று மக்கள் கருதியதேயாகும்.

கொண்ட கொள்கையில் உறுதிபடைத்தவர்கள் என்பதற்காகத்தான் நமது கழகத்து 34 இலட்சம் மக்கள் வாக்களித்து, 50 பேர்களைச் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்; அதே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும் 7 பேர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்—இது, நம் கழகத்தின் வெற்றிச் சின்னத்தின் அறிகுறி.

கழகத்தவர்கள் கொண்ட கொள்கையில் உறுதியுள்ளவர்கள். ஆட்சியின் அலங்கோலங்களை அலசிக் காட்டக் கூடியவர்கள்; நிர்வாக ஊழல்களை அம்பலப்படுத்திக் கண்டிப்பவர்கள் என்பதையெல்லாம் எண்ணித் தான், நமக்கு, இத்தேர்தலில், பெருவாரியான ஆதரவை, நாட்டு மக்கள் தந்திருக்கிறார்கள்.

இப்படிப் பெருமைப்படத் தக்க அளவுக்கு நாம் வெற்றி பெற்றுள்ள போதிலும், சில தோல்விகளைச் சந்திக்கவேண்டியவர்களானோம். நமக்கு ஏற்பட்ட இந்த தோல்விகளைப் பற்றி கவலைப்பட முடியாத நிலையில் — கவலைப்பட அவசியமில்லாத வகையில் நாம் இருக்கிறோம்.

திட்டமிட்ட சதி

காஞ்சி சட்ட சபைத் தொகுதியிலும், மற்றும் நம் கழகத்தவர்கள் கைப்பற்றி இருந்த சட்டசபைத் தொகுதிகளிலும் நம்மைத் தோற்கடிக்க வேண்டுமென்பது காங்கிரசுக்காரர்களின் நீண்டகால எண்ணமாகும்.

காமராசர் ஒரு முறை என்னிடமே கேட்டார், “ஒரு 5 இலட்சம் ரூபாய் செலவிட்டால் உன்னை தோற்கடிக்க முடியாதா?” என்று. அதை அவர் இப்போது செய்து காட்டினார்.

பிரசவ வேதனையுறும் தாய்மார்கள் சிலர் குழந்தைகளைப் பெற்றவுடன் உயிர் துறந்து விடுவார்கள். அதே போல், நாங்கள் 11 பேர் தோற்று விட்டோம்; ஆனால் 50 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

எங்களைத் தோற்கடிக்க செலவிட்டப் பணம்

5 இலட்சம் அல்ல கணக்கில்லா லட்சங்களைச் செலவழித்திருக்கிறார்கள்; அதனால் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்! இப்படிப் பெற்றுள்ள வெற்றி எதிர்க்கட்சித் தலைவர்களை பெரும் பணம் செலவிட்டுத் தோற்கடித்துள்ள நிகழ்ச்சி சன நாயகத்துக்கு அழகல்ல!!

பணநாயகம் வென்றது

தேர்தலில் ஏன் தோற்றோம் என்பதற்கு ஆயிரத்தெட்டு காரணங்களைக் காட்டலாம்; அவை வாதத்திற்காகவும் பயன்படக் கூடும்; சில உண்மையாகவும் இருக்கலாம்; சில உதவாதவைகளாகவும் இருக்கலாம். இன்னும் சில நம்புதற்கே ஆச்சர்யமானதாகவும் இருக்கலாம்.

எங்களை என்ன சாமான்யர்களா எதிர்த்தார்கள்? என்னையும், சண்முகத்தையும், சத்தியவாணி முத்துவையும், அன்பழகனையும், கோவிந்தசாமியையும், சாரதியையும் தோற்கடித்தது பணத்தைச் செலவு செய்துதான்! தில்லு முல்லுகளைக் கையாண்டு தான் வெற்றிபெற முடிந்தது அவர்களால்! இப்படிப் பணத்தைச் செலவிட்டு எத்தனை முறை வெற்றி பெற்றுவிட முடியும் ? அடுத்த தேர்தலில்,

பண பலம்
படை பலம்
தில்லுமுல்லுகள்
ஆகியவைகளைக்கொண்டு எங்களை நிச்சயமாக வெற்றி பெற இயலாது!

காஞ்சித்தொகுதி மக்களின் நல்லெண்ணத்தையும், நம்பிக்கையும் பெற, நான் மீண்டும் பாடுபடுவேன். இதுபோல் மற்றவர்களும் பாடுபடவேண்டும். எனது தோல்வி பெரிதல்ல; பெற்றிருக்கின்ற வெற்றி மிகச் சாதாரணமானதுமல்ல; மகத்தான வெற்றிகளை நாம் இந்தத் தேர்தலிலே பெற்றிருக்கிறோம்.

என்னைப்போன்றவர்கள் இந்த சட்டமன்றத்தில் இல்லாத காரணத்தினால் புதிதாக வருபவர்கள் எப்படி ஆட்டி வைப்பார்களோ என்ன தொல்லை தருவார்ளோ என்று பயப்படத்தேவையில்லை.

வெற்றி பெற்றவர்களிடை, நான் இருந்த இடத்தில் அமைதியே உருவாக அமைந்த நமது நாவலர் நெடுஞ்செழியன் இருந்து நல்லபடியாக வழி நடத்துவார்.

சென்ற முறை இருந்து அனுபவம் பெற்ற தம்பி கருணாநிதி புதிதாக வருகின்றவர்களுக்கு பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி விளங்க வைத்து ஆற்றல் மிக்க பணியை சிறப்புடையதாகச் செய்வார்.

நம்மவர் அரசியல் பக்குவம் பெற்றவர்கள்

நாவலர் நெடுஞ்செழியன் நடமாடும் பல்கலைக்கழகமாக விளங்குவார்.

நெல்லிக்குப்பம் தொகுதியிலே தேர்ந்தெடுக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தியும், பெண்ணாகரம் தொகுதியிலே வெற்றிபெற்ற கரிவேங்கடமும், திருக்கோட்டியூர் தொகுதியிலே வெற்றிபெற்ற மாதவனும் வக்கீலாகவும், பட்டதாரிகளாகவும் இருப்பவர்கள்.

செய்யாறு தொகுதியிலே வெற்றி பெற்ற புலவர் கோவிந்தன் பி. ஓ. எல் படித்தவர்.

ஊத்தங்கரை தொகுதியிலே தேர்ந்தெடுக்கப்பட்ட

கமலநாதன் வாணியம்பாடியில் வெற்றி பெற்ற எம். பி. வடிவேலு ஆகியோர் பஞ்சாயத்துத் தலைவர்களாக இருந்து அனுபவம் பெற்றவர்கள்.

போளூர் கேசவரெட்டியார் வட ஆற்காடு மாவட்ட ஆட்சி மன்றத் தலைவராக இருந்தவர்.

விழுப்புரம் சண்முகம் 3 ஆண்டுகளாக நகராட்சி மன்றத் தலைவராக இருந்தவர்.

ஆற்காடு முனிரத்தினம் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வருபவர்.

செங்கற்பட்டு, விசுவநாதம் நகராட்சி மன்ற உறுப்பினர்.

துரிஞ்சாபுரம் முருகையன் திருவண்ணாமலை நகராட்சியிலே உறுப்பினராக இருந்து வருபவர்.

விரிஞ்சாபுரம் சம்பங்கி நகராட்சி உறுப்பினராக பணியாற்றி வருபவர்.

திண்டிவனம் தங்கவேலு நகராட்சித் துணைத் தலைவராக இருந்து வருகிறார்.

தாம்பரம் முனுஆதி பஞ்சாயத்தை வெகுசிறப்பாக நடத்தி வருபவர்.

முத்துலிங்கம் வந்தவாசி நகரமன்ற உறுப்பினர். ஆடுதுறைத் தொகுதியிலே வெற்றி பெற்ற கோ. சி. மணி விவசாயப் பிரச்சினைகளைப் பற்றி நன்கு தெரிந்தவர். விவசாயிகளின் தலைவராக இருந்தவர். அவர் சட்ட மன்றம் செல்ல இருக்கிறார்.

திருச்சியிலே எம். எஸ். மணி ஆலைத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர்; ஆலைத் தொழிலாளர்கள் பிரச்னை பற்றிப் பேசுவார்.

லால்குடியிலே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற அன்பில் தர்மலிங்கம் கிராமத் துறைகளிலேயும், விவசாயத் துறையிலும் அனுபவம் பெற்றவர்; வாதிடக்கூடியவர்.

பாராளு மன்றத்திற்கு செல்பவர்களில் தம்பி செழியன், மனோகரன், ராசாராம் பட்டம் பெற்றவர்கள்.

ஆக இவர்கள் மூலமாக நல்ல பணி நாட்டுக்கு கிடைக்கவிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்கள் எல்லாம் வந்தால் பெரிய கலவரம் நடக்கும் என்றும் பெரியஆபத்து விளையும் என்றும் எவரும் அஞ்ச வேண்டாம்.

நிச்சயமாக வெற்றி பெற்றுச் சட்ட மன்றத்திற்கும் செல்பவர்கள் பக்குவத்தோடு நடந்து கொள்வார்கள்.

பாராளுமன்ற முறைதவறாது பணியாற்றி வருவார்கள்.

ஆளும் கட்சி நல்லகாரியங்கள் செய்தால் ஆதரவு தருவார்கள்.

அநியாய வழிகளில் சென்றால் தடுத்து நிறுத்துவார்கள்.

நாங்கள் இல்லாததனால் கழகம் சோபை இழந்து விடும் என்றோ சோர்வு ஏற்பட்டுவிடும் என்றோ எண்ண வேண்டாம்.

சட்ட மன்றத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருந்து, சனநாயகத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று உறுதி கூறுகிறேன்.

நாங்கள் சிலர் தோற்றதும், பலர் வெற்றி பெற்று வருகின்ற நிலைமையைக் கண்ட பத்திரிகைகள் சில தலையங்கங்கள் தீட்டி, தங்கள் கருத்துக்களை வெளியிட்டார்கள்.

குறிப்பாகவும் சிறப்பாகவும் 'இந்து' ஏடு நமது வெற்றி பற்றி தலையங்கம் எழுதிவிட்டு நான் பெங்களூர் சென்றிருந்தபோது என்னைச் சந்தித்து கழகம் எப்படி யெப்படி நடந்துகொள்ளப் போகிறது என்று கேட்டது.

முதலமைச்சர் காமராசரும், பெரியார் ராமசாமி அவர்களும் எங்கே நான் நுழைந்துவிடுவேனோ என்று சட்ட மன்றக் கதவையே தாளிட்டு விட்டதாகக் கருதிக்கொண்டு மீண்டும் சட்டசபைக்கு செல்லும் நோக்கம் உண்டா என்று கேட்கிறார்கள்.

நான் அவர்களுக்குச் சொல்லுவேன், நான் விரும்பினால் நிச்சயம் நுழைந்துவிடுவேன்; ஆனால் நான் சென்றால்தான் காரியம் நடைபெறும் என்கின்ற நிலைமை இல்லை. அந்த வகையிலே வெற்றி பெற்றுச் சென்றிருக்கிற தோழர்கள் திறமையாக நடத்திக் காட்டுவார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் அங்கே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பணியாற்றுவதோடு விடுதலை இயக்கமாகவும் தொண்டாற்றி வரும்.

ஆகவே இந்துப் பத்திரிகை எழுதியுள்ளபடி கழகம் பொறுப்புள்ள எதிர்க் கட்சியாக இருப்பதோடு திராவிடநாடு கொள்கைக்காக போராடுவதிலும் ஒரு சிறிதும் பின் வாங்காது.

காஞ்சித் தொகுதியிலே என்னையும், என்னைச் சேர்ந்த மற்ற சட்டமன்ற உறுப்பினர்களையும் தோற்கடிக்க காங்கிரசுக்காரர்கள் திட்டமிட்டே வேலை செய்தார்கள்.

காஞ்சித்தொகுதியில் நான் தோற்றுப்போவேன் என்பது எனக்கு முன்பே தெரியும். இதை தம்பி கருணாநிதியிடம் "தம்பி, நீ கொடுக்கும் 'குளுகோஸ் இன்ஜெக்ஷன் (ஊசி)' ஆளைப் பிழைக்க வைக்காது” என்று கூறி இருக்கிறேன்.

எங்கள் தொகுதிகளை மட்டுமே திட்டமிட்டு வேலை செய்தார்கள் மற்றத் தொகுதிகளை துச்சமாக மதித்தார்கள். கோட்டைவிட்டார்கள்.

எங்களை இந்தத் தேர்தலிலே தோற்கடித்ததைப் போல் அடுத்த தேர்தலிலே இந்த 50 பேரையும் தோற்கடிக்க முயன்றால், அடுத்த இடத்திலே இருந்து 70 பேர் எழுவார்கள்.

ஓட்டை விழுந்த பானையிலே கையை வைத்து மூடினால்; வேறு இடத்திலே தண்ணீர் ஒழுகச் செய்யும். காங்கிரஸ் ஓட்டைப் பானையாகிவிட்டது.

ஆளைத் தேள் கொட்டினால் ஆள் துடிக்கிறான். அதனாலே ஆளைவிட தேள்தான் உயர்ந்தது என்று எண்ணுவது பைத்தியக்காரத்தனமாகும்.

தி. மு. க. வெற்றி களிப்பிலே மட்டும் வளர்ந்ததல்ல. வேதனைத் துயரிலேயும் வளர்ந்தது. நமக்குள்ள வேறு பெயரே கண்ணீர்த் துளிகளே தவிர பன்னீர்த் துளிகளல்ல

தேர்தலிலே நம்மில் பலர் தோற்றுவிட்டோம் என்பதற்காக வேதனைப்பட வேண்டியதில்லை. நாம் பெற்ற வெற்றிப் பட்டியலைக் கண்டு மகிழவேண்டும்.

களத்திலே போராடும் வீரன் வீழ்த்தப்பட்ட பிணங்களைக் கண்டு வேகமாக முன்னேற வேண்டும். சபல உள்ளத்திற்கு இடம் தருபவன் வீரனாக மாட்டான்.

வீரன் ஒருவன் இறந்துவிட்டதைக் கண்டு, மக்கள் அழுதார்கள், நாடே அழுதது. ஆனால் அவனைப் பெற்ற தாய்மட்டும் அழவில்லை. கல் மனம் கொண்டவளா தாய், என்று பார்ப்பவர்கள் கேட்பார்கள்? என் மகன் கடமை வீரனாக இறந்தான், நான் அதற்காக அழுதால் அவனுக்கு கோழை என்ற பெயர் வந்து விடும். அதனால் நான் அழவில்லை என்றாளாம். அந்த தாய் மனப்பான்மை நமக்கு வேண்டும்.

நான்கு மாதங்களிலே முடியாத ஓய்வை நான்கு நாட்களாக மைசூர் மாநிலத்தே பெற்று வந்திருக்கிறேன். இயற்கை காட்சிகளை ரசிப்பதும், சிற்பங்களின் திறமை கண்டு சிந்தைக்கு மகிழ்ச்சி தருவதும், உண்பதும் உறங்குவதுமாக இருந்தேன்.

நாம் தோல்வியடைந்ததைப் பற்றி இனி யாரும் பேச வேண்டாம்.

வெற்றி வீரன் என்றால், வீழ்ந்துவிட்ட பிணத்தைக் கண்டு முன்னேற வேண்டும். அவன் வீரன். நமது வெற்றி என்றும் நம்மிடையே நிற்கும். அதற்கு இந்தத் தோல்வி உரமாக இருக்கட்டும். இனியும் வேதனைப்படாதீர்கள்.

தேர்தலிலே நான் ஒருவன் மட்டுமா தோற்றேன். என்னுடன் 11 பேரும் தோற்றுவிட்டார்கள். அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை.

'இந்து' தலையங்கத்தைப்பற்றி குறிப்பிட்டேன். நமது கழகம் எம். எல். ஏக்கள் தோற்றதைக் கண்டதும், பத்திரிகைக்காரர்கள் பலவித கருத்துக்களைத் தெரிவித்தார்கள். 'திராவிட நாடு' என்ற இலட்சியத்தைக் கை விடும்படி கூறினார்கள்.

கல்யாணம் நடந்து மனைவியைப் பெற்ற பிறகு தெருத்திண்ணையில் படுத்துக்கொண்டிரு என்று கூறுவதுபோல், திராவிட நாடுதான் கழகத்தின் லட்சியம் என்று தெரிந்து உறுதியானபிறகும் அதை விட்டுவிடு என்று கூறுகிறார்கள்.

50 எம். எல். ஏக்கள்தான் வந்துவிட்டார்களே, திராவிடநாடு பிரிவினையை விட்டுவிடுங்கள் என்று பத்திரிகைகள் கூறுகின்றன.

50 இடங்களுக்காகவா திராவிட நாடு? அதற்கா ஆன்றோர்களும் சான்றோர்களும் திராவிட நாட்டை வாழ்த்தினார்கள் —போற்றினார்கள் ? 50 இடங்களுக்காக ஒரு கட்சி லட்சியத்தை விட்டு விடுவதா?

50 எம். எல். ஏக்களுக்காகவா திராவிடநாடு லட்சியத்தை கட்சியின் கொள்கையாக வைத்திருக்கிறோம்? பொறுப்புடைய செயலா இது?

50 இடங்களில் கழகம் வெற்றி பெற்றது என்றால், மக்கள் எங்களைக் கவனிக்கிறார்கள், கொள்கைகளுக்கு ஊக்கம் காட்டுகிறார்கள், கழக லட்சியத்துக்கு ஆதரவு தருகிறார்கள் என்று பொருள். நான் இந்த நாட்டிலே தோன்றியிருக்கின்ற கேள்விக்குறி. என்னைத் தோற்கடிக்கலாம். ஆனால் கேள்விக் குறியாகி விட்டப் பிரச்னையை அழிக்கமுடியாது. கேள்விக்குறி என்று ஏன் கூறுகிறேன் என்றால்,

திராவிட நாடு வடவர் காலடியில் மிதிப்பட்டு சாவதேன் ? தமிழ் மொழியை மாய்க்க இந்தி புகுவதேன்? வாழ்க்கை முறை மாறாமல் இருப்பது ஏன் ? என்ற கேள்விக்குறியை எழுப்பும் பிரச்னை அது.

தி. மு. க. அந்த லட்சியத்தை கேள்விக் குறியாக மாற்றி, சட்ட சபையிலேயும், பாராளு மன்றத்திலேயும் கேட்கும்.

பாதை தவறி தி. மு. க. என்றுமே நடக்காது. தன் இலட்சியத்தை விட்டு விலகிச் செல்லாது.

என்னுடைய பணி நான் சட்டசபை வராததால் குந்தகம் ஏற்பட்டுவிடும் என்று எண்ணுவார்களேயானால், அவர்கள் ஏமாற்றம் கொண்டவர்களாவார்கள். என்னை ஒழித்தால் அந்த கேள்விக்குறி ஒழியும் என்று நினைக்கலாம். ஆனால் தி. மு. க. வை ஒழிக்க நினைத்தால் அது யாது. வெற்றி பெரும் வரை ஓயாது போராடுவோம்.

கேள்விக்குறி ஏன் போடுகிறேன் என்றால், என்னுடைய நாடு, என் மொழி, என் இனம், எங்கள் வாழ்க்கை நிலை இவைகட்காக எழும் கழகக் குரலே கேள்விக்குறிதான். இந்த கேள்விக்குறியை 7 பேர் பண்டித நேருவைப் பார்த்து கேட்க மறுப்பார்களா? சட்டசபையிலே 50 பேரும் குரல் கொடுக்காமலிருக்க. முடியுமா?

இந்தக் கேள்விகளை நமது 7 பேரும் பண்டிதரைப் பார்த்துக் கேட்பார்கள்.

நாம் பெற்றிருக்கின்ற வெற்றி மகத்தான வெற்றி. நமது தோழர்கள் சாதாரணமானவர்களையா தோற்கடித்திருக்கிறார்கள்.

டாக்டர் மதுரம், திருச்சியின் செல்லப்பிள்ளை. பெரியாரின் சுவிகாரப்பிள்ளை. அவரை சுருட்டுத் தொழிலாளர்களின் தலைவர் மணி தோற்கடித்திருக்கிறார். உதவி சபாநாயகர் பக்தவச்சலத்தை நமது ராமசாமி தோற்கடித்திருக்கிறார்.

நமது கழகம் விடுதலை இயக்கம். சட்ட சபைப் பணி அந்த இயக்கத்தின் ஒருபகுதி. நாங்கள் இதை மறக்கவில்லை.

காங்கிரஸ் ஆட்சியின் புள்ளி விபரமானால் அதிலுள்ள நன்மை, தீமைகளை திட்டவட்டமாக எடுத்துக் காட்டுவார்கள்.

உணவுப் பிரச்சினையா ? மக்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் அங்கே பேசுவார்கள்.

நிதிநிலையா ? வடக்கின் வாழ்வும், தெற்கின் நிலையையும் எண்ணிப்பார்த்துப் பேசுவார்கள்.

நிர்வாக ஊழலா, மக்களின் பணத்தை மமதையால் செலவு செய்து துர்வினியோகம் செய்யும் ஊழல்களைப் பேசுவார்கள்.

எதிர்கட்சி என்றால் சட்ட சபையிலேயே உட்கார்ந்ததும் திராவிடநாடு திராவிடருக்கே என்று கோஷமிட்டு விட்டுத் திரும்பமாட்டார்கள்.

நமது கழகம் ஒரு விடுதலை இயக்கம்தான். அதே நேரத்தில் சட்ட மன்றத்திற்குள் செல்லும்போதும் வெளியே வரும்போதும் நமது தோழர்கள் 'திராவிட நாடு திராவிடருக்கே' என்ற முழக்கத்தோடு மட்டும் திரும்பிவிடமாட்டார்கள்—பொறுப்புள்ள எதிர்க் கட்சியனராகத்தான் பணியாற்றுவார்கள்; ஆட்சியின் நிர்வாக ஊழல்களை அம்பலத்துக்குக் கொண்டுவருவார்கள்; நீர்ப்பாசன திட்டங்களை வற்புறுத்துவார்கள்; விவசாயப் பிரச்சினைகளை விவாதிப்பார்கள்; மக்களுக்குத் தேவையான எல்லாப் பிரச்சினைகளையும் எடுத்துப் பேசுவார்கள்; 'இது ஒரு விடுதலை இயக்கம் தானே' எனக் கருதி மற்றப் பிரச்னைகளை யெல்லாம் பேசாமல் விட்டுவிடமாட்டார்கள்.

இப்படிப்பட்ட வெற்றிவீரர்களைப் பெற்ற நம்மைக் கண்டு பத்திரிகைகள் புத்தி சொல்ல ஆரம்பிக்கின்றன.

நம்மை இதுவரை மதியாத பத்திரிகைகள் எல்லாம் நமது வெற்றியைக் கண்டதும் புத்தியாவது கூறவந்தார்களே என்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

புத்தியை யாருக்கு சொல்லுவது? ஆளும் கட்சிக்கா ? ஆளும் கட்சியை எதிர்த்து வெற்றிபெற்ற நமக்கா ?

வட நாட்டிலே காங்கிரசுக் கட்சியை சுதந்திரா தோற்கடித்து பலமிழக்கச் செய்துவிட்டது.

காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலை மக்களிடையே செல்வாக்கற்றுவிட்டது. அவர்களுக்கு அல்லவா பத்திரிகைகள் புத்தி சொல்ல வேண்டும்.

'இந்து' உலகப் பேரறிவாளர்களால் மதிக்கப்படுகின்ற பத்திரிகை, அது அரசியல் பிரச்சினைகளை ஆராயும்போது பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். எனக்கு ஆதரவு காட்டவேண்டாம். அன்பு காட்டவும் வேண்டாம்.

சேலை கட்டி வந்தாள் சென்னியப்பன் என்று சொன்னால் பொருள் சரிதானா ? சேலை கட்டிய செந்தாமரை வந்தாள் என்றாள் அது சரி. சேலை கட்டி வந்தாள் சென்னியப்பன் என்றால் எப்படி அது. சரியாகும்.

சென்ற தேர்தலிலே வெற்றி பெற்ற நாங்கள் எங்கள் தொகுதிகளை சரிவர கவனிக்கவில்லை சட்ட சபையிலேயே சரிவர பணியாற்றவில்லை இருந்தாலும் அவர்களைக் காணோமே; என்று எழுதியிருக்கிறது. இந்து. இது சேலைகட்டிவந்தாள் சென்னியப்பன் என்பதைப் போல் இல்லையா ?

சட்ட சபையிலே நான் இல்லாததால் என்ன நடக்குமோ, என்ற எண்ணத்துடன் இந்து எழுதியிருக்கிறது.

திராவிடநாடு பிரச்சினையை விட்டுவிடு என்றும் கூறுகிறது. திராவிடநாடு திராவிடருக்கே என்ற இலட்சியத்தை என்று கூறத் தொடங்கினோமோ அன்றிலிருந்து இன்றுவரை ஓயாது ஒழியாது கூறிக் கொண்டே இருக்கிறோம். இனியும் கூறிக்கொண்டே இருப்போம். இத்தகைய கொள்கை உரம் கொண்டவர்களைப் பார்த்து இந்து, திராவிடநாட்டை விட்டு விடு என்று புத்தி கூறுவதானது எங்கள் மீதுள்ள அக்கறையாலா? அல்லது அவர்களுக்குள்ள ஆத்திரத்தாலா ?

அரசியல் பிரச்சினைகளை அணுகும்போது அறிவோடும் பொறுப்போடும் ஆராய்ந்து அணுக வேண்டும். முடியவில்லை என்றால் லண்டனிலே ஏன் கிளை அலுவலகம்? மவுண்ரோடோடு நிறுத்திக் கொள்ளலாம்; எழுதும்போது பொறுமை இருக்க வேண்டாமா?

தி. மு. கழகம் சட்டசபையிலே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருக்கும். கழகம் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும்.

சட்ட சபைக்குச் செல்லும் நமது தோழர்கள் வாக்குத்திறன் உடையவர்கள். எதையும் பொறுப்புடன் செய்வார்கள்.

என்னையும் என் தம்பிமார்களையும், திராவிடநாடு கேட்டதால் மக்கள் தோற்கடித்தார்கள் என்கிறார்கள். எஸ். ஏ. டாங்கே திராவிடநாடு கேட்டவரா ? ஏன் தோற்றார்?

தேள் கடித்துத் துடிப்பதால் ஆளைவிட தேள் பெரிதாகி விடுமா?

என். ஜி. ரெங்கா எந்த நாடு கேட்டார், தோற்றார் ?

திரிலோக சீதாராம் தோற்கடிக்கப்படவில்லையா ?
அசோக் மேதா என்ன சாமான்யமானவரா ?
கிருபளானி தோற்கடிக்கப்பட்டது ஏன் ?
இவர்களெல்லாம் திராவிடநாடு கேட்பவர்களா ?
பிறகு எல்லோரும் தோற்கடிக்கப்பட்டதேன் ?

டாக்டர் லோகியா தோற்றார், சின்னதுரை தோற்றார்.

எதிர்க் கட்சித் தலைவர்களை எல்லாம் தோற்கடிக்க ஏராளமான பணத்தைச் செலவு செய்தார்கள். காங்கிரஸ் எண்ணமிட்டுச் செய்த சதிச்செயல் இது.

அசோக்மேதா என்ன அண்ணாதுரையைப் போல சாதாரணமானவரா? 5 விரல்களிலே புள்ளி விபரங்களை அடக்கிவைத்திருப்பவரல்லவா? அவரை ஏன் தோற்கடித்தீர்கள்?

கிருபளானி என்ன காந்தீயப் பற்று அற்றவரா? அவர் பாராளு மன்றத்திலே பேசுகிறார் என்றால் பண்டித நேருவே கூர்மையாகக் கேட்டுக் கவனிக்கும் தன்மையில் பேசுபவரல்லவா? அவரை ஏன் தோற்கடித்தீர்கள்?

எதிர்க்கட்சித் தலைவர்கள் யார் யாரோ அவர்களை யெல்லாம் தோற்கடிக்க வேண்டுமென்பது காங்கிரசின் நீண்ட நாளைய திட்டம். இந்திய உபகண்டம் முழுவதும் திட்டமிட்டுப் பணியாற்றப்பட்ட சதி!

எதிர்க்கட்சித் தலைவர்களை தோற்கடித்தால் வெளி நாடுகளிலே காங்கிரசுக்கு ஆதிபத்திய புகழ் நிலைக்கும்.

அமெரிக்க பத்திரிகைகள் காங்கிரஸ் பெற்ற வெற்றியை வெளியிட்டதைவிட எதிர்க் கட்சித் தலைவர்கள் தோற்றதைத்தான் பெரிதாக எழுதியிருக்கின்றன.

வெளிநாட்டுக்காரர்களைப் பார்த்து, அசோக் மேதாவைக் கேட்டீர்களே,

பாடம்பெறவேண்டியது கழக மல்ல காங்கிரசே! இந்துவின் கருத்திலே குழப்பம் வாதத்திலே வலுவில்லை !

"இதோ பாருங்கள் அவர் தோற்றார். டாங்கேயை விசாரித்தீர்களோ இதோ அவரும் தோற்றார் பாருங்கள். அண்ணாதுரையை கேட்டீர்களே, அவரையும் பாருங்கள். சின்னதுரையா? அவரும் தோற்றார். கிருபளானியா? அவரும் மேனனிடம் தோற்றார்” என்று கூறிடும் நிலையை உண்டுபண்ணி விட்டார்கள். இது காங்கிரசுக்காரர்களுக்கு ஒரு வகையிலே லாபம்.

எங்கள் தோல்வியைக் காட்டி வெளி நாடுகளிலே ஏராளமான கடன்களைப் பெறலாம். காங்கிரசுக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகமிருப்பதாகச் சொல்லலாம். இதற்காகவே திரைமறைவு சதித்திட்டம் செய்தார்கள். இந்த உண்மை போகப் போகத் தெரியும்.

மந்திரிகள் இந்த வேலைகளை தேர்தல் காலத்திலே மட்டும் செய்ததல்ல.

கடந்த ஐந்தாண்டுகாலமாகவே செய்து வருகிறார்கள். மந்திரிகள் செய்த சுற்றுப் பயண நிகழ்ச்சிகளைப் பார்த்தால் இந்த உண்மை உங்களுக்குப் புரியும்.

மந்திரிகள் சென்ற சுற்றுப் பயணத்தில், பெரும் பகுதியை எங்களது தொகுதிகளிலேதான் அதிகமாக ஈடுபட்டு காரியமாற்றினார்கள்.

எங்களது தொகுதிக்கு மந்திரிகள் வரும்போது எங்களை அழைத்தார்களா? எங்களால் தோற்கடிக்கப் பட்டவர்கள் யாரோ அவர்களைக் காரிலே போட்டுக் கொண்டு அண்ணாதுரைக்கு ஓட்டுப்போட்டீர்களே வாய்க்கால் வந்ததா? ஏரி தூறு வாரப்பட்டதா ? சண்முகத்துக்கு ஓட்டுப் போட்டீர்களே சோறு கிடைத்ததா? கருணாநிதிக்கு ஓட்டுப் போட்டுக் கண்டபலன் என்ன? என்று கேட்டார்கள்.

காங்கிரசுக்கு ஓட்டுப் போடுங்கள். ஏரியைத் தூறு வாருகிறோம், கிணறு வெட்டித் தருகிறோம் என்றெல்லாம் பேசினார்கள். அதன் பலன் எங்களைத் தோற்கடித்தார்கள்.

நாங்கள் தோற்றதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. நான் எனது அறிக்கையிலே கடமைப் பணியைச் செய்திடுக! கவலையை மறந்திடுக ! நமது விடுதலைப் பயணம் தொடரப் பணி புரிமோம்.

நான் தோற்றதால், சட்டசபையிலே எனது குரல் ஒலிக்காமலில்லை. வெற்றி பெற்றவர்கள் உருவிலே எனது குரல் சட்டமன்றத்திலே ஒலிக்கும். நாம் வெளியே இருந்து அந்த பணியைச் செய்வோம்.

நமது நாவலரிடம் நான் முன்பே சொன்னேன், பொதுச் செயலாளர் பதவிக்கும் எம். எல். ஏ. பதவிக்கும் பொருத்தமில்லை என்று.

சென்றதேர்தலில் நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராக இருந்தார். தோற்றார். இப்போது நான் பொதுச் செயலாளராக இருக்கிறேன், தோற்கடிக்கப் பட்டேன். இனி யாரும் பொதுச் செயலாளர் பதவிக்கு வர அச்சப்படுவார்களோ என்னவோ?

கழகத் தோழர்கள் நமது தோல்வியை கணக்கிலெடுக்காது கடமைப் பணியைச் செய்யப் புறப்படுவார்களாக!


✽ முற்றும் ✽