காஞ்சி வாழ்க்கை/சென்னை வாழ்வின் தொடக்கம்


10. சென்னை வாழ்வின் தொடக்கம்

சென்னை வாழ்க்கை இன்பமான நிலையிலேயே தொடங்கப்பெற்றது. சென்னை நகரம் எனக்குப் புதியதன்றே. எத்தனையோ முறை நாட்கணக்கிலும் மாதக்கணக்கிலும் கூட நான் சென்னையில் தங்கியுள்ளேன். என் மேல் படிப்புக்காக நான் எழும்பூரில் சில திங்கள் தங்கியதுண்டு. அக்காலத்திலெல்லாம் பழகிய பல பெரியவர்கள் என் சென்னை வாழ்க்கைக்கு உறுதுணையாக அமைந்தனர். எனினும் 1944, போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். 1942ல் சென்னையே 'அல்லோலகல்லோலப்' பட்டுக் காலி செய்யப் பெற்றிருந்த நிலைமாறி, இடம் கிடைக்காத ஒரு சூழல் உருவாகியிருந்தது. எனவே நான் சென்னையில் கால் வைத்த போது இட நெருக்கடி உண்டாகியிருந்தது. எனினும் இதை நான் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து (1969ல்) எழுதும் போது விரிவடைந்த சென்னை நகரத்தில் உள்ள நெருக்கடி அப்போது இருந்ததில்லை.

சென்னையில் மிகப் பழைய பச்சையப்பர் கல்லூரியில் தமிழாசிரியர் பதவி பற்றிய விண்ணப்பம் குறித்த விளம்பரம் வந்தது. நானும் ஒரு விண்ணப்பம் அனுப்பினேன். காஞ்சியின் பள்ளியை விட்டபோது இப்படி ஒரு வாய்ப்பு வரும் என்று நான் எண்ணவில்லை. எனது கிராமத்தில் சென்று பயிர்த் தொழிலை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமே என் உள்ளத்தில் மேலோங்கி இருந்தது. 'சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்' அதனால் உழன்றும் உழவே தலை’ என்ற எண்ணமே என் உள்ளத்தில் சுழன்றுகொண்டிருந்தது. *உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்றபடி அந்த வாழ்வையே நான் விரும்பினேன். அதனால் எங்கள் நிலங்களைச் செம்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டேன். பல அண்டை நிலங்களை அணைத்து, மாற்றிச் சதுரங்களாக்க முயன்றேன். தென்னங் கன்றுகளை வைத்துப் பயிரிட ஏற்பாடு செய்தேன். எங்கள் முன்னேர்களால் உதவி பெற்ற ஒருவர் நடேச முதலியார் என்பவர். அவர்தான், என் அன்னை இருவரும் காலஞ் சென்றபின் ஊர் நிலங்களையும் பிறவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மேற்பார்வையில் இந்நிலங்களைப் பயிரிட ஏற்பாடு செய்தேன். நானும் அடிக்கடி ஊர் சென்று வந்திருந்தேன். பயிரிட உதவிய பண்ணை ஆட்களும் ஒத்துழைத்ததன் பேரில் விளைவு நன்கு பெருகியது; விளை பொருள்களின் விலையும் கூடிற்று. எனவே பயிரிட ஊக்கமும் பிறந்தது. இந்த நிலையில், என் நடுத்தர வயதிலே, பள்ளிப் பணிக்கு முற்றுப்புள்ளி அமைந்த காரணத்தால் முழுக்க முழுக்க உழவகை மாறத் திட்டமிட்டு அதற்கு ஏற்பச் செயல்படத் தொடங்கினேன். சில நிலங்களை மாற்றிக் கிணறுகள் அமைக்கவும் திட்டமிட்டேன். தோட்டங்களை வளர்க்கத் தொடங்கினேன். இதற்கிடையில் என் அன்னை அடிக்கடி சொல்லிவந்த ஒன்றுமட்டும் என் உள்ளத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. நான் பிறந்த மூன்றாம் நாளிலே, 1/2 படி அரிசிக்கும் ஒரு பழந்துணிக்கும் மாற்றாகச் 'சாதகம்' எழுதித் தந்த வள்ளுவர் குறிப்பேடு என் முன் இருந்தது. அதையே என் அன்னையார் அடிக்கடி நினைவூட்டி வந்தனர். என் முன்னோர்கள் வழிவழியாகப் பயிர் செய்கின்றவர்கள். நானும் அத்துறையில் அன்றும் செயல்பட நினைத்ததுண்டு. நான் ஊரிலேயே இருப்பதற்கு வாய்ப்பானமையின், அது கேட்டு அன்னையார் மகிழ்ச்சி கொண்டார்கள் என்றாலும் அவர்களுக்குச் சோதிடத்தில் இருந்த தளரா நம்பிக்கையினால் நான் என்றும் பயிர்த் தொழில் செய்யமாட்டேன் என்றே திட்டமாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். அதற்கேற்ப என் சூழ்நிலைகளும் அமைந்தன. காஞ்சியும் செங்கற்பட்டும் போட்டியிட்டு, என்னை உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் பதவியில் இருக்க வைக்க முயன்று, அதில் காஞ்சிபுரம் வெற்றி பெற்றமையின் காஞ்சிபுரத்தில் பணி ஏற்றமை அறிந்த ஒன்றே. பின்பு அந்தப் பணிக்கு முற்றுப்புள்ளி நேர்ந்தபொழுது மறுபடியும் ஏர்ப்பின் சுழல வாய்ப்பு உண்டு என எண்ணினேன். அப்போது சாதகங்களை நினைவூட்ட என் அன்னயாரும் இல்லை. எனக்கும் சாதகங்களில் நம்பிக்கை இல்லை. சாதகக் கணிப்பில் தவறு உண்டென்றோ சாதகமே பொய்யானது என்றோ நான் கொள்வதில்லை. ஆயினும் அது பற்றி அறிந்து எண்ணிக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதும் யாவும் இறைவன் திருவுளப்படியே நடக்கும் என்பதும் என் உள்ளக் கிடக்கை. எனவேதான் சாதகங்களே நான் நாடுவதில்லை. அதனாலேயே பின்னர் என் பிள்ளைகளுக்கு உரிய சாதகங்களை நான் எழுதி வைக்கவில்லை. எனினும் என்னைப் பொறுத்தவரையில் அன்றுமட்டுமன்று இன்றுவரையிலும் அந்தக் 'கல்லா நல்ல வள்ளுவரின்' சாதகப்படியே யாவும் நடை பெறுகின்றதை எண்ணி எண்ணி வியப்படைகின்றேன். அந்த அடிப்படையிலேயே நான் நினைத்த பயிர்த் தொழிலில் என்னை இணைக்காத சூழல் உருவாகி வந்தது.

திருக்கோயில்களின் நிருவாகப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளும்பணி என்னைக் காஞ்சியில் நாடி வந்த போது அதை நான் வேண்டாம் என ஒதுக்கினேன். இந்து அற நிலையத்தில் திரு. T.M. நாராயணசாமிப் பிள்ளையும், திரு. C. M. இராமச்சந்திரன் செட்டியாரும் பணியாற்றிய காலத்தில் என்னை வலிய அழைத்து, காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலயத்தின் அறங் காவலனாக இருக்கவேண்டும் என வற்புறுத்தினர். நான் சென்னை சென்று நேரில் அவர்களைக் கண்டு பணிந்து, எனக்கு அப்பணியினைத் தரவேண்டாமென்று வேண்டி விடுதலை பெற்றுக் கொண்டேன். இந்த நிலையில் என் மைத்துனர் உக்கல் வடிவேலு முதலியார் அவர்கள் இளையனார் வேலூர் பாலசுப்பிரமணியர் திருக்கோயிலுக்கு அறங் காவலராக வேண்டுமென்று, பலவகையில் முயன்று சிலருக்கு ஏதேதோ கொடுத்து, இறுதியில் அப்பதவியைப் பெற்றார். அவரும் அவர் தந்தையாரும் நான் எவ்வளவு சொல்லவும் கேட்க மறுத்தனர். இளமையில் என் பாட்டனாரும் தாயாரும் எனக்கு ஊட்டிய அந்த உணர்வால் நான் அப்பணியினை ஏற்காது மறுத்ததோடு, உற்றவரையும் அத்துறையில் நுழைய வேண்டாமென வற்புறுத்தவேண்டிய நிலையில் இருந்தேன். ஆயினும் அந்தப் பதவியால் இடையில் பல வகையில் பயன் பெற்ற சிலர் அவரைச் சூழ்ந்து செயலாற்ற, அவரும் அந்தப் பதவிக்கு ஆசைவைத்து முயன்றார்-வெற்றியும் பெற்றார். எனவே நானும் என் மனைவியும் குழந்தைகளும் அவர்களோடு கொண்ட தொடர்பினைத் துண்டித்துக் கொண்டோம். பின்பு அத்தொடர்பு ஓரளவு திரும்ப வந்தேனும் அது முழு உள்ளப் பிணைப்பாக இல்லாமல், இறுதியில் என் மனைவியின் மறைவுக்குப் பின் அடியோடு அற்றுவிட்டது என்பதையும் இங்கே காட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்தச் சூழலில் என் நெருங்கிய சுற்றத்தார் எனக் கருதும் அவர்களும் தூரத்தே நின்று விடவே நான் வேறு வகையில் என் நாட்டத்தைச் செலுத்தவேண்டியவனானேன். ஊரிலேயும் ஒற்றுமை குறைந்த காரணத்தால் பயிர் வகைகளைச் செம்மையாகச் செய்ய முடியாத நிலை உருவாயிற்று. இந்த நேரத்தில் வாலாஜாபாத்தில் நான் பயின்ற பள்ளியின் பொறுப்பாளர் அப்பா. வா. தி. மாசிலாமணி அவர்களும் அங்கே செயலாற்றிய அண்ணு நா. ப. தணிகை அரசு அவர்களும் என்ன அங்கேயே வந்து பள்ளியில் தங்கிச் சில பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தினர். எனினும் அப்பாவுக்குப் பின் அப்பள்ளியின் நிலை என்னவாகுமோ என்ற உளத் தடுமாற்றத்தாலும் வேறு சிலருக்கு நான் அங்கே நுழைவதால் சில பலன்கள் கிட்டாது என்று அவர்கள் என் வருகையை விரும்பாததாலும் நான் அதை ஏற்க மறுத்துவிட்டேன். எனினும் அப்பா அவர்கள் எல்லோரிடமும் நான் அப்பள்ளியில் சேருவதற்காகவும் அங்கே ஒரு தமிழ்க்கல்லூரி தொடங்குவதற்காகவுமே காஞ்சிபுரப் பணியைக் கைவிட்டேன் என்று கூறிவந்தனர். ஆயினும் என் சூழல் என்னைச் சென்னைக்கு ஈர்த்தது.

வாலாஜாபாத் இந்துமத பாடசாலைக்கும் எனக்கும் நான் பயின்ற அந்த நாளில் இருந்து (1925) இன்றுவரை தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது. ஏதோ படித்தோம் விட்டோம் என்று இல்லாமல், நான் அப்பள்ளியில் ஓர் அங்கமெனப் பலரும் எண்ணத் தக்க வகையில் நான் அப் பள்ளியொடு தொடர்பு கொண்டிருந்தேன். இடையில் ஓராண்டு அப்பள்ளியில் பணியாற்றியதையும் அப்போது நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் இந்த நூலில் முன்னரே குறித்துள்ளேன். அதற்குப் பிறகும் என் தொடர்பு பள்ளியில் பிணைத்தே இருந்தது.

அப்பா அவர்கள் பள்ளிக்குப் பார்வையிட யாரை அழைத்து வந்நாலும் (அவர்கள் பெரும்பாலும் சென்னையிலிருந்து வருபவராதலால்) என்னையும் அவர்களோடு ஏதாவதொரு 'காரில்' வரச் சொல்லுவார்கள். வேறு பிறவிடத்திலிருந்து வந்தாலும் எப்படியும் என்ன அழைத்துச் சென்று விடுவார்கள். பின் நான் புதுப்பட்டங்கள் பெற்ற போதும் பதவி உயர்வுகள் பெற்ற போதும் அவர்கள் என்னைப் பாராட்டத் தவறவில்லை. மேலும் பள்ளியின் பழைய மாணவர் மன்றம் அமைத்து, அதன் தலைவராக என்னை அமைத்து வாழ்த்தினர்கள். நான் ஐதாராபாத் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவனாகச் சென்றபோது (1966) என்ன வாழ்த்தி அனுப்பினார்கள். ஆனால் நான் 1967ல் திரும்பி வந்த போது அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்தார்கள். அவர்தம் கடைசிக் காலம்வரையில் அவர்கள் என்னைத் 'தம்பி', 'தம்பி’ என அழைத்துப் போற்றிய தன்மையினை என்னால் மறக்க முடியாது.

இடையில் மறைந்த என் அன்னைக்கு நிலைத்த நினைவாக ஏதேனும் கல்வி, கைத்தொழில் பற்றிய நிலையம் ஒன்று தொடங்க வேண்டுமென்ற எண்ணம் அன்னையர் மறைந்த நாளிலிருந்து என் உள்ளத்தில் ஊசலாடிக் கொண்டிருந்தது. அதற்கென முன் காட்டியபடி புளியம்பாக்கத்தில் இரெயிலுக்கும் கற்பாதைக்கும் அடுத்து, பாலாற்றங்கரையினுள் சமுதாய நிலத்தை வாங்க முயன்றேன். பலர் முன்வந்து குறைந்த விலையில் சுமார் நான்கு ஏக்கர் நிலத்தைக் கொடுத்தனர். இன்னும் மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. அதையும் வாங்கி, பக்கத்திலுள்ள அரசாங்கத்துக்குரிய எட்டு ஏக்கர் நிலத்தையும் கேட்டு வாங்கி, பதினைந்து ஏக்கரில் வள்ளியூர் என்ற ஊர் அமைத்து ஒரு கல்வி நிலையமும் தொழில் நிலையமும் அமைக்கத் திட்டமிட்டேன். பலர் வாலாஜாபாத்தில் மேற்கே மாசிலாமணி முதலியார் கிழக்கே நான் -ஆக இருவரும் கல்விப்பணி ஆற்றுவது ஊருக்கே நல்லது என்றனர். இந்த நிலையிலும் இதற்கு மருந்தாக அப்பா அவர்கள் இந்த யோசனையைக் கைவிடல் வேண்டி, அவர் பள்ளியில் சில பொறுப்புக்களை ஏற்க அழைத்திருக்கலாம். எப்படியோ, அப்பணி இன்றும் அந்த அளவிலேயே உள்ளது. என்றாவது ஒருநாள் அப்பணி நிறைவேறும் என்ற உளத்தோடு உள்ளேன். எனினும் இதற்கிடையில் என் அன்னையின் பெயரால் சென்னை அண்ணாநகரில் அமைத்துள்ள கல்விக்கூடம் (1968-ல் தொடங்கப்பெற்றது) நன்கு வளர்ந்து என் அன்னையின் பெயரை என்றும் வாழவைக்கும் நிலையில் ஆக்கம்பெற்று வருவதை எண்ணி மகிழ்கின்றேன்.

என்னுடைய வாழ்வின் திருப்பங்கள் நேரும்போது நான் இறைவனையே துணையாகக் கொள்ளுவது மரபு, காஞ்சி வாழ்க்கையையும் ஊர் வாழ்க்கையும் ஒத்துவரா நிலையில் சென்னை பச்சையப்பர் கல்லூரியின் தமிழாசிரியர் தேவை பற்றிய விளம்பரம் கண்டேன். அதற்கென விண்ணப்பம் செய்ய நினைத்தேன். எனினும் அதற்குரியார் யாரையும் நான் அறியேன் ஆதலாலும் அதற்குரிய வகையில் என்னை ஆற்றுப்படுத்தி வழி காட்டுவார் யாரும் இல்லை என்ற நி லை யி லும் செய்வதறியாது திகைத்தேன். சென்னைக்கு ஒருதிங்களில் சுமார் இருபது முறை சென்று வந்திருப்பேன். ' எனினும் அந்தச் சூழலுக்கிடையில் நான் இறைவனை முற்றும் நம்பிய காரணத்தால் அமைந்த சூழலே எனக்கு உரியவரிடம் ஆற்றுப்படுத்தியது. அதனாலேயே ஒருவருக்கு என விளம்பரம் செய்திருந்த போதிலும் மூவர் அதற்கெனத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். திரு. அ. ச. ஞான சம்பந்தர், திரு. க. அன்பழகர், நான் ஆகிய மூவரும் 1944 சூன் இறுதி வாரத்தில் ஒருவர் பின் ஒருவராகத் தமிழ்த் துறையில் விரிவுரையாளர்களாகச் சேர்ந்தோம்.

அதே வேளையில் புலவர் அன்பு கணபதி அவர்களும் பயிற்றாளாராகப் பணி ஏற்றார். எங்கள் அனைவரையும் அத்துறைத் தலைவராகிய மோசூர் கந்தசாமிமுதலியார் அவர்கள் அன்புடன் ஏற்றுப் புரந்தநிலையை இன்று நினைத்தாலும் உள்ளமும் உடலும் ஒருசேரச் சிலிர்க்கின்றன, டாக்டர் மு. வரதராசனர், டாக்டர் மொ.அ. துரைஅரங்கனார் போன்ற பெருமக்களோடு கலந்து பணியாற்றும் பொறுப்பினை மேற்கொண்ட நிலையில் இறைவனையும் அன்னையையும் பச்சையப்பரையும் உளத்தால் போற்றி வாழ்த்தினேன். ஏதோ ஒரு வேகம் உந்த, மாற்றுப் பணிக்கென 75-5-125 ரூபாய் ஊதியத்தில் பச்சையப்பரில் நான் கால் வைத்த அந்த நாளில் எனது ஓய்வு நாள் வரையில் தொடர்ந்து இதே கல்லூரியில் பணியாற்றுவேனென்ரறோ, தொடர்ந்து பல வகையில் உயர்ந்து வளர்வேனென்றோ, உலகில் ஒருவகை வாழ்ந்தமைக்கு ஏற்ற சின்னங்களுடன் பணியாற்றுவேனென்றோ, அதே வேளையில் சில கல்வி நிலையங்களை உருவாக்குவேனென்றோ நான் கனவிலும் நினைக்கவில்லை. ஒய்வு பெற நிற்கும் இந்த ஆண்டில், இந்த வாழ்க்கைக் குறிப்பை எழுதும் நிலையில் அந்த நாள் என் முன் ஒளிவிடுகின்றது. ஆம்! 1944ல் பச்சையப்பரில் கால் வைத்த நான் பல வாழ்வின் மேடுபள்ளங்களைக் கண்டு பல்வேறு மக்களொடு பழகி, பல்வேறு அனுபவங்களைப் பெற்று வாழ்ந்து இன்று இந்தக் குறிப்பையும் எழுதுகிறேன்.