காஞ்சி வாழ்க்கை/திருமணமா? வெறுமணமா?

2. திருமணமா? வெறுமணமா ?

நான் என் அன்னையின் ஆதரவிலும் அரவணைப்பிலும் வாழ்ந்துவந்தவன். இளம் வயதிலேயே தந்தையை இழந்து, தாயும் பாட்டியும் பாதுகாக்க வளர்ந்தவன் நான். அன்னையோடு பிறந்த பெரிய அன்னையும் பெரியப்பாவும் பக்கத்து வீட்டிலேயே வாழ்ந்துவந்தாலும் அவர்கள் எங்களோடு நெருங்கிப் பழகாமலேயேதான் இருந்தார்கள். இருவீட்டிற்கும் இடையாயிருந்து மூடிவைக்கப் பெற்றிருந்த கதவு திறக்கப்பெற்றாலும், உள்ளக் கதவுகள் திறக்கப்பெறவில்லை என்றே அந்த நாளிலேயே நான் ஓரளவு அறிந்துகொண்டேன். அவர்தம் 'சொத்து' அனைத்தும் எனது பாட்டனார் வழியே பெரியம்மாவுக்குச் சேர்ந்தது என்றாலும், எனது பெரிய தந்தையாரும் சிறிது தம் பேருக்கும் வாங்கிவைத்திருந்தார். உள்ள பயிரிடும் நிலத்தையும் குத்தகைக்கு விட்டிருந்ததால் அவர் ஓய்வாகவே வீட்டில் இருந்தார். அவர்களுக்குக் குழந்தைகள் கிடையா. எனவே பெரியம்மா என்னிடம் பரிவு காட்டினர்கள். ஆனால் பெரிய தந்தையார் அவருடைய அண்ணலாருக்குப் பிறந்திருந்த ஒரு மகனை அழைத்து வந்து எல்லாச் சொத்துக்கும் உரிமையாக்க விரும்பினர். இதுபற்றி இரண்டொருமுறை அவர்கள் பேசிக்கொண்டது என் காதில் விழுந்தாலும் எனக்கு அது பற்றி எண்ணத் தோன்றவில்லை. ஆயினும் இவர்கள் பொருள் நமக்கு எதற்கு?’ என்று மட்டும் பிஞ்சு உள்ளத்தில் கேள்வி எழுந்தது. என் அன்னையார் ஆதரவு நிரம்ப இருந்த காரணத்தால் நான் எது பற்றியும் கவலைப் படவில்லை. ஆயினும் இறுதியில் எப்படியோ அவர்கள் சொத்து அனைத்தும் எனக்கே உரிமையாகும் நிலை உண்டாயிற்று. எனது பெரிய அன்னயார் மீனாட்சி அம்மாள் அவர்தம் இறுதி நாளில் அவருடைய பொருள் அனைத்தையும் எனக்கும் என் மனைவி சந்திராமணிக்கும் உரிமையாக்கிச் சென்றார்கள். அவர்தம் அன்பினையும் பிரிவினையும் எண்ணி எண்ணி ஏங்கிய என் நெஞ்சம், தற்போது அவர்கள் பெயரால் 'மீனாட்சி கவின்கலைக் கல்லூரி' என்ற ஒன்றைத் தொடங்க ஏற்பாடு செய்துள்ளது. இதில் இன்றும் வீணை, நடனம், வாய்ப்பாட்டு முதலிய வகுப்புகள் (வள்ளியம்மாள் பள்ளியின் சார்பில்) நடைபெறுகின்றன.

செங்கற்பட்டில் என்னுடை பள்ளிப் படிப்பு முடிந்தது. அப்போது எனக்கு வயது பதினேழுதான். எனது பள்ளிப் படிப்பின் முடிவில், என் இளமை முதல் அதுவரை உற்ற துணையாக இருந்து வந்த என் பாட்டியார் காமாட்சி அம்மையார் அவர்கள் மறைந்தமை எனக்குப் பேரிடியாக அமைந்தது. நான் பள்ளி இறுதித் தேர்வை முடித்துவிட்டு, ஊருக்குச்சென்று அன்னயாருடன் சிலநாட்கள் தங்கி இருந்தேன். அடுத்து இரண்டொரு நாட்களில் செங்கற்பட்டிற்குச் சென்று எல்லாச் சாமான்களையும் எடுத்துக் கொண்டு பாட்டியையும் அழைத்துவர ஏற்பாடு. ஆனல் அதற்குள் செங்கற்பட்டில் பாட்டியார் நலிவுற்றிருப்பதாக ஆள்வந்தது. ஒடினேன்-அவர்கள் உணர்விழக்கா நிலையில் இருந்தாலும் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. அன்னையும் நானும் அவர்களை ஊருக்கு அழைத்து வந்தோம். எனினும் இரண்டொரு நாளில்-சித்திரை அமாவாசை நாளில் அவர்கள் எங்களை விட்டுப் பிரிந்தார்கள். எனது அன்னையாருக்கும் பிறகு எனக்கும் உறுதுணையாக இருந்து எங்கள் குடிமுழுதும் ஓம்பிய தெய்வமாக விளங்கிய பாட்டியார் மறைவு என்னாலும் என் அன்னையாலும் தாங்கிக்கொள்ள முடியாததாகிவிட்டது. என் பாட்டியாருக்கென (அம்மாவுக்கு அத்தை) தனிக் குடும்பமோ மக்களோ வாழ்வில் இல்லையாதலால் எனக்காகவே வாழ்ந்து, என் பள்ளிப் படிப்பு (பிறகு முறையாகப் பயிலவில்லை) முடியும் வரையில் தம் வாழ்வைத் தியாகம் செய்த அந்தத் தியாகச்சுடரின் மறைவு என்றும் மறக்க முடியாததாகும்.

செங்கற்பட்டில் பள்ளி இறுதிவகுப்பு எழுதியதும் அங்கிருந்த வாடகை வீட்டைக் காலி செய்ய ஏற்பாடு செய்து விட்டார்கள் என் அன்னையார். ஆம் ! தேறினால் அங்கே மேலே பயில வாய்ப்பு இல்லை. தேறாவிட்டாலோ மறுபடி படிக்கக் கூடாது. இது என் அன்னையின் ஆணை. 'நான் எந்த ஆண்டு தேர்வில் தேறவில்லையோ அந்த ஆண்டில் வீட்டில் நின்றுவிடுகிறேன்’ என்று வாக்களித்திருந்தேன். எனவே அன்னையார் தன் அன்புளங் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நான் வெற்றிபெறக்கூடாது என்றே ஆண்டவனை வணங்குவார்கள். அவர்களுடைய ஆசை எல்லாம் நான் வீட்டிலேயே அவர்களோடு இருக்கவேண்டும் என்பதுதான். எனினும் பள்ளி இறுதிவகுப்பில் தேறினும் தேறாவிடினும் அதுவே எனது கடைசி படிப்பு என்ற முடிவில் செங்கற்பட்டு வீட்டைக் காலிசெய்துவிட்டோம்.

படிப்பு முடிந்து பதினேழுவயதான நிலையில் நான் என்ன செய்வது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். எனது பாட்டியும் மறைந்துவிட்டமையின் நானும் அன்னையும் மட்டுமே வீட்டில் தனிமையில் சிலநாட்கள் வாழ்ந்திருந்தோம். ஏதோ ஓரளவு சொத்து உடையவர்கள் என்ற காரணத்தால், எனக்குப் பெண் கொடுக்க நினைத்தார்கள் சிலர். ஒருவர் அதில் தீவிரமாக முயன்றார். பாவம் அவர் பெண்ணின் இளமை நிலையையும்-அதே வேளையில் அவர் தமதுள்ள நெகிழ்வையும் உணராமல் எனக்கு அவர் பெண்ணைக் கொடுக்கத் திட்டமிட்டார். நானும் அப்பெண்ணை அடிக்கடி காணநேர்ந்தமையின் ஓரளவு அவர் திட்டத்துக்கு ஆதரவானேன். எங்கள் எதிர்வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி ஒரு வீட்டில் குடியிருந்தவரும் இந்தப் பணியில் ஆர்வங் காட்டினர். என்ன அவர் வீட்டிற்கு அடிக்கடி வந்து அழைத்துப் போவார். எனது அன்னையார் மட்டும் அவ்வாறு அடிக்கடி ஒருவர் வீட்டிற்குப் போதல் தவறு எனக் கண்டிப்பார். ஆயினும் ஏனோ-இளமையில் அறியா நிலையில் தானோ-நான் அவர் வீட்டிற்கு அடிக்கடி சென்றேன். அவர் அந்தப் பெண்ணைப்பற்றி அடிக்கடி என்னிடம் பேசுவார். இரண்டொருமுறை என்னை அங்கேயே அழைத்துச் செல்வார்--இரண்டொருமுறை அவர் வீட்டிற்கே பெண்ணை அழைத்துவருவார். எப்படியோ எங்கள் வீட்டில் யாருக்கும் விருப்பமில்லாத நிலையிலும்-அந்தப் பெண் உள்ளம் வேறிடம் சென்றிருந்த போதிலும்-அவள் பெற்றோரும் எதிர்வீட்டுக்காரரும் எங்கள் இருவருக்கும் முடிச்சுப்போடத் திட்டமிட்டு வெற்றியும் பெற்றுவிட்டனர். எனது பெரியப்பாவும் பெரிய அன்னையும் எப்போதும் போல 'அது உங்கள் விஷயம்' என்று சொல்லிவிட்டனர். அன்னையார் செய்வதறியாது திகைத்தனர். அவள் தந்தையார் அடிக்கடி அம்மாவிடம் வந்து; ஏதேதோ பேசிய காரணத்தால் இறுதியில் எனது பாட்டி இறந்த மறுதிங்களிலேயே எனது மணம் நிறைவேறிற்று. ஆயினும் மணம் முடிந்த உடனேயே அவர்கள் உள்ளம் பொருள்மேல் நாட்டமுற்றிருப்பதைக் காட்டிவிட்டது. அதன் விளைவாக மணம் பெயருக்கு அமைந்ததேயன்றி, வாழ்வுக்கு என அமையவில்லை. இன்றும் அதேகொடுமை நீடிப்பதை நினைக்க நெஞ்சம் நடுங்குகின்றது. ஆயினும் ஒன்றும் செய்யமுடியாத நிலையில் காலம் கடந்துகொண்டே செல்லுகின்றது. மணம் செய்து கொண்டாலும், நான் மணம் புரிந்து கொள்ளாத ஒருவர் வாழ்வினையே வாழவேண்டி வந்தது. அந்த இளமை உள்ளத்தில் அவ்வளவாக அது உறுத்தவில்லையாயினும் காலம் செல்லச்செல்ல அந்த வாழ்வின் கொடுமை நன்கு புலனாயிற்று. ஊரில் பலர் 'மணம் செய்தும் சந்நியாசி" என்று என்னைக் கேலிசெய்யவும் தொடங்கிவிட்டனர். ஆம்! அதே வேளையில் என்னைக் காப்பாற்ற ஒரு சந்நியாசிதான் எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தார்.

என்னை மேலே படிக்க வேண்டாம் என ஆணையிட்ட அன்னயார் அதில் உறுதியாக இருந்தமையால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் பள்ளி இறுதி அரசாங்கத் தேர்வில் பொதுக்கணக்கில் 100க்கு 100ம் சிறப்புக் கணக்கில் 100க்கு 92ம் எடுத்திருந்தமையின், ஆசிரியர்கள் என்னை மேலே படித்து, பொறியாளராக வருமாறு பணிந்தனர். ஒரு சிலர் என் அன்னையிடம் வந்தும் கூறினர். எனினும் அவர்கள் மேலே படிக்க வேண்டியதில்லை என்று திட்டமாகக் கூறிவிட்டனர். நான் அவ்வாறு படிப்பதாயின் பண உதவி தரமுடியாது என்றும் சொல்லி விட்டனர். எனவே அந்த வயதில் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதென்பது என்னால் முடியவில்லை. அதே வேளையில் என் மணம் பற்றிய ஊரார் ஏச்சும் பேச்சும் எனக்கு வேதனை தந்தன. அன்னையாரும் அந்த வேதனையைப் பெற்றார் என்றாலும், நான் அவரைவிட்டுப் பிரியக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்தனர். அப்போதுதான் சிதம்பரத்திலிருந்து 'பிரகாசானந்தா' என்ற துறவி எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தார்.

அவர் ஊரில் வந்து சில நாட்கள் தங்கியிருந்தார். அப்போது பலர் அவரிடம் நெருங்கிப் பழகினர்கள். முதியரும் இளையரும் அவருடன் பழகினர். நான் ஏனோ சற்றே விலகியே இருந்தேன். அவர் உண்மையில் துறவியாக இருந்ததோடு நன்கு பயின்றவராகவும் இருந்தார். அவரை ஊரில் ஒவ்வொருவரும் ஒருநாளைக்கு ஒருவேளை தத்தம் வீட்டில் உணவருந்த அழைத்தனர். அப்படியே என் அன்னையும் அவரை என் வீட்டில் உணவுக்கு அழைத்திருந்தனர். அவர் வீட்டில் கால்வைத்த வேளையே என் வாழ்வுப் பாதையின் திருப்பு மைய வேளையாக அமைந்தது என்பதை அப்போது நான் அறியேன்.

என்னிடம் நேராகப் பேசாவிடினும், அவர் மற்றவர்களிடமிருந்து என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். நான் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற்று, மேலே படிக்க விரும்பினாலும் வாய்ப்பின்றி இருப்பதை அறிந்தார். எனவே அவர் வீட்டிற்கு உணவு கொள்ள வந்த காலை, என் அன்னையாரோடு என்னைப் பற்றிப் பேசினர். என்னிடமும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து என் உள்ள நிலையினையும் புரிந்துகொண்டார். அவருக்கு, நான் பிற்காலத்து உயர்ந்து வாழ்வேன் என்று புலனாயிற்று என்றார். எனவே எனது மேல் படிப்புக்கு என் அன்னையாரிடம் அவரே வாதாடினர் மேலும் வீட்டில் இருந்துகொண்டே-அன்னையார்  விருப்பினை நிறைவேற்றிக்கொண்டே-படிக்க வாய்ப்பு உண்டு என்றார். சிதம்பரத்துக்குப் பக்கத்தில் உள்ள கல்லூரியில் தேர்வு எழுதலாம் என்றும், அதற்கு வீட்டில் இருந்து கொண்டே படிக்கலாம் என்றும் சொன்னர். தமிழ் வித்துவான் பட்டம் பெற மேலே படிக்க வாய்ப்பு உண்டு என்றார், அதற்கு முதலாக நுழைவுத் தேர்வுக்கு உரிய நூல் பெற்று அப்போதே படிக்கத் தொடங்கலாம் என்றார், 'மீனாட்சி காலேஜ்' என்று இருந்தது பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகமாக மாறியுள்ளதென்றும் அதற்கு எழுதினால் எல்லாத் தகவல்களும் அனுப்புவார்களென்றும் அவர் சொன்னர். தேவையானால், சிதம்பரத்தில் தங்க வேண்டுமானல், தாம் நிலையாக உள்ள மெளன. சுவாமிகள் மடத்தில் தங்கலாம் என்றும் வழி காட்டினர். எதற்கும் இசையாத என் அன்னையார், நான் வீட்டிலேயே இருந்து படிக்க வாய்ப்பு உண்டு என்று சொன்ன காரணத்தால், அந்த வித்துவான் நுழைவுத் தேர்வு எழுத இசைவு தந்தார்கள். நானும் உரிய நூல்களைப் பெற்றுப் படிக்கத் தொடங்கினேன்.

என்னுடை தமிழ்ப் படிப்பு தொடங்கிவிட்டது. ஆட் கொள்ள வந்த வள்ளலாம் 'பிரகாச ஆனந்தர்’ என்னைத் திசைமாறச் செய்தார், ஆம்! அந்த மாற்றமே இன்று என்னை ஒரளவு தமிழ் அறிந்தவகை உலகுக்குக் காட்டுகிறது. அன்னைத் தமிழுக்கு நான் ஆக்கப்பணி செய்கிறேனோ இல்லையோ, அத்தமிழ் என் ஆக்க வாழ்வைச் சிறக்கச் செய்கிறது. எனது முந்திய பாதை வழியே சென்றிருந்திருப்பேனாயின் ஒருவேளை நான் தற்போது எங்கேனும் பொறியாளனாகப் பணியாற்றிக் கொண்டிருந்திருப்பேன். அத்துறையில் உயர் வெய்தியிருப்பேனோ-அன்றி தாழ்நிலையில் இருந்திருப்பேனோ? ஆனால் என் அன்னைத் தமிழ் உலகுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தது. பிரகாசானந்த அடிகள், அன்னையின் மனம் நோகாவண்ணம், வீட்டிலேயே இருந்து படிக்கலாம் என்று கூறினார். ஆயினும், நுழைவுத் வுக்குப் பிறகு, நான் கல்லூரியில் சேர்ந்தே படிக்கவேண்டும் என்ற நிலை உண்டாயிற்று.

நூல்களைப் பெற்று உரிய விண்ணப்பங்களையும் அனுப்பிய பிறகுதான் நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். பள்ளியில் பயிலும்போது கணக்கில் சிறந்தவனாக இருந்தேனேயன்றி, தமிழில் சாதாரண மாணவனாகவே இருந்தேன். எனவே தமிழை நன்கு தெளியக் கற்கமுடியவில்லை. என்றாலும் சில காலம் எங்கள் ஊரிலேயே தங்கிய அடிகள் சில பாடங்களைச் சொல்லிக் கொடுத்தார்கள். தேர்வுக்கு முன் சில நாட்கள் சிதம்பரம் சென்றால் அங்கே மடத்தில் தங்கிப் பயிலலாம் என்றார்கள். எப்படியோ அவர்வாய்மொழி கேட்டும் அவர் காட்டிய வழியைப் பின்பற்றியும் அந்த நுழைவுத் தேர்வில் சிறக்க எழுதி வெற்றி பெற்றுவிட்டேன். எனவே அடுத்த ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயில வேண்டும். அன்னை அதற்கு முதலில் இணங்கவில்லை என்றாலும் முடிவில் இசைவு தந்து வற்றாத கண்ணீருடன் என்னை வழியனுப்பினர்கள். நானும் சிதம்பரம் சென்று தமிழ் மாணவனாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கால்வைத்துப் பயிலத் தொடங்கினேன்.