காதல் ஜோதி/ஒரு வார்த்தை...
ஒரு வார்த்தை...
‘சமுதாயத்தைத் திருத்தி அமைத்தாக வேண்டும்’ என்ற கருத்தை மறுக்கும் ஒரு சில ‘மகானுபாவர்கள்’ இருக்கத்தான் செய்கிறார்கள். எனினும், திருத்தி அமைத்தாக வேண்டும் என்பதற்கான ஆதரவுதான் களிப்பூட்டும் அளவுக்கு இருக்கிறது— வளர்ந்த வண்ணமும் இருக்கிறது.
சமுதாய அமைப்பு, சில பழங்காலக் கருத்துக்களின்மீது கட்டப்பட்டிருக்கிறது. அந்தக் கருத்துகள் நீண்ட காலமாக — தலைமுறை தலைமுறையாக இருந்துவருவன — எனவே, மக்கள் அவைகளுக்கான காரணம், பொருள், அவைகளால் ஏற்படக் கூடிய பலன்கள் ஆகியவைபற்றி எண்ணிப் பார்ப்பதுமில்லை.
வேதனை தரும் எதிர்ப்புகளைச் சமாளித்துக்கொண்டு, சீர்திருத்தக்காரர்கள், காலத்துக்கு ஒவ்வாத அந்தக் கருத்துக்களைக் களைந்தெறிய அரும்பாடு படுகிறார்கள்.
‘காதல் ஜோதி’ அத்தகையதொரு முயற்சி. வைதீகம் அறியாமை ஆகியவற்றின் போக்கையும், காதல் ஜோதியைச் சுட்டுப் பொசுக்கவல்ல வலுவுடையது என்பதையும் விளக்க முற்படும், நாடக நூல். படிப்பதற்கும் நடிப்பதற்கும் பயன்படும். நடிக்க விரும்புவோர் முன் அனுமதி பெறவேண்டும்.
கருத்து விளக்கம், ‘காதல் ஜோதி’ தீட்டப்பட்டதன் நோக்கம் — யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல— முழுவதும் கற்பனை.
அன்பன்,
அண்ணாதுரை.