காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை
௳
கணபதி துணை
காலனைக் கட்டி யடக்கிய
கடோரசித்தன் கதை.
வ. சு. செங்கல்வராய பிள்ளை
1928
copyright Registered
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
“காலனைக் கட்டி யடக்கிய கடோரரித்தன் கதை” என்னும் இக்கதை Lord Lytton ( லார்ட் லிட்டென்) ஆங்கிலத்தில் எழுதிய “Death and Sisyphus” (காலனும் சிசுபசும்) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. மிக்க இனிமை வாய்ந்த இக் கதையை தந்தம் தமிழுலகோர் படித்து இன்புற வேண்டும் என்னும் ஆசைமீக்கூரத் தமிழர் சுவைக்கு ஏற்ற வேறுபாடுகளைப் புகுத்தியமைத்து இந்நூல் எழுதப்பட்டது. இக் கதையை நாடக ரூபமாக அமைத்தால் பெரிதுஞ் சுவைதரும் என்பதற்கு ஐயமில்லை. இக் கதையால் அறிவின் பயன் இன்னதென்பதும், சாவு என்பது இல்லாவிட்டால் மனிதர்களின் நிலை இவ்வாறிருக்கும் என்பதும் விளங்கும். இந் நூலால், காலன் (கூற்றுவன்) வேறு, (எமன்) யம தருமாஜர் வேறு என்னும் விடயமும் அறியவரும். காலன் இயமனுடைய தூதன் என்பது, "எமனால் ஏவி விடு காலன்” எனவருந் திருப்புகழாலும் (1051) “தரும ராசற்க்காவந்த கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே” என்னுந் தேவாரத்தாலும் , “தருமனு மடங்கலும் (கூற்றம்)” என்னும் பரிபாடலானும் (3) விளக்கமுறும்.
சென்னை
16-2-1928
வ.சு. செங்கல்வராய பிள்ளை. எம். ஏ.
(Dt, Registrar)
and
Asst. Regr. of Joint Stock Companies, Madras
லக்ஷ்மி சமேதராய் ஒருநாள் வைகுண்டத்தில் எமது நாராயணமூர்த்தி திருவோலக்கங் கொண்டெழுந்தருளியிருந்தார். அப்போது எம்பெருமான் திருச்செவியில் பூலோகத்தி னின்றும் “ஹரி கேசவா! ஹரி நாராயணா!சங்கு சக்ர கதாபாணி! புருஷோத்தமா! ஜெயதுங்க முகுந்தா! நீ காக்கைக் கடவுளன்றோ! இந்தக் கள்ளர் தலைவன் கடோர சித்தனைத் தொலைத்து எங்களைக் காத்தருள வேண்டும்” என ஒருபெரிய முறையீடு கேட்டது. இம்முறையீட்டைக் கேட்ட முராரி வாளா இருந்தனர். அங்கனம் இருக்க முடியவில்லை எங்கள் மாதா லக்ஷ்மி தேவிக்கு. “நீங்கள் ஏன் இந்த முறையீட்டைக் கேட்டும் இரக்கங் கொள்ளா திருக்கின்றீர்கள்? அன்று முதலைவா யுற்றயானை புலம்பிய போது ஒலமென்றுதவின கருணாகர மூர்த்தி யாயிற்றே நீங்கள்” என வினவினள். அதற்கு எழிலி வடிவினர் “கடோர சித்தன் ஒருவன், முறையிடுவோர் பலர்; ஒருவனை வெல்லும் ஆற்றலில்லாத அந்த அறிவிலிகளுக்கு நான் இரங்கேன். அறிவுயாண்டுளதோ ஆண்டுள்ளேன் நான்; பிறிதிடஞ் சேரேன்” என விடை பகர்ந்தனர். நன்றே எனக் கூறிச் செங்கமல மலர் மாதுங் கம்மென்றிருந்தனள்.
இங்கனம் பல நாள் முறை யிட்டனர் பாருளோர். மதுசூதனரும் புன்னகையுடன் சும்மா இருந்தனர். யாருக்கும் அடங்காக் கடோர சித்தனுடைய கொடுஞ் செயல்கள் விருத்தியுற்றன. அவன் கொள்ளை கொள்ளாத வீடே கிடையாது. அவனுக்கு அஞ்சாத உயிரே கிடையாது. “ஆசைக்கோரளவில்லை அகிலமெல்லாங் கட்டியாளினும்” என்ற பெரியார் வாக்கு பொய்க்குமோ! கடோர சித்தன் “இனி நாம் கொள்ளையிடப் பாக்கியாய் நிற்பது இக் கண்ணபுரத்திலுள்ள கருடகேதனன் திருக்கோயிற்பொருள்களே” என நினைத்தனன். கோயிலைச் சார்ந்த பசுக்களை முதலிற் கவர்ந்தனன். பின்னர் கோயிலாபரணங்களை வௌவினன்; பின்னர், தங்க ஸ்தூபிகள் முதலியவற்றைத் தகர்த்தெடுத் தனன். பார்த்தனர் பெருமாள் ! “நன்று! நன்று! நான் வாளா இருந்தது போதும். எனக்கே வழிவைக்கின்றான் இந்தக் கடோர சித்தன்” - என நகைத்துக் கடுநரகாளும் தருமராஜனை நினைத்தனர். தருமனும் எதிர்தோன்றி வணங்கினன். “கண்ணபுரத்துக் கடோர சித்தனை இன்றே கொல்லுக, இன்னே கொல்லுக. இன்றேல் எனக்கு இரக்கம் வரக்கூடும். யான் இரங்குமுன் அவனை அடக்குக.” எனக் கட்டளை யிட்டனர் கமலக் கண்ணரும். நன்றென ஏகினன் யமதருமராஜனும், தனது இருப்பிடம் போய்த் தனது பிரதம மந்திரியும் தூதனும் பிரதிநிதியுமாகிய காலனைக் கூவி “கால! கண்ணபுரத்துள்ள கடோர சித்தனுக்குக் காலங் கிட்டிவிட்டது. அவனை உடனே ஈண்டுக் கொணருதி. தாமதிக்க வேண்டாம்” என ஏவினன். காலனுங் கண்ணபுரத்துக்குக் கடுகினன். கடோர சித்தன் வீட்டிற் புகுந்தனன். அப்போதுதான் கடோர சித்தன் கூடத்தில் கட்டிலின் மீது சட்ட திட்டமாய் வீற்றிருந்து பாலும் பழமும் உண்னும் நிலையில் இருந்தனன். உள்ளே துழைந்த காலன் “புறப்படடா கள்ளா” ! எனக்கூறி வெருட்டாது “அப்பனே, முத்தமிட்டேன் உன்னை” எனக் கூறி நெருங்கினன். யாருக்கும் அஞ்சாத கடோரசித்தனும் காலனார் கோரவுருவைக் கண்டு கலங்கினன் சிறிது. கலங்கி “யாரப்பா நீ?” என வினவினன். அதற்குக் காலன் “நீ கடைசியாய்க் குடிக்கக் கொடுத்து வைத்த பாலைச் சீக்கிரங் குடி; நான்தான் காலன்” என விடை பகர்ந்தனன். இதைக் கேட்டதுங் கடோர சித்தன் ஒருவாறு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு “அப்படியா! இவ்வளவு அழகிய திருகோலத்தையும், கருணை உள்ளத்தையும், இனிய வசனத்தையுங் கொண்ட தங்களையா இந்தப் பாழு மனிதர்கள் "பாவி கொடுங்காலன்” எனத் தூஷிக்கின்றனர். எப்படிப் பட்ட பொல்லா நோயையும் போக்க வல்ல புண்ணிய புருஷர் ஆயிற்றே தாங்கள். என் சிறு குடிலுக்குத் தாங்கள் வரும்படியான பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததே! தங்கள் மொழிக்கு எதிர் மொழி உண்டோ? இதோ உடனே வருகிறேன்; ஆனால் தாங்கள் சற்று இளைப்பாற லாமே. இதோ! இந்த நாற்காலியில் சற்று உட்கார லாமே” என்றனன். காலனும் “இதேது புதுமை, எங்கும் நம்மைத் தூஷிப்பதற்குத்தான் மனிதர்களுண்டு. இவன் என்ன இவ்வளவு அன்பாய் உபசரிக்கின்றனனே” என மகிழ்ந்து கடோர சித்தன் காட்டிய நாற்காலியில் அமர்ந்தனன்.
அமர்ந்த அந் நிமிஷமே அந்த அற்புத இரும்பு நாற்காலியி லிருந்து நூற்றுக்கணக்கான இரும்பு கம்பிகளைப் போன்ற வலிய கம்பிகள் எழும்பின. அவை காலனை நாலா பக்கங்களிலுஞ் சுற்றி வளைத்துச் சுருக்கிட்டழுத்திப் பாய்ந்து முறுக்கி யிறுக்கிப் பிணித்தன. வலையிலகப்பட்ட மான் போலப் போக்கிட மற்றுக் கலங்கினன் காலன். இதைக் கண்டனன் கடோர சித்தன். “அன்பரே! கூப்பிட்டீர்களே. வாருங்கள் போவோம்; நான் வர சித்தமாயிருக்கின்றேன். ஏன்! எழுந்து வரலாமே” என்றனன். காலனுக்கு இருந்த இடத்திலிருந்து அணு அளவு கூட அப்படி இப்படி அசைய முடியவில்லை, கடோர சிந்தனை நோக்கிக் கோபிப்பான், வேண்டுவான், வெருட்டுவான், துதிப்பான். கள்ளனோ புன்னகையுடன் ‘அப்பா! ஒருவன் வாழ்நாளுக் கெல்லாம் ஒரே முறை வரும் விருந்தாளி யாயிற்றே நீ, உன்னை நான் உபசரியாமற் புறக் கணிக்கலாமா? சற்று நிதானியும் அன்பரே. ஒரிடத்திலிருந்து உண்டு மகிழ்ந்திருத்தல் சுகமா, அல்லது அங்கேயும் இங்கேயும் அலைந்து அவத்தை யுறுவது நலமா? இந் நிமிஷம் ரண களத்திலிருக்கின்ருய் மறு கிமிஷம் வைசூரி, குட்டம், நீரிழிவு, காமாலை, சுரம், பேதி முதலிய நோய்களிடையே யிருக்கின்றாய். கொந்தளிக்குங் கடலினிடையே ஒடுகின்றாய் ; கொழுந்துவிட் டெரியும் தீயிடையே பறக் கின்றாய்; சுழற்காற்று போலச் சுழல்கின்றாய்: நீ செல்லும் இடமெல்லாம் கண்ணீரும் அழு குரலும் வெறுப்பும், சாபமும், நிந்திப்பும் தான். குழந்தை யென்று பார்க்கின்றா யில்லை, குமரியென்று விடுகின்றாயில்லை. இன்று பிறந்த சிசுவும் ஒன்றே. நூறு வயது சென்ற கிழவனும் ஒன்றே. அங்க ஈனனும் ஒன்றே அங்க அழகியும் ஒன்றே. பசுபாதம் உனக்குக் கிடையாது. ஆதலால், உங்கள் தலைவர் யமதரும ராஜருக்கு “நடுவன்” என்றொரு பெயர் உண்டு. இப்போது இந்த நாற்காலியின் மத்தியில் இருப்பதால் உனக்கும் “நடுவன்” என்ற பெயர் வருமல்லவா? நீ கூலியில்லாத வேலையாள்; பங்கில்லாத கொள்ளைத் தலைவன்; காரண மில்லாத கொலையாளி. இங்கனம் வீணாய் ஏன் உன் காலத்தை யாவரும் வெறுக்கக் கழிக்கின்றாய். உன்னை யாவரும் விரும்ப வேண்டும் என்னும் ஆசை உனக் கில்லையா? பிராணிகள், நரகலோகத்தை நிரப்பா விட்டால் உனக்கென்ன கெட்டுப் போயிற்று ? உனக்குக்கான் விருப்புங் கிடையாது வெறுப்புங் கிடையாதே. வீணாய் அலையாமல் இங்கேயே இரு”, என்றனன். காலனும் “இவன் சொல்வது நியாயமாகத்தான் தோன்றுகின்றது. ஒரிடமா யிருத்தல் சுகமாகத்தான் இருக்கும்” எனத் தேர்ந்து கடோர சித்தனுடன் இணங்கி இருந்தனன்.
கடோர சித்தனுங் காலன் அகமகிழ்ந் திருத்தற்கு வேண்டிய அநேக வேடிக்கைக் கதைகளையும் நீதிகளையும் தினத்தோறுஞ் சொல்லுவான்; அவனுக்கு வேண்டிய ருசியுள்ள உணவுகளையும், தின்பண்டங்களையும் பானங் களையுந் தருவான். அவனுக்கு வேண்டிய ஆடை ஆபரணங்களைத் தந்து தானே அவனை அலங்கரிப்பான். இவ்வாறு, காலனுங் கள்ளனும் ஆப்த சிநேகிதர்களாய் நித்தம் உண்டு களிக்குங் காட்சி ஒர் அரிய விநோதக் காட்சியா யிருந்தது. மனிதனுங் காலனும் நட்பினராய் ஒன்று கூடிக் களிப்பதை இப்போதுதான் கண்டேன் என வானம் நகைப்பதுபோல வான்மீன்கள் (நஷத்திரங்கள்) விளங்கின. நித்தம் பொழுது விடியுமட்டும் மனிதனுங் கூற்றுவனும் பேசி விளையாடுவார்கள். நரகலோகத்து விஷயங்களும் ரகசியங்களும் கடோர சித்தன் காலன்வாய்க் கேட்டுணர்ந்தான். நிற்க. சகல மாயைக்கும் மூலாதாரமான மூர்த்தியாம் பெருமான் ஸ்ரீமந் நாராயணமூர்த்தி “என்ன? மூவுலகினின்றும் தோத்திரமுங் காணோம். பிரார்த்தனையுங் காணோம். தபமெங்கே? தூபமெங்கே? ஒன்றுங் காணோமே. கடோரசித்தன் காலன்வாய்ப்பட்ட பிறகு மன்னுயிர்கள் இனிக்கடவுளை வேண்டி வருத்தவேண்டாம் என்று சும்மா இருக்கின்றார்களோ?” என நினைத்தனர். அச்சமயம், நாரத முனிவர் அங்கு வந்து தோன்றி வணங்கினர். பெருமாளும் “அன்ப! நாரத! நல்ல சமயத்தில் வந்தாய். மூவுலகில் ஏதேனும் விசேஷ முண்டோ? கடோரசித்தன் காலன் கையிற் பிணிப்புற்ற பின்னர் அங்கு என்ன விசேஷம்?” என வினவினர். நாரதரும் “மதுசூதனரே! கடோரசித்தன் காலன் கையிற் பிணிப்புற இல்லை. காலன் கடோரசித்தன் கையில் பிணிப்புண்டிருக்கிறான். காலன் இவ்வாறு கட்டியடக்கப் பட்டது முதல் உலகிலுள்ளோர் ஒரே குதுகலமாய் இருக்கின்றார்கள். இறத்தல் என்பது ஒன்று உண்டு என்னும் அச்சம் ஒழிந்து, ஆலயங்தொழுவது சாலவும் வீணென ஒழித்தனர். பூஜை யில்லை, தோத்திர மில்லை, மந்திர மில்லை, ஒழுக்கமில்லை. மனிதர்கள் மாடு போலக் காலங் கழிக்கின்றனர். கோயில்கள் எல்லாம் அடைபட்டுக் கிடக்கின்றன. குருக்கள்மார்களெல்லாம் வரும்படி யின்றிக் கொடும் பசியுற்றுத் தவிக்கின்றனர். காலனார் வரமுடியாமை யால் பசி நோயால் இறத்தலின்றிக் கலங்குகின்றனர். காய், கனி, சருகுகள் இவற்றை யுண்டு ஏக்க முறுகின்றனர். காலனோ கொழு கொழென்று சதை நிரம்பி, கவலையின்றி அலைதலின்றி, ஆரோக்கியமாய் இருந்த இடத்திலேயே உண்பதும், உறங்குவதுமாய் இருக்கின்றான். கடோர சித்தன் இட்டது தான் சட்டம். யாராவது அவனுக்குக் குறுக்குச் சொன்னால் காலனைக் கட்டவிழ்த்து விட்டு விடு வேன் எனக் கூறி அவர்களை அச்சுறுத்துகின்றனன்” என விஸ்தாரமாய்க் கூறினர்.
இக்கதை யெல்லாம் கேட்டனர் பெருமாள். நன்று நன்று என நகைத்தனர். இந்த மானிடர்கள் இவ்வளவு அறிவிலிகளா ! யமனுக்கு அஞ்சித்தானா கடவுளை வணங்கி வந்தனர். இவர்கள் வாழ்த்தாவிட்டால் தேவர்கள் வாழ்வது அரிது என நினைத்தனர் போலும். தங்கள் பாபச் சுமைகள் ஒழிவதற்குக் கடவுளைப் பணிய வேண்டும் என்பதை அற மறந்தனர் போலும். பாபம் ! காலனொடுங்கவே இவர்கள் பாப வினைகள் மலைபோல வளருகின்றனவே. காலனைக் கட்டவிழ்த்து விட்டால்தான் இம்மனிதர்கள் நன்னெறியைக் கைப்பற்றி உய்வார்கள் என யோசித்து, நாரதரை நோக்கி “இவ்விஷயங்களை யெல்லாம் யமதருமராஜரிடம் சொல்லவும்; அவர் கீழ்த் தானே காலன் உத்தியோகம் பூண்டுள்ளான். உலகில் நடக்கும் அநீதிகளைக் கூறிக் காலனைக் கட்டினின்றும் அவிழ்த்து விடும்படிச் சொல்லவும்” எனக் கூறி அனுப்பினர்.
நாரதரும் உடனே யமலோகஞ் சென்றனர். யமதருமராஜரைக் கண்டு முகமன் கூறினர். யமதருமராஜரும் “வாரும்! நாாதரே! என்ன விசேஷம் ! நரகலோகத்திற் சில தினங்களாகக் கூட்டமே காணோம். ஒரு பைசாசம் கூட என்னிடம் வரவில்லையே. மனிதர்களுக்குச் சாவில்லை எனச் சிவபெருமான் வரந்தந்து விட்டனரோ! காலன் யாண்டுள்ளான்? என்ன கதியாயினான்? என வினவினர். நாரதரும் “அம்மம்ம! அந்த அதிசயத்தை என்ன என்று கூறுவேன். உமது ப்ரதான மந்திரி காலப்பிரபு கடோர சித்தனது மாயை யிருக்கையிற் சிக்கி அவனது இல்லத்தி லேயே ஒரிடத் தமர்ந்து உடலது கொழுத்து உண்பதும் உறங்குவதுமாக நாள் கழிக்கின்றனர். காலனார் கட்டுண் டார் என அறிந்து இம்மானுடர் செய்யும் அநீதிக்கு அளவில்லை. மனிதனுக்கும் மாட்டுக்கும் பேதமே இல்லாதிருக்கின்றது. அறஞ் செய விரும்புவார் இலர். ஆலயந் தொழுவார் இலர். திருக் கோயில்களிலுள்ள குருக்கள் யாவரும் கோயிலுக்கு வருவாரின்றி வருவாய் குன்றி வயிற்றுக் கின்றி வாடுகின்றனர். கடோரசித்த னென்றால் காசினி முழுமையுங் கலங்குகின்றது. யாரேனும் அவனை எதிர்த்தால் காலனைக் கட்டவிழ்த்து விட்டு விடுவேன் என அச்சுறுத்துகின்றனன்” என்றனர். இதைக் கேட்டனர் யமதருமராஜர். புருவம் நெறித்தனர்; கோப நகை செய்தனர்; பாசத்தையுஞ் சூலத்தையும் எடுத்தனர்; எருமைவாகனத் தேறினர்; “நாரதரே! நன்று நீங்கள் போய் வாருங்கள்” என அவருக்கு விடை யளித்துத் தாம் பூலோகத்துக்கு வந்தனர். வரும்போது பூலோகத்தில் அநேக விசித்திரங்களைக் கண்டனர். சுழற் காற்று வீசிக் கடல் கொந்தளிக்கின்றது. கப்பல்கள் பம்பரம் போலச் சுழன்று சாய்கின்றன. கப்பலிலுள்ளவர்களோ ‘அஞ்சுதல் வேண்டாம்: காலன் கட்டுண்டு கிடக்கின்றான்: சாவில்லை; நீருங் காற்றும் ஒன்றுஞ் செய்யாது’ எனக் கூறிச் சிரித்தனர். கோயில்களில் கொள்ளையிடுங் கள்ளர் மீதும், தொட்டிலிற் கிடக்குங் குழந்தையின் மீதும் இடி விழுகின்றது. “இடியே! நீ இன்னும் பத்து இடியாய்ச் சேர்ந்து எம் மீது விழுந்தாலும் எமக்குப் பயமில்லை. இறப்பு இல்லை” எனச் சொல்லி நகைத்தனர்கள் கள்ளர்கள். ‘என்குழந்தையை நீ ஒன்றுஞ் செய்ய முடியாது. என் குழங்தைக்கு நீ ஒரு வாத்தியப் பெட்டி போலும்’ என எள்ளி உரையாடினள் அக் குழந்தையின் தாய். பிறன் மனை விழைந்தான் ஒரு காமி. “ஐயோ! இது பாபமாயிற்றே” என அஞ்சினள் அக்காரிகை. “சீ! முட்டாள்! நன்னெறி ஏது? புன்னெறி ஏது? பாபம் ஏது? புண்ணியம் ஏது? சாவேது? கடவுளேது ?” என்றான் ஒழுக்கமற்ற அவ்விடன். இக்காட்சி யெல்லாம் கண்டனர் யமதருமராஜர். “நன்று! நன்று! சிரியுங்கள்; கூத்தாடுங் கள்; இன்னும் ஒரு நிமிடத்தில் உங்கள் சிரிப்புங் கெலிப்பும் மறையும்; பாருங்கள்” எனத் தமக்குள் கூறி நேராய்க் கடோரசித்தன் வீட்டுக்குள் நுழைந்தனர். காலன் தனது விசித்ர ஆதனத்தில் ஆடை யாபரணங்களுடன் கொழுத்த மேனியும் மத்தள வயிறும் விளங்க மாப்பிள்ளை போல வீற்றிருப்பதைப் பார்த்தனர். கடோரசித்தன் உணவுக்கு வரும் நேரமாயிற்றே என்று அவனை எதிர்பார்த்த வண்ண மாய்க், காலன்-
“இருந்த இடத்தில் எல்லாச் சுகமும் என்னை நாடுமே
எழைச் சனங் கடோர சித்தன் தன்னைப் பாடுமே!
வீணலைச்சல் போச்சு போச்சு நித்தம் ஆனந்தம்!
விந்தை யாச்சு இந்த வாழ்வு நித்தம் ஆனந்தம்!
நிந்தை போச்சு சாபம் போச்சு நித்தம் ஆனந்தம்!
விந்தை யாச்சு இந்த வாழ்வு நித்தம் ஆனந்தம்!”
-எனப் பாடிக் கொண்டு குதூகலமாய் இருப்பதையுங் கண்டனர்.
உடனே, காலனை நோக்கி ஒரு பெரு மூச்சு விட்டனர். அம் மூச்சு அக்கினி வீசுஞ் சுழற் காற்றாகிக் காலன் அமர்ந்திருந்த விந்தை நாற்காலியில் உள்ள எஃகன்ன கம்பிகள் யாவும் உருகி விழும்படிச் செய்தது. உடனே அச்சுற்று எழுந்தனன் காலன். யமதருமராஜருடைய உருவம் எதிரில் தெரியவில்லை. தான் பழகி யிருந்த அவருடைய குரல் மாத்திரம் பின்வருமாறு கேட்டது. “எனது பிரதிநிதியாகிய நீயா இங்ஙனம் மண்ணுலக வாழ்க்கையில் ஆசைப்பட்டு மதி மயங்கி மகிழ்கின்றாய்? நன்று, நன்று, நன்று உனது மதி. விடு, விடு, விடு இவ்வறி வீனத்தை. உடனே புறப்படு, புறப்படு, புறப்படு உன் வேலைக்கு. முதலாவது உனக்கு விருந்தளித்து வந்த 'வீணன் கடோ ரசித்தனைக் கட்டு, கட்டு, கட்டு; பின்னர் உன் பழைய பாக்கியை எல்லாம் பார், பார், பார். சாவில்லை என்று கூறிக் கடவுளை மறந்து, கொங்தளிக்குங் கடலிற் கூத்தாடும் அம்மூர்க்கர்களைப் பிடி, பிடி, பிடி ; பின்னர், குழந்தையைக் கவனியாது விட்ட தாயெனும் பெயுருள்ள அம்மதியிலியைப் பிடி, பிடி, பிடி; பின்பு, கோயிலிற் கொள்ளையிட்ட கள்ளர்களைப் பிடி, பிடி, பிடி. பின்னர், பிறன்மனை விழைந்த அப்பேதையைப் பிடி, பிடி, பிடி. அவர்களுக் கெல்லாம் கடவுளுண்டு, யமதருமனுண்டு, காலனுண்டு எனக் காட்டு, காட்டு, காட்டு. நரகத்திற் குடி யேறுவதற்கு நிரம்ப இடம் காலியாயிருக்கின்ற தென்று அவர்களுக்குச் சொல்லு, சொல்லு, சொல்லு”-என இடி யன்ன தமது குரலில் உத்தரவிட்டு மறைந்தனர் யமதரும ராஜர்.
மறைந்த மறு நிமிஷமே வெளியிற் போயிருந்த கடோரசித்தன்--
காலனை வெல்வதற் காகவம் மார்க்கண்டர் கண்ணடைத்து
நீலமார் கண்டர்க்கு நித்தமும் பூஜை நிகழ்த்தி வந்தார்
சாலவே காலனைத் தானே யடக்குங் கடோரசித்தன்
போலவே லோகத்தில் உள்ளவர் யாரே புகலுவீரே!
காலகா லன்னெனுந் தெய்வமொன் றுண்டென்னுங் காசினியோர் காலகா லன்தான் கடோரசித் தன்னெனக் கண்டுணர்வார்.(இனிக்
எனத் தானே பாடித் தானே மகிழ்ந்து கலக்க மற்ற சித்தத்தவனாய் நுழைந்தனன் தனது மாளிகைக்குள், நுழைந்து கூடத்தில் வந்த அந்நிமிஷமே அவன் நெஞ்சைப் பிடித்து இறுக்கினன் அவன் வருகையை எதிர் பார்த் திருந்த காலன், “நீ எப்படி வெளிவந்தாய்?” எனக் குழ றினன் கடோரசித்தன். “யமதருமராஜர் இங்கு வந்து நீ யிட்ட தளையினின்றும் என்னை விலக்குவித்தனர். அவரது மூச்செனு நெருப்பினால் உருகி வீழ்ந்தன. நீ யிட்ட விலங்குகள். நேரமாயிற்று, புறப்படு, இன்னும் நிரம்ப வேலை யிருக்கின்றது” என்றனன் காலன். “உண்மை, எனக்குக் காலநெருக்கந்தான். ஆயினும், உனக்கு இத்தனை நாள் அன்ன மிட்டு, ஆடையளித்துப் பாலூட்டிப் பழந் தந்தேனே; அதற்குக் கைம்மாறாக, அந்த நட்புக்கு அறிகுறியாக, யான் என் மனைவியிடம் என் மோஷ சம்பந்தமான விஷயம் சில பேச எனக்கு அதுமதி தர வேண்டும்”-எனக்கூறி “எனது கண்மணீ! கற்பகவல்லலீ!” எனத் தனது மனைவியை விளித்தான் கடோரசித்தன். காலனும் “பாபம், தனது ஆத்மா நல்லகதி யடைவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யட்டும் இவன்" என இரங்கிப் பிடித்த பிடியை விடாது சற்று நிதானித்தான். வந்தனள் கற்பகவல்லி. வந்ததும் அவளைத் தழுவி அவள் காதினில் வெகு ரகசியமாகத் தனது இறுதிநாள் மொழிகளைப் பின் வருமாறு கூறினன். "என் கண்ணே! கற்பகமே! யார் என்னை வெறுத்தாலும், நிந்தித்தாலும் நீ என்னிடத்து என்றும் நிலைத்த பத்தியும் அன்பும் உடையவள். உன் மொழி கடந்து நான் இதுவரையும் கடந்ததில்லை. நீ இப்போது யான் சொல்லும் மொழிகளை மறவாதே, கடவாதே. கேட்டாயோ! மாதரசீ! வைகுண்டத்தில் பெருமாளுக்கு ஏதோ சந்தேகமாம். அது சம்பந்தமாக என்னை ஏதோ யோசனை கேட்க வேண்டுமாம். அதற்காக, அவர் தமது தூதனை அனுப்பி யிருக்கிறார். கொஞ்ச நேரம் “இவ்வுடலை விட்டு நான் போக வேண்டியிருக்கிறது. மானுடராம் உங்கள் கண்ணுக்கு என் உடம்பு பிணம் போலத் தோன்றினாலும், புத்திசாலியாகிய நீ அவ்வுடலை நன்றாய் அலங்கரித்து அது வாடாவண்ணம் கட்டிலின் மீது அதை வைத்துப் பாதுகாத்திருக்க வேண்டும். நமது நண்பர் காலனார் இப்போது கட்டுண்டில்லை. அவரும் என்னோடு வருகின்றார். அவருக்கும் எனக்கும் வழக்கம் போல உண்பன, தின்பன, பருகுவன யாவையும் சரியான நேரத்தில் என் படுக்கைக்குச் சமீபத்தில் நீ வைத்து வரவேண்டும். தெரிந்ததா ? அன்று கொண்டு வந்தேனே முத்துமாலையும் நவரத்ன வங்கியும் அவைகளை நான் திரும்பி வந்த வுடனே உனக்குக் கொடுப்பேன், தெரியுமா ? இப்போது நான் சொல்லிய வண்ணமே நீ செய்வதாக எனக்குச் சத்தியம் பண்ணிக்கொடு” என்றனன். அவளும் அங்கனமே செய்வேன் என்று ஆணையிட்டுரைத்தனள். கடோரசித்தனும் அந்த முத்துமாலை மீதிருக்குங் காதல் காரணமாகவேனும் இவள் நமது தேகத்தைப் பத்திரமாய்ப் பார்த்து வருவாள் என்ற திடசித்தத்துடன் உயிரை நீத்தனன்.
கடோரசித்தனது உயிரை யமலோகத்துக்குக் கொண்டு போகும்படிச் “சங்கிலிக்கறுப்பன்” என்னும் ஒரு துாதனிடம் ஒப்புவித்துக் காலன் சென்றனன். காலன் மறைந்த அக் கணமே கடலிடை ஒவென்றலறுங் கூச்சல் ஒன்று கிளம்பி யடங்கிற்று. நிலமிசை ஓவென்றழுங்குரல் எங்குங்கேட்டது. காலன் தனது கட்டவிழ்த்து வந்து உயிர்களைக் கவர்ந்து எங்கும் முன்போல் உலவுகின்றனன் எனப் பாருளோர் கண்டனர். மூடிய கோயில்களெல்லாம் உடனே திறக்கப்பட்டன. ஜப மென்ன, தப மென்ன, தூப மென்ன, தீப மென்ன, பூஜை என்ன, நிவேதனம் என்ன, திருவிழா என்ன, திருப்பணி என்ன ? எங்கும் வேத கோஷந்தான், தேவ ஆராதனைதான். நிற்க.
சங்கிலிக் கறுப்பனுங் கடோரசித்தனும் நரகலோக நோக்கிச் செல்கின்றனர். பாதாளலோக வழியாக இருள் சூழ்ந்த நெறியிற் செல்கின்றனர். அப்போது கடோர சித்தன் சங்கிலிக்கறுப்பனை நோக்கி, “அண்ணே நீங்கள் கள்வராகிய எங்கள் குலதெய்வமல்லவா? எனக்கு ஏன் இந்த (அவ மிருத்து) அகால மரணம்? வயது நாற்பது கூட எனக்கு நிறையவில்லையே. என்னை எங்கேயோ பேரிருளில் அழைத்துச் செல்லுகின்றீர்களே.” என மிக விநயமாய்க் கேட்டனன். அதற்குச் சங்கிலிக்கறுப்பனும் "அன்பனே! நீ செய்தது தவறு. உன்னைப் போலும் மனிதர்களுடன் நில்லாமல் கடவுளிடத்தேயே உன் சாமர்த்தியத்தை நீ காட்டப் புகுந்தாய். அங்ஙனம் செய்யாமல், உன்னை விட அறிவிற் குறைந்தவர்களையே நீ மோசஞ் செய்து வந்திருப்பாயானால் - உன்னிலுங் கரிய கள்ளன் இருக்கின்றானே “காகம்” எனப் பேர் படைத்து ஆயிரம் வருடம் அகவை கொண்டவன் - அவனிலும் அதிக வாழ் நாள் உனக்குக் கிடைத்திருக்கும். செங்கோலுக்கு முன் சங்கீதமா? செங்கண்மால் முன் உன் ஜெபம் பலிக்குமா? அவர் கோயிலிற் கொள்ளையிட்டாய். அவர் உன் உயிரைக் கொள்ளை கொண்டார்” எனப் பதில் இறுத்தனன். கடோர சித்தனும் “உண்மை தான். என்னை மாத்திரம் இப்போது விட்டு விடுங்கள்; எங்கள் திருமாலுக்குப் பூலோகத்தில் நான் ஒர் உண்மை அடிமையாய் உழைத்து அவர் பொருளைக் கொள்ளை யடிப்பவர்களை நானே ஒதுக்கிப் புடைத்து அவர் ஆலயங்கள் முதலியவற்றைப் புதுப்பித்து அலங்கரித்துக் கோயில் அர்ச்சகர் முதலாயினோர் தமது வேலைகளைச் சரிவர நடத்தி வரும்படிச் செய்கின்றேன் பாருங்கள்; எனக்காகச் சொல்லுகின்றேன் என நினையாதீர்கள்; பெருமாளுடைய பெருமையைக் காப்பாற்ற வேண்டித்தான் சொல்லுகின்றேன். கள்ளனைத் தொண்டனாக்கிய மாயன் பெருமாள், கடோர சித்தனைக் கனிந்த சித்தனாக்கிய கண்ணன் பெருமாள் என யாவரும் அவர் பெருமையைப் பாராட்டுவார்கள். இந்த யோசனைக்கு என்ன சொல்லுகின்றீர்கள்” என வினவினன். அதற்குச் சங்கிலிக் கறுப்பன் “நீ சொல்வது உண்மையே. ஆனால், அநேக உண்மைகள் கண்டு பிடிக்கப்பட்டு அவை தம்மால் வரும் பயனை அடைவதன் முன் கண்டுபிடிப்பவர் காலஞ் செல்கின்றனரல்லவா? அது போலவே, நீ கண்டு பிடித்த இந்த உண்மையின் பயனை நீ அடைவதற்கில்லை. இந்த யோசனை நீ இறப்பதன் முன் உனக்கு இருந்திருத்தல் வேண்டும். இப்போது இந்த யோசனையைப் பெருமாளிடஞ் சொல்ல முடியுமா? முடியாது” என்று கூறினன். “ஏன் ? நீங்கள் எனக்காகப் பரிந்து பேசினல் எம்பெருமான் இரங்க மாட்டாரா? அவர் தான் கருணாகர மூர்த்தி, பக்தவத்சல ராயிற்றே. செய்தது தவறு, பொறுத்தருளல் வேண்டும் என வணங்கினால் உடனே இரங்கி அருள் சுரக்கும் அண்ணலாயிற்றே எங்கள் லக்ஷ்மீபதி” என்றனன் கடோர சித்தன். அதற்குச் சங்கிலிக்கறுப்பன், “ஆமாம். உன் உயிர் உடலிடை இருந்து நீ அங்ஙனம் வணங்கினால் அவர் உதவுவார். உடலினின்றும் உயிர் கழன்ற பிறகு பேசுவது வீண் வார்த்தை” என்றனன். “ஒஹோ! நான் என் உடலிடைப் புகுந்து பூவுலகிலிருந்து வேண்டினால் தாங்கள் எனக்காகப் பெருமாளிடம் பரிந்து பேசி வரம் வாங்கித் தருவீர்கள் போலும். அப்படித்தானா?” என வினவினன் கடோர சித்தன். “தடையின்றி நானுங் கேட்பேன்; அவருங் கேட்டவரங் கொடுப்பார்” என்றனன் சங்கிலிக் கறுப்பன். “மிக்க வந்தனம்; இப்போது சொன்னீர்களே அவ்வுறுதிமொழி போதும்; நான் இந்த இருளுலகத்தைக் கடந்து என்னுடைய பழைய உடலிற் புகுவேனானால் உங்களை நம்பலாம் அல்லவா? கள்வர்களுக்குள் கட்டுப்பாடு உண்டல்லவா ? நீங்கள் எங்கள் குலதெய்வமல் லவா? என்ன சொல்லுகிறீர்கள்” என உசாவினன் கடோர சித்தன். அதற்குச் சங்கிலிக்கறுப்பன் “நீ இவ்விருளுலகந் தாண்டி உன் உடலிற் புகுந்து வேண்டிய வரத்தைக் கேள். அப்போது என்னை நம்பு, இப்போது பேசுவது வீண் பேச்சு” என்றனன். பின்லும், கடோரசித்தன் "அடிமை! புத்தி! ஆனால் இன்னும் ஒரு சந்தேகம். நான் எப்படியாவது என் உடலிற் புகுந்து கொள்ளுகின்றேன் என வைத்துக் கொள்ளுவோம். நான் உங்களை வேண்ட, பின்பு நீங்கள் சென்று பெருமாளை வேண்ட, அதற்கெல்லாம் நாழிகையாகுமே; அதற்குள் நமனார் என்னை மறுபடியும் இங்கு இழுத்து வந்து விடுவாரே. அதற் கென்ன செய்வது!” என்றான். அதற்குச் சங்கிலிக் கறுப்பன் “அன்ப! நீ என்ன மனக்கோட்டை கட்டுகின்றாய். இவ்விருளுலகத்தையாவது நீயாவது கடந்தாவது செல்வ தாவது? இது சுத்த மதிஹீனம், சீ சீ சீ! நீ சுத்த முட்டாள். ‘செத்தவன் பிழைப்பானா’ என்னும் பழ மொழி கூட உனக்குத் தெரியாதா?” என்றனன். “ஹா! ஹா! இப்போதுதான் நீங்கள் எனக்கு உண்மை நண்பர் எனக் கண்டேன். உண்மை நண்பர் தாம் இவ்வாறு இடித்து நல்லுரை கூறுவார். மனக் கோட்டையோ மணற்கோட்டையோ! இன்றிரவு என் சொந்த வீட்டில் தான் எனக்குச் சாப்பாடு; பாருங்கள் இதன் உண்மையை” என்றனன் கடோரசித்தன். அதற்குச் சங்கிலிக்கருப்பன் “நீ இப்போது சொன்னது உண்மையானால் நீ உன் பழைய உடலிற் புகுந்து, உணவு உண்டு, உண்மையாகவே ஊனும் உயிருமாய் இருக்கின்றோம் எனத் தேர்ந்தவுடன் ‘சங்கிலிக்கறுப்பா’ என என்னை மும்முறை கூவுக. காலன் உன்னை மறுபடியுந் தேடி வருமுன் நான் உனக்குப் பெருமாளிடம் வரம் வாங்கித் தருகின்றேன்; பார்” என்றனன். “மெத்த சரி” என்றனன் கடோர சித்தன். சங்கிலிக் கறுப்பனும் தனது மனதுக்குள் "ஹா! இவன் சரியான பேர்வழி: இவன் இருக்கும் இடமெலாம் கிளர்ச்சியே” எனச் சொல்லிக் கொண்டே வழி நடந்தனன். இருவரும் யமதரும்ராஜர் வீற்றிருக்கும் நரகலோகம் வந்து சேர்ந்தனர்.
நரக லோகத்தைச் சுற்றி ஒரு பெரிய ஆறு ஒன்பது சுற்றாக ஒடுகின்றது. அந்த ஆற்றைக் கடந்து சென்றால் தான் யமபட்டணம். அந்த ஆற்றங்கரையிற் கடோரசித்தனுடைய உயிரை விட்டு விட்டுச் சங்கிலிக் கறுப்பன் போய் விட்டான். போகும் போது “இன்றிரவு! சொன்னது ஞாபகம் இருக்கட்டும்” என்றனன் கடோரசித்தன். சங்கிலிக் கறுப்பன் சென்றதுங் கடோர சித்தன் அந்த ஆற்றங்கரையி லிருந்தபடியே தோணிக் காரனைக் கூப்பிட்டான். “கொண்டுவா தோணியை இப்படி” எனக் கூவினன். தோணிக்காரனும் “எங்கே என் கூலி எனக்குச் சேரவேண்டிய வாய்க்கரிசி சேர்ந்தால் தானே நான் உன்னை எனது தோணியில் ஏற்றுவேன்; அது தெரியாதா உனக்கு?” என்றனன். அதற்குக் கடோரசித்தன் “ஒஹோ ! என்னிடம் லஞ்சம் கேட்கின்றாயா? தகனமோ, புதையலோ செய்து கருமாந்தரம் செய்யப்பட்டவர்கள் அல்லவோ உனக்கு லஞ்சம் கொடுப்பவர்கள். வீடு இருந்தால் தானே, ஐயா, வீட்டுவரி , நிலம் இருந்தால் தானே நில வரி; அந்த மாதிரி, என்னைத் தகித்திருந்தால் அல்லது புதைத்திருந்தால் தானே உனக்குத் தகனவரி அல்லது புதையல்வரி கிடைக்கும். என்னை இடு காட்டில் இடவும் இல்லை; சுடுகாட்டிற் சுடவுமில்லை. தகன மில்லை, புதையல் இல்லை, ஆதலால் நான் ஒன்று மில்லை; ‘ஒன்று மில்லை’ என்பதற்கு வரி “ஒன்று மில்லை” அடே! முட்டாள்! இந்த கணக்குக் கூட உனக்குத் தெரிய வில்லையா?” என்றனன். இதைக் கேட்ட தோணிக்காரன் “ஒன்று மில்லை என்றல் தூக்கிட்டுச் சாவு” என வைது கொண்டே வெறுந் தோணியை அப்புறம் ஒட்டிச்சென்றான். அதற்குக் கடோர சித்தன் ‘எனக்கு எது கழுத்து ? நான் தான் பைசாச ரூபமாயிருக்கிறேனே’ உன் கழுத்தை இரவல் கொடு; தூக்கிட்டுக் கொள்ளுகிறேன்!” என்றனன். இதைக் கேட்ட கடோரசித்தனப் போலச் தகன மின்றியும் புதைய இன்றியும் கரையோரத்தில் நின்ற பைசாசங்கள் எல்லாம் ஒவென நகைத்தன.
காட்டு வழியிற் செல்லும்போது புலியடித்தும், பாம்பு கடித்தும் இறந்து பைசாசமாயின சில. கப்பல் கவிழ்ந்து கடலிடை வீழ்ந்து முழுகி இறந்து பைசாச மாயின சில. ரகசியமாகக் கொலையுண்டு கழுகுக்குங் காகத் துக்கும் உடலம் உணவாகிப் பைசாசமாயின சில. இவ் வண்ணம் பல்லாற்றானும் தகிப்பாரின்றிப் புதைப்பாரின்றி, ஆற்றைக் கடந்து செல்ல இயலாது ஆற்றங் கரையிலேயே வருடக் கணக்காய் நின்று காத்திருந்த பைசாசக் கூட்ட மெல்லாம் கடோர சித்தப் பேயின் வேடிக்கைப் பேச்சில் இன் புற்று ஆரவாரஞ் செய்து கொண்டிருந்தன. இந்தப் பேய்களின் பேரிரைச்சல் ஆற்றுக்கு அக்கரையில் யமதருமராஜரை வேலை செய்ய ஒட்டாது தடுத்தது. தரும ராஜரும் கோபித்து “இஃதென்ன பேரிரைச்சல் ஆற்றுக்கு அக்கரையில்?” என வினவினர். அப்போது அங்கிருந்த ஒரு தூதன் “சுவாமி! ஆற்றுக்கு அக்கரையில் உள்ள பேய்க் கூட்டங்களின் நடுவில் கண்ணபுரத்திலிருந்து கடோரசித்தப் பேய் எனும் ஒரு விருந்து வந்திருக்கிறது. அந்தப் புதுப்பேய் ஏதேதோ வேடிக்கையாகப் பேசி எல்லாப் பேய்களையுஞ் சிரிக்கச் செய்கிறது.” தோணிக்காரனைக் கூடப் பரிகசித்து ஏளனஞ் செய்ய அவன் “எனக்கு இந்த வேலை போதும் போதும்; தருமராஜா இந்தப் புதுப் பேயின் கொழுப்பை அடக்காவிட்டால் இந்த ஒடத் துடுப்பை முறித் தெறிந்து வேலையையும் விட்டு விடுகிறேன்” எனக் கூறி அழுகின்றான் என்றனன். அதற்கென்றேற்பட்ட வருடங்கள் கடந்த பிறகே இந்தப் பேய்க் கூட்டம் ஆற்றுக்கு இப்புறம் வரக் கூடுமாதலால், யமதருமராஜரே புறப்பட்டு ஆற்றுக்கு அப்புறம் போய்க் கடோரசித்தப் பேயை நோக்கி, ‘எட மூட! உன் ஏளனப் பேச்சை நிறுத்து. நிறுத்தாவிடில் அதற்காக ஏற்பட்ட தண்டனைக்கு உள்ளாவாய், அறிதி’ - என்றனர், அதற்குக் கள்ளன்
“தருமராஜரே! தங்களுடைய தரும நூல் முறையைக் கூறுகிறேன்; பேய்களாகிய எங்களை விசாரணை செய்யாமல் எங்களுக்கென் றேற்பட்ட பிரமாண நாள் கழியும் வரை, தாங்கள் எங்களைத் தண்டிக்கமுடியாது, விசாரணை செய்ய வேண்டுமானல் இவ்வாற்றைக் கடந்து தங்கள் பட்டனத்துக்கு நாங்கள் வந்த பிறகுதான் தாங்கள் எங்களை விசாரிக்கலாம். ஆற்றைக் கடக்க வேண்டுமென்றால் எங்கள் உடலம் புதைபட்டிருக்க வேண்டும்; அல்லது தகனமாயிருக்க வேண்டும். புதைபடாது போன துந் தகன மாகாது போனதும் என் பிழையல்ல. என்னுடைய பொல்லா மனைவியின் கொடுமை. அவள் என் உடலத்துக்கு ஒரு கைங்கரியமுஞ் செய்ய மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கின்றாள். தாங்கள் என்பேயுருவை நீக்கிப் பூலோகத்துக்குச் செல்லும் வழி காட்டி என் உடலிற் புகும் ஆற்றலை எனக்குக் கொடுப்பீர்களானல், நான் அவளைப் பயமுறுத்தி உன் கடமையைச் செய், என் பிரேதத்தைப் புதை அல்லது தகனஞ் செய் என வெருட்டி அச்சுறுத்துவேன். அவளும் அங்ஙனமே செய்வாள். நானுந் தங்கள் பட்டணத்துக்குள் வர அருகனாவேன். தாங்கள் ஏற்படுத்தியுள்ள நீதிபதிகள் செய்யும் விசாரணைக்கு உட்படுவேன். நான் எவ்வளவு குற்றமற்ற _வாழ்க்கையைக் கொண்டிருந்தேன் என்பதையும் நிரூபிப்பேன்’ -எனக் கூறினன். தருமரும் “நன்று, உடனே செல்லுக, தாமதிக்காதே, மறுபடியும் காலனை எவும்படி வைத்துக் கொள்ளாதே. உன் மனைவியை நன்றாய்க் கண்டித்துப் பயமுறுத்தி வா” என ஏவினர்.
உடனே கிளம்பிற்று கடோர சித்தனுடைய ஆவி , நுழைந்தது கண்ணபுரத்தில் தனது வீட்டின் வாயிலின் வழியாய்; புகுந்தது சேமித்து வைத்திருந்த தனது சொந்த உடலில்; புகுந்ததும் எழுந்தனன், ஐயா, கடோர சித்தன். உண்டனன் அங்குத் தயாராய் வைத்திருந்த உணவை உண்டதும் மும்முறை ‘சங்கிலிக் கறுப்பண்ணா, சங்கிலிக் கறுப்பண்ணா, சங்கிலிக் கறுப்பண்ணா’ எனக் கூவினன்; கூவின மறுநிமிஷமே அயர்ந்து நித்திரை போயினன். நித்திரையில் கனவில், நாராயணமூர்த்தியின் திருவருள்பெற்ற சங்கிலிக்கறுப்பன் தன் எதிரில் புன்சிரிப்புடன் தோன்றி நின்று “அன்ப! மாயன் பெருமாள் உன்னை மன்னித்து விட்டனர். காலனை நீயே கூவி “என்னைக் கொண்டுபோ” என்று நீ கூறினாலொழிய காலன் உன்னே அனுகான். இப்பூலோக வாழ்க்கையிற் சுகம் என்று எண்ணப்படும் எல்லாப் போகங்களும் வைபவங்களும் உனக்குக் கிடைக்கும். உன்னுடைய ஜீவாத்மா ஒரு வாசனைத் தூபக்கால் போலும். வாசனைத்துாபங்கள் சற்று நேரம் வாசனை வீசி மறைகின்றன. அவை எரிந்த தூபக் காலோ அங்ஙனம் மறையாது விளங்குகின்றது. அது போல, வாழ்க்கைப் போகங்களெல்லாம் மறையுந் தன்மையன. ஆத்மா அழிவில்லாதது. உன்னை யமபட்டணத்தில் விசாரிக்கும் போது தூபக்கால் சுத்தியாயிருந்ததா என்று கேட்பார்களே ஒழிய தூபக்காலில் இட்ட பொருள்கள் வாசனை வீசினவா எனக் கேட்கமாட்டார்கள். இதன் பொருள் ஞாபகமிருக்கட்டும்” எனக் கூறி மறைந்ததைக் கண்டனன். காலையில் விழித் தெழுந்தனன் கடோரசித்தன். கண்ட கனவின் முதற்பகுதி மட்டும் அவன் நினைவுக்கு வந்தது. பிற்பகுதியை மறந்து விட்டான். “நானே கூப்பிட்டா லொழிய காலன் எனையணுகான். என் சந்ததி களுக்கு நான் இருப்பது பெரிய அலுப்பாயிருக்கும். சகல பாக்கியமும் எனக்குக் கிடைக்கும் எனத் தான் வரம்பெற்றுள்ளேனே! நான் ஏன் காலனைக் கூப்பிடவேண்டும்? ஹா! ஹா! எனது குலதெய்வம் சங்கலிக் கறுப்பணத் தேவர் கருணையே கருணை, பெருமாளுக்குச் சரியான குல்லா போட்டு விட்டார்.” என நினைத்து நினைந்து மகிழ்ந்தான்.
வரம் பெற்றவாறே சகல செல்வமுங் கடோர சித்தனுக்கு எய்தியது. அவன் பெரிய வர்த்தகனானான். அநேகங் கப்பல்களுக்குத் தலைவனானான். குபேர னொத்த நிதிபதியாயினன். கிட்டிய செல்வங்கொண்டு போர்வீரர் களைத் திரட்டிப் பல தேசங்களைக் கைக்கொண்டான். திருவுடை மன்னனாய் சக்கிரவர்த்தியாய் அத்தேசங்களை ஆண்டு வந்தான். நீதி மன்றங்களை ஏற்படுத்தி அவை தமக்குச் சிறந்த நியாயாதிபதிகளை நியமித்தான். கோயில்களுக்கெல்லாம் பக்தி நிரம்பிய குருக்கள் மார்களைக் கொண்டு பூஜை முதலிய நடப்பித்தான். கண்ணபுரமே இத்தேசங்களுக் கெல்லாம் தலை நகராயிற்று. குக்கிராம மாய் இருந்த அவ்வூர் வானளாவும் மாடமாளிகைகளும் கூடகோபுரங்களுமாய் விளங்கிற்று. காடுஞ் செடியுங் கள்ளரும் மிருகங்களுமாயிருந்த இடங்களெல்லாம் வயலும் நீரும் வீடும் குடியுமாய் இலகின. கோயில்களையுங் குளங்களையுங் கடோரசித்தன் கட்டினது பத்தி காரணமாக அல்ல, தன்னை யாவருங் கொண்டாட வேண்டும் என்னும் பெருமை காரணமாகத் தான். வரி, கப்பம், வியாபார லாபம் எனப் பலவழியாகப் பொருளைச்சேகரித்தான். பல்லாண்டு இவ்வாறு சகல செல்வ போகங்களின் இடையே களிப்புடன் இறுமாந்திருந்தான். பின்னர், வயது செல்லச் செல்ல மூப்பின் இலக்கணங்கள் வெளிப்பட்டன. நரை திரை ஏறின; வாய்ப்பல் உதிர்ந்தது; மொழி தளர்ந்தது; முதுகு வளைந்தது, நோக்கம் இருண்டது; இருமல் வந்தது; தூக்கம் போயிற்று. ஏக்கம் ஆயிற்று. நோய் பிடித்தது, பாய் விடேன் என்றது; சலமலங்களின் நாற்ற மெழுந்தது, காடு வா என்றது; வீடு போ என்றது; கடவுளை ஏமாற்றி விட்டோம் என்று மனிதர் நினைப்பது வழக்கம் கடவுள் ஏமாறவில்லை என்பது ஈற்றில் தான் புலப்படும்; நோயிலா வாழ்வுதானே வாழ்வு. நோய் முதிர முதிரத் தான் ஈட்டிய செல்வ மெல்லாம் செல்வமாகத் தோன்ற வில்லை. விருந்துணவு மருந்துணவு ஆயிற்று. பொருள் பொக்கிஷத்தில், பிரபு படுக்கையில் என்றாயிற்று. நோயின் கொடுமையைப் பொறுக்க முடியாமல் ஒரு நாள் இரவு “யமதருமராஜரே என்னைக்கொண்டு போம்” எனத் தன்னை மறந்து முறையிட்டு அழுதான். உடனே கூற்றுவன் தோன்றிக் கடோரசித்தன் உயிரைக்கொண்டு சென்றனன். கடோ ரசித்தன் மாள்வதேது எனச் சலித் திருந்த சந்ததிகள் அவன் மாண்டவுடனே அவன் உடலத்தை வாசனைத் திரவியங்களிட்டுத் தகனஞ் செய்தனர். பிறகு, அவன் எலும்புகளைச் சேமித்துப் புதைத்து அதன் மீது ஒரு விசித்திரமான கட்டடம் கட்டி அதன் மீது,
“காலனைக் கட்டிய கடோரசித் தப்ரபு
இவர் பெயர் என்றும் நிலவுக எங்கும்”
எனச் சாசனம் எழுதி வைத்தனர்.
கடோர சித்தனது சந்ததியார் ஆட்சி செய்து வந்த வரையும் ஜனங்கள் கடோரசித்தனது ஆற்றலையுஞ் செல்வத்தையும் புகழ்ந்தார்கள். அவனது குற்றங்களை வெளியிட அஞ்சினர்கள். புலவர்கள் அவனை “மகாயூகி” எனப்பண் பாடினர்கள். அரசர்கள் அவனைப் ‘பூலோக தனதன்’ எனக் கொண்டாடினர்கள். ஆனல், அவனுடைய சந்ததிகள் அற்ற பிறகு கடோரசித்தனது கொடுஞ் செயல்கள் இவை; அவன் நரகத்தில் இன்ன இன்ன வேதனைப் படுகின்றான் என்று ஜனங்கள் பலவாறு பேச ஆரம்பித்தார்கள். திரிகால ஞானமுள்ள ஒரு பெரியவர் மூலமாக கடோரசித்தன் நரகிற்படும் வேதனை இத்தன்மைத்து என உலகினருக்குத் தெரிய வந்தது. அது பின் வருமாறு.
நரகங்களில் ஒன்று இருள்சூழ் நரகம். அதில் ஒரு பாகத்தில் ஒரு எரிமலை இருக்கின்றது. அங்கே தனியாகக் கடோரசித்தப் பேய் ஓயா வேலை செய்து வருகின்றதாம். பாட்டுப் பாடிக்கொண்டே அந்த மலை உச்சிக்கு அடிவாரத்தினின்று, உருண்ட ஒரு பெரிய கல்லை உருட்டிச் செல்கின்றது. உச்சியில் சேருஞ் சமயத்து அக்கல் உருண்டு கீழே விழுந்து விடுகிறது. பின்னர், அந்தக்கல்லை உச்சிக்குக் கொண்டு போகின்றது; மறுபடியும் அக்கல் கீழே உருண்டு விழுகிறது: அக்கல்லை இப்படி உச்சிக்கு ஏற்றுவதும், அது உருண்டு உச்சியினின்று கீழே விழுவதும், மறுபடியும் உச்சிக்கு அக்கல்லைக் கொண்டு போவதும் தான் அப்பேய்க்கு வேலையாம். என்றைக்கு அந்தக்கல் மலை உச்சியில் நிலைத்து நிற்குமோ அன்றுதான் நரக தண்டனை முடிவு பெறுமாம். கடோரசித்தப் பேய் அத்துன்பத்திற் சிறிதேனும் கவலை யடையாமற் பாடிக்கொண்டே வேலை செய்து கொண்டிருக்கும் போது நரகலோக காட்சிகளைக் காண நாரத முனிவர் ஒருமுறை சென்றனர். பலவித தண்டனைகளில் உயிர்கள் படும் பாடுகளைக் கண்டனர். ஈற்றிற் கடோரசித்தப் பேய் பாடும் பாட்டு இவர் காதிற் கேட்டது. இஃதென்ன! விந்தையிலும் விந்தை! ஆனந்தமான பாடல் இவ்விருள்குழ், நரகிடையே கேட்கின்றதே என ஆச்சரியப்பட்டுக் கடோர சித்தப்பேய் பாடிக்கொண்டு வேலை செய்யும் இடத்துக்குச் சென்றனர். அப்போது அந்தப்பேய்.
1. அறிவுக்கே ஆக்கமென் றுருளாய் கல்லே!
அறிவிலார்க் கேக்கமென் றுருளாய் கல்லே!
2. புத்திக்கே யோகமென் றுருளாய் கல்லே!
புத்திக்கே போகமென் றுருளாய் கல்லே!
3. உள்ளதைக் கற்கவே உருளாய் கல்லே!
உச்சியில் நிற்கவே உருளாய் கல்லே!
4. என்றுமே இன்பமென் றுருளாய் கல்லே!
எங்குமே இன்பமென் றுருளாய் கல்லே!
எனப் பாடிக்கொண்டிருந்தது. இங்ஙனம் பாடுவதையும் கல் உருண்டு கீழே விழுவதையும் மறுபடியும் பாடிக் கொண்டே கல்லை உச்சிக்குக் கொண்டு போவதையுங் கண்ட நாரத முரிவர் ஆச்சரியப்பட்டு “யாரப்பா நீ! மிக இனிய குரலுடன் பாடி இவ்விருண்ட நரகிடை இன்பந் தருகின்றாய்?” என வினவினர். அதற்கு அப்பேய் “பூலோகத்தில் நான் வாழ்ந்தபோது எனக்குக் கடோரசித்தன் என்று பெயர். இவ்விருள் நிறைந்த நரகிடை வந்தும் பூவுலகிலிருந்த என் புத்தியைக் கைவிடாது, துன்பமே இன்பம் எனப்பாராட்டி வருகின்றேன். இந்நரகிடை என்னை விசாரணை செய்த தருமராஜர் எனக்கு “ஓயா வேலை” என்னும் பெரிய தணடனையை விதித்தனர். வேலை இன்பம் பயக்கும். என்று அவர் அறியார் போலும். பூவுலகில் தண்டனை யடைந்தோர் விலங்கு பூண்டிருந்தும் சிறைச்சாலையில் வேலை செய்யும்போது பாடிக் கொண்டு காலங் கழிப்பதை எங்கள் தருமராஜா பார்த்ததில்லை போலும்” என்க் கூறி நகைத்தது. அதற்கு நாரதர் “பூலோகத்திற் சிறையுற்றோர் பாடுகிறார்கள் என்றாயே, ஒரு காலத்தில் தமது தண்டனை முடிவு பெறும் என்னும் உணர்ச்சி அவர்களுக்கு உள்ளபடியால் அவ்வேலை அவர்களுக்கு இன்பமாகத் தோன்றி அவ்ர்கள் பாடுகிறார்கள். உனக்குத்தான் முடிவுபெறாத வேலையாயிற்றே! உனக்கு எப்படி இன்பம் உண்டாகும்?” என்றனர். அதற்கு “இந்தக்கல் உச்சியில் சேர்ந்து நிற்கும் என எனக்கும் ஒரு உணர்ச்சி இருக்கிறது. உச்சியில் சேர்ந்ததும் உலவா இன்பம் எனக்குக் கிட்டுமல்லவா?” என்றது அந்தப்பேய்.உச்சியில் சேர்ந்து நிற்காவிட்டால் உன் கதி என்ன என வினவினர் நாரதர். அச்சமயம் உச்சியைச் சமீபித்த அந்தக் கல்லும் ‘கடகடகட’ என உருண்டு வீழ்ந்தது. நாரதர் கூறியதைக் கேட்டும் இந்தக்கல் கீழே விழுந்ததைக் கண்டும் சற்றும் மனஞ் சலியாது கடோரசித்தப் பேய் “போங்கானும், யோசனையில்லாதவரே! உச்சியிற் சேரா விட்டால், என்ன கெட்டுப் போயிற்று. ஒன்றுங் கெட்டுப் போகவில்லை. ஒரு காலத்தில் உச்சியில் சேரும் இக்கல், என்னும் ஓயா உணர்ச்சியே ஓயா இன்பமாம். இதை நீர் அறிந்திலீர் போலும்” எனக் கூறிக் கீழே விழுந்த கல்லை மேலே உருட்டிக் கொண்டே நகைத்தது.
முற்றிற்று