காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்/திருமலைராயன் பட்டினத்தே கூறிய செய்யுட்கள்

2. திருமலைராயன் பட்டினத்தே
கூறிய செய்யுட்கள்

[இந்தப் பகுதியில், திருமலைராயனைக் காணச் சென்ற புலவர் பெருமான் பலருடனும் வாதிட்டுக் கூறிய செய்யுள்களும், அவனைப் புகழ்ந்து கூறியவையும், முடிவில் மனங்கொதித்து மண்மாரி பெய்யப் பாடியவையும் எல்லாம் காணப்பெறும்.

காளமேகம் திருமலைராயனைக் கண்டு பாடிப் பரிசில் பெற்று வரவே விரும்பினார். எனினும், சூழ்நிலை எப்படி எப்படியோ மாறியது. அவரை எப்படியாவது தலைகவிழச் செய்ய வேண்டும் என்று ஒரு புலவர் கூட்டமே முற்பட்டது. தம் கவி வன்மையினாலே அவர்களை வென்று சிறப்பு எய்தினார் காளமேகம்.]

கூட்டுச் சரக்கு எது?

'அதி மதுரக் கவிராயர் பராக்' என்று கூறியபடி கட்டியத்துடன் செல்லும் புலவரை நோக்கி, அவரை ஏளனஞ் செய்து கூறியது இச்செய்யுள். "பிற சரக்குகளோடு கூட்டினாலன்றிப் பயன்படுவதல்லவே அதிமதுரம்! - எதனோடு கூடியதால் உமக்கிந்தச் சிறப்பும் செல்வாக்கும் ஏற்பட்டது?" என வினவுகிறார் கவிஞர். இதனால் திருமலைராயனின் தயவினாலேயே அவருக்கு அந்தத் தகுதி உண்டானதே அல்லாமல், உண்மையாக அவர் அத்தகுதிக்கு உரியவரல்லர் எனப் பழித்ததும் ஆகும்.

அதிமதுரமென்றே அகில மறியத்
துதிமதுர மாயெடுத்துச் சொல்லும்-புதுமையென்ன
காட்டுச் சரக்குலகிற் காரமில் லாச்சரக்கு
கூட்டுச் சரக்கதனைக் கூறு. (3)

அகிலம் அறிய அதிமதுரம் என்றே துதி மதுரமாய் எடுத்துச் சொல்லும் புதுமை என்ன? - உலகத்தார் எல்லாரும் அறியும்படியாக அதிமதுரம் என்ற போற்றுதலை இனிதாக எடுத்துக் கூறுகின்ற இந்தப் புதுமைதான் என்னவோ? காட்டுச்சரக்கு, உலகிற் காரமில்லாச் சரக்கு, கூட்டுச் சரக்கு, அதனைக் கூறு - அதிமதுரம் என்பது ஒரு பகட்டான சரக்கு, இந்த உலகத்திலே காரம் கொஞ்சமும் இல்லாத சரக்கும் அது. (அதற்கு இத்துணைச் சிறப்பு இங்கே என்றால்) அதனைத் தருமாறு அதனுடன் சேர்த்த சரக்குதான் யாதோ? அதனை எமக்குக் கூறுவீராக.

காட்டுச்சரக்கு காட்டிலிருந்து கிடைக்கும் சரக்கும் ஆம். காரம் - தனிக்குணம், அதாவது பயன்படும் தன்மை 'தற்புகழ்ச்சி வேண்டாமை' புலவர்தம் இயல்பு. அதற்கு மாறுபட்டது அதிமதுரத்தின் செயல்; அதனால் புதுமை என்றனர். 'கூட்டுச் சரக்கு' என்றது, திருமலைராயனின் அரசவைப் புலவர் குழுவின் தலைவர் என்பதனைச் சுட்டியதாம்.

காளமேகம் யானே!

அதிமதுரக் கவியும் பிறரும் காளமேகத்தின் கவித்துடுக்கைக் கண்டு ஆத்திரம் கொண்டனர். நீவிர் யாவரோ?' என அவர்கள் கேட்கத் தம்மை இவ்வாறு அவர்கட்கு அறிமுகப்படுத்துகிறார் கவிஞர். இது, மன்னவனின் அவையிலே நிகழ்ந்தது ஆகலாம்.

தூதஞ்சு நாழிகையி லாறுநா ழிகைதனிற்
        சொற்சந்த மாலை சொல்லத்
துகளிலா வந்தாதி யேழுநா ழிகைதனிற்
        றொகைபட விரித்து ரைக்கப்
பாதஞ்செய் மடல்கோவை பத்துநா ழிகைதனிற்
        பரணி யொரு நாண்முழுவதும்

பாரகா வியமெலா மோரிரு தினத்திலே
       பகரக்கொ டிகட்டி னேன்
சீதஞ்செ யுந்திங்கண் மரபினா னீடுபுகழ்
       செய்யதிரு மலரா யன்முன்
சீறுமா றென்றுமிகு தாறுமாறுகள்செய்
       திருட்டுக் கவிப்புலவ ரைக்
காதங் கறுத்துச் சவுக்கிட் டடித்துக்
       கதுப்பிற் புடைத்து வெற்றிக்
கல்லணையி னொடுகொடிய கடிவாள மிட்டேறு
       கவிகாள மேகம் நானே. (4)

 தூது அஞ்சு நாழிகைகளில் சொற்சந்த மாலை ஆறு நாழிகைதனில் சொல்ல-தூது என்னும் வகைப் பிரபந்தத்தை ஐந்து நாழிகைகட்கு உள்ளாகவும், சொல்லப்படும் சந்தமாலை என்பதனை ஆறு நாழிகைகட்கு உள்ளாகவும் சொல்லவும்;

துகள் இலா அந்தாதி ஏழு நாழிகைதனில் தொகைபட விரித்து உரைக்க - குற்றமற்ற அந்தாதி வகைகளை ஏழு நாழிகைப் பொழுதிலே, அவை தொகைப்பட்டு வருமாறு விரிவாக உரைக்கவும்;

பாதம்செய் மடல் கோவை பத்து நாழிகைதனில் பரணி ஒரு நாள் முழுவதும், பார காவியம் எல்லாம் ஒரிரு தினத்திலே பகர - பகுதிப்படச் செய்வனவான மடல் கோவை ஆகியனவற்றைப் பத்து நாழிகைகட்குள்ளாகவும், பரணியை ஒரு நாள் முழுவதற்குள்ளாகவும், பெரிய காவியங்களை எல்லாம் ஒன்றிரண்டு நாட்களுக்குள்ளாகவும் சொல்வதற்கும்;

கொடி கட்டினேன் விருதுக்கொடி கட்டி வந்துள்ளேன் யான்.

சீதஞ்செய் திங்கள் - மரபினான் நீடுபுகழ்திருமலைராயன் முன் - குளிர்ச்சி செய்யும் சந்திரனின் மரபினனும், நெடிதான புகழினை உடையோனும், செங்கோன்மையாளனுமான திருமலை ராயன் என்னும் இம்மன்னவனின் முன்பாக, சீறுமாறு என்று மிகு தாறுமாறுகள் செய் திருட்டுக்கவிப் புலவரை - சீற்றமென்றும் மாற்றம் என்றும் மிகுதியாகத் தாறுமாறான செயல்களைச் செய்து கொண்டிருக்கின்ற திருட்டுத்தனம் உடைய கவிராயரான புலவர்களாவோரை; காதங்கு அறுத்துச் சவுக்கிட்டு அடித்துக் கதுப்பிற்புடைத்து வெற்றிக் கல்லணையினொடு கொடிய கடிவாளம் இட்டு ஏறும் - இவ்விடத்தே கர்துகளை அறுத்தும், சவுக்கினாலே அடித்தும், கன்னங்களிற் புடைத்தும், என் வெற்றியாகிய கல்லான சேணத்துடனே, கொடிய கடிவாளத்தை இட்டும், அவர்கள் மீது ஏறிச் செலுத்தும்; கவி காளமேகம் நானே - கவிஞனாகிய காளமேகம் என்பவன் நானேதான்.

கவி பாடுதலிலே தமக்குள்ள பேராற்றலைக் கூறி, மன்னனின் பெருமையைச் சொல்லி, புலவர்களின் தவறான போக்கை இடித்துரைத்து, அவர்களை வெற்றிகொண்டு அவமானப்படுத்த வந்திருக்கும் கவி காளமேகம் தானே என்றும் கூறுகிறார் கவிஞர்.

தூது முதலியவை சிறு பிரபந்த வகையைச் சார்ந்த நூல்கள். நீடு புகழ் - நெடிது பரந்த புகழ் செய்ய செம்மை வாய்ந்த, செங்கோன்மை சிறந்தது, சீறுமாறென்று தாறுமாறுகள் செய்தல். - சீற்றங்கொள்ளல் என்றும், மாறுபட்டு உரைத்தல் என்றும் புலவர்க்கு மாறுபட்ட செயல்களைச் செய்தல், 'குதிரையேறி நடத்துவேன்' என்றது, அவமானப் படச் செய்வேன் என்றதாம்.

மேகம் புறப்பட்டது

இதுவும் மேற்பாட்டினைப் போன்றதே. தம்மைக் கவிஞர் தண்டிகைப் புலவர்கட்கு அறிமுகப்படுத்துகின்றார்.

கழியுந் தியகட லுப்பென்று நன்னூற் கடலின்மொண்டு
வழியும் பொதிய வரையினிற் கால்வைத்த வன்கவிதை
மொழியும் புலவர் மனத்தே யிடித்து முழங்கி மின்னிப்
பொழியும் படிக்குக் கவிகாள மேகம் புறப்பட்டதே. (5)

கடல் கழியுந்திய உப்பு என்று - கடலானது கழியிடத்தே கொண்டு தள்ளிய உப்பு என்னுமாறு போல, நன்னூற் கடலின் மொண்டு - நல்ல நூற்களாகிய கடலிடத்தே முகந்து கொண்டு, வழியும் பொதியவரையினிற் கால் வைத்து அருவிகள் வழியும் பொதிய மலையிடத்தே காலிட்டுப் பெய்து, வன் கவிதை பொழியும் புலவர் மனத்தே இடித்து முழங்கி மின்னிப் பொழியும் படிக்கு - வன்மையான போலிக்கவிதைகளைச் சொல்லித் திரிகின்ற புலவர்களின் உள்ளத்தே அடித்தும் முழக்கியும் மின்னலிட்டும் பெய்து நிறைப்பதன் பொருட்டாக, கவிகாளமேகம் புறப்பட்டதே - உண்மைக்கவியாகிய காளமேகம் என்பது இப்போது புறப்பட்டிருக்கிறது.

கால் வைத்தால் - காலிட்டுப் பெய்தல். பொதியத்திலே கால் வைத்த பின் காளமேகமாகி அது எங்கும் மழைபொழியப் புறப்பட்டதென்க. இதனால் பொதியத்தின் சிறப்பும் புலப்படும். காளமேகத்தின் சிறப்பும் புலப்படும். காளமேகம் - கார்மேகம். வன் கவிதை - பொருள் - இனிமையற்ற வறட்டுக் கவிதை. இடித்தல் - இடித்துக் கூறல். முழங்கல் - முழக்கம் செய்தல். மின்னல் - ஒளிபரப்புதல். போலிப் புலவர்களின் வறண்ட உள்ளங்களிலே கவிமழை பொழிந்து வளப்படுத்தக் கார்மேகம் புறப்பட்டது என்கிறார் கவி. இதனால், தம் ஆற்றலையும் அதிமதுரம் முதலியோரின் போலித்தன்மையையும் காட்டினர்.

திருமலைராயனின் சிறப்பு

தமிழ் நாவலர் சரிதை, இச் செய்யுளைக் காளமேகம் பாடியதென்று காட்டும். மூன்று நான்காவது அடிகளிற் சில மாறுதல்களுடன் இதனைச் சொக்கநாதப் புலவர் பாடியதாகவும், சாளுவக் கோப்பையன் புதல்வனான திப்பையராயன் என்பவனைக் குறித்ததாகவும் சிலர் கொள்வார்கள். காளமேகம் செய்ததாகவே ஏற்றுக்கொண்டு நாம் பொருளைக் காண்போம்.

இந்திரன் கலையா யென்மருங் கிருந்தான்
        அக்கினி யுதரம்விட் டகலான்
எமனெனைக் கருதா னரனெனக் கருதி
        நிருதிவந் தென்னையென் செய்வான்
அந்தமாம் வருண னிருகண்விட் டகலான்
       அகத்துறு மக்களும் யானும்
அனிலம தாகு மமுதினைக் கொள்வோம்
       யாரெனை யுலகினி லொப்பார்
சந்தத மிந்த வரிசையைப் பெற்றுத்
       தரித்திர ராசனை வணங்கித்
தலைசெயு மென்னை நிலைசெய்கல் யாணிச்
       சாளுவத் திருமலை ராயன்
மந்தர புயனாங் கோப்பய னுதவு
       மகிபதி விதரண ராமன்
வாக்கினாற் குபேர னாக்கினால் அவனே
       மாசிலா வீசனா வானே. (6)

இந்திரன் கலையாய் என் மருங்கு இருந்தான் - ஆயிரங் கண்ணனான இந்திரன் ஆடையாக உருவெடுத்து என்இடையிலே அமைத்திருந்தான் (அதாவது, உடுத்துள்ள உடையிலே ஒoராயிரம் பொத்தல்கள்), அக்கினி உதரம்விட்டு அகலான் - நெருப்புக் கடவுளான அக்கினியோ என் வயிற்றைவிட்டு அகலாதேயே நிலைத்திருக்கின்றான் (அதாவது, வயிற்றிடத்தே பசித்தீ அகலாது நிலைபெற்றிருக்கிறது);

அரன் எனக் கருதி எமன் எனைக் கருதான் - சிவபெருமானே எனநினைத்து எமனும் என்னை நினைக்கமாட்டான் (பிச்சை ஏற்று உண்ணலால், பிட்சாடன மூர்த்தியாகிய சிவன் என்று எமன் நினைத்து என் உயிரைக் கவர்தற்கு நினையாதே இருக்கின்றான்);

நிருதி வந்து என்னை என் செய்வான் - காற்று வந்து மோதினாலும் என்னை என்ன செய்துவிடுவான் (உடல் மிகவும் மெலிந்துபோயின தன்மையை இப்படிக் குறித்தார்: காற்று மோதி ஏதும் செய்ய வியலாது என்றதனால்);

இந்தம் ஆம் வருணன் என் இருகண் விட்டு அகலான் - இறுதியான வருணன் என் இரு கண்களையும் விட்டு ஒரு போதுமே அகலாதிருக்கின்றான் (துயரத்தால் கண்கள் சதா நீர் சொரிகின்றன);

அகத்துறு மக்களும் யானும் அனிலமது ஆகும் அமுதினைக் கொள்வோம்-என் வீட்டிலே தங்கியிருக்கும் என் மக்களும் யானும் காற்று ஆகிய அமுதம் ஒன்றனையே பசிக்கு உணவாக உட் கொள்வோம் ஆயினோம்; யார் எனை உலகினில் ஒப்பார் - இத்தகைய, நிலையிருக்கும் எனக்கு உலகினில் ஒப்பாவார்தாம் யாவரோ?

சந்ததம் இந்த வரிசையைப் பெற்றுத் தரித்திர ராசனை வணங்கித் தலைசெயும் என்னை - இத்தகைய சிறப்பினையே எந்நாளும் பெற்றுத் தரித்திரம் என்னும் அரசனை வணங்கிப் பணிந்து வாழும் என்னை;

நிலைசெய் கல்யாணிச் சாளுவத் திருமலைராயன் - நிலை பெற்ற கல்யாண குணங்களையுடைய சாளுவத் திருமலைராயன் என்பவன், மந்தர புயனாம் கோப்பயன் உதவும் மகிபதி - மந்தர மலைபோன்ற புஜங்களையுடையவன்; புலவர்களுக்கு ராஜ மரியாதைகளை அளித்து உதவும் மன்னவன், விதரண ராமன்; நான்கும் தெரிந்த ராமனைப் போன்று சிறந்தவன்.

வாக்கினால் குபேரன் ஆக்கினால் - தன் ஆணையினாலே குபேர செல்வத்திற்கு உரியவனாக்கினால், மாசிலா ஈசன் அவனே ஆவான் - குற்றமற்ற கடவுள் எனக்கு அவனே ஆவான்.

இந்தச் செய்யுளை நன்றாகக் கவனிக்க வேண்டும். காளமேகப் புலவருக்குக் குழந்தைகளும் இருந்தார்கள் என்று இதனால் தெரிகிறது.

திருமலைராயனைப் புகழ்ந்தது


வீமனென வலிமிகுந்த திருமலைரா
        யன்கீர்த்தி வெள்ளம் பொங்கத்
தாமரையி னயனோடிச் சத்தியலோ
        கம்புகுந்தான் சங்க பாணி
பூமிதொட்டு வானமட்டும் வளர்ந்து நின்றான்
        சிவன்கைலைப் பொருப்பி லேறிச்
சோமனையும் தலைக்கணிந்து வடவரைத்தண்
         டாலாழஞ் சோதித் தானே. (7)

வீமன் என வலிமிகுந்த திருமலைராயன் - வீமசேனன் என்னும்படி ஆற்றலால் சிறப்புற்றிருக்கும் திருமலைராயன் என்பவனின், கீர்த்தி வெள்ளம் பொங்க - புகழாகிய வெள்ளமானது பொங்கி எழுந்ததாக;

தாமரையின் அயன் ஓடிச் சத்தியலோகம் புகுந்தான் - தாமரை வாசனாகிய பிரமன் அஞ்சி ஓடிச் சத்தியலோகத்திலே நுழைந்து கொண்டான்; சங்க பாணி பூமிதொட்டு வானம் மட்டும் வளர்ந்து நின்றான் - சங்கை ஏந்தியவனான திருமால் நிலமுதல் வானம் வரை மேனி வளரப்பெற்று விசுவரூபியாகி நின்றான்; சிவன் கயிலைப் பொருப்பிலேறிச் சோமனையும் தலைக்கணிந்து வடவரைத் தண்டால் ஆழம் சோதித்தானே - சிவபிரான் கயிலை மலைமேல் ஏறிக் கொண்டு சோமனையும் (சந்திரன், ஆடை) தலையில் அணிந்தவனாக, இமயமலையாகிய தண்டினாலே இமயமலையிடத்து மூங்கிலும் ஆம்) அக்கீர்த்த வெள்ளத்தின் ஆழத்தை சோதிக்கத் தொடங்கினான்.

திருமலைராயனின் புகழ்வெள்ளம் முத்தேவரையும் அஞ்சச் செய்யும் அளவிற்குச் சிறந்ததாயிருந்தது என்பது கருத்து.

திருலைராயனின் வாள்

அரசர்களை அவர்களுடைய ஆயுதங்களைப் போற்றுவதன் மூலமும் புகழ்வது மரபு. அந்த மரபின்படி திருமலைராயனின் வெற்றிவாளைக் குறித்து இவ்வாறு பாடுகிறார்.


செற்றலரை வென்ற திருமலைரா யன்கரத்தில்
வெற்றிபுரி யும்வாளே வீரவாள்-மற்றையவாள்
போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள்
ஆவா னிவாளவா ளாம். (8)

செற்றலரை வென்ற-பகைகொண்டுவந்து எதிர்த்தவர்களை வெற்றிகொண்ட, திருமலைராயன் கரத்தில் விளங்க அந்த வெற்றியைச் செயற்படுத்தும் வாள் ஒன்றே வீரவாள் என்பதற்குப் பொருந்துவதாகும்; மற்றையவாள் - வாள் என்று முடியும் பிறவெல்லாம், போவாள் வருவாள், புகுவாள், புறப்படுவாள், ஆவாள் இவாள் அவாள் என்ற சொற்கள், வாள் என முடிந்தம் எப்படி வாளைக் குறிப்பதாகாதோ, அப்படியே வாள் என வழங்கினும் பயன் அற்றவைகளாம்.

இது, திருமலைராயனின் போராற்றலைக் காட்டுகின்றது. அவன், போர்கள் பலவற்றை நடத்தி வெற்றி பெற்றவன் என்பதும் தெரிகின்றது.

தம் கவித்திறம் கூறியது

அதிமதுரக் கவிராயர் தம்முடைய கவித்திறத்தை எடுத்துக்கூறிப் பெருமை பாராட்டிக் கொண்டார். தம்முடைய கவித்திறம் அவர்க்கும் அதிகம் எனக் கவிராயர் அப்போது அதிமதுரத்திற்கு எதிரிட்டுக் கூறியது இந்தச் செய்யுள்.


இம்மென்னு முன்னே எழுநூறும் எண்ணுாறும்
அம்மென்றால் ஆயிரம்பாட்டாகாதோ-சும்மா
இருந்தா லிருந்தே னெழுந்தேனே யாமாயின்
பெருங்காள மேகம் பிளாய்! (9)

இம் என்னும் முன்னே எழுநூறும் எண்ணுறும்-இம் என்று சொல்வதற்கு முன்னே எழுநூறு எண்ணுாறு பாடல்களும் 'அம்' என்றால் ஆயிராம் பாட்டாகாதோ. 'அம்' என்று அடுத்துச் சொன்னால் அதற்குள் ஆயிரம் பாட்டுகளும் ஆகிவிடாதோ? பிளாய் - சிறுவனே! (அதிமதுரத்தை நோக்கிக் கூறியது) சும்மா இருந்தால் இருந்தேன் - சும்மா இருந்தேனாயின் இருப்பேன், எழுந்தேனே யாமாயின்பெரும் காளமேகம் - சும்மா இருந்தாலும் இருப்பேன். பாடத் தொடங்கினேனானால் பெரிய கார்மேகமாகப் பொழிவேன் (என்று அறிவாயாக)

'பிளாய்' என்ற சொல்லின் பிரயோகத்தைக் கவனிக்கவும். தம் கவிவன்மைக்கு எதிரே அதிமதுரம் சிறு குழந்தை என்று கூறியதும் ஆம்.

வால் எங்கே?

திருமலைராயன் அவையிலிருந்த சிலர் தம்மைக் கவிராயர்கள் என்று கூறிச் செருக்குடன் வீற்றிருந்தனர். அப்போது, அவர்களை ஏளனமாகச் சுட்டிப் பாடியது இச் செய்யுள்.


வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு
காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே-சாலப்
புவிராயர் போற்றும் புலவீரகா ணீவிர்
கவிராயர் என்றிருந்தக் கால். (10)

புவிராயர் சாலப் போற்றும் புலவீர்காள் - நாடாள்வோர் மிகுதியாகப் போற்றுகின்ற புலவர்களே! நீவிர் கவிராயர் என்றிருந்தக்கால் நீங்கள் கவிராயர்களாக (குரங்குத் தலைவர்களாக) இருந்தவிடத்து, வால் எங்கே-நும்முடைய வால்கள் எங்கே போயின, நீண்ட வயிறு எங்கே-நீண்ட வயிறுகள் எங்குச் சென்றன, முன் இரண்டு கால் எங்கே - முன் பாகத்தே இருக்கவேண்டிய இரண்டு கால்களும் எங்கே, உட்குழிந்த கண் எங்கே - உள்ளே குழிந்ததாயிருக்கும் கண்கள் எவ்விடத்தே போயின? (கவி - குரங்கு; வட சொல்லான 'கபி' யின் தமிழ் அமைப்பு) ('ஆகவே; நீங்கள் கவிராயர்கள் அல்லர். நீங்கள் பொய் பேசுபவர்கள்' என்று கூறி, அவர்களை நகையாடிய தாயிற்று.

குதிரை! குதிரை!!

அதிமதுரக் கவிராயர் குதிரையேறி வர அந்தக் குதிரையைப் பாடியது.


கோக்குதிரை நின்குதிரை கோவன்மது ராவொன்னார்
மாக்கு திரையெல்லா மண்குதிரை-தூக்குதிரை
தூங்கற் கரைக்குதிரை சொக்கன் குதிரைசது
ரங்கக் குதிரைகளே யாம். (11)

கோவன் மதுரா - திருக்கோவலூரானான அதிமதுரமே! நின் குதிரை கோக்குதிரை - நின் குதிரைதான் ராஜா பவனி வரும் குதிரை! ஒன்னார் மாக்குதிரை எல்லாம் மண்குதிரை - நின்னைப் பகைத்தோரின் பெரிய குதிரைகள் எல்லாம் மண் குதிரைகள்; தூ குதிரை - தூதூ அவையும் குதிரைகளா? தூங்கற் கரைக் குதிரை - ஒரு தூங்கல் குதிரைக்கும் கூட அரைவாசியே சொல்லத்தகும் குதிரைகளாக அன்றோ இருக்கின்றன, சொக்கன் குதிரை - சொக்கநாதர் குதிரையாகக் கொணர்ந்த நரிகள்தாம் அவை; சதுரங்கக் குதிரைகளே யாம் - சதுரங்க ஆட்டத்திற் பயன்படுத்தப்படும் காய்களான குதிரைகளே அவை ஆம்.

பின் ஒரு சமயம், அதிமதுரக்கவி ஏறிவந்த குதிரையைப் போற்றிக் கூறுவது இது; அவரைப் பாராட்டாமல், அவர் குதிரையைப் பாராட்டியதாகக் கொள்க. இதனால் 'போற்றத் தகுந்தது குதிரையே அல்லாமல், அதன்மேல் ஊர்ந்துவரும் நீர் அன்று' என்று அதிமதுரத்தைப் பழித்தலையும் கவிராயர் இதன் மூலமாகச் செய்கின்றனர்.

மண்மாரி பெய்க!


கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர்
காளைகளாய் நின்று கதறுமூர்-நாளையே
விண்மாரி யற்று வெளுத்து மிகக்கறுத்து
மண்மாரி பெய்கவிந்த வான். (12)

எமகண்டம் பாடி வெற்றிபெற்ற பின்னரும், காளமேகத்தைத் திருமலைராயன் அலட்சியப்படுத்த, அப்போது அவர் பாடியது இது.

கோளர் இருக்கும் ஊர் - கொலைகாரர்கள் இருக்கின்ற இவ்வூர்; கோள் கரவு கற்ற ஊர் - புறங்கூறவும் வஞ்சகம் செய்யவும் கற்றிருக்கின்ற இவ்வூர்; காளைகளாய் நின்று கதறும் ஊர் - காளைகளைப் போன்று மக்கள் கட்டுப்பாடில்லாமல் நின்று கதறிக் கொண்டிருக்கும் இவ்வூர், இதன்கண், நாளையே - நாளைக்கே இந்த வான்-இந்த வானம், விண்மாரியற்று வெளுத்து மிகக் கறுத்து வான்மழை இல்லாது போய் வெளுத்துத் தோன்றி மிகவும் சினந்து மண்மாரி பெய்க - மண்ணே மழையாகப் பெய்வதாக.

இப்படி ஊருக்கே சாபம் தந்து வசைபாடுகிறார் காளமேகம். அது அப்படியே நிகழ்ந்ததெனவும் உரைப்பர். அரசனும் அவன் அவையும் இழைத்த தவறுக்கு ஊரே பலியான செய்தி இது. ஆட்சி செய்பவன் நல்லவனாயில்லாத போது, அவனால் அந்த ஊருக்கே அழிவுவரும் என்பதை மெய்ப்பிப்பதும் இது.

அழிய வாட்டு!

'மண்மாரி பெய்தால் மட்டும் போதாது; ஊர் முற்றவுமே அழியுமாறு வாட்டுதல் வேண்டுதல்' எனவும் நினைக்கிறார் காளமேகம். 'மன்மதனை அழித்தது போல சிவனே! இந்த ஊரையும் எரித்து அழித்துவிடு' என்கிறார்.


செய்யாத செய்த திருமலைரா யன்வரையில்
அய்யா வரனே அரைநொடியில்-வெய்யதழற்
கண்மாரி யான்மதனைக் கட்டழித்தாற் போற்றியோர் மண்மாரி யாலழிய வாட்டு. (13)

அய்யா அரனே - என் அய்யனே! சிவபெருமானே! செய்யாத செய்த திருமலைராயன் வரையில் - எனக்குச் செய்யத்தகாத எல்லாம் செய்த இந்தத் திருமலைராயனுடைய ஆட்சி எல்லைக்கு உட்பட்ட நாட்டில் உள்ள, தீயோர் - தீயவர்களை, அரை நொடியில் - அரைநொடிப்போதிலேயே, வெய்ய தழற்கண் மாரியால் மதனைக் கட்டழித்தாற்போல் - வெம்மையான நெருப்புக் கண் பார்வையான மழையினாலே மன்மதனின் ஆற்றலை யெல்லாம் போக்கிச் சாம்பராக்கினாற்போல, மண் மாரியால் அழிய வாட்டு, மண்மாரியினாலே அழியும்படியாக வாட்டு வாயாக.

காட்டு - உருவ அமைப்பும் ஆம்.

திருமலைராயன் பட்டினம் இன்றும் மண் மேடிட்டதன் அடையாளங்களுடன் காணப்படுகிறது. பல இடங்களில் ராயர் காலத்துப் பொருள்கள் புதையலாக அகப்பட்டதாம். இவை இந்தக் கவி சாப விளைவென்பது சான்றோர் சொல்வது.