கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்/H. A. கிருஷ்ண பிள்ளை



7. H. A. கிருஷ்ண பிள்ளை[1]

தென்தமிழ் நாடாகிய நெல்லை நாடு மேலே நாட்டு அறிஞர் பலரைத் தமிழ்த்தொண்டராக்கிய பெருமை யுடையதாகும். இத்தாலிய தேசத்து வித்தராகிய வீரமாமுனிவரது தமிழ்ப் புலமைக்கு அடிப்படை கோலியது நெல்லை நாடு. பெருந்தமிழ்த் தொண்டராகிய போப்பையருக்குத் தமிழ் அறிவு ஊட்டியது நெல்லைநாடு. மொழிநூற் புலமையில் தலை சிறந்த கால்டுவெல் ஐயர் வாழ்ந்ததும் நெல்லே நாடே.

இங்ஙணம் பிற நாட்டு அறிஞரைத் தமிழ்ப் பணியில் உய்த்த தென்தமிழ் நாட்டில் ரெட்டியார் பட்டி என்ற சிற்றூர் ஒன்று உண்டு. அவ்வூரிலே தோன்றினார் கிருஷ்ண பிள்ளை. அவர் வேளாளர் குலத்தினர் ; வைணவ மதத்தினர். இளமையிலேயே தமிழில் உள்ள நீதி நூல்களையும், சமய நூல்களையும் அக்கால முறைப்படி அவர் நன்றாகக் கற்றார்.

அப்பொழுது நெல்லை நாட்டில் கிருஸ்தவ சங்கங்கள் கிளர்ந்து எழுந்து, சிறந்த சமயத் தொண்டு செய்து கொண்டிருந்தன. சர்ச்சு முறைச் சங்கத்தின் சார்பாகச் சார்சந்தர் என்னும் சீலர் சிறந்த பணி செய்தார். வேத விளக்கச் சங்கத்தின் சார்பாகக் கால்டுவெல் ஐயர் பெருந்தொண்டு புரிந்தார்.[2] அச்சங்கங்களின் ஆதரவில் பல ஊர்களில் பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டன.

சாயர்புரம் என்ற சிற்றூரில் போப்பையர் ஒரு கல்லூரி அமைத்துக் கண்ணும் கருத்துமாய்க் காத்துவந்தார். அவர் ஆங்கில நாட்டுக்கு இளைப்பாறச் சென்றபோது அக்கல்லூரிக்குத் தமிழ்ப் புலமைவாய்ந்த நல்லாசிரியர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கால்டுவெல் ஐயரைச் சார்ந்தது. அப்பதவிக்கு விண்ணப்பம் செய்த மூவருள் ஒருவர் கிருஷ்ண பிள்ளை. அவருக்கு அப்பொழுது வயது இருபத்தைந்து.

தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் போதிய அறிவு பெற்றிருந்தார் கிருஷ்ண பிள்ளை ; அந்நாளில் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய திருப்பாற்கடல் நாதன் கவிராயரிடம் நன்னூலை முறையாகப் பாடங் கேட்டிருந்தார்; சமய நூல்களைக் குலவித்தையாக அறிந்திருந்தார். இத்தகைய தகுதி வாய்ந்தவரைக் கால்டுவெல் ஐயர் தெரிந்தெடுத்துச் சாயர்புரக் கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்தார்.

சாயர்புரத்தில் வேலை யேற்றுத் தமிழ்ப் பணி செய்து வரும் பொழுது கிருஷ்ண பிள்ளையின் வைணவப் பற்று மெல்லத் தளர்வுற்றது. கிருஸ்து மத போதகர்கள் காட்டிய அன்பென்னும் பாசம் அவர் உள்ளத்தை இழுத்தது. அன்றியும் அவர் உற்றார் உறவினர் சிலர், கிருஸ்துமதத்தை ஏற்றுக்கொண்டு அதன் செம்மையை அடிக்கடி எடுத்துரைப்பாராயினர். அந்நிலையில் கிருஷ்ண பிள்ளை கிருஸ்தவ நூல்களைக் கற்கத் தொடங்கினார். மன்னுயிர்க்காகத் தன்னுயிரை வழங்கிய கிருஸ்து நாதரின் தியாகம் அவர் மனத்தை ஈர்த்தது. விரைவில் மனம் திரும்பி, முப்பதாம் வயதில் சென்னையிலுள்ள மயிலைத் தேவாலயத்தில் அவர் ஞானஸ்நானம் பெற்றுக் கிருஸ்து மார்க்கத்தில் சேர்ந்தார். கிருஸ்து நாதரை அருட்பெருங் கடலாகவும், அஞ்ஞானத்தை அகற்றும் மெய்ஞ்ஞானக் கதிரவனாகவும், அடியவர்க்காக அருந்துயருற்று ஆவி துறந்த கருணை வள்ளலாகவும் கருதி வழிபட்டார் கிருஷ்ண பிள்ளை.

கிருஸ்து மதச் சார்பாகவுள்ள சிறந்த நூல்களை அவர் ஆர்வத்தோடு கற்றார், ஆங்கிலத்தில், ஜான் பனியன் என்பவர் இயற்றிய பாவனாசரிதம் [3]'மோட்சப் பிரயாணம்' என்னும் பெயரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. அந்நூலின் நயந் தெரிந்த கிருஷ்ண பிள்ளை. அதைத் தழுவித் தமிழில் ஒரு காவியம் இயற்ற ஆசைப்பட்டார். அவ்வாசையின் பயனே இரக்ஷணிய யாத்திரிகம் என்னும் காவியம்.

பாவத்திற் படிந்த உயிர் கவலையுற்று வாடி, ஆன்ம ரக்ஷகராகிய கிருஸ்து நாதரது அருளால் நித்தியஜீவனைப் பெற்றுப் பேரானந்தம் அடையும் தன்மையை விரித்துரைக்கும் காவியமே இரக்ஷணிய யாத்திரிகம். எனவே, கிருஸ்து நாதரே அக்காவியத்தில் போற்றப்படும் தலைவர்.

பெருங் காவியம் என்பது தன்னிகரில்லாத் தலைவனை உடையதாய் இருத்தல் வேண்டும் என்பர் தமிழிலக்கண நூலோர். தமிழ் மொழியில் பெருங் காவியங்கள் சிலவுண்டு. கம்பராமாயணமும், சிலப்பதிகாரமும் இரு பெருங் காவியங்கள். தன்னிகரில்லாத் தலைவனாகிய இராமன் பெருமை. இராமாயணத்தில் பேசப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் தன்னிகரில்லாத் தலைவியாகிய கண்ணகியின் செம்மை போற்றப்படுகின்றது. இவ்விரண்டும் வீரகாவியம். இவ்வுலகில் நிறைந்திருந்த தீமையை வில்லின் ஆற்றலால் வென்று ஒழித்தான் இராமன். கற்பின் வன்மையால் மதுரையம்பதியில் செறிந்திருந்த தீமையைச் சுட்டெரித்தாள் கண்ணகி. இரக்ஷணிய காவியத்தின் தலைவராகிய கிருஸ்து நாதர் இம்மாநிலத்தில் நிறைந்திருந்த தீமையை மகத்தான தியாகத்தின் ஆற்றலால் துடைத்தருளினார். ஆகவே இரக்ஷணிய யாத்திரிகம் ஆத்ம தியாகத்தின் பெருமையை அறிவுறுத்தும் அருங் காவியமாகும்.

கிருஸ்து நாதரது அரும் பெருந்தியாகத்தை அறிவதன் முன்னே, இவ்வுலகில் தீமை புகுந்த தன்மையைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டுமாதலால் இரக்ஷணிய காவியம் தொடக்கத்தில் அதனை எடுத்துரைக்கின்றது. இறைவன் ஆதி மனிதனையும், அவன் மனையாளையும் படைத்து, நிலவுலகத்தில் ஒரு வளமார்ந்த சோலையில் வாழ வைத்தார். அவ் வாழ்க்கையைக் கண்டான் சாத்தன் என்னும் அழிம்பன். அவன் பாவத்தை மணந்தவன் ; பழியைப் பெற்றவன் ; ஆண்டவனது சாபத்தை அடைந்தவன்; அனைவர்க்கும் ஆபத்தை விளைவிப்பவன். அக்கொடியவன் இறைவன் படைத்த மாநிலப் பரப்பையும், ஆற்றின் அழகையும், சோலையின் செழுமையையும், கடலின் விரிவையும் கண்டு பொறாமை கொண்டான் ; பூஞ்சோலை வாசிகளை வஞ்சித்து ஆண்டவன் படைத்த உலகத்தைத் தன்வசப்படுத்தக் கருதினான் ; பாம்பின் உருவம் கொண்டு சோலையிற் புகுந்து பசப்பு மொழி பேசி இருவரையும் தன் வசப்படுத்தினான். அந்நச்சு மொழியை நம்பி இருவரும் இறைவன் இட்ட ஆணையை மீறினர் ; மீளாத் துயரத்திற்கு ஆளாயினர். பாவத்தின் பயனாகப் பயங்கர மரணம் வந்துற்றது. சீரெல்லாம் சிதைந்தது. சிறுமை வந்துற்றது. "தற்பதம் இழந்த மாந்தர் தலையிழி சிகையே யன்றோ“ என்று சீரழிந்து சிறுமையுற்ற ஆதி மாந்தரை நினைந்து இரங்கிக் கூறுகின்றார் இரக்ஷணியக் கவிஞர்.

இவ்வாறு உலகத்திற் பல்கி யெழுந்த பாவத்திற்குரிய தண்டனையைத் தாம் அடைந்து, மாந்தர் குலத்தை ஈடேற்றத் திருவுளம் கொண்டார் தேவகுமாரன் ; மனித வடிவம் கொண்டு மண்ணுலகில் பிறந்தார்; சொல்லாலும் செயலாலும் எல்லார்க்கும் நன்னெறி காட்டினார்.

மன்னுயிர் பால் வைத்த அன்பினால் மரச்சிலுவை யேறினார். கிருஸ்து நாதர். அவர் சிலுவையில் ஏறவே, விண்ணுலகில் உவகை ஏறிற்று; பேயுலகில் திகில் ஏறிற்று; ஆன்றோர் : அருள் வாக்கு நிறைவேறிற்று. அன்று முதல் சிலுவை மாபெருந் தியாகத்தின் சின்னமாயிற்று. பரலோகம் என்னும் மூத்தி நகரத்தின் நெடிய கோபுரவாசலில் கிருஸ்து நாதரது தியாகக் கொடியைக் காண்கின்றார் கவிஞர். "நீதியும் இரக்கமும் கலந்து நிலவும் திருக்கோபுர வாசலில், கிருஸ்து நாதரது குருதி தேய்ந்த சிலுவைக்கொடி, மாந்தர் எல்லோரையும் இறைவனிடம் பரிந்து அழைக்கும் பான்மைபோல் இளங்காற்றில் அசைந்து ஆடும்“ என்று கவிஞர் உருக்கமாகக் கூறுகின்றார்.

அருள் வள்ளலாகிய கிருஸ்து நாதர் காட்டிய பொறுமையும் கருணையும் வாய்ந்தவரே மெய்க் கிருஸ்தவர் ஆவர் என்பது கிருஷ்ண பிள்ளையின் கருத்து. கிருஸ்தவப் பண்பு இந்நிலவுலகில் நிலை பெறல் வேண்டும் என்பது அவர் ஆசை. "எப்பொழுதும் மெய்யே பேசவேண்டும் : பொய் பேசலாகாது“ என்பது கிருஸ்து நாதர் அருளிய பத்துக் கட்டளைகளுள் ஒன்று. அதற்கு மாறாக "நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடும்“ தீயோரை நோக்கிப் பரிவு கூர்ந்து பாடுகின்றார் இரக்ஷணியக் கவிஞர்.

"அந்நியரையும் உன்னைப்போல் நேசிப்பாயாக என்னும் திருவாக்கை மறந்து, நெஞ்சாரப் பிறரை வஞ்சித்து வாழும் மதிகெட்ட மாந்தரே! மனம், மொழி, மெய் என்னும் மூன்றின் தன்மையையும் முற்றும் அறியவல்ல மகாதேவனை ஒரு நாளும் வஞ்சித்தல் இயலாது. ஆதலால் மனத்தில் நிகழும் அழுக்காறு முதலிய குற்றங்களையும், வாக்கில் நிகழும் பொய் முதலிய தீமைகளையும், செய்கையில் நிகழும் கொலை முதலாய கொடுமைகளையும் நீக்கி இறைவன் திருவருளை அடைந்து வாழ்வீராக“ என்று வேண்டுகின்றார் கவிஞர்.

இன்னோரன்ன உண்மைகளை உருக்கமாகப் பாடி மாந்தரையெல்லாம் நல்வழிப்படுத்த முயன்ற கிருஷ்ண பிள்ளை, எல்லாம் வல்ல இறைவனை ஊன்கரைந்து, உயிர் கரைந்து பாடிய பாடல்கள் இரக்ஷணிய மனோகரம் என்னும் நூலிற் காணப்படும். சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் பாடிய திருப் பாசுரங்களின் மணம் இரக்ஷணிய மனோகரத்திற் கமழ்கின்றது. இறைவனது பேரின்ப வெள்ளம் பொங்கிப் பெருகிப் பூரணமாய் நிற்கும் நிலையினைக் கண்டு அதனைப் பருகுமாறு பரிந்தழைக்கும் தாயுமானவர் முதலிய ஆன்றோர் பாடல்களில் உள்ள ஆர்வம் இரக்ஷணியப் பாடல்களிலும் அமைந்து நம் உள்ளத்தை அள்ளுகின்றது.[4]

இங்ஙனம் கிருஸ்து நாதர் பெருமையை விளக்கும் பெருங் காவியமும், அவரைப் போற்றி மனமுருகுவதற்கேற்ற திருப் பாசுரங்களும் இயற்றித் தமிழ் நாட்டார்க்குத் தொண்டு செய்த கவிஞர் எழுபத்து மூன்றாம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார். அவரது நற் குடியிற் பிறந்தவர்கள் பாளையங்கோட்டையில் இன்றும் சிறந்து வாழ்கின்றார்கள்.


குறிப்புகள்

  1. Henry Alfred Krishna Pillai.

  2. Bishop Sargent of the Church Mission Society (C. M. S.). Bishop Caldwell of the Society for the Propagation of the Gospel (S. P. G.)
  3. The Pilgrim's Progress by John Bunyan.
  4. "தந்தை யாகி உலகனைத்தும்
    தந்து மதுக்கள். தமைப்புரக்க
    மைந்த னாகிப் புனிதாவி
    வடிவாய் ஞான வரமருளிப்
    பந்த மறநின் றிலங்குதிரி யேக
    பரமன் பதாம்புயத்தை
    சிந்தையாரத் தொழு தேத்திச்
    சேர வாரும் செகத்தீரே.“
    -இரக்ஷணிய நவநீதப் படலம், ?