கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்/அரசியல் அமைப்புக்கள்

2. அரசியல் அமைப்புக்கள்

தலைநகர்த் தோற்றம்

ஒரு நாட்டின் அரசியல் முறையையும், மக்கள் அதில் ஈடுபட்டுள்ள நிலையையும் அந்நாடு அமைந்துள்ள இயற்கை அமைப்பினின்று அறுதியிட்டு உறுதியாகக் கூறலாம். இவ்விதிக்குப் பழங்கால மக்களான கிரேக்கர்கள் விலக்கானவர்களல்லர். கிரீஸ் தேசம் பெரிதும் மலைகள் நிறைந்த பிரதேசமாகும். அம்மலைகளில் அன்னாசி மரங்கள், ஒக்ஸ் மரங்கள் அடர்ந்திருந்தன. சரிவுகள் யாவும் அடர்ந்த காடுகள் நிறைந்தனவாகக் காணப்பட்டன. மலைகளுக்கிடையில் பெரிய பெரிய செழிப்பான பள்ளத்தாக்குகளும் இருந்தன. இந்தப் பள்ளத்தாக்குகளில்தான் வடதிசையினின்றும் வந்த கிரேக்கர்கள் முதல் வந்து தங்கினர். அதன்பின் சில நூற்றாண்டுகள்வரை மலர்களும் கனிகளும் நிறைந்த கிராமங்களில் வாழ்ந்து வரலாயினர். இவர்கள் வாழ்ந்த கிராமங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றிச் சேய்மையில் இருந்தன. இவர்கள் ஒருவர்க்கொருவர் சேய்மையில் உறைந்தார்களானாலும், சமயம், சடங்குகள், வாணிபத்தொடர்புகள், அரசியல் தொடர்புகளில் எதிரிகளை எதிர்க்கும் காலங்கள் ஆகிய நேரங்களில் மட்டும் யாவரும் ஒன்று பட்டுப் பொது முறையில் செயற்பாலனவற்றைச் செய்து கொண்டனர்.

“பொன்னுந் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து

அருவிலை நன்கலம் அமைக்கும் கால
ஒருவழித் தோன்றியாங்கு என்றும்
சான்றோர் சான்றோர் பாலர் ஆப”

அஃதாவது பொன்னும், பவழமும், முத்தும், மணியும் தாம் தாம் பிறந்த இடம் வெவ்வேறாயினும் மாலையாகச் செய்யும் இடத்து, அவை ஒன்று படுவது போல அறிஞர் பிறப்பகம் வெவ்வேறாயினும் சமயம் வந்தபோது ஒன்றாவர் அன்றே ! கிரேக்கர் சிறு சிறு இனத்தவரை ஆதரித்து அவர் கட்கு ஆவன செய்யும் உள்ளுர்த் தலைவனைப் போன்று ஒரு சிலர் கூடித் தம் அரசியல் முறைகளை அமைதியுறக் கண்காணித்தற்கு ஒரு தலைநகரை மலையின் உச்சியிலே நிறுவிக்கொண்டனர். இந்தத் தலைநகரே பாலிஸ் (Polis) என்று பெயர் பெற்றது. இதன் ஆதரவில் வாழ்ந்த மக்களின் தொகுப்பும் நகரும் சிடி ஸ்டேட் (City State) என்று அழைக்கப்பட்டன.

உள்ளுர்க் கலகம் ஏற்பட்ட காரணம் (Civil War)

உலகிலேயே இந்த சிடி ஸ்டேட் முறை மிகவும் புதுமை வாய்ந்தது. இம்முறை இக்காலத்து மாகாணப் பிரிவு போன்றது எனலாம். பெரிதும் அரசாங்கங்களில் வாழ்ந்த மக்கள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அடங்கி வாழவேண்டிய கடமையுடையவராய்க் காணப்பட்டனர். ஆனால் கிரீஸ் நகர சிடி ஸ்டேட் மக்கள், தொகையால் சிறியவர்களாக இருந்தார்களானாலும், தம் அரசனின் கொள்ளைகளையும் கொடுமைகளையும் அறிந்தால், அவற்றைப் பொறுக்க இயலாதவர்களாய்க் கண்டிக்கும் பொறுப்  பும் கடமையும் வாய்ந்தவர்களாய் இருந்தனர். தவறு கண்ட விடத்துத் திருத்தம் செய்வது நன்மை தரத்தக்க தன்றோ  ?

இவர்கள் நாடு அரசப்பண்பின் அமைதி குலைவதாயிற்று. தற்பெருமை இழந்து தவிக்கலாயிற்று. ஒவ்வொரு சிடி ஸ்டேட்டும், அரசன் தன் மதிப்பை இழந்ததனால்தான், தானே தன் அரசியற் செயல்கள் நடத்தும் பொறுப்பை மேற்கொள்ளலாயிற்று. இதுவரை சிடி ஸ்டேட் மக்கள் பொது முறையில் சுதந்திர உணர்ச்சியோடு வாழ்ந்து வந்தவர்களாய் இருந்தது பற்றித் தம்தம் நாட்டுப் பற்றில் தனி சிறந்தவர்களாய் விளங்கினர். இவர்கள் சட்டத்திற்கு மாறாக நடவாமல், அதற்கு அடங்கியும் நடந்து வந்தாலும், தங்கள் தலைநகரான பாலிஸை மிகவும் நேசிக்கத் தொடங்கினாலும் தலைமை நகரினின்றும் தமக்குத் தடையுத்தரவு வருவதை மட்டும் தம் இறப்பினும் இன்னாததாக எண்ணினர். இதனால் உள்ளூர்க் கலகம் உளதாயிற்று. மேலும் ஒற்றுமை குலைக்கப்பட்டது. இவ்வாறான, குழப்பத்தால் புதியதும், இதுகாறும் இருந்ததினும், சிறந்ததுமான ஆட்சி முறையொன்றை நிலைநாட்ட வாய்ப்பு உண்டாயிற்று. ‘கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்’ என்பது அனுபவமொழி அன்றோ ! நாட்டுப் பற்று ஏற்பட்டதும் தம் சிடி ஸ்டேட் முறைக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுவதாயின், அதன் பொருட்டுத் தம் உயிரையும்விட மக்கள் முன் நின்றனர். என்னே அவர்கட்கு நாட்டின் மீது இருந்த பற்று ! இஃதன்றோ உண்மை  நாட்டுப்பற்று ! கி. மு. ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்குள் சிடி ஸ்டேட்டுகள் கிரீஸ் நகரில் மட்டும் தோன்றியதோடன்றி ஏகியன் தீவுகளிலும் (Aegean Islands) மேற்குக் கரையிலும், ஏஷிய மைனரிலும் (Asia Minor) தோன்றி நிலவலாயின. இதனால் சிடி ஸ்டேட்டுகள் பெருகினாற்போல், மக்கள்தொகையும் வளரலாயிற்று. கிரேக்கர்கள் எங்கு எங்குச் சென்றார்களோ, அங்கு அங்கெல்லாம் சிடி ஸ்டேட்டுகள், நிறுவப்பட்டன. அவ்வாறு தோன்றிய இடங்கள் சிசிலி (Sicily), இத்தாலி (Italy) முதலான பல இடங்களாகும். ஆனால், இவ்வாறு இவ்விடங்களில் தோன்றிய சிடி ஸ்டேட்டுகள் யாவும் முதல் முதல் தோன்றிய சிடி ஸ்டேட்டுகளுக்குக் கீழ்ப்பட்டவையல்ல. அவைத் தனிச் சுதந்தரம் பெற்றவையாகும். இவைகள் தமக்குள் தம் அரசியல் முறைகளைக் கண்காணித்து வந்தன.

இவ்வாறு பல்வேறு இடங்களில் பல்வேறு சிடி ஸ்டேட்டுகள் தோன்றிய காரணங்களால் அரசியல் முறையில் ஒரு நல்ல மாறுதல் ஏற்பட்டது. இருந்தாலும் உடனே அரசனுக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டுமென்ற எண்ணங் கொள்ளாமல், தம் ஆட்சியைத் தாமே நடத்தி வந்தனர். அவ்வாறு தம் ஆட்சியைத்தாமே புரிந்து வந்த மக்கள் பெரும்பாலோர் நிலபுலனுடைய உழவர்களே யாவர். இவர்கள் கையிலேதான் அரசியல் முறை அமைந்திருந்தது. வேள் ஆளர் என்பவர் பண்ணையை (நிலத்தை) ஆள்பவர்தாம். ஏழை மக்களுக்கு இவ்வரசியல் முறையில் இடம் இல்லாமற் போகவில்லை. ஆனால், இவர்கள் பெற்று வந்த உரிமை சிறிதே ஆகும். இவ்வாறு மக்களால் அமைக்கப்பட்ட அரசியல் பெருவாரியான மக்களால் தோற்றுவிக்கப்பட்ட குடியாட்சியாகும். அஃதாவது இது காறும் ஒருவர் தலைவராக இருந்து அரசன் என்னும் பெயரால் ஆண்டு வந்த ஆட்சி முறைக்கு அரசியலில் மாறும் நிலை ஏற்பட்டது. கோனாட்சி நீங்கிக் குடியாட்சி நிலைக்கு நகர் வந்துற்ற காரணத்தால் மக்கள் எல்லாத்துறையிலும், சம உரிமையைக்கேட்க முன் வரலாயினர். ‘காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ள’ வேண்டுமல்லவா ?