கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்/குடியரசு ஆட்சி

6. குடியரசு ஆட்சி

அரசியற் செய்திகள் :

நாம் இந்தக் காலத்தில் காணும் அரசியல் நடைமுறைக்கு முற்றிலும் மாறாக உள்ளது. எதினிய மக்களின் அரசியல் முறை. இக்காலத்து நகர மாந்தர் அரசியல் துறையில் கலந்து பணியாற்றுகின்றனர் என்றால் நாட்டு நலத்துக்காகப் பாடுபடுவதற்கு மிகுதியாகத் தம் கடனை ஆற்றாது, தேர்தல் காலகளில் தம் வாக்கை யாருக்குப் போடுவது என்பதைப் பற்றி சிந்தனைகளில் இருப்பதும், சட்டசபையில் நடந்த விவாதங்களைப் பற்றி பத்திரிகைகளிலிருந்து படித்து அறிந்துகொள்வதுமே அன்றி வேறன்று. ஆனால், ஏதன்ஸ் நகரில் உள்ள வயது வந்தவர்கள் யாவரும், சட்டசபையில் சென்று வாக்களிக்கும் உரிமையும், உணர்ச்சியும் பெற்றிருந்தனர். ஏதென்ஸ் நகர மக்கள் வாக்குக் கொடுத்தலின் (Voting) மதிப்பை நன்கு அறிந்திருந்தனர்; அதனை வீணாகப் பயன்படுத்திலர். வாக்களிக்கும் உரிடிை அடிமைகட்கும், வெளிநாட்டினின்றும் இங்குக் குடி யேறியவர்கட்கும் மட்டும் கிடையாது. சட்டசபையில்தான் நாட்டுக்கு வேண்டிய நலன்கள் யாவும் ஆராயப்பட்டன. சட்டசபை ஏதென்ஸ் நகரவாசி  கள் பலரும் கூடிய கூட்டமாகக் காணப்படும். சேய்மையில் வாழ்வோர் சட்டசபை நிகழ்ச்சிகளைக் காணும் வாய்ப்புப் பெறாதவர் ஆவர். அதற்குக் காரணம் அவர்கள் வரக்கூடாமையே. ஆனால், வராது நின்று விட்டால் அவர்களைச் சும்மா விடவும் மாட்டார்கள். அவர்களைத் தண்டனைக்கு உட்படுத்துவர்.

சட்டசபைக்குரிய இடம்

சட்டசபை நைஸ் (Pnys) என்னும் மலையடி வாரத்தில் சூரிய உதயத்திற்குப் பிறகு வெட்ட வெளிகளில் கூடும். இக்காலத்தைப் போலக் கட்டடத்திற்குள் கூடும் வழக்கம் அக்காலத்தில் இல்லை. சபை தொடங்கு முன் கடவுள் வணக்கம் நிகழும். ஒரு கரிய பன்றியையும் பலியிட்டுத் தொடங்குவர்.

இதனை நாம் உற்று நோக்கும்பொழுது எதையும் முதலில் கடவுளைத் தொழுது தொடங்க வேண்டுமென்னும் சீரிய கொள்கை கொண்டிருந்தனர் கிரேக்க இனத்தினர் என்பது தெரிகிறது. இது தொன்று தொட்ட வழக்கமாகும். நாமும், நம்முன்னோர்கள் எதைத் தொடங்கினாலும், எந்த நூலைத் தொடங்கினாலும் கடவுள் வணக்கம் கூறித் தொடங்கியதை இன்றும் அவர்கள் யாத்த நூலாலும் வரலாறுகளாலும் அறிகின்றோமல்லவா? இந்த வழக்கத்தால்தானே நாம் இப்பொழுதும், கடிதம் எழுதுவதாய் இருந்தாலும் முதலில் ‘உ’ என்னும் பிள்ளை 2ாரி சுழியை எழுதிக் கடி தந்தைத் தொடங்குகின் இரும். கிரேக்கர் கடவுள் வணக்கம் கூறிப் பலியிட்டுத் தொடங்கிய கொள்கை நற்கொள்கை  யாகும். பன்றியைக் கொன்று பலியிட்டதைப்பற்றி நாம் விவாதிக்கவேண்டா. நம் நாட்டிலும் சிற்சில துட்ட தேவதைகட்கு ஆடு கோழிகளைப் பலியிட்டு வந்துள்ளனர். இப்பொழுதும் இதை நடத்தி வருகின்றனர். இது பழக்கத்தின் பாற்பட்டது; பழக்கம். கொடியது. பாறையினும் கோழி சீக்குமன்றோ?

பூமியதிர்ச்சியோ மழைப் பொழிவோ உண்டாகும் குறிகள் காணின், சட்டசபையில் வாதிக்க வேண்டியவற்றை வாதிக்கப் பல நாள் தள்ளிப் போடுவர். பின்பு கால வசதி நன்கு அமைந்த நாளொன்றில், தூதுவரை அனுப்பிப் பேச வேண்டியவரைப் பேசுவதற்காக அழைத்து வரச் செய்து மீண்டும் கூட்டத்தைக் கூட்டுவர். பொதுமக்களே யன்றி, அரசாங்க அலுவலாளர்களும் இதில் கலந்து கொண்டு, தம் பணியை ஆற்றுவர். கூட்டத்தில் கூச்சல் ஒன்றும் இருத்தல் கூடாது. சட்டசபுை உறுப்பினராய்வுக் குழுவினர் ஐந்நூற்றுவர் ஆவர். இவ்வளவு பெயரும் தம் தம் இருக்கைகளில் அமர்ந்திருப்பர். பேச வேண்டியவர்கள் அழைத்தபோது அவர் அங்குப் பேசுவ்தற்கு ஏற்ப்டுத்துப்பட்ட மேடையில் ஏறித் தம் கருத்தை அறிவிப்பர். பேசப்படும் பேச்சைக் கூட்டத்தினர் உற்றுக் கவனித்து கேட்பர். அப் பேச்சு நல்ல முறையில் கேட்க கேட்கச் சுவையுடையதாய் இருப்பின், சபையேர் கைதட்டுதலின் மூலம் தம் மகிழ்ச்சியை உணர்த்துவர்; இன்றேல், கூட்டத்தினிடையே சிறு குழப்பு உண்டுபண்ணுவர். நன்கு தட்டுத் தடையின்றி பேசவல்லவர் தாம் நற்பெயர் எடுக்க இயலும். பேசு கால் வெறும் மனப்பாடம் செய்து ஒப்புவிப்பவர் போன்று பேசுதல் கூடாது. பேசுகையில் உடல் அசைவு, கையசைவு முதலான உறுப்பு அசைவுடன் பேச்சின் பொருள் வெளிப்படுமாறு பேச வேண்டும். இவ்வாறு பேசி நற்பெயர் எடுத்தவர் கிளியான் (Cleon) என்பவர் ஒருவரே. அவர் பேச்சும் உணர்ச்சியும், பொருட்செறிவும் கொண்டதாக இருந்ததால், மக்கள் அதனைப் பெரிதும் வரவேற்றனர். ஒரு சமயம் ஏதென்ஸ் நகரமும், ஸ்பார்ட்டா நகரமும் போரிடத் தொடங்கியபோது யார் தலைவர் பதவி ஏற்று வெற்றி காணுவதற்குரியவர் என்பதைப் பற்றிய விவாதம் ஏற்படக் கிளியான் தாமே தலைமை பூண்டு வெற்றிக்கொண்டு வருவதாகத் தம்மைத் தாமே புகழ்ந்து பேசினார்.

அவர் வார்த்தையில் நம்பிக்கை கொண்ட நகர மாந்தர் உடனே அப்பொழுது புடைத் தலைவராக இருந்த ஜெனரல் நிஸ்யாஸ் (General Nicias) என்பவரை அப்பதவியினின்றும் வெளியேற்றச் செய்யுமாறு வற்புறுத்திக் கிளியானையே போர்த் தலைவராக நின்று போரில் வெற்றி காணுமாறு விழைந்தனர். அவ்வாறே, கிளியான் அப்பதவியேற்று வெற்றி பெற்றுத் திரும்பினர். இவ்வெற்றி ஏதோ எதிர்பாராத நிலையில் ஏற்பட்டது எனலாம். இது ‘காக்கை ஏறப் பனம்பழம் விழுந்தது’ என்பது போன்றது. இவ்வாறு பேச்சினால் மிரட்டிப் பொதுமக்கள் மனத்தை மாற்றினால், மிக மிக இன்றியமையாத செயல்களிலும், இப்பேச்சு மயக்கம் புகுந்து, நாட்டின் நலனுக்கே கேடு பயக்க வல்லதாகவும் அமைதல் உண்டு. சொல்லால் முழக்கிளுல் சுகம் ஏற்படாது. சொல்லியவண்ணம் செய்ய முன்வர வேண்டும்.

இதுகாறும் கூறிவந்த செயல்களிலிருந்து ஏதென்ஸ் நகர மக்கள் அரசியல் காரியங்களில் தாமே தேரே கலந்துகொண்டு, தம் கருத்துக்களே அறிவிக்கும் பொறுப்புப் பெற்றவர்களாய்த் திகழ்ந்தனர் என்பதை அறிந்தோம். இத்தகைய பொறுப்பு வாய்ந்தவர்கள் யாதோர் ஊதியமும் ஏற்காது, தம் கடமையை நடத்தி வந்தனர். எல்லாரும் இந்த வாய்ப்புப் பெறவேண்டும் என்பதற்காக ஆண்டுக் கொருமுறை தேர்தல் நடத்தி வந்தனர். ஒரே குடிமகன் அரசியல் முன்னேற்றத்திற்கும் பாடுபடக் கூடியவன் என்பது உண்மையாளுல், அவனே பல் வேறு பொறுப்புக்களை மேற்கொண்டு, நாட்டுக்கு உழைக்க வாய்ப்பு இருந்தது. ஒராண்டு முடிவுற்ற தும் தன் கடமை முடிந்து விட்டது என்று கூறு வதற்கு இல்லை; தொடர்ந்து தன் பணியை-கடனை ஆற்றலாம்.

அங்குப்பல சிறிய உள் பிரிவுகள் இருந்தன அவற்றுள் ஒன்றினில், நாட்டுக்கு நலம் புரிய, வேண்டும் என்னும் உணர்ச்சி மிக்க குடிமகன் கற்கவேண்டிய வற்றைக் கற்றுப் பயிற்சி பெற்று அரசாங்க ஆய்வுக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப் படலாம். அந்தக் குழுவில் ஐந்நூறு உறுப்பினர் உண்டு. அவர்கள் அப்போதைக் கப்போது நாட்டுக்கு ஆவனபற்றி ஆராய்ச்சி செய்து முடிவுகட்டுவர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குழுவில் தம் கருத்தை அறிவிப்பதற்கு முன் நன்கு சிந்தித்து ஆயத்தம் செய்து கொண்டிருப்பர். சாதாரண உறுப்பினனாகச் சேர்ந்தவன் நாளடைவில் செயற்குழு உறுப்பினனாக மாறிச் சபைக்குத் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பும் பெறக் கூடியவனாவான். இந்தத் தலைமைப் பதவியை எல்லோரும் முறையாகப் பெறுவர். இதிலிருந்து அரசியல் நிர்வாகத்தில் சிறிய பணியை ஏற்றவர் நாளடைவில் பெரிய பதவி பெறும் வாய்ப்பு இருந்தது என்பதை நாம் உணர்கிறோம்.

சிலர் ஜெனரல் என்னும் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பல பொறுப்புக்களை மேற்கொள்வர். நாட்டுப் பொருளாதாரத்தொடர்புடைய செயல்கள் அனைத்தும் இவர்கள்கையில்தான் இருக்கும். போர்க் காலங்களில் இவருக்கென ஒருதனிப் படையும் கொடுக்கப்படும். ஒவ்வொரு கொன்சிலர் ஆகிய உறுப்பினர்களின் வேலை இன்ன என்பதையும், பல்வேறு பொறுப்புக்களை ஆற்றவேண்டு மென்பதையும் உணர்த்தி, ஒழுங்காக அரசியல் நிர்வாகத்தை, நடத்திவருவர். ஆனால், ஜெனரல் பதவி வகிப்பவர் பொறுப்புக்கள் மட்டும் பொது மக்களின் தேர்தல்படி ஏற்றுநடத்தப்படும். ஆகவே இந்த ஜெனரல் பதவிக்கு வருபவர் பலரை அறிந்த வராகவும் தம் மதிப்பை நன்கு பலர் அறியச் செய்த வராகவும் இருக்கவேண்டும்.

அரசியல் நிர்வாகத்தை நடத்துவதற்குச் செல்வரிகளும் முன் வரலாம். கடைகளைக் கண்காணிக்கும் தொழிலையும் கப்பல் துறைமுகங்களைக் கவனிக் கும் வேலையையும், மற்றும் பல பணிகளையும் சாதாரண நாட்டுப் பொதுமக்களுள் சிலர் மேற்கொண்டு ஆற்றி வந்தனர். ஏதென்ஸ் நகரில் வரி என்பது திட்டமாகக் குடிமக்களை வருத்திப் பெறத்தக்க நிலையில் இல்லை. நாட்டுக்கு வரும் வருமானம் துறைமுகச் சுங்கம், குற்றவாளிகள் கட்டும் தண்டனைப் பொருள், வெள்ளிச் சுரங்கத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், நேச நாடுகள் கட்டும் கப்பம் ஆகிய இவைகளே அன்றி வேறு இல்லை.

நாட்டுக்கு விசேட காலங்களில் நாடகங்களை நடத்துவதற்கு வேண்டிய மேடை முதலியவற்றை அமைக்க வேண்டுமானாலும், இவற்றின் பொருட்டு அரசாங்கம் கவலை கொள்ள வேண்டுவதில்லை. அக் காலங்களில் செல்வர்கள் முன்வந்து அவற்றிற் ஆவன செய்து செல்வத்தை ஈந்து பூர்த்தி செய்வர் இத்தகைய நாடு அன்றோ, எத்துறையிலும் மேம்பாடு உறும். எல்லாம் அரசாங்கமே செய்யவேண்டு மென்று எதிர்பார்த்தால் நடக்கக் கூடிய காரியமாகுமா? அப்படி எதிர்நோக்கின் குடிமக்களை வருத்தி வரிப்பணம் பெற்றுத்தானே அது நடத்த முன்வரும் ? ஆகவே, எந்நாட்டிலும் நாட்டு நலனுக்காகச் செல்வக் குடியினர் முன்வந்து அதற்குரிய செலவை ஏற்றல் சாலச் சிறந்த பண்பாடாகுயம். ஏதென்ஸ் நகரச் செல்வர் மனமுவந்து பொது நலனுக்குச் செலவு செய்து வந்ததைப் பாராட்டியே ஆகவேண்டும்.

“செல்வத்துப் பயனே ஈதல்,
துய்ப்பேம் எனினே தப்புந பலவே”

என்பது அச் செல்வர் இயல்பு போலும் !

சட்ட முறைகள்

எதினிய மக்கள், தங்கள் மக்கள் இனத்துள் ஒருவர் போலீஸ்காரனாக இருந்துகொண்டு தம் இனத்தவரை அடக்கி ஆள்வதை அறவே வெறுத்தனர். அதற்காகச் சிதியன் மரபைச் சேர்ந்த வில் வீரரை அழைத்து, அவர்களைக்கொண்டு நாட்டில் குழப்பம் நேராதிருக்கப் பார்த்து வந்தனர். நீதித் தலத்தில் ஆட்சி முறையிலும், குற்றத்திற்கு ஆளானவர்களைத் தண்டித்தற்காகச் சிரமம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சமுதாயத்தில், திருட்டு, கொலை, நம்பிக்கை மோசம் முதலான கொடுமைகளை ஒருவர் செய்தால் அவற்றின் பொருட்டு அரசியலார் அதற்காக முன்வந்து தீர்ப்புத் தண்டனை கொடுக்க முன் வர மாட்டார். அவற்றைப் பொதுமக்களே தமக்குள் கூடித் தண்டிக்க வேண்டிய முறையில் குற்றத்திற்குரியவரைத் தண்டித்து வந்தனர். இந்த முறைகள் நம் நாட்டுப் பஞ்சாயத்து முறை போன்றவை என்னலாம். இதற்குச் சான்று காண விழைவார், ஆளுடைய நம்பிகள் வழக்கு திருவெண்ணெய் நல்லூர் வேதம் வல்லாரில் மிக்கார் விளங்கும் பேரவை முன் தீர்க்ப்பட்டதைத் தொண்டர் புராணத்திலும், கணபதியின் தங்கை, தன் வழக்கை மதுரை அறத் தவசிஃனர்முன் உரையாடித் தீர்த்துக் கொண்டதைத் திருவிளையாடற் புராணத்திலும் காணலாம்.

அக்காலங்களில் வயதாலும் அனுபவத்தாலும் முதிர்ந்த பெரியவர்கள் சிலர் கூடிக் கொலைக்குற்றம் திருட்டுப் போன்ற குற்றம் முதலியவற்றிற்குரிய தண்டனைகளையும் வேறு வேறாக விதித்து வந்தனர்.

குற்றவாளியைத் திடுமெனக் கூப்பிட்டோ, அழைத்து வரவோ செய்யமாட்டார்கள். இன்ன நாளில் குற்றம் விசாரிக்கப்படும் என்று முன்னதாகக் கடிதம் விடுத்து அறிவிப்பர். அந்த நாளில் வாதி, பிரதிவாதி ஆகிய இருதிறத்தவர்களும் நடுவர் முன்வந்து சேரவேண்டும். அது போது விசாரணை நடக்கும். இருதிறத்தார் வாக்கு மூலங்கள் விசாரிக்கப்பட்டு, அவற்றுள் இன்றியமையாதனவற்றை யெல்லாம் பதிவு செய்து, ஒரு பெட்டகத்தில் வைத்து அரண் செய்வர். அடிமைகள் சாட்சி கூற அழைக்கப்படுவர். ஒரு வழக்கைத் தீர்க்க வேண்டின் அதற்கு ஆட்சி, ஆவணம், காட்சி என்னும் முத்திறத்தாலும் ஆய்ந்தே தீர்ப்புக் கூறப்பட்டது. இம்முறை கையாளப்பட்டு வந்தது என்பதைச் சுந்தரர் வரலாறும் நமக்கு அறிவிக்கின்றதன்றோ ! நீதிமன்றத்தினர் அடிமைகளை அழைப்பர். அவர்கள் உண்மை கூறாதிருப்பரேல் அடித்து உண்மையை வெளிப்படுத்துவர். கீழ் மக்கள் வருத்தினாலன்றிப் பயன்படுவரோ ? வள்ளுவரும்

'சொல்லப் பயன்படுவர் சான்றோர் : கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்'

என்று அன்றே கூறியுள்ளார்.

தீர்ப்புக் கூறுவதற்கு முன் பல வழிகளில் கேட்க வேண்டிய கேள்விகள் கேட்கப்படும். நீதிபதி தமக்குத் துணையாக ஜூரிகள் சிலரைக கொண்டு தீர்ப்புக் கூறுவர். ஜூரிகள் கூறும் தீர்மானமே வழக்கிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஜூரர்களுக்குச் சிறு தொகை, அவர்கள் வந்து போவதற்குரிய செலவின் பொருட்டுத் தரப்பட்டது.

அக்காலத்தில் ஏதென்ஸ் நகரத்தில் ஜூரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை வெகு விந்தையானது. வழக்கு நடக்கும்போது மக்கள் கூடி வேடிக்கை பார்த்தல் இன்றும் அன்றுமுள்ள பழக்கமாகும். அப்படிக் கூடி வேடிக்கை பார்ப்பவர்களுள் சிலரையே திடுமென ஜூரிகளாக அமர்த்தி தம் கருத்தைக் கூறுமாறு ஏற்பாடு செய்வர். இதனால் வழக்கில் ஈடுபட்டவர்களுக்கு யார் ஜூரர்களாக வருவர் என்பதை முன்னதாக அறிந்து கொள்வதற்கு வழிபோகிறது. முன்னதாக இன்னார் தாம் ஜூரர்களாக வருவர் என்பதை அறிந்தால் தீர்ப்பு நீதி முறையில் கூறப்பட்டதாகக் கருத முடியாது. ஏனென்றால் ஜூரர்களை அறிந்து, அவர்களுக்குக் கைக்கூலி ஈந்து, தீர்ப்பைத் தம்பக்கம் நல்லமுறையில் தீர்த்துக்கொள்வர் என்பதை ஒழிக்கவே, இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டதாகும். இது நல்ல ஏற்பாடே. இந்த நீதி முறை பாராட்டுதற்குரியதே. ஜூரர்களாக வருவதற்கு எவரும் விரும்பினர். இவ்விருப்பம் தமக்குக் கொடுக்கப்படும் சிறு தொகைக்காக அன்று. இருதிறத்தார் வாக்கு மூலங்களைக் கேட்டு இன்புறுவதற்காகவே ஆகும். நீதி மன்றம் ஓர் அழகிய கட்டடத்தில் அமைந்த தன்று. வழக்குகள் ஒரு வெட்ட வெளியில் நடத்தப்படும். ஜூரர்கள் அமர்வதற்கு விசிப்பலகைகள் இடப்பட்டிருக்கும். மேடை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும். அதில் ஏறித்தான் பேசுபவர் பேசவேண்டும். இந்த உயர்நீதி மன்றத்தில்தான் முன் விசாரணை செய்து பெட்டகத்தில் எழுதிக் காப்பிடப்பட்ட விசாரணைக் குறிப்பை வாசித்து, உண்மை காணச் சிந்திப்பர். எல்லா வினாவிடைகளும் முன்னதாகவே விசாரிக்கப்பட்டுச் சாரமானவை தொகுத்து எழுதப்பட்டு விட்டமையால் இந்த வெட்டவெளி நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை என்பது பெரிதும் நடவாது. மேலும் இக்காலத்தைப் போலத் தனி முறையில் சட்டம் பயின்ற பட்டதாரிகள் அக்காலத்தில் இலர். ஆதலின், வழக்கிற்குரியவர் தம் தம் கருத்தைத் தாமே கூறவேண்டியவராயிருந்தனர்.

இது நல்ல முறைதான். தாமே கூறினால் தான் தம் கருத்தைத் தட்டுத் தடையின்றிக் கூற இயலும் இதற்குக் காரணம் தாய் மொழியில் அரசியல் அலுவல்கள் அனைத்தும் நடத்தப்பட்டதனால் என்க. பொதுமக்கள் தங்கள் கருத்தைத் தடையின்றிக் கூறத் தாய் மொழி ஏற்றதாய் இருந்தது. அவ்வாறின்றி இக்காலத்தில் வேற்று மொழியில் நடத்தப் படுதலின், வழக்கறிஞர் உதவி இன்றியமையாததாய் விட்டது.

பேச இயலாதவர்கள் தாம் கூறவேண்டிய அனைத்தையும் நன்கு எழுதப் பழகிய ஒருவரிடம் கூறி, எழுதி வாசிக்க இடம் அளித்திருந்தனர். இக் காலத்திலும் பேரறிஞர்கள் தாம் கூற விரும்பும் பொருளை எழுதி வாசித்தலைக் கண்கூடாகக் காணலாம். வழக்குத் தொடுத்தவரும் வழக்கிற்குரியவரும் தம் தம் வழக்கை வெல்லுவதற்கு வேண்டிய குறிப்புக்களைக் குறித்துக் கொண்டு பேசுவர். தம் பக்கம் வழக்கைத் தீர்த்துக் கொள்ளவும் ஜூரர்களுக்குத் தம்பால் இரக்கம் ஏற்படவும் தாம் பிள்ளை குட்டிக்காரர் என்பதையும் கூறிக் குழந்தைகளையும் ஜூரர்களுக்குக் காட்டுவர். என்னதான் காட்டினாலும், கூறினாலும் ஜூரர்கள் இரு திறத்தார் வாக்கையும் கேட்டு, யார் உத்தமர் என்பதை அறிந்து, அதற்கேற்ற தீர்ப்பே கூறிவந்தனர். ஏதென்ஸ் நகரத்தார் நீதி நெறியில் தவறாது தலைசிறந்து விளங்கினர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நம் தமிழ் நாடும் நீதி நெறியினின்றும் தவறாது நடந்து வந்தது என்பது பொற்கைப் பாண்டியன் தன் கையைக் குறைத்துக் கொண்டதன் மூலமும், நெடுஞ்செழியன் கண்ணகி கூறிய உண்மையைக் கேட்டு உயிர் நீத்ததையும், மனுச்சோழன் தன் மகனைத் தேர்க்காலில் வைத்துக் கொன்றதையும் கொண்டு உணரலாம்.

சமன் செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந் தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி’,

என்பது பொய்யா மொழியன்றோ ?

ஜூரர்கள் பலராக இருந்தமையால், அவரவர்கள் கருத்தும் மாறுபடும். அதனால் வாக்கெடுத்து அதன் மூலம் தீர்ப்புக் கூறி வந்தனர். ஜூரர்கள் கையில் பலகறை போன்ற ஒரு பொருளைக் கொடுத்திருப்பர். அதனை இரு சாடிகளில் ஒன்றில் இட வேண்டும். அச் சாடிகளுள் ஒன்று குற்றம் என்பதையும் மற்றென்று குற்றமின்று என்பதையும் காட்டவல்லன. அவற்றில் இடப்பட்ட பலகறைகளை எடுத்து எண்ணிக்கையில் எது விஞ்சுகின்றதோ, அந்த முறையில் தீர்ப்புக் கூறப்பட்டது. குற்றத்திற்கேற்ப நாணய அபராதம், நாடுகடத்தல், தூக்கு, வாக்குரிமை இழத்தல் போன்ற தண்டனைகளை விதித்து வந்தனர். சிறையில் அடைக்கும் வழக்கம் ஏதென்ஸ் நகரில் இல்லை. அதற்குரிய இடம் ஏதென்ஸ் நகரில் இன்மையே ஆகும். ஏதென்ஸ் நகரத்துக்குத் தண்டனை ஒரு விசித்திரமானது. தூக்குக்குரியவனை ஓர் இடத்தில் அடைத்து வைத்திருப்பர். அவனுக்கு, தான் எப்போது தூக்கில் இடப்படுவான் என்பது தெரியாது. திடீரென ஒரு நஞ்சுப் பொருளைக் குடிக்க் ஈவர். அதைக் குடித்தவுடன் கைகால்கள் மடங்கிக் குற்றவாளி இறந்து போவான்.

கடற்படை

ஏதென்ஸ் நகர மக்கள் கடற்போரில் தலை சிறந்தவர் என்பதை அறிவோம். அவர்கள் எங்ஙனம் தம் கட்ற்போருக்குரிய கப்பலை அமைத்துக் கொண்டனர் என்பதை அறிவது மிகவும் இன்பமானதாக இருக்கும். கப்பல் நீளமாக இருக்கும். அதில் பாய்மரமும், அதில் இணைக்கப்பட்ட ஆடையும் அமைந்திருக்கும். அஃது இயங்க வேண்டுமனால், காற்றின் உதவி பெரும்பாலும் மிக மிக இன்றிமையாததாக இருந்தது. துடுப்பைக் கொண்டு தள்ளுவர். இவ்வேலையை மேற்கொள்ளுபவர் ஏழை மக்களாகவோ அடிமை ஆட்களாகவோ இருப்பர். இவர்கள் கப்பற்றலைவன் கூறும் கட்டளைப்படி கப்பலை நடத்திச் செல்வர். இவர்கள் கப்பலை நடத்துகையில் தம் களைப்புத் தீரப் பாடிக் கொண்டே நடத்துவர். நம் நாட்டிலும் ஏற்றம் இறைப்பவர், வண்டி இழுப்பவர் பாடிக் கொண்டே பணி புரிவதைக் கவனிக்கலாம்.

எதினியர்கள் கப்பல் போரில் தனிப்பட்ட நுண்ணறிவும் நற்பயிற்சியும் பெற்றிருந்ததால், இதில் அவர்கள் தலை சிறந்து விளங்கினர்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

எதினிய மக்கள் இந்தக் கடற்போரில் தம் எதிரிகளிருக்குமிடத்தை அணுகித் தம் வன்மை தோன்ற கப்பலின் மேல்தட்டினின்றே போர் புரிவர். இந்தத் தருணத்தில் எதிரிகளுக்குப் பெருவாரியாக அழிவை உண்டு பண்ணுவர். எதினியர் தம் எதிரி பலக் குறைவுடையவன் என்பதை அறிந்தால், தம் கப்பலைச் சுற்றிச் சுற்றிச்செலுத்தி, அவர்கள் பதுங்கி ஓடி மறைதற்கும் வகையறியாதிருக்கச் செய்து விடுவர். ஓடுகிற நாயைக் கண்டால் துரத்துகிற நாய்க்கு இளக்காரம் தானே ? இந்தத் தந்திரத்தால்தான் பிலோபோனெஷியன் (Pelo Ponnesians) கப்பல்களை மடக்கி, அவற்றில் உள்ளவர்கள் இன்னது செய்வதென அறியாது திகைக்கிச் செய்து, காற்றின் வேகத்தால் அவை சிதறடிக்கப்பட்ட நிலைக்குக் கொணர்ந்தனர் என்பதையும் அறிகிறோம்.

கடற் போருக்குப், புறப்படுமுன் தன் வழிபடு தெய்வங்கட்கு வழிபாடுகளை நடத்துவர். அது போது எதினிய மக்கள் கடற்கரையில் திரளாகக் கூடுவர். கூடி மாலுமிகள் புறப்பட்டுச் செல்லும் காட்சியில் ஈடுபடுவர். முதலில் தோல்வியே அடைந்தனர். இத்தோல்வியே ஏதென்ஸ் மக்களின் வீழ்ச்சிக்குக் காரணமாகும்.

எதினிய மக்கள் கடற்படையிலும் போரிலும் தலை சிறந்து விளங்கியதற்குக் காரணங்கள் பல. அவற்றுள் ஒன்று கடலில் செலுத்தும் கலத்தை அமைக்கும் நுண்ணறிவாளர்களை இவர்கள் கொண்டிருந்ததேயாகும்.

போர் வீரனின் கடமைகள்

ஏதென்ஸ் நகரவாசிக்கு இருக்கும் பொறுப்புக்கள் பலவற்றுள் படைஞருள் ஒருவனால் இருக்கும் பொழுது நடந்துகொள்ளும் பொறுப்பு அதிகமாகும். இஃது இன்றியமையாததுமாகும். உள்நாட்டுப்போர்கள் அடிக்கடி நிகழ்வதுண்டு. கி. மு. ஐந்தாம் நூற்றாண்டின் முடிவில் ஏதென்ஸ் நகர மக்கள் ஸ்பார்ட்டர்களோடு நீண்ட போரினை மேற்கொண்டனர்.

ஒவ்வோர் ஏதென்ஸ் நகரவாசியும் தன் பதினெட்டாம் ஆண்டில் ஒரு படையில் சேர்ந்து, இரண்டாண்டுகள் பயிற்சி பெறவேண்டும். இதில் சேருமுன் தன் நீதி, தவறா நிலைமையையும், தைரியத்தையும் குறித்துச் சத்தியம் செய்யவேண்டும். இஃது இப்போது சாரண இயக்கத்தில் சேருபவர் செய்யும் சத்தியம் போன்றது. இதிலிருந்து ஒவ்வொரு மக்களும் நீதிக்கும் சத்தியத்திற்கும் பயந்து நடக்க வேண்டுமென்பது தெரிகின்றது. இப் பயிற்சி பெற்ற இரண்டாண்டிற்குப் பிறகு ஒரு படைக் குழுவில் கலந்து கொண்டு பணி புரியவேண்டும். இப் பயிற்சி பெற்றவர் எப்பொழுதும் சண்டைக்குச் செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும் ஒவ்வொருவரும் அறுபது வயது வரை போருக்குச் செல்லக்கடமைப்பட்டவர். இங்கு ஒரு செய்தியைக் குறிப்பிட்டால் வியக்காமல் இருக்க முடியாது. அஃதாவது போருக்குச் செல்பவர் தாமே ஆயுதங்களையும் உணவு வசதிகளையும் தயாரித்துக் கொண்டு போவதாகும். அடிக்கடி போர் நிகழ்ந்ததால் பல எதினிய மக்கள் உயிர் இமுக்கவும் நேர்ந்தது. ஒரே ஆண்டில் பல எதினிய மக்கள் போரின் நிமித்தம் உயிரிழந்திருக்கிறார்கள்.

தரைப்படை

நிலப் போரில் அத்துணைச் சீரிய பெருமை படைத்தவர் அல்லர் ஏதென்ஸ் நகரமக்கள். அவர் நல்ல அரண் படைத்தவர். மேலும் அவர்கள் கடற் போரில் நிகரற்று இருந்தமையால், பகைவர்கட்கு அஞ்சவேண்டு மென்னும் நியதி ஒன்றும் இல்லாதவராய் இலங்கினர். பிலோபோனேஷியன் சண்டையில்கூட எல்லா எதினியக் குடிமக்களும் சண்டைக் குப்பயந்து வெளியூர்களுக்குச் செல்லாமல் உள்ளுரிலேயே மறைந்து தம்முயிரைப் பலவாறு காப்பாற்றிக் கொண்டனர். இதனால் ஸ்பார்ட்டா படைவீரர்கள் விளநிலங்களையும் படைகளையுமட்டும் அழிக்கலாயினர். ஏதென்ஸ் நகரத்தவர் ஆட்சித்திறனே கடற் போர்த்திறமையில் அடங்கியிருந்தமையால் கடற் போர்க்கலத்தை நன்கு அமைப்பதிலும் கடற் போர் வீரரை நன்கு பயிற்றுவிப்பதிலும், கண்ணுங் கருத்துமாய் இருந்தனர் எனலாம்.