கிழவியின் தந்திரம்/தர்மம் தலைகாக்கும்

6. தர்மம் தலைகாக்கும்

நாக மங்கலத்தில் நாகப்பன் என்ற சிறந்த கொடைவள்ளல் இருந்தான். தன்னிடம் வருகின்ற இரவலர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அவரவர்களுடைய தகுதிக்கு ஏற்றபடி அவன் பொருள் கொடுத்து உதவுவான். சிலருக்கு ஆடைகளையும் கொடுத்து அனுப்புவான். அவனுடைய கொடையை நாடி, வறியவர்களாகிய சில பெண்மணிகளும் அவனை அணுகுவது உண்டு. அவர்களை மரியாதையுடனும் அன்புடனும் வரவேற்று அவர்களுக்குத் தக்க புடவைகளையும் அணி கலன்களையும் கொடுத்து அனுப்புவான்.

நாக மங்கலத்துக்கு அடுத்த ஊரில் குமரேசன் என்பவன் இருந்தான். அவன் பணக்காரக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பிறருக்குக் கொடுத்துக் கொடுத்துச் சளைத்துப் போன தகப்பனாருக்குப் பிறந்தவன். ஆதலால் அவனை வறுமை வாட்டியது. யாரிடமும் சென்று எதையும் கேட்கும் பழக்கம் இல்லாதவன் அவன்; மானம் பெரிதென்று வாழ்கிறவன். இவற்றை யெல்லாம் அவனுடைய வயிற்று பசி அறியுமா? பசி மிகுதியானால் மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், முயற்சி, தாளாண்மை, பெண்களின் மேல் வைத்த காதல் ஆகிய பத்தும் இருந்த இடம் தெரியாமல் பறந்து போய்விடும்.

 வறுமையினாலும் பசியினாலும் வருந்திய குமரேசன், நாகப்பன் என்ற கொடை வள்ளலிடம் சென்று தனக்கு வேண்டியதைக் கேட்டு வாங்கிக் கொள்தென்று தீர்மானித்தான். முழு மனத்தோடு அந்தத் தீர்மானத்தைச் செய்யா விட்டாலும் அவனுடைய வயிற்றுப் பசி. அவனைப் பிடர் பிடித்து உந்தியது. ஆகையால், அவன் நாகப்பனிடம் போனான்
 நாகப்பனுக்குக் குமரேசன் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவன் என்று நன்றாகத் தெரியும். ஆகவே, குமரேசனைக் கண்டவுடன் நாகப்பன், “தாங்கள் எங்கே வந்தீர்கள்? நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். குமரேசன் மிகவும் நாணத்தோடு பண உதவி செய்யுமாறு கேட்டான். ஒரு நாளும் பிறரிடம் எதையும் வாங்கத் துணியாத குமரேசன் கேட்டவுடன், நாகப்பன் அவனுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்தான். குமரேசன் அதைப் பெற்றுக் கொண்டு தன் ஊரை நோக்கிச் சென்றான்.
நாளடைவில் கொடை வள்ளலாகிவ நாகப்பனும் வறுமைக்கு ஆளானான். வந்தவர்



களுக்கு எல்லாம் இல்லை என்னாது வாரி வாரி வழங்கியதால் அவனிடம் இருந்த செல்வமெல்லாம் கரைந்து போயிற்று. வேறு ஏதாவது ஊருக்குப் போய் ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாய் என்று எண்ணி, நாகமங்கலத்துக்கு அருகில் இருந்த சத்திய மங்கலம் என்ற ஊரை அடைத்தான்.

என்ன தொழில் செய்வது என்று அவன் நிச்சயம் செய்து கொள்ள வில்லை. கூலி வேலை செய்வதற்கு அவன் மனம் துணியவில்லை. நாலு வீடுகளில் பிச்சை எடுத்து உண்பதற்கும் அவன் அஞ்சினான். 'மானமே பெரிதென்று வாழ்ந்த அவனுக்கு இந்தச் சங்கடமான நிலையினின்றும் தப்புவதற்கு வழி ஒன்றும் தெரியவில்லை.

குமரேசன், தற்சமயம் சிறந்த வியாபாரியாக இருந்து பணம் சேமித்து வந்தான். நாகப்பனுடைய வருந்தத் தக்க நிலைமையைச் சிலர் குமரேசனிடம் கூறினர் தன்னுடைய வறிய நிலையில் தனக்கு உபகாரம் செய்து கை தூக்கிவிட்ட நாகப்பனைக் குமரேசன் என்றும் மறக்கவில்லை.

சத்திய மங்கலத்தில் நாகப்பன் பசியும், பட்டினியுமாக இருப்பதைக் கேள்வியுற்று, அவனை அங்கிருந்து உடனே தன் வீட்டிற்கு அழைத்து வந்து நல்விருந்து படைத்தான்.

“நீங்கள் செய்த பேருபகாரத்தால் நான் இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன். உங்களுக்கு உபகாரம் செய்வதைவிட வேறு என்ன தருமம் இருக்கிறது? அதுவே எனக்கு மிக்க புண்ணியமான காரியம்” என்று சொல்லி ஆடைகளையும் பணத்தையும் குமரேசன் நாகப்பனுக்கு வழங்கினான். கண்ணீர் மல்க அவற்றை வாங்கிக் கொண்ட நாகப்பன், “கடவுள் உன்னைக் காப்பாற்றுவாராக!” என்று சொல்லி அவனை வாழ்த்தி விட்டுப் போனான்.

“தருமம் தலை காக்கும்” என்பதை நாகப்பன் இப்போது நன்றாக உணர்ந்து கொண்டான்.