கிழவியின் தந்திரம்/பிள்ளையார் தந்த பாக்கியம்

11. பிள்ளையார் தந்த பாக்கியம்

ரு பெண்ணுக்குச் சிறிய வயதிலிருந்தே பிள்ளையார் என்றால் மிகவும் பிரியம் மரக்கட்டையினால் செய்த பிள்ளையாரை வாங்கி அதற்கு மலர்களைப் போட்டுப் பூசை செய்வா. தான் எதை உண்டாலும் அந்தப் பிள்ளையாருக்குக் காட்டித் தான் சாப்பிடுவாள். அவளுக்குத் திருமணத்திற்கு ஏற்ற வயது வந்தது. ஒரு நல்லப் பிள்ளையாகப் பார்த்து அவளுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். கணவன் வீட்டிற்குப் போன போதும் கூட அவள் அந்தப் பிள்ளையாரை எடுத்துக் கொண்டு போனாள். அதைவிடமால் வைத்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவள் மாமியார், “என்னடி இது பைத்தியம் மாதிரி ஒரு கட்டையை வைத்துக் கொண்டு கொஞ்சுகிறாய்?” என்று கேட்டாள்.

“இது கட்டையல்ல. பிள்ளையார், கண் கண்ட தெய்வம், இதனால் எனக்கு எவ்வளவோ நன்மை உண்டாயிற்று” என்று அந்தப் பெண் சொன்னாள். அவளுடைய மாமியார், அந்தக் கட்டையினிடத்தில் உனக்கு அவ்வளவு பிரியம் என்றால் உனக்குக் கணவன் எதற்கு? இந்த வீட்டிலே நீ இருக்க வேண்டியதில்லை. இந்தக் கட்டையைத் தூர எறிந்து விட்டு வந்தால், நீ இங்கே இருக்கலாம். இல்லாவிட்டால் நீயும் இந்தக் கட்டையை எடுத்துக் கொண்டு போய்விடு” என்று சொன்னாள்.

அதைக் கேட்டு அந்தப் பெண் மிகவும் கலங்கினாள். என்ன செய்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. பிள்ளையாரைக் கைவிட அவளுக்குச் சிறிதும் மனம் வரவில்லை. ஆகையால் ஒரு நாள் இரவு பிள்ளையாரை எடுத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு புறப்பட்டாள்.

இரவு நேரத்தில் எங்கே தங்குவது என்று தெரியாமல் விழித்த போது அருகில் ஓர் அரச மரம் இருப்பதைக் கண்டாள். “இரவு நேரத்தை இதன் மேல் ஏறிக் கழித்து விடலாம். காலையில் எழுந்தவுடன் பார்த்துக் கொள்ளலாம்” என்று எண்ணி அதன் மேல் மெல்ல ஏறினாள். ஒரு கிளையில் சாய்ந்து கொண்டு, கொம்பு ஒன்றைக் கையால் இறுகப் பிடித்துக் கொண்டிருந்தாள். மற்றொரு கையால் பிள்ளையாரைப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

அந்த இரவு வேளையில் சில திருடர்கள் தாங்கள் திருடிக் கொண்டு வந்திருந்த பணத்தையும், நகைகளையும் அந்த மரத்தின் அடியில் உட்கார்ந்து கொண்டு பங்கு போட்டுக் கொண்டிருந்தார்கள், மரத்தின் மேலிருந்த பெண் சிறிது தூக்க மயக்கத்தில் தன் கையில் பிடித்திருந்த பிள்ளையாரை நழுவ விட்டு விட்டாள். அது பொத்தென்று திருடர்களுக்கு நடுவில் விழுந்தது. அதைக் கண்டு அந்தத் திருடர்கள் பயந்து போய், “யாரோ இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள். நம்மைக் கண்டு பிடித்து விடுவார்கள்” என்று சொல்லி, பணத்தையும் நகைகளையும் அப்படியே போட்டு விட்டுச் சென்று விட்டார்கள்.

விடிந்த பிறகு அந்தப் பெண் கீழே இறங்கி வந்தாள். தன்னுடைய பிள்ளையாரும், அவருக்கு அருகில் நகையும் பணமும் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தாள். எல்லாவற்றையும் வாரி



எடுத்துக் கொண்டு, “இவற்றைக் கண்டால் நம்முடைய மாமியார் நம்மைத் திட்டமாட்டாள். நம்மை ஏற்றுக் கொள்வாள்” என்று எண்ணி, நகைகளையும் பணத்தையும் பிள்ளையாரோடு எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் போனாள்.

“அத்தை, அத்தை பார்த்தீர்களா, இந்த ஆச்சரியத்தை! எ.ன்னுடைய பிள்ளையாரைக் கட்டை என்று சொன்னீர்களே, இவர் எனக்கு இந்தப் பணத்தையும் நகைகளையும் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். பாருங்கள்; பிள்ளையாரை நம்பியதால் எனக்குக் கிடைத்த இலாபம் இது” என்று சொன்னாள்.

அவளுடைய மாமியாருக்கும், பணத்தையும் நகைகளையும் கண்ட பிறகு மருமகள் மீதிருந்த கோபம் நீங்கி விட்டது. பிள்ளையாரின் பெருமைகளை உணர்ந்து கொண்டாள். “நீ இந்தப் பிள்ளையாரோடு சுகமாக வாழ்ந்திரு இவரருளால் உனக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கட்டும்” என்றாள். அது முதல் அந்தப் பெண் அங்கே ஆனந்தமாக வாழ்ந்து வந்தாள்.