குடும்பப் பழமொழிகள்/காதல்

காதல்

நான்கு கண்கள் சந்தித்ததும், இதயத்தில் காதல் தோன்றிற்று. -இந்தியா

காமம், நெருப்பு, இருமல் இம்மூன்றும் மறைக்க முடியாதவை. -( ,, )

இளம் காதலர்கள் விரும்புகிறார்கள், விவாகமான மனிதர்கள் வருந்துகிறார்கள். -( ,, )

காதல் சாதி வேற்றுமைகளைக் கண்டு சிரிக்கின்றது.

-( ,, )

ஒரு மனிதன் பெண்ணின் பின்னால் ஓடினால் திருமணம்; ஒரு பெண் மனிதன் பின்னால் ஓடினால் அவளுக்கு அழிவு. -( ,, )

காதல், கஸ்தூரி, இருமல் மூன்றையும் அடக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. -( ,, )

காதலன் கண்ணுக்கு அம்மைத் தழும்புகளும் அதிருஷ்டக் குறிகளாகும். -ஜப்பான்

காதலுக்கும் தொழு நோய்க்கும் தப்புவோர் சிலரே. -சீனா

அதிருஷ்டமுள்ளவன் ஒரு நண்பனைச் சந்திக்கிறான், அதிருஷ்டம் கெட்டவன் ஓர் அழகியைச் சந்திக்கிறான்.

-( ,, )

காதலையும் கர்ப்பத்தையும் மறைத்து - வைக்க முடியாது.

-அரேபியா

காதல் ஏழு விநாடி, துக்கம் வாழ்க்கை முழுதும். -( ,, )

உன் காதலுக்கு ஒரு மணி நேரம், உன் இறைவனுக்கு ஒரு மணி நேரம் செலவிடு. -( ,, )

தூக்கம் வந்து விட்டால், தலையணை தேவையில்லை; காதல் வந்து விட்டால், அழகு தேவையில்லை.

-ஆப்கானிஸ்தானம்

காதலும் பேராசையும் போட்டியைச் சகிக்கமாட்டா.

- ஃபிரான்ஸ்

காதலுடனும் நெருப்புடனும் மனிதன் பழகிப் போகிறான்.

-ஃபிரான்ஸ்

பெண்கள், காடைகள், வேட்டை நாய்கள், ஆயுதங்கள் இவைகளில் ஓர் இன்பத்திற்காக ஆயிரம் வேதனைகள்

-( ,, )

காதலைத் தடுத்தல் அதைத் தூண்டிவிடுவது போன்றது.

-( ,, )

காதல் வந்து விட்டால், கழுதைகளும் நடனமாடும். -( ,, )

அதிகக் காதலுள்ளவர்கள் மிகக் குறைவாகப் பேச வேண்டும்.

-ஸ்காட்லந்து

காதலுக்கும் செல்வத்திற்கும் துணை வேண்டியதில்லை.

-செர்பியா

பெண்ணின் காதல் சயித்தானின் வலை. -( ,, )

திருமண இரவுதான் காதலின் கடைசி இரவு. -சைலீஷியா

காதல் இனிமையான சிறைவாசம். -ஸ்லாவேகியா

கெட்டிக்காரப் பெண், தான் காதலிப்பவனை விட்டு , தன்னைக் காதலிப்பவனை மணப்பாள். -( ,, )

செயல்களே காதல், இனிமையான சொற்களல்ல.

- ஸ்பெயின்

காதல் வெட்கப்பட்டால், அது உண்மையானதன்று.

-( ,, )

ஒரு காதல் மற்றொன்றை வெளியேற்றிவிடும். -( ,, )

காதல் சுளுக்குப் போன்றது, இரண்டாம் தடவை அது எளிதில் வந்துவிடும். -( ,, )

ஒரு பெண்ணின் காதல் கூடையிலுள்ள தண்ணீர் போன்றது. -ஸ்பெயின்

காதலின் பார்வையில் செம்பு தங்கமாயிருக்கும், ஏழைமை செல்வமாகும். -( ,, )

'சூப்'பிலும் காதலிலும் முதலாவது தான் சிறந்தது. -( ,, )

தேர்ந்தெடுப்பது என்பது காதலில் இல்லை. -( ,, )

நெருப்புக்குக் காற்று எப்படியோ, அப்படிக் காதலுக்குக் பிரிவு.

-ஸ்பெயின்

சாளரக் கம்பிகளின் இடைவழியாகவே காதலுக்கு உயிர் வருகிறது.

-( ,, )

காதலர் மற்றவர் கண்களெல்லாம் அவிந்து விட்டது போல எண்ணுவர். -( ,, )

காதலர்களுக்குத் தக்க நேரம் தெரியும். -ஜெர்மனி

காப்பியும் காதலும் சூடா யிருந்தால்தான் உருசி. -( ,, )

காதல்தான் காதலை வெல்ல முடியும். -( ,, )

காதல் அணைந்தபின் கரித்துண்டுகளே மிஞ்சும். -( ,, )

காதல் அகழெலி, கல்யாணம் காட்டுப் பூனை. -( ,, )

காதலின் உச்சத்தில் பேச்சுக் குறைந்து விடும். -( ,, )

காதல் குருடன்று, ஆனால் அது பார்ப்பதில்லை. -( ,, )

காதலுக்குக் காலம் கிடையாது. -( ,, )

காதலர்களுக்கு காதவழி ஓர் அடியாகத் தோன்றும்.

-( ,, )

காதலின் கண்ணுக்கு ரோஜா மலர் தான் தெரியும், முட்கள் தெரியமாட்டா. -( ,, )

அழகைக் காதலித்தல் என்பதில்லை, காதலித்ததே அழகாகும். -( ,, )

காதற் கடிதங்களுக்குத் தேதி தேவையில்லை. -( ,, )

பேட்டையிலும் காதலிலும் ஒருவருக்குத் தொடங்கத் தெரியும், எங்கு முடிப்பது என்பது தெரியாது. -( ,, )

காதலர்கள் பேச வேண்டிய விஷயம் அதிகம், ஆனால் அது ஒரே பழைய விஷயம்தான். -( ,, )

காதலர்கள் நேரத்தை ஆசையைக் கொண்டு அளக்கின்றனர். -( ,, )

சிறு ஊடல் காதலைப் புதுப்பிக்கும். -( ,, )

எல்லா இடங்களிலும் கண்களின் பாஷை ஒன்று தான்.

- இங்கிலாந்து

முத்தங்கள் திறவுகோல்கள். -( ,, )

ஒருபெண்ணையும் காதலிக்காதவன் பன்றியிடம் பால் குடித்திருப்பான்.

- இங்கிலாந்து

காதலுக்கு மருந்தில்லை, மருத்துவனுமில்லை. -அயர்லந்து

காதல் ஒன்றுதான் பங்காளிகளை அனுமதிக்காது.

-பல்கேரியா

ஒருவன் சகோதரனைத் தேடிக் கடல் வரை போவான்;. காதலியைத் தேடிக் கடலுக்குள்ளேயும் போவான்.

-பல்கேரியா

உருளைக் கிழங்கையும், காதலனையுமே ஒரு பெண் தானாகத் தேர்ந்தெடுக்கிறாள். - ஹாலந்து

காதற் கடிதங்களை எழுதுவோர் மெலிகின்றனர், கொண்டு கொடுப்பவர்கள் கொழுக்கிறார்கள். -( ,, ) [காதலரின் தூதர்களுக்கு இருபக்கங்களிலும் வெகுமதிகள் நிறையக் கிடைக்கும்.]

வானத்தில் பறவையின் பாதையைக் காணமுடியாது, கன்னியை நாடும் காதலன் பாதையையும் காண முடியாது. -எஸ்டோனியா

காதலில் துரு ஏறாது. -( ,, ) .

காதல் என்பது மலர், கலியாணத்தில் அது கனியாகும்.

- ஃபின்லந்து

காதல் நந்தவனம், கலியாணம் முட்புதர். -( ,, )

காதல் உண்டாக்கும் புண்ணை அதுவே ஆற்றிவிடும்.

- கிரீஸ்

காதல் மடமை இரண்டுக்கும் பெயரில் தான் வேற்றுமை.

-ஹங்கேரி

கனவிலும் காதலிலும் இயலாத காரியமே இல்லை. -( ,, )

அடிக்கடி முத்தமிட்டால் குழந்தையை எதிர்பார்க்க வேண்டியதுதான். -ஐஸ்லந்து

கலியாணத்திற்குப் பின்னால் காதல் வளரும். -( ,, )

காதல் கொண்டவர்களின் கோபம் சிலந்தி வலை போன்றது.

- இதாலி

ஒரே பெண்ணையோ, ஒரே 'பஸ்'ஸையோ தொடர்ந்து ஓட வேண்டாம், பின்னால் வேறு கிடைக்கும். -இத்தாலி

காதலிக்கும் காலத்தில் ஜூபிடரும் கழுதையாவார்.

-லத்தீன்

[ஜூபிடர்-தேவர்களின் அதிபதியான கடவுள். கிரீஸில் இவரை 'சீயஸ்' என்பர்.]

பழைய காதல் ஒரு சிறைச்சாலை. -( ,, )

காதலின் தூதுவர்கள் கண்கள். - லத்தீன்

காதலிலே தோன்றும் கோபம் போலியானது. -( ,, )

காதலர் கோபம் காதலுக்குப் புத்துயிர். -கிரீஸ்

இருவரைக் காதலிக்கும் ஒரு பெண் இருவரையும் ஏமாற்றுவாள். - போர்ச்சுக்கல்

செம்பு நாணயம் துருப்பிடித்த காதலுக்குத்தான் சரி.

-ரஷ்யா

காதல் ஒரு வளையம், வளையத்திற்கு முடிவே கிடையாது.

-( ,, )

ஒருவன் மீது காதல் தோன்றி விட்டால், அவன் குளிக்காமலிருக்கும் பொழுதே, வெண்மையாகத் தோன்றுவான். -( ,, )

ஒருத்தி இனிமையா யிருக்கிறாள் என்பதற்காகக் காதலிக்க வேண்டாம், வயதாகிவிட்டது என்பதற்காக அவளைத் தள்ளவும் வேண்டாம். -( ,, )

பஞ்சை நேசிப்பது போல் என்னை நேசி; நூல் அதிக மென்மையாகும் பொழுது அதிகப் பஞ்சை விட்டும், நூல் அறுந்தவுடன் ஒட்டியும் ஆதரவு காட்டுவது போல, என்னை வைத்துக் கொள்ளவும். -ஆப்பிரிகா

அவசரக் காதல் சீக்கிரம் சூடாகி, சீக்கிரம் குளிந்து விடும். -இங்கிலாந்து

அரசர், கெய்ஸர், பிரபு, சட்டங்கள் ஆகிய அனைத்திற்கும் மேற்போனது காதல். -( ,, )

காதல்தான் காதலுக்குப் பரிசு. -( ,, )

காதலுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை.

- இங்கிலாந்து

காதலின் இனிமைகளில் கண்ணீர் கலந்திருக்கும். -( ,, )

காதலுக்காக உயிரை விடுபவர்கள் அளவுக்கு அதிகமாகக் காதலிப்பவர்கள். -( ,, )

காதல் ஒருவகைப் போர் முறையாகும். -லத்தீன்

காதலிலும் மரணத்திலும் நம்வலிமை பயனில்லை. -ஸ்பெயின்

காதலே கள்வர்களைத் தயாரிக்கிறது; காதலை எந்தக் கள்வரும் கவர்வதில்லை. -சுவீடன்

காதல் தான் புக முடியாத இடத்தில் ஊர்ந்து சென்று விடும். -( ,, )

காதலால் வீரரானோர் பலர்; ஆனால் மூடரானோர் அவர்களை விட அதிகம். -( ,, )

நெருப்பு அருகிலிருந்து சுடும், அழகு தூரத்திலிருந்து சுடும்.

-சுவிட்சர்லந்து

காதலித்தால் சந்திரனைக் காதலி, திருடினால் ஒட்டகத்தைத் திருடு. - எகிப்து

காதல் கட்டுப்பாடற்ற கழுதை. -ஆப்பிரிகா

ரொட்டியும் உப்பும் இல்லாவிட்டால், காதல் இருக்க முடியாது. -போலந்து

காதல் முதலில் ஆடவனின் கண் வழியாகவும், பெண்ணின் காது வழியாகவும் நுழைகிறது. -( ,, )

முதன்மையான அன்பு தாயன்பு, அடுத்தது நாயன்பு, அதற்கும் அடுத்தது காதலியின் அன்பு. -( ,, )